ஞாயிறு, 17 அக்டோபர், 2010

அய்யா வைகுண்டர் வரலாறு




3.  மத மாற்ற நிகழ்வு
-நெல்லை விவேகநந்தா-
 கி.பி.1800-களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜாதிய கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. தாழ்த்தப்பட்ட சாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்டனர். இன்றைய குமரி மாவட்டத்தில் இருந்த நாஞ்சில் நாட்டிலும் அதே நிலைதான்! தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மட்டுமின்றி, உடமைகளும், நிலங்களும் பறிக்கப்பட்டு, அவர்கள் அநாதைகள் ஆக்கப்பட்டனர். சொந்த நிலத்திலேயே சொற்பக் கூலிக்கு வேலை செய்யும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். பலநேரங்களில் கூலி கொடுக்காமலேயே வேலை வாங்கப்பட்டனர்.

அடிமைகள் விற்கப்பட்ட - வாங்கப்பட்ட வரலாறு மேல்நாடுகளில் மட்டுமின்றி, நாஞ்சில் நாட்டிலும் இருந்தது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் அறிவிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்ற 18 சாதியினர் அடிமைகளாக விற்கப்பட்டு வாங்கப்பட்டார்கள். அடிமைகளை வாங்குவதற்கு விற்பதற்கு என்றே தனி சந்தைகளும் நடத்தப்பட்டன. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் அடிமைகளாக இருந்தனர். சாட்டையால் அடித்து வேலை வாங்கப்பட்டதால், அடிமைகள் ஆக்கப்பட்டவர்களின் முதுகுகள் ஆதிக்க சாதியினரால் வளைக்கப்பட்டன.

மனிதன் வாழ வேண்டும் என்றால் உணவு மட்டுமின்றி உறைவிட வசதியும் வேண்டும். அந்த வசிப்பிட வசதியோ தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டது. இவர்களது வசிப்பிடம் மரத்தடிகள், அதுவும் ஊரின் ஒதுக்குப்புறமான இடங்களாகவே இருந்தன. முதலாளியின் கீழ் வேலை செய்தவர்கள், அந்த முதலாளி எங்கே அவர்களை வசிக்கச் சொன்னாரோ அங்கே வாழ்ந்தனர். மாட்டுக் கொட்டகையை ஒட்டிய இடம் மற்றும் ஊரின் ஒதுக்குப்புறங்களாகவே அந்த இடங்கள் அமைந்திருந்தன.

அடிப்படை உரிமைகள், சொந்த நிலங்கள், உணர்வுகள்... என்று எல்லாமே பறிக்கப்பட்ட இவர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகக் குறைந்த கூலியும் ‘வரி’ என்ற பெயரில் அடக்குமுறையை பிரயோகப்படுத்தி பிடுங்கப்பட்டது. ஆண்களின் தாடி, மீசைக்கும், பெண்களின் மார்பக வளர்ச்சிக்கும் வரி வசூலித்தார்கள் என்றால், எப்படிப்பட்ட கொடூரங்கள் அவர்களுக்கு நிகழ்த்தப்பட்டு இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

“தாலிக்கு ஆயம் சருகு முதல் ஆயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்கு ஆயம்
தாலமது ஏறும் சான்றோருக்கு ஆயம்
தூலமுடன் அரிவாள் தூருவட்டிக்கு ஆயம்
தாலமதுக்கு ஆயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிக இறை வைத்தனனே
வட்டிக்கும் ஆயம் வலங்கை சான்றோர்
கருப்புக்கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே...”

- என்று, திருவிதாங்கூர் சமஸ்தான கைகூலிகளான ஆதிக்க சாதியினர். அப்போது வசூலித்த வரிகள் குறித்து குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.
அதேநேரம், சமஸ்தானத்திற்கு வரி செலுத்தாவிட்டால் கொடூர தண்டனைகளும் வழங்கப்பட்டன. ஒருவரிடம் வரி செலுத்தப் பணம் இல்லை என்றால், அவரது முதுகில் பெரிய கல்லை ஏற்றி வைத்து மதிய வெயிலில் நிறுத்தினர். அவர் அனுபவிக்கும் சித்ரவதைகளை பார்த்து மகிழ்ந்தனர், அரசாங்க கைகூலிகள்.

ஒரு தடவை வரி செலுத்தாததற்கே இந்த தண்டனை என்றால், தொடர்ந்து பல நாட்கள் வரி செலுத்தாதவர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர். இரும்புக் கம்பியை நன்கு பழுக்கக் காய்ச்சி, அதை அவரது காதில் சொருகி ஆனந்தக் கூத்தாடினர். அதோடு நின்று விடாமல், அந்த நபரை மரத்தில் கட்டி தொங்கவிட்டும் ரசித்தனர்.

தாழ்த்தப்பட்ட இன பட்டியலில் இருந்ததற்காக இப்படியெல்லாம் கொடுமைகளை ஆண்கள் ஒருபுறம் அனுபவிக்க... மறுபுறம் பெண்களின் நிலைமையும் படுமோசமாக இருந்தது.

அடிமைகளாக விற்கப்பட்ட அழகான பெண்களை, நினைத்த போதெல்லாம் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி சீரழித்தனர், ஆதிக்க சாதியினர். பல நேரங்களில், அளவுக்கு மீறிய பாலியல் கொடுமையால் அந்த பெண்கள் இறந்தே போனார்கள். 

தனிநபர் உரிமை மீறலின் உச்சக்கட்டமாக, அடிமைகளாக வாங்கப்பட்ட ஆண்களும், பெண்களும் மாடுகளுடன் கட்டி வயலை உழுவதற்கு பயன்படுத்தப்பட்டனர். சில நேரங்களில் வயலை உழும் காளைகளுக்கு கிடைக்கும் உணவு கூட கிடைக்காமல், அந்த வயலிலேயே உயிர் துறந்தனர் பல அடிமைகள்.

“பனை கேட்டு அடிப்பான் பதநீர் கேட்டே அடிப்பான்
கனத்த கற்கண்டு கருப்புக்கட்டி கேட்டடிப்பான்
நாரு வட்டி ஓலை நாடோறும் கேட்டடிப்பான்
வாதுக்கு நொங்கு வாய் கொண்டு கேட்டடிப்பான்
நெடுமட்டை கேட்பான் நெட்டோலைதான் கேட்பான்
குளம் வெட்டச் சொல்லி கூலி கொடுக்காமல்
களம் பெரிய சான்றோரை கைக்குட்டை போட்டடிப்பான்...”

-இப்படி, நாஞ்சில் நாட்டு பாமரர்களும், சாற்றோரும் அனுபவித்த கொடுமைகளை அகிலத்திரட்டு அப்பட்டமாக குறிப்பிடுகிறது.

தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து விடுபட விரும்பிய மக்கள், தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற அடையாள முத்திரையை உடைத்தெறிய எண்ணினர். அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் அமைந்தது அப்போதைய கிறிஸ்தவ மத மாற்றம். 

கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறினால் அடிப்படை வசதிகள் அதிகம் கிடைக்கும்... பொருளாதார வசதி மேம்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்படும்... என்று அவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள், தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருந்த 18 சாதியினருக்கும் உற்சாக டானிக் ஆக அமைந்தது. எனவே மனம் மாறினர். ஆமாம், 'உணர்வே இல்லாமல் அடிமையாக வாழ்வதைவிட மதம் மாறுவது எவ்வளவோ மேல்' என்று தீர்மானித்த அவர்களில் பலர், உடனடியாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். இவர்களில் பெரும்பாலானோர் நாடார் சமூகத்தினர் என்பதை மறுக்க முடியாது.

(தொடரும்...)

(முத்துக்கமலத்தில் வெளியான எனது இந்த படைப்பை காண கீழே கிளிக் செய்யவும்)

Share:

0 கருத்துகள்: