திங்கள், 18 அக்டோபர், 2010

தென்னைய வெச்சா இளநீரு


பிள்ளைய பெத்தா கண்ணீரு, தென்னைய வெச்சா இளநீருன்னு ஒரு பழமொழியே இருக்கிறது. இதில் இருந்தே தென்னையின் சிறப்பை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்மிகத்துக்கும், தேங்காய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆன்மாக்களுக்கு ஆணவம், கன்மம், மாயை - இந்த மூன்றும் நீங்கினால் இறைவனை அடையலாம் என்கிறது ஆன்மிகம். இந்த தத்துவத்தை தேங்காயும் உணர்த்துகிறது.

அதாவது, தேங்காயின் மேலே உள்ள பச்சை மட்டை மாயை ஆகும். நார் பகுதி கன்மம். தேங்காய் ஓடு ஆணவம். தேங்காயை உடைக்கும்போது ஆணவம் என்னும் ஓடு உடைந்து வெண்மையான பருப்பு வெளிப்படுகிறது.

அதுபோல், இறைவன் திருவடியை அடைய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் அகற்ற வேண்டும். இதனால்தான் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்கிறோம்.


மருத்துவ பயன்கள் :

* இளநீரில் அரை மூடி அளவுக்கு எலுமிச்சம்பழச்சாற்றை பிழிந்து குடிக்க வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

* இளநீரில் தேன் கலந்து குடிக்க சரும நோய்கள் தீரும். வயிற்றுப்புண் குணமாகும். மலச்சிக்கல், மூல நோய்கள் இருந்தாலும் குணம் பெறலாம்.

* இளநீரை முந்தைய இரவே சீவி, அதனுள் சப்ஜா விதை (திருநீற்று பச்சிலை விதை) 10 கிராம் சேர்த்து, சீவப்பட்ட பகுதியின் மட்டையை மீண்டும் மூடி வைத்து, காலையில் குடித்தால் பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் குணமாகும். குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டாம்.

* இளநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள், கட்டிகள் வராது. அவை இருந்தால் உடனே குணமாகும். மேலும், மஞ்சள் காமாலை நோயின் தன்மை குறையும். கண்களுக்கு பிரகாசம் கிடைக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மையும் இளநீருக்கு உண்டு.

* இளநீரை உணவிற்கு பின் அருந்துவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெறும் வயிற்றில் இளநீர் அருந்துவது தவறு. அவ்வாறு செய்தால் சிறிது நாட்களில் பசி குறைந்து அல்சர் எனப்படும் குன்ம நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

* தென்னம்பாளைக்குள் உள்ள இளம் தென்னம் பூவை வெயிலில் காய வைத்து தூளாக்கி, காலை, மாலை 2 ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை குணமாகும்.

* தென்னம்பாளை மொக்கை இடித்து, நீராவியில் வைத்து பிட்டாக்கி பிழிந்து, அதனுடன் தேன், அதிவிடயத்தூள், இலவம் பிசின் சேர்த்து குடித்தால் சுரத்துடன் கூடிய கழிச்சல் குணமாகும்.

* தென்னங்குருத்தை உட்கொண்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

* இளம் தென்னம்பாளையை வெட்டி, மடல் நீக்கி இடித்து சாறு பிழிந்து 100 மில்லி அளவு எடுத்து, அதனுடன் தயிர் 100 மில்லி சேர்த்து, எலுமிச்சை பழ ரசம் 50 மில்லியும் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு, நீர்சுருக்கு, ரத்தம் அல்லது சீழ் கலந்து வரும் கழிச்சல் குணமாகும்.

* நட்டுவக்காளி கடித்துவிட்டால் உடனே தேங்காயை மென்று தின்னலாம். தேங்காய் பாலையும் குடிக்கலாம். உடனே, அந்த விஷம் இறங்கிவிடும்.

* வயிற்றில் அல்லது வாயில் புண் இருந்தால் தேங்காய் பாலில் தேன் கலந்து குடிக்க, அது ஓரிரு நாளில் குணமாகும்.

* முற்றிய தேங்காய் துருவலை துணியில் கட்டி, அதை சூடாக்கப்பட்ட பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தி, பொறுக்கும் சூட்டில் பாதிப்பு இடத்தில் ஒற்றமிட்டு வர ஆண்களுக்கு விரை வீக்கம் குணமாகும்.

* தேங்காய் பாலை காய்ச்சி, அதில் வரும் எண்ணெயை புண்கள், நெருப்பு சுட்ட புண்கள் மீது தடவி வர அவை விரைவில் உலர்ந்து குணமாகும். இதை, தலையில் தேய்த்து வர கூந்தல் செழித்து வளரும்.

* தேங்காய் பாலில் மாசிக்காயை அரைத்து உட்கொண்டு வந்தால் தொண்டைப் புண் குணமாகும்.

* தேங்காய்பால் விட்டு சீரகத்தை அரைத்து பாதிப்பு இடத்தில் பூசிவர வெயில் காலத்தில் ஏற்படும் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு ஆகியவை குணமாகும்.

* புளிக்காத தென்னங்கள்ளை கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் பிறக்கும் குழந்தை அழகாக பிறக்கும்.


* வெட்பாலை இலைகளை துண்டு துண்டாக நறுக்கி, அவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து வெயிலில் 10 நாட்கள் வைக்க, அந்த எண்ணெய் கருநீல நிறமாக மாறும். இதனை பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வந்தால் சொரியாஸிஸ் எனப்படும் செதில் உதிர்படை குணமாகும். இந்த எண்ணெயை 5 மில்லி அளவு பாலில் கலந்து உள்ளுக்கும் குடிக்கலாம்.

* தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை பொடித்து போட்டு காய்ச்சி பூசி வர சளி இளகி வெளிப்படும்.

* தென்னம் வேரை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

ஒரு எச்சரிக்கை :
தேங்காய் எண்ணெயில் அதிக அளவு கொழுப்புச்சத்து உள்ளது. அதனால், ரத்தத்தில் கொழுப்புச்சத்து இருப்பவர்கள் உணவில் தேங்காய் எண்ணெயை தவிர்ப்பது நல்லது.

Share:

0 கருத்துகள்: