செவ்வாய், 30 மார்ச், 2010

மகளிடம் குழந்தையான தந்தை!


வியம் என்பது மிக அழகான கலை. அதை எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம். எந்த கோணத்தில் வேண்டுமானாலும் அணுகலாம்.

நிர்வாண கோலமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனால்தான், ஓவிய வகுப்பில் நிர்வாணமாக போஸ் கொடுக்க வரும் பெண்கள், ஆண்கள் அதற்காக வருந்துவதில்லை.

நிர்வாண கோலம் எந்த வகையிலும் ஆபாசமில்லை என்பதற்கு ரஷ்ய மியூசியத்தில் உள்ள அந்த ஓவியத்தை உதாரணமாகக் கூறலாம்.

வயதான ஒரு கிழவன், இளம்பெண் ஒருத்தியின் மார்பில் பால் அருந்திக் கொண்டிருக்கிறான். அருகில், ஒரு குழந்தையை கிழவி ஒருத்தி அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அதையும் மீறி அந்த குழந்தை பசியால் கதறிக் கொண்டிருக்கிறது.

இந்தக் காட்சிக்குப் பின்னணியில் கையில் துப்பாக்கியும், ஈட்டியும் ஏந்திய வீரர்கள் சிலர் உள்ளனர்.

- இதுதான் அந்த ஓவியக் காட்சி.


இந்த ஓவியத்தில் கிழவன் பால் குடிக்கும் இளம்பெண் வேறு யாருமல்ல; அவனது மகளேதான்! அருகில் உள்ள குழந்தை, இவளது பால்குடி மறவாத குழந்தை. அந்த குழந்தையை பிடித்து அழுத்திக் கொண்டிருப்பவள் இந்த பெண்ணுக்கு தாய், கிழவனுக்கு மனைவி!

இப்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

படுபாவி கிழவன்... இப்படியா அநியாயம் செய்வான் என்று கொதித்தெழுவீர்கள் தானே?

அப்படி அவசரப்பட வேண்டாம். இந்தக் காட்சியின் பின்னணி உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் துளியும் ஆபாசம் கிடையாது.

அது எப்படி?

இந்த படத்தில் மகளின் மார்பில் பால் குடிக்கும் கிழவன் ஒரு புரட்சிக்காரன். ஜார் மன்னருக்கு எதிராக புரட்சி செய்ததால், மன்னரின் வீரர்கள் அவனை கைது செய்துவிட்டனர்.

சிறையில் அந்த கிழவனுக்கு உண்ண உணவோ, குடிக்க தண்ணீரோ கொடுக்கக்கூடாது என்பது மன்னர் உத்தரவு. பசியினாலும், தாகத்தினாலும் அவன் துடிதுடித்து சாக வேண்டும் என்பது அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

கடிகாரம் வேகமாக சுழல்கிறது. கிழவனுக்கு பசி அதிகமாகிறது. தண்ணீர் தாகம் அதைவிட அதிகம் வதைக்கிறது. துடிக்கிறான்... துவழுகிறான்... காவலுக்கு நிறுத்தப்பட்ட வீரர்கள் யாரிடமும் துளியும் இரக்கம் வரவில்லை.

அந்தநேரத்தில், கிழவனைப் பார்ப்பதற்காக அவனது கிழட்டு மனைவியும், அவர்களது மகளும் வருகின்றனர். மகளுக்கு குழந்தை பிறந்து சில மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. அதனால், அவள் தன் குழந்தையை கையோடு அழைத்து வந்திருக்கிறாள்.

சிறையில் கிழவன் படும் அவஸ்தையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கிழவன் தண்ணீர்... தண்ணீர்... என்று துடிக்கிறான். யாரும் கொடுப்பதாகத் தெரியவில்லை.

கிழவியானவள் அருகில் காவலுக்கு நின்ற வீரர்களின் காலில் விழுந்து கெஞ்சுகிறாள், கதறுகிறாள். யாருக்கும் இரக்கம் வரவில்லை.

அப்போதுதான் பொங்கியெழுகிறாள் கிழவனின் இளம் வயது மகள். கைக்குழந்தையை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, அருகில் நின்ற பாதுகாப்பு தலைவனிடம் வருகிறாள்.

"எங்கள் தந்தை தாகத்தால் உயிர் போகக் கிடக்கிறார். அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்..." என்று கெஞ்சி பதறுகிறாள். அவள் கேள்வியையும் வீரர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. உதாசீனப்படுத்தி விடுகின்றனர்.

அடுத்ததாக அவள் அவர்களிடம் கடுமையாக வாதிடுகிறாள்.

"எங்கள் தந்தைக்கு நாங்கள் தண்ணீர்தானே கொடுக்கக்கூடாது?"

"ஆமாம்!"

"உறுதியாகத்தான் சொல்கிறீர்களா?"

"ஆமாம்! இதில் என்ற மாற்றமும் இல்லை" என்கின்றனர் வீரர்கள்.

உடனே, கீழே விழுந்து கிடந்த தந்தையை தூக்குகிறாள் அந்த மகள். அவரை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு சற்று ஓரமாக ஒதுங்கித் திரும்பிக் கொள்கிறாள்.

"அப்பா... உங்களுக்கு தண்ணீர்தானே கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். இப்போது நான் உங்கள் தாகத்தை தண்ணீர் இல்லாமலேயே தணிக்கிறேன்..." என்றவள், சட்டென்று தனது மேலாடையை அவிழ்க்கிறாள்.

கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து பல மணி நேரம் ஆனதால், அவளது இரு மார்பகத்தில் பால் நிரம்பி நிற்கிறது. அந்த மார்பகத்தில் தந்தையை பால் குடிக்க வைக்கிறாள், அவரது தாகத்தை தணிக்கிறாள் அந்த புரட்சிக்காரனுக்கு பிறந்த மகள்.

இந்த சம்பவத்தில் தந்தைக்கு மகள் தாயாகி விடுகிறாள். தந்தை மகளிடம் குழந்தை ஆகிவிடுகிறான்.

வெளித் தோற்றத்தில் பார்க்க வேண்டுமானால் படம் ஆபாசமாக இருக்கலாம். ஆனால், ஆழ்ந்து நோக்கினால் நிச்சயம் ஆபாசம் அல்ல.
Share:

சனி, 27 மார்ச், 2010

சம்மரை கூலாக்கும் கேரளா!

ப்போது ஆங்கில மருத்துவ முறையையே பெரும்பாலானவர்கள் பின்பற்றினாலும், பின்விளைவு இல்லாத நிரந்தர ஆரோக்கியத்தை என்றும் தரக்கூடியது ஆயுர்வேதம் மட்டுமே!

இதன் வரலாறு தெரியுமா?

‘வாழ்க்கையின் விஞ்ஞானம்’ என்பதுதான் ஆயுர்வேதம். கிறிஸ்து பிறப்பதற்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஆயுர்வேத முறை பயன்பாட்டில் இருந்துள்ளது. மிக நீண்ட வரலாறு கொண்ட ஆயுர்வேதம் பல்வேறு நிலைகளில் மாற்றங்களை கண்டு வந்துள்ளது.

வேத காலத்தில் இந்தியாவில் சிறந்து விளங்கிய ஆயுர்வேதம் இந்தோனேஷியா, கிரேக்கம் போன்ற நாடுகளுக்கும் பரவியது. பிற நாடுகளில் இந்திய ஆயுர்வேதத்தை ஏற்றுக்கொண்டவர்கள், அதை தங்களுக்கு தகுந்தவாறு மாற்றிக்கொண்டனர்.

இன்றைய உயரிய வசதிகள் இல்லாத அந்த காலக்கட்டத்தில் ஓலைச்சுவடிகளில் பெரும்பாலும் எழுதி வைக்கப்பட்ட இந்திய ஆயுர்வேத ரகசியங்கள் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

நோய் வரும் முன் காப்பதையும், நோய் வந்தபின் என்னென்ன சிகிச்சை முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பழங்கால ஆயுர்வேத நூல்கள் அழகாக தெரிவிக்கின்றன.

நோய்கள் தோன்றி மனிதகுலம் அவதிக்குள்ளாவதைக் கண்ட ரிஷிகளும், முனிவர்களும் தீவிரமாக யோசித்ததன் விளைவுதான் ஆயுர்வேதம் பிறப்பு. பரத்வாஜர் என்ற ரிஷி தேவேந்திரனிடம் ஆயுர்வேத முறையைக் கற்று, அதை மற்ற ரிஷிகளுக்கு கற்பித்தார். அவர்கள் தங்களது சீடர்களுக்கு அதை எடுத்துரைத்தனர். ஆயுர்வேதம் பற்றிய நூல்களும் எழுந்தன.

புனர்வசு ஆத்திரேயர் என்ற ரிஷியின் சீடரான அக்னி வேசர் எழுதிய அக்னிவேச சம்ஹிதையே ஆயுர்வேதத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது. இந்த அக்னிவேச சம்ஹிதையே ‘சரக சம்ஹிதை’ என்று அழைக்கப்படுகிறது.

ஆயுர்வேத நூல்களில் மற்றொரு மிகச்சிறந்த நூலாக திகழ்கிறது, சுஷ்ருதரால் இயற்றப்பட்ட ‘சஷ்ருத சம்ஹிதை’. புத்தர் வாழ்ந்த காலத்துக்கும் முற்பட்டவர் இந்த சுஷ்ருதர்.

- இப்படித்தான் ஆயுர்வேதம் தோன்றி வளர்ந்துள்ளது.

இதே ஆயுர்வேத முறையை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் நம் நாட்டவரை மட்டுமின்றி, வெளிநாட்டவரையும் வெகுவாக ஈர்த்துள்ளன. இதனால்தான், இந்தியாவுக்கு விசிட் அடிக்கும் வெளிநாட்டவர்கள் கேரளாவுக்கு மறக்காமல் வந்து விட்டு செல்கின்றனர். கூடவே, கேரள ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்து புதுப்பொலிவோடு திரும்புகின்றனர். இதனால், ஹெல்த் டூரிசத்தில் எக்ஸ்பெட் ஆக திகழ்கிறது கேரளா.

அப்படி என்னதான் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கிறார்கள்?

அப்யங்க ஸ்வேதனா :


மிக எளிமையான சிகிச்சை முறைதான் இது. குறிப்பிட்டகால ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மூலிகை மருந்து கலந்த எண்ணெய் மற்றும் நீராவி குளியலுடன் மசாஜ் சிகிச்சை அளிப்பார்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உடலை வலுப்படுத்தும், உடல் திசுக்களை உறுதிப்படுத்தும், நல்ல - ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.

பிழிச்சில் :


ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம்வரை உடலில் இளஞ்சூட்டில் எண்ணெய் விட்டு சிகிச்சை அளிக்கும் முறை இது. எலும்பு முறிவுகள், மூட்டு பிசகு, கை-கால் வலி மற்றும் விரைப்புத்தன்மை, பக்கவாதம், ருமாடிக் காய்ச்சல், ருமாய்ட்டோடு ஆர்த்தரைட்டிஸ் போன்ற பிரச்சினைகள் இந்த சிகிச்சையால் விலகும்.

தாரா :


ஒரு குறிப்பிட்ட மூலிகை எண்ணெய், மருந்து கலந்த பாலை தினமும் 45 நிமிடங்கள் முன் நெற்றியில் விசேஷமான முறையில் ஊற்றி சிகிச்சை அளிக்கும் முறையே இது. உடல், மனம் சமநிலை பெறுவதில் இந்த சிகிச்சை மிகவும் உதவுகிறது. உடல் பலமும், நினைவு திறனும் அதிகரிக்கிறது. அத்துடன் குரல் வளம் தெளிவாகிறது. கண் நோய்கள் தீருதல், தலைவலியில் இருந்து விடுதலை, ஆரோக்கியமான நல்ல தூக்கம், மென்மையான அழகான சருமம் பெறுதல்... போன்ற பல்வேறு நன்மைகளும் இந்த சிகிச்சையால் நமக்கு கிடைக்கின்றன.

நவரக்கிழி :


பல்வேறு மருந்து கலவை கொண்ட துணிப்பை மூலம் உடலில் ஒற்றடம் கொடுத்து சிகிச்சை அளிக்கும் முறையே இது. இதன்மூலம் முழு உடலும் அல்லது உடலின் குறிப்பிட்ட பகுதிகள் வியர்க்க வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக உடலின் இறக்கம் குறைந்து மூட்டுகளின் விறைப்புத்தன்மை நீங்குகிறது. ரத்த ஓட்டமும் மேம்படுகிறது. தேகம் பொலிவு பெறுகிறது. அதிக தூக்கத்தால் உண்டாகும் அசதியும் விலகுவதோடு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகின்றன.

நஸ்யம் :


இது ஒரு வித்தியாசமான சிகிச்சை முறை. மூலிகைச்சாறையும், மருந்துகள் கலந்த எண்ணெயையும் மூக்கின் வழியே விடுகிறார்கள். இதனால் ரத்த ஓட்டம் மேம்பட்டு உடல் உறுப்புகளுக்கு புது தெம்பு கிடைக்கிறது. அத்துடன், பல்வேறு நரம்புகளின் நுனிகள் தூண்டப்பட்டு மைய நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது.

உத்வர்த்தனம் :


இது மசாஜ் முறையிலான சிகிச்சை. மருந்து கலந்த பவுடரை உடலில் தூவி மசாஜ் செய்வார்கள். இதனால் தோற்றம் பொலிவு பெறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்படுகிறது. அதன்மூலம் உடல் எடை குறைகிறது. மேலும், நல்ல தூக்கம் கிடைத்து உடலும் புத்துணர்வு பெறுகிறது.

வருடம் முழுவதும் உழைத்து உழைத்து மனதாலும், உடலாலும் தேய்ந்து போனவர்கள், கேரள ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. இது கொஞ்சம் காஸ்ட்லியான சிகிச்சைதான் என்றாலும், பல நன்மைகளைத் தரக்கூடியது என்பதால் தாராளமாக எடுத்துக்கொள்ள முன்வரலாம்.

அதற்காக போலி ஆயுர்வேத சிகிச்சை மையங்களை நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

இப்போதெல்லாம் கேரள ஸ்டைல் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் அளிக்கப்படுகின்றன. ஆனால், கேரளாவுக்குச் சென்று இந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டால், அங்குள்ள இயற்கையோடு ஒன்றி லயிக்கலாம். கூடுதல் பலனும் கிடைக்கும்.

ஸோ... இந்த சம்மருக்கு கேரளாவுக்கு ஒரு விசிட் அடியுங்களேன்...

Share:

வெள்ளி, 19 மார்ச், 2010

கர்ஜித்த வீரத்துறவி!


அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்தியாவின் சார்பில் சுவாமி விவேகானந்தர் கலந்துகொண்டு பேசினார். அந்த மாநாட்டின் மூலம் இந்து மதத்திற்கு புதிய எழுச்சியை கொடுத்தார் அவர்.

உலக வரலாற்று ஏட்டில் முக்கிய இடம் பிடித்த அந்த மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய 6 உரைகளில் இருந்து சில துளிகள் இங்கே உங்கள் பார்வைக்கும்...


மாநாட்டின் முதல் நாளான செப்டம்பர் 11-ந் தேதி பகவத்கீதையில் இருந்து ஒருசில வரிகளை மேற்கோள் காட்டி பேசினார் விவேகானந்தர்.

"யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயற்சி செய்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன" என்பவைதான் அந்த வரிகள்.

மாநாட்டில் இரண்டாம் முறையாக செப்டம்பர் 15-ம் தேதி கிணற்றுத்தவளை கதையை அமெரிக்க மக்களுக்கு விளக்கிக் கூறினார்.

மாநாட்டில் மூன்றாம் முறையாக செப்டம்பர் 19-ம் தேதி மிக நீண்ட உரை நிகழ்த்தினார். அந்த உரையின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள உருவ வழிபாடுகள் பற்றி குறிப்பிட்டார்.

"இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்று அல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மிக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப்படாதவர்களின் முயற்சிதான் இந்த உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு; சிலவேளைகளில் அதற்கு விதிவிலக்குகளும் உண்டு. ஆனால், ஒன்றை கவனியுங்கள்; அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக்கொள்வார்களேத் தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள். இந்துமத வெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேத் தவிர பிறரை அல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படி கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதேபோன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல" என்றார்.

செப்டம்பர் 20-ம் தேதி நான்காவது உரையின்போது சில விமர்சனங்களை செய்த விவேகானந்தர், ஒரு அன்பான வேண்டுகோளையும் அன்றைய கிறிஸ்தவர்களுக்கு விடுத்தார்.

"இந்தியா முழுவதும் சர்ச்சுகளை கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத்தேவை மதம் அல்ல. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத்தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம்" என்றார்.

செப்டம்பர் 26-ம் தேதி ஐந்தாவது உரையின்போது புத்த மதம் பற்றி பேசி-னார் சுவாமி. அவர் மேடையில் பேச வருவதற்கு முன்பு, "இந்தியாவின் சுவாமி விவேகானந்தர் புத்த மதம் பற்றி விமர்சனம் செய்வார்" என்று அறிவித்தார்கள்.
அதுபற்றி குறிப்பிட்டு சுவாமி பேசும்போது,

"நான் பவுத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பவுத்தன். சீனாவும், ஜப்பானும், இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களை பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரை கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பவுத்த மதத்தை விமர்சிக்கப் போவதாக சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் என்றுகூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்-துக்கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால், புத்த பெருமானை அவரது சீடர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் எங்-கள் கருத்து. இந்து மதத்திற்கும், இந்நாளில் பவுத்த மதம் என்று கூறப்படுகிறதே அதற்கும் இடையே உள்ள உறவு, யூத மதத்திற்கும், கிறிஸ்தவ மததத்திற்கும் உள்ள உறவுதான்" என்றார்.


செப்டம்பர் 27-ம் தேதி நிறைவுரையாற்றும்போது, உலக சமய மாநாடு எதை எடுத்துக்காட்டுகிறது என்பது பற்றி ஆவேசமாக பேசினார்.

"புனிதம், தூய்மை, கருணை - இவை உலகின் எந்தவொரு பிரிவின் தனிச்சொத்தும் அல்ல என்பதையும், மிகச்சிறந்த ஒவ்வொரு சமயப் பிரிவும் பண்புள்ள ஆண்களையும், பெண்களையும் தோற்றுவித்து இருக்கிறது என்பதையும் இந்த மாநாடு நிரூபித்துள்ளது. இந்த சாட்சியங்களுக்கு முன்பு, தம் மதம் மட்டும்தான் தனித்து வாழும், மற்ற மதங்கள் அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்கள் என்றால், அவர்கள் குறித்து நான் ஒன்றை என் இதய ஆழத்தில் இருந்து சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்; இனி, ஒவ்வொரு மதத்தின் கொடியிலும், "உதவி செய்", "சண்டை போடாதே", "ஒன்றுபடுத்து", "அழிக்காதே", "சமரசமும் சாந்தமும் வேண்டும்", "வேறுபாடு வேண்டாம்" என்று எழுதப்படும் என்று அவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று கர்ஜித்தார் விவேகானந்தர்.

Share:

குழந்தை பிறக்கும் தேதி

நீங்கள் கர்ப்பிணிப் பெண்ணா? எப்போது குழந்தை பிறக்கும் என்று ஆசையோடு எதிர்பார்த்திருக்கிறீர்களா?

அப்படியென்றால் கீழே உள்ள காலண்டரை கிளிக் செய்யுங்கள். நீங்கள் கன்சிவ் ஆன மாதத்திற்குரிய நாளின் கீழேப் பாருங்கள். உங்களது டெலிவரி தேதி தெரிந்துவிடும்...
 

Share:

திங்கள், 8 மார்ச், 2010

தோழியாய்... காதலியாய்... மனைவியாய்... யாரடி நீ பெண்ணே?


ன்னில் விழுந்த மழைத்துளியைக் கொண்டு உயிர்களை உருவாக்குபவள் பூமித்தாய். அதேபோல், தன்னில் சேர்ந்த உயிர்த்துளியைக் கொண்டு மனித இனத்தை விருத்தி செய்பவள் பெண்.

அதே பெண்தான் தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய்... என்று பல அவதாரங்கள் எடுக்கிறாள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும், அவளது ஒவ்வொரு நிலையிலும் உயரியச் சிறப்பைப் பெறுகிறாள்.

அப்படிப்பட்ட பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?

பாய் ப்ரண்ட், ஹேர்ள் ப்ரண்ட் என்றெல்லாம் இன்று பரிணாமம் பெற்றிருக்கும் நட்பு ஒரு காயாத பூவாகும். பள்ளிப்பருவத்தில் நம்முடன் படித்தவர், இடையில் காலத்தின் மாற்றத்தால் எங்கோ, எப்படியோ வாழும் சூழ்நிலையில், திடீரென்று ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்போது அங்கே கிடைக்கும் ஆனந்த பரவசம் இருக்கிறதே; அதை வர்ணிக்கத்தான் வார்த்தைகள் உடனே கிடைக்குமா?

இதே நட்பில் சுயநலத்துடன் ஒரு வழிப்பாதையில் பயணிக்கும்போது, அந்த பெண் காதலியாகி விடுகிறாள் அவனுக்கு! அந்த ஆண் காதலனாகி விடுகிறான் அவளுக்கு!

"நான் செடியில் பூத்துக் குலுங்கும் ரோஜாவை தேடித்தான் வந்தேன். அந்த ரோஜாவே என்னெதிரே நடந்துவரும்போது, ரோஜாப்பூவை மட்டும் பறிக்கவா? அல்லது அந்த செடிக்கே நான் சொந்தக்காரனாகி விடவா? என்று குழப்பம் வந்துவிட்டது. அதனால் உன் மீது எனக்கு காதலும் வந்துவிட்டது" என்று காதலன் கவிதையாய் உருகும்போது அந்த காதல் இன்னும் கொஞ்சம் ஆழமாக வேர்விட்டு விடுகிறது.

அவர்களது காதலுக்கு அவர்களே ஒரு அங்கீகாரம் கொடுக்கும்போது, அங்கே காதல் ஆலமரமாய், ஆழமாய் வேரூன்றி விடுகிறது. இருவரும் தங்களுக்குள் அங்கீகாரம் கொடுத்தபிறகு அந்த காதல் ரெயில் வேகத்தில் பயணிக்கிறது.
அவர்களது காதல் பயணத்தில் பெற்றோர்கள் சிக்னல்களாக வருகிறார்கள்.

அவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்தால் அந்த காதல் ரெயில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். ரெட் சிக்னல் கிடைத்தால் அவர்களது பயணத்தில் திடீர் பிரேக் விழுந்து விடுகிறது. கிரீன் சிக்னலுக்காக போராடி வேண்டியிருக்கிறது.

பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு அவர்களுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கலாம். அல்லது, எவ்வளவுதான் முயன்றும் ரெட் சிக்னலே தொடரலாம். இருந்தாலும், அவர்களுக்குள் காதல் வாழ்கிறது. அது தொடர்ந்து வாழ வழி தேடுகிறார்கள்.
போராட்டம் என்றால் ஒரு முடிவு நிச்சயம் இருக்கும்தானே? அவர்களது காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது; அல்லது, இன்னொரு வாழ்க்கைக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள்.

அங்கே வாழ்க்கையின் இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது. காதலில் வெற்றிப்பெற்றுவிட்டால் அங்கே காதலனுக்கு காதலி மனைவியாகிறாள். இல்லையென்றால், புதுப்பெண் ஒருத்தி மனைவியாகிறாள்.
இதுபோல்தான் பெண்ணுக்கும்!

திருமணத்திற்கு பின்பு அவளது பொறுப்பு இன்னும் அதிகமாகி விடுகிறது. தாரத்திற்குப் பின்னர் தாய் என்ற நிலையை அடைகிறாள். அதன்பிறகும் அவளது பிறவிப்பயன் இன்னும் நீண்டு கொண்டே போகிறது, அவளது சேவை இந்த மனிதகுலத்திற்கு கண்டிப்பாக தேவை என்பதால்!

எடுக்கும் ஒரு பிறவியிலேயே தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய் திகழும் அந்த பெண்ணிடம் எப்படி பழக வேண்டும்?

முதலில் தோழி...

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். இதேபோல், நல்ல தோழி அமைவதும் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லலாம்.

ஒன்றும் தெரியாத முட்டாளையும்கூட முதல்வனாக்கிவிடும் பவர் தோழிக்கு உண்டு. அப்படிப்பட்ட தோழியிடம் நாம் எப்படி பழகலாம்?

* நமது சமுதாயச்சூழலில் பெண்ணுக்கு ஆணைப் போன்ற முழு சுதந்திரம் இன்னும் வழங்கப்படவில்லை. தோழியாக பழக வேண்டும் என்றால்கூட ஒரு பெண் சமுதாய கட்டுப்பாடுகளைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. வாலிப பிரச்சினை என்று ஒன்று வரும்போது மிகுந்த பாதிப்புக்கு ஆளாகுபவள் பெண்ணே! அதனால், அவளது பெண்மைக்கு இழுக்கு ஏற்படாத வகையில் பழக வேண்டும்.

* நட்பு காதலாக மாறலாம். ஆனால், காதல் நட்பு ஆக மாறுவது பெரும்பாலும் முடியாத செயல்தான். அதனால், தோழியை நீங்கள் காதலிக்கும்பட்சத்தில், அவளும் உங்களை விரும்புகிறாளா என்பதை அறிந்து, அதன்பின் மேற்கொண்டு அதுபற்றி பேசவும்.

*  உங்களுக்கும், தோழிக்கும் திருமணம் ஆன நிலையில், தோழியின் கணவர் அனுமதிக்கும்பட்சத்தில் மட்டுமே உங்கள் நட்பை தொடரலாம். அதுவும், ஒரு குடும்ப நண்பராக!

* திருமணத்திற்கு பிறகு, நேரில் பார்த்தால் மட்டும் நட்பை புதுப்பித்துக் கொள்வோம். மற்ற சூழ்நிலைகளில் வேண்டாம் என்று உங்கள் தோழி கூறினால், அதை பெருந்தன்மையோடு ஏற்று செயல்படுத்துங்கள். எங்கள் நட்பை எப்படி கொச்சைப்படுத்தலாம்? என்று கேட்டு, உங்கள் தோழி வாழ்க்கையை பாழாக்கிவிடாதீர்கள்.

* கடைசியாக ஒன்று, உங்கள் தோழியையும் உங்கள் சகோதரிபோல் பாவித்து பழகுங்கள். அப்போது, உங்கள் நட்புக்கு நிச்சயம் களங்கம் வராது என்று சர்டிபிகேட் கொடுக்கலாம்.

அடுத்து காதலி...

இன்று காதலிக்காதவர்களே கிடையாது. ஆணும், பெண்ணும் கண்களால் மோதிக்கொண்டாலே அங்கே யாராவது ஒருவரிடத்தில் காதல் தீ பற்றிக்கொண்டு விடுகிறது.

இன்னொரு மறுக்க முடியாத உண்மை; டைம் பாஸாக வேண்டும் என்பதற்காகவும் சிலர் காதலிக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் ஆகும்வரை பேசுவோம், பழகுவோம், ஊர் சுற்றுவோம். திருமணம் ஆகிவிட்டால் நீ யாரோ, நான் யாரோ என்று போய்விடுவோம் என்று தங்களுக்குள் அக்ரிமென்டே போட்டுக்கொள்கிறார்கள். சென்னை போன்ற மெட்ரோ சிட்டிகளின் லேட்டஸ்ட் கலாச்சாரம் இந்த வகை காதல்(?!).

உங்கள் காதலி உண்மையான காதலியாக இருந்தால், அவளிடம் எப்படி பழகலாம்?

* அவள் உங்களின் வருங்கால மனைவி என்பது உறுதியாக தெரிந்தால் மாத்திரமே காதலியுங்கள். இல்லையென்றால், பழகியவை எல்லாம் கனவென்று நினைத்து ஒதுங்கிவிடுங்கள். இதில் தப்பே இல்லை. காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் கழற்றிவிட்டு ஒரு பெண்ணின் சாபத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்.

* உங்கள் காதல் சைவக் காதலாக இருக்கட்டும். தவறான எண்ணத்தில் கை வைத்து விடாதீர்கள். நாளை, நீங்கள் கணவன்-மனைவி ஆகும்போது, "ச்ச்ச்சீசீ! அப்படியா நடந்து கொண்டோம்?" என்று அருவெறுப்பாக யோசிக்க வேண்டியது இருக்கும்.

* காதலியுடன் மனம் விட்டு பேசுங்கள். எதிர்காலம் பற்றி திட்டமிடுங்கள். முறையாக, இருவர் வீட்டிலும் காதலுக்கு ஒப்புதல் வாங்கிக்கொள்ளுங்கள். காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.

* மொத்தத்தில் உங்களுக்காக அவள் என்றும், அவளுக்காகவே நீங்கள் என்றும் எப்போதும் நினைத்திருங்கள்.

அடுத்ததாக மனைவி...

பிறந்த சொந்தங்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு நம்மோடு, நமக்காக வாழ வருபவள். அவளை மகாலெட்சுமி என்றே போற்றுங்கள். அதில் தவறே இல்லை.

உங்களில் ஒருத்தி, உங்களுக்காக ஒருத்தியாக இருக்கும் அவளிடம் எப்படி பழகுகிறோம் என்பது முக்கியமல்ல. எல்லா விஷயங்களிலும் எந்த அளவுக்கு அவளை சந்தோஷமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
அதை புரிந்துகொண்டு நீங்கள் செயல்பட்டால் அவள் உங்களுக்கு நல்ல மனைவிதான். நீங்களும் அவளுக்கு நல்ல கணவன்தான்!

Share:

ஹிட்லரின் ஆரம்ப முகம்



ஜெர்மனியைச் சேர்ந்த அந்த ஓவியன் கடுமையாக உழைக்கக்கூடியவன். பகல் எல்லாம் உழைத்துவிட்டு இரவில்தான் வீடு திரும்புவான்.

இரவு, வீட்டுக்கு வந்ததும் தூங்கிவிட மாட்டான். ஐரோப்பாவின் வரைபடத்தை தனக்கு முன்பே வைத்துக்கொள்வான். அதையே நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருப்பான்.

ஒருநாள் இதை கவனித்துவிட்டாள், அந்த வீட்டு உரிமையாளரின் பெண். மறுநாள் காலையில், "ஏன் இரவில் வெகுநேரம் வரை தூங்காமல் விழித்திருக்கிறாய்? ஐரோப்பா கண்டத்தையே உனக்கு கீழ் கொண்டு வருவதுபோல் பார்த்துக் கொண்டிருக்கிறாயா? " என்று கிண்டல் செய்தாள்.

அந்த ஆண் மகனுக்குள் லேசாக கோபம் எட்டிப் பார்த்தது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

"ஆமாம்! ஐரோப்பா கண்டத்தையே எனக்கு கீழ் கொண்டுவரப் போகிறேன் " என்று உறுதியாக சொன்னான் அந்த ஓவியன்.

அப்படிச்சொன்ன அந்த ஓவியன், ஐரோப்பிய கண்டத்தையே நடுநடுங்க வைத்தான். பல ஐரோப்பிய நாடுகளை தனக்கு கீழ் கொண்டு வந்தான்.

அவன் தான் ஹிட்லர்.
Share:

ஹிட்லரை புட்டுப் புட்டு வைத்த டைரி


ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர், யூதர்களுக்கு செய்த கொடுமைகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தனது பதவிக்காலத்தில் 60 லட்சம் யூத மக்களை கொஞ்சம்கூட ஈவு இரக்கமே இன்றி கொலை செய்ய உத்தரவிட்டு, கொன்று குவித்தவன் அவன்.

ஜெர்மனி மட்டுமின்றி, தன்னால் பிடிக்கப்பட்ட பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள யூத மக்களையும் கொல்ல அவன் தயங்கியது கிடையாது. ஹிட்லரின் நாஜிக் படையினரிடம் சிக்கிக்கொண்டால் மரணம் நிச்சயம் என்பதால் பல யூதர்கள் ஓடி ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.

ஹாலந்து நாட்டில் ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு யூத குடும்பம், நண்பர் ஒருவரது வீட்டில் ஒளிந்து வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்தில் ஒருத்தியான ஆன்னி பிராங்க் என்பவள், நாஜிக் படைகளுக்கு பயந்து தாங்கள் அனுபவிக்கும் அவஸ்தைகள் மற்றும் தனது மனதில் தோன்றும் ஆசா பாசங்கள், உயிர் வாழ உள்ள ஆசை போன்றவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்தாள்.

ஆனால், 1944ல் இவளது குடும்பம் நாஜிக் படையிடம் காட்டிக்கொடுக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் சித்ரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு ஆன்னி பிராங்க் கொல்லப்பட்டாள்.

அவளது தந்தை எப்படியோ தப்பித்து வந்து, மகள் ஆன்னி பிராங்க் எழுதிய டைரியை தேடி கண்டுபிடித்தார். இதற்குள் போர் முடிந்து, ஜெர்மனியும் சரணாகதி அடைந்துவிட்டது. ஹிட்லரும் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சூழ்நிலையில், ஆன்னி பிராங்கின் தந்தை, அவள் டைரியில் எழுதிய விஷயங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். ஒரு சிறுமி யூதர்கள் பட்ட கஷ்டங்களை கூறுவதுபோல் அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு இருந்தது.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி அந்த புத்தகம் உடனேயே 20 லட்சம் பிரதிகள் விற்று தீர்ந்தது. திரைப்படமாகவும் அது தயாரானது. இதுதவிர, பல மொழிகளிலும் ஆன்னி பிராங்கின் எழுத்துக்கள் மொழி பெயர்க்கப்பட்டன.
Share:

சனி, 6 மார்ச், 2010

சிட்டுக்குருவி பார்த்து இருக்கிறீர்களா?


சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே

ஹோய் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே...

ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஹா…ஹா…
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே 

ஹோய் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே...

ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஆ…ஹாஹா
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…

ஹோய் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே...

- புதிய பறவை என்ற சினிமா படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல் இது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜாதேவி பாடி நடித்திருந்தனர்.

இந்த பாடலில் இடம்பெற்ற சிட்டுக்குருவி இன்று நம்மைவிட்டு எங்கோ விலகிச் சென்றுவிட்டது. இதற்கு எல்லாம் காரணம் நாம்தான்.

வயல் காடுகள் எல்லாம் வீடுகளாக மாறியது... செல்போன் மற்றும் செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் மின்னணு கதிர்வீச்சுகள்... - இவை, நம்மோடு நெருங்கிப் பழகிய சிட்டுக்குருவிகளுக்கு நம்மிடம் இருந்து விடைகொடுத்து அனுப்பி வருகின்றன.

இப்போது மிகவும் பழமையான கிராமங்களில் மட்டும் ஆங்காங்கே காணப்படும் சிட்டுக்குருவிகள், இன்னும் சில ஆண்டுகளில் மியூசியத்தில் மட்டும் இடம்பெறும் அளவுக்கு காணாமல் போய்விடும்.

அடுத்த தலைமுறையினரிடம், "முன்பு இப்படி ஒரு பறவை இருந்தது. ரொம்பவும் சின்னதா.. க்யூட்டா.. பார்க்க அழகா இருக்கும்.." என்று அவர்களிடம் படம் காண்பித்து விளக்கம் மட்டுமே கொடுக்க முடியும்.

ஏன்... நீங்களே கூட இந்த பறவையை பார்த்து இருக்கிறீர்களா? என்பதும் சந்தேகம்தானே!

சரி... நீங்களும் இந்த சிட்டுக்குருவியை பார்த்ததே இல்லை என்றால், கீழே படத்திலாவது பார்த்து திருப்திப்பட்டுக் கொள்ளுங்கள்...

 

Share:

சிட்டுக்குருவி


குளிர் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணம் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர் காலத்தின் இறுதிக்கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென் திசை நோக்கி பறக்க தயாராகின. ஆனால், இந்த சிட்டுக்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டது.

குளிர்காலம் வந்தது. குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கிவிட்டது. கடைசியில் அது தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்தபோது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து, இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது.

அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்க விடாமல் செய்தது. அடுத்த நொடியே அது மரத்திலிருந்து கீழே விழுந்தது. அந்த குருவி விழுந்த இடம் ஒரு விவசாயின் வீட்டு முற்றம்.

அந்த வழியாக வந்த ஒரு பசுமாடு, கீழே கிடந்த அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டு சென்றது. சிட்டுக்குருவிக்கு மூச்சு திணறினாலும், சாணத்தின் வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. உடனே அந்த குருவி மகிழ்ச்சியில் பாட ஆரம்பித்துவிட்டது.


இதைக்கேட்ட அந்த வழியாக சென்ற ஒரு பூனை அங்கு வந்தது. சிட்டுக்குருவியை பார்த்ததும், அதை லபக்கென்று பிடித்து விழுங்கிவிட்டது.
இந்த கதையில் 3 கருத்துகள் உள்ளன. அவை :

1. உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2. உன்னை சாணத்தில் இருந்து அகற்றுபவன் உன் நண்பனாக இருக்க வேண்டும் என்பதில்லை.

3. நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்றால் அதை அமைதியாய் அனுபவி.

- இந்த கதையை சொன்னவர் ஓஷோ.
Share:

காமத்தால் களங்கப்பட்ட சரித்திரம்!


ண்களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் கால் வைத்துவிட்ட இன்றைய பெண்கள், ஒரு காலத்தில் குழந்தை பெறும் இயந்திரமாகவே பயன்படுத்தப்பட்டனர். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளையே அன்றைய சமுதாயம் ஆவலோடு எதிர்பார்த்தது.

அந்த ஆண் குழந்தைகளே வளர்ந்ததும் கல்வி, கலைகளை கற்றனர். காவியங்கள் படைத்தனர். பெண்களை ஒட்டுமொத்தமாகவே ஒதுக்கிவிட்டனர்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பெண்கள் எப்படி இருந்தார்கள்? 

பெண்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் கொடுக்காததால் அவர்கள் எல்லாம் கிணற்று தவளைப் போலவே எதுவும் தெரியாமல் இருந்தனர். அறிவான விஷயங்களை ஆண்கள் மாத்திரமே பேசினார்கள்.

ஒருக்கட்டத்தில், அந்த ஆண்களுக்கு, அவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்களும் "போர்" அடித்துவிட்டார்கள். அறிவுப்பூர்வமான விஷயங்கள் அந்த பெண்கள் தங்களுடன் பகிர்ந்து கொள்ளாததால் அவர்கள் மேல் வெறுப்புற்றனர்.

"இப்படி அறிவே இல்லாத பெண்ணிடமா செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்?" என்றுகூட சிந்தித்தனர். அதற்கான மாற்றுத் தேடலையும் துவங்கினர்.

ஒரு மனித ஆண் மனித பெண்ணிடம்தானே உறவு வைத்துக்கொள்ள வேண்டும்? அதுதானே இயற்கையின் நியதியும்!

ஆனால், கி.மு.க்கு முந்தைய ஆணோ அந்த இயற்கையின் நியதியை தவிடுபொடியாக்க முயற்சித்தான். அதற்கான செயலிலும் இறங்கிவிட்டான். சில ஆண்கள் ஆண்களுடனேயே உடலால் இணைந்தனர். சில மாவீரர்களும், தத்துவ ஞானிகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.
கிரேக்க காவியங்களை அலசிப் பார்த்தால் இதற்கான ஆதாரங்கள் நிறையவே கொட்டிக்கிடக்கின்றன.

ஆணும், ஆணும் நேசித்த அந்த காமம் - காதலுக்கு "கிரேக்க காதல்" என்றே பெயரும் சூட்டிவிட்டார்கள்.

ஆண்களுக்குள் ஏற்பட்ட இந்த வினோத ஆசையால், ஆண்களின் அழகும், கவர்ச்சியும் பொங்கி வழியும் சிற்பங்கள் ஏராளமாக செதுக்கப்பட்டன. ஓவியங்களும் தீட்டப்பட்டன. ஏன்... இதை மையமாக வைத்து நாடகங்களும் எழுந்தன. ஆண் கடவுள்கள் மனித ஆண்களை காதலிக்கும் கதைகளும் கூட பரப்பப்பட்டன.

இப்படி ஆண்களை ஆண்கள் காதலித்த அதேநேரத்தில், குழந்தை பெற்றுக்கொள்ள பெண்களை தவறாமல் பயன்படுத்திக் கொண்டனர். தங்களால் கர்ப்பமுற்று ஒரு பெண் பெற்றெடுக்கும் குழந்தை ஆணாகவே இருக்க வேண்டும் என்றும் தங்கள் தெய்வத்தை வேண்டிக்கொண்டனர், அந்த கிரேக்க ஆண்கள்.

பண்டைய கிரேக்கத்தில் ஆண்கள் இப்படி இருக்க, இந்தியா, சீனா, எகிப்து போன்ற நாடுகளில் சில பெண்கள் உஷாராகவே இருந்தனர். தங்களுக்கு வந்த தடைகளையும் மீறி ஆண்களுக்கான கலைகளை கற்றுக்கொண்டனர்.

அவர்களை திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆண்கள், அவர்களுடன் கொஞ்சிப்பேசி மகிழ்வதில் மட்டும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தனர். அவர்களை ஆசை நாயகியாக வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள். சில ஆண்கள், வீட்டில் தனக்காக காத்திருக்கும் மனைவியை மறந்து பரத்தை என்று அழைக்கப்பட்ட இந்த ஆசைநாயகியுடன் பொழுதை போக்கினார்கள்.
இன்னும் சிலர் ஆசைநாயகி வீடே கதியென்று மூழ்கிப்போய் கிடந்தனர்.

இந்த ஆண்கள் ஆசைநாயகிகள் வலையில் வீழ்ந்துவிடக் காரணம், அந்த பெண்களின் தனித்திறமைகள்தான். அதேநேரம், அந்த ஆண்களின் மனைவியரோ கிணற்றுத் தவளையாகவே அறிவற்றவர்களாக இருந்தனர்.

இதற்கிடையில், ஆண் குழந்தைக்கு ஆசைப்படுவதில் உலகம் முழுவதும் உள்ள எல்லோரது விருப்பமும் ஒரேமாதிரியாக இருந்தது. ஆண் வாரிசு பிறக்கவில்லை என்றால், அந்த குடும்பங்களின் சொத்தை அரசே எடுத்துக்கொள்ளும் சட்டமும் ஆங்காங்கே நடைமுறையில் இருந்தது. அதனால், ஆண் குழந்தைக்காக பெண்கள் தவம் கிடந்தனர்.

அதையும் மீறி பெண் குழந்தை பிறந்தால் மனதை கல்லாக்கிக்கொண்டு அதை கொன்றனர். அரேபிய பாலைவன பகுதியில் வசித்த பெண்கள் தங்களது பெண் குழந்தையை பாலைவன மணலுக்கு அடியில் புதைத்துக் கொன்ற அதேநேரத்தில், இந்திய அம்மாக்களோ நெல் மணிகள், கள்ளிப்பால், அரளி விதை போன்றவற்றை கொடுத்து அந்த குழந்தைகளுக்கு முக்தி அளித்தனர்.

இதை ஒரு குற்றமாகவோ, பாவச் செயலாகவோ யாருமே கருதவில்லை. பெண்ணாக பிறந்தது, தங்களைப்போல் கஷ்டப்படாமல், அது காலாகாலத்தில் போய் சேர்ந்துவிடட்டுமே என்றுகூட எண்ணினார்கள்.

இப்படியே பெண் குழந்தைகளை கொன்று குவித்துக்கொண்டே போனால், அடுத்த சமுதாயம் எப்படி மலரும்? அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுமே! - அவர்களும் சில நேரங்களில் இதை யோசித்தார்கள்.

அதனால், சில பெண் குழந்தைகள் அந்த பாதக கொலையில் இருந்து தப்பினர். ஆனாலும், சமுதாயத்தில் அவர்களுக்கு எந்தவித மதிப்பு-ம் கொடுக்கப்படவில்லை.

இப்படி பெண்கள் சமுதாயம் அடியோடு புறக்கணிக்கப்பட, காலப்போக்கில் அவர்கள் வேறு ஆயுதத்தை தூக்கினார்கள். அவர்களது உடல்தான் அந்த ஆயுதம்!

வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண்களில் சிலர் அப்போது தங்களது உடல் அழகின் மகிமையை உணர ஆரம்பித்தனர். தேவதாசி ஆனார்கள்.

சாதாரண பெண்கள் எந்த கலையும் கற்றுக்கொள்ளக்கூடாது என்ற தடை இருந்த அதேநேரத்தில், இந்த தேவதாசிப் பெண்கள் ஆண்களைப்போல் பல்வேறு கலைகளையும் கற்றனர். ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும் கற்றார்கள் என்றே சொல்லலாம்.

இதற்கான ஆதாரத்தை இந்திய காமசூத்ராவில்கூட காண முடிகிறது. "ஆயக் கலைகள் அறுபத்து நான்கும் தெரிந்திருந்தால்தான் ஒரு பெண் தேவதாசி என்ற அந்தஸ்தை பெற முடியும்" என்கிறது காமசூத்ரா.

இவ்வாறு தேவதாசி ஆன பெண்கள் அந்தந்த ஊரின் ஆண் தெய்வங்களை மணந்து கொண்டார்கள். அதனால், அவர்களது அந்தஸ்து உயர்ந்தது. தெய்வத்தின் மனைவி ஆனார்கள். ஒருக்கட்டத்தில் இவர்களை ஆண்கள் வியப்புடன் பார்த்தார்கள்.

இந்த தெய்வத்தின் மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று தவியாய் தவித்தார்கள். அதற்காக எதையும் இழக்க அவர்கள் தயாரானார்கள். அந்த தேவதாசிகளுக்காக பணத்தை நீரென வாரியிறைத்தார்கள்.

நாளடைவில் அந்த தேவதாசிப் பெண்கள் தங்களுடன் இணைந்த ஆண்களை தங்களது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அவர்களை ஆட்டிப்படைக்கவும் ஆரம்பித்தனர். இந்த தேவதாசிகளிடம் பணக்காரன், பாமரன் மட்டுமின்றி அரசனே அடிமைப்பட்டு கிடந்தான்.
இதை பார்த்து வியந்த மற்ற பெண்கள் தங்கள் பாதையை மாற்றினர்.

தேவதாசிகளிடம் அழகும், அறிவும் கொட்டிக்கிடப்பதாக நினைப்பதால்தானே ஆண்கள் அவர்களைத் தேடி போகிறார்கள்? என்று எண்ணிய அவர்கள், தங்களது உடல் அழகை படிப்படியாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். ஆண்களிடம் கொஞ்சி கொஞ்சிப் பேசினார்கள். மார்பக அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். நடந்து செல்வதில்கூட மாற்றங்களை செய்தார்கள்.

இதற்கு உதாரணமாக ரஷ்யப் பெண்களையும், சீனப் பெண்களையும் கூறலாம். ரஷ்யப் பெண்கள் கால் விரல்களாலேயே நடக்க பழகினார்கள். சீனப் பெண்கள் பாதங்களை சிறு வயதில் இருந்தே இறுக கட்டி வைத்து, அதை சிறிய பாதமாகவே வைத்துக்கொண்டனர். அந்த சின்ன பாதத்தை சீன ஆண்கள் விரும்பி ரசித்தனர்.

- இப்படி படாத பாடுபட்டுதான் முன்னேறி இருக்கிறார்கள் பெண்கள்.


Share:

கண்ணதாசனை திகைக்க வைத்த பேச்சாளர்


ப்போதும் மங்கலகரமாக பேச வேண்டும் என்று சொல்வார்கள். கவியரசு கண்ணதாசனும் அதை பின்பற்றினார்.

ஆனால், அவர் கலந்துகொண்ட ஒரு விழாவில் பேசிய ஒருவர் அமங்கலமாக பேச, அப்போது ஏற்பட்ட தனது அனுபவம் பற்றி கண்ணதாசன் கூறியிருப்பதாவது :

 சில சீர்திருத்த திருமணங்களுக்கு நான் தலைமை தாங்கி இருக்கிறேன். அப்படி நடந்த ஒரு திருமணத்தில் நான் கலந்து கொண்டேன். அங்கே பேசிய ஒருவர், மணமக்கள் மீது மஞ்சள் அரிசியும், பூக்களும் தூவப்பட்டது பற்றி குறிப்பிட்டார்.

"இங்கே மஞ்சள் அரிசி தூவினார்கள். இந்த முட்டாள்தனம் எதற்காக? பிணத்துக்கும் தான் மஞ்சள் அரிசி தூவுகிறார்கள். இவர்கள் மணமக்களா? இல்லை... பிணங்களா?" என்று அவர் பேசினார்.

அவரது இந்த பேச்சு எனக்கு நெஞ்சில் அடிப்பது போல் இருந்தது. திருமண வீட்டில் அமங்கலமாக பேசுகிறாரே... என்று வருந்தினேன்.
இதேபோல், இன்னொரு சீர்திருத்த திருமணத்திலும் நான் கலந்து கொண்டேன். அப்போதும் ஒருவர் இதேபோல் பேசினார்.

"இங்கே நடப்பது சீர்திருத்த திருமணம். 2 நிமிடத்தில் செலவில்லாமல் முடிந்துவிட்டது. அய்யர் வரவில்லை. ஓமம் வளர்க்கவில்லை. அம்மி மிதிக்கவில்லை. அருந்ததியும் பார்க்கவில்லை. இங்கே அய்யர் வராததால் இந்த பெண் வாழ மாட்டாளா? இவளுக்கு குழந்தை பிறக்காதா? அய்யர் வந்து நடத்தாததால் இவள் விதவையாகிவிடப் போகிறாளா? அப்படியே விதவையாகிறாள் என்றே வைத்துக் கொள்வோம். அய்யர் நடத்தும் திருமணங்களில் பெண்கள் விதவையாவதில்லையா? அந்த அய்யர் வீட்டிலேயே விதவைகள் இருப்பார்களே, அவர் வந்து கட்டக் கொடுத்தால் தான் தாலி நிலைக்குமா? நாங்கள் கட்டக் கொடுத்தால் அறுந்து விடுமா?" - அவர் பேசி முடிக்கவில்லை; நான் அவர் கையை பிடித்து இழுத்து அமர வைத்தேன்.

"நடப்பது திருமணம். நீ பேசுவது விதவையாவது எப்படி என்பதை பற்றி. பேசாமல் உட்கார்" என்றேன். பின்னர், நான் பேசும்போது நமது மங்கல மரபுகள் பற்றி குறிப்பிட்டேன்.

மங்கலம்-அமங்கலம் என்று இந்துக்கள் பிரித்தது மூடநம்பிக்கையல்ல; அது மனோதத்துவ மருத்துவம்.


நல்ல செய்திகள், வாழ்த்துகள் ஒரு மனிதனின் காதில் விழுந்து கொண்டே இருந்தால், அவனது ஆயுளும் அதிகரிக்கிறது; ஆனந்தமும் பொங்குகிறது. மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை.

நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரீக சம்பிரதாயத்தையே உருவாக்கி உள்ளன. அவற்றுள் பல அறிவியல் ரீதியானவை.

மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வரச் சொல்கிறார்கள்? மணவறையை சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்? ஊர்வலம் வர வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள்?

இப்படி எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன?


காரணம், பூமியே வலப்புறமாக சுழல்கிறது என்பது தான்.
மனிதனின் 2 கால்களில், 2 கைகளில், இடது கை&கால்களை விட, வலது கை-கால்கள் பலம் வாய்ந்தவை. இதனால் தான், சக்தியோடு வாழ நிரந்தரமாக எதிலும் வலப்புறமாக வருவது நல்லது என்று இந்துக்கள் நம்பினார்கள், நம்புகிறார்கள். வலம் என்பது நாம் வலிமை அடைவோம் என்றும் பொருள் தருகிறது.

சாதாரணமாக, நண்பர்கள் வீட்டுக்கோ, திருமணங்களுக்கோ செல்கிறவர்கள், திரும்பிச் செல்லும்போது, போய் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு போவார்கள். அதன் பொருள், இன்னும் பல திருமணங்கள், விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும்; நாங்கள் மீண்டும் வருகிறோம் என்பதே!

அமங்கல வீடுகளுக்கு செல்கிறவர்கள் திரும்பும்போது, போகிறேன் என்று சொல்லிக் கொண்டு போவார்கள். அதன் பொருள், இனி உன் வீட்டில் அமங்கலம் நேராது. நாங்கள் வரவேண்டி இருக்காது என்று நம்பிக்கை ஊட்டுவதாகும்.

பெண் ருதுவாவதை பூப்படைந்தாள், புஷ்பவதியானாள் என்பார்கள். அதாவது, பெண் மொட்டாக இருந்து புஷ்பம் போல் மலர்ந்திருக்கிறாள் என்பது இதன் பொருள்.

மணமக்களின் முதலிரவை சாந்திமுகூர்த்தம் என்பார்கள். காதலில் துடித்துக் கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்கு சாந்தியடைகிறது என்பதே அதன் பொருள்.
இதேபோல், இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்கலமே நிறைந்திருக்கும். நான் சொல்வது சராசரி இந்துக்களை - என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
Share:

வெள்ளி, 5 மார்ச், 2010

ஆண்மையை பாதுகாக்கும் செவ்வாழை


ல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.

மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

வயது ஆக ஆக எல்லோருக்கும் கண் பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்-த-கைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.

குறைவான உயிரணுக்கள் எண்ணிக்கை கொண்ட ஆண்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால், எளிதில் குழந்தை பாக்கியமும் கிட்டும்.

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரஸ்தாளி வாழைப்பழத்தை தண்ணீர் விட்டு கரைத்து மூன்றுவேளை உட்கொள்ள கொடுத்தால் போதும். அந்த பாதிப்பு உடனே நின்றுவிடும்.
Share:

குழந்தை கிளிக் ஆகும் நேரம்


ணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும்போது கரு உருவாகி, அது தாயின் வயிற்றில் குழந்தையாக வளர்ந்து, பத்தாவது மாதத்தில் குழந்தையாக வெளிப்படுகிறது.

பெண்ணின் கருப்பை வாயுக்குள் செலுத்தப்பட்ட விந்-தணு 48 முதல் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். அதேநேரம், பெண்ணின் கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டை 24 மணி நேரம்தான் உயிருடன் இருக்கும்.

கருமுட்டை வெளியான 24 மணி நேரத்திற்குள், அதை ஆணின் உயிரணு சந்தித்து இணைந்து கொண்டால்தான் ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியும்.
இதனால், கரு முட்டை எப்போது வெளியாகிறது என்ற ஆர்வமான கேள்வி எழுகிறது. மாதவிலக்கு நின்ற 10 முதல் 20 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் கருமுட்டை வெளிவரலாம்.

இந்த காலக்கணக்கு, மாதவிலக்கு சுழற்சி சரியாக உள்ள பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
Share:

மஞ்சள் தினமும் பூசலாமா?

ங்கலகரமான பொருளாக கருதப்படும் மஞ்சள் பெண்களுக்கான அழகு - வசீகரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மஞ்சளை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இதற்கு காரணம், அது மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதுதான். அதே மஞ்சளை தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் வயது கூடுதலாக தெரியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

மஞ்சளில் கஸ்தூரி வகை மஞ்சள் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இதன் பயனை முழுமையாக பெற சுத்தமான கஸ்தூரி மஞ்சளை கடலை மாவு அல்லது பாசிப்பயறு மாவில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். குளிப்பதற்கு முன்னதாக, உடலில் தேங்-காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தேய்த்து, அதன்பின் இந்த கஸ்தூரி மஞ்சள் கலவையை பூசி குளிக்க வேண்டும்.

வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் மின்னத் தொடங்கிவிடும். இளமை அழகும் ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.
Share:

வியாழன், 4 மார்ச், 2010

தாய் என்றொரு தெய்வம்...


ந்த தாய்க்கு அவன் ஒரே மகன். அவன் ஒரு தாசியிடம் மனதை பறிகொடுத்துவிட்டான். அவளை தேடிச் சென்று, தேடிச்சென்று கையில் இருந்த பணத்தை எல்லாம் இழந்தான்.

அவனிடம் இனி பணம் எதுவும் இல்லை என்கிற நிலை வந்தபோது, அந்த தாசி அவனை எட்டிப்பார்க்கவே மறுத்துவிட்டாள்.

ஒருநாள், "உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை" என்று அவள் காலிலேயே விழுந்துவிட்டான். "உனக்கு என்ன வேண்டுமோ கேள், தருகிறேன்! ஆனால், என்னை வரவேண்டாம் என்று மட்டும் சொல்லிவிடாதே" என்றும் கெஞ்சினான்.

அந்த தாசிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவள் கேலியாக சிரித்துக் கொண்டே, "உன் தாயின் இதயம் எனக்கு வேண்டும். தருவாயா?" என்று கேட்டாள்.

காமத்தின் மயக்கத்தில் சிக்கியிருந்த அவன், "இதோ கொண்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு வீட்டுக்கு சென்றான்.

"அம்மா! அவள் என்றால் எனக்கு உயிர் என்று உனக்கு நன்றாகவே தெரியும். அவளுக்கு கொடுக்க இப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை. உன் இதயம் வேண்டும் என்று கேட்கிறாள். நீ அதை எனக்கு கொடுப்பாயா? அவளை பார்க்காமல் என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது" என்று கூறி அழுதான்.

எந்த தாய்தான் மகன் கேட்டால், இல்லை என்று சொல்வாள்? உடனே அவள், "மகனே! என் இதயத்தை கொடுத்தால் அவள் உன்னுடனேயே இருப்பாளா?" என்று கேட்டாள். அதற்கு அவன் "இருப்பாள்" என்றான்.

அந்த தாயும், தன்னை கொன்று இதயத்தை வெட்டி எடுத்துக்கொள்ளும்படி கூறினாள். அதன்படி, அந்த அன்பான தாயை கொன்ற அவன், தாசி கேட்டவாறு இதயத்தையும் தனியாக வெட்டியெடுத்தான்.

வலது கையில் அதை ஏந்தியபடி, தனது அன்புக்குரிய தாசி வீட்டை நோக்கி வேகமாக நடந்தான். செல்லும் வழியில் கல் தடுக்கி கீழே விழுந்தான். கையில் இருந்த தாயின் இதயமும் கீழே விழுந்தது.

அந்த இதயம், கீழே விழுந்த அவனைப் பார்த்து, "மகனே வலிக்கிறதா? நான் உயிரோடு இருந்தால் உன் காயத்திற்கு மருத்துவம் பார்த்து இருப்பேனே?" என்றது.

"இப்படிப்பட்ட தாயையா எவளோ ஒருத்திக்காக வெட்டிக்கொன்றேன்?" என்று அப்போது அலறிய அவன், அங்கேயே உயிர்விட்டான்.

- தாயின் அன்பு எப்படிப்பட்டது என்பதற்காக சொல்லப்பட்ட கதை இது.


அன்புக்கு உதாரணம்தான் தாய். ஒரு குழந்தையை பெற்றெடுக்கும்முன் எவ்வளவு போராட்டங்களையோ ஒரு பெண் சந்திக்கிறாள். ஒருவேளை அந்த குழந்தையை பெற்றெடுக்க காலதாமதம் ஆகிவிட்டாள் மலடி என்றெல்லாம்கூட பட்டப்பெயர் வாங்கிக்கொள்கிறாள்.

அந்த குழந்தை பிறந்து, அவள் தாயானதும் அக்குழந்தையை வளர்க்க எவ்வளவோ கஷ்டப்படுகிறாள்.

தூக்கத்தை துறக்கிறாள். உணவை மறக்கிறாள். பெற்ற குழந்தையே எல்லாம் என்று வாழ்கிறாள். அந்த குழந்தை ஒரு நோய் என்றால் பதறிப்போகிறாள். தன் உயிரைக் கொடுத்தாவது குழந்தையை காப்பாற்றிவிட முயற்சிக்கிறாள்.

அதே குழந்தை வளர்ந்து ஆளானதும், அந்த குழந்தையின் கல்விக்காக ஒரு பெரிய போராட்டமே நடத்துகிறாள். அணிந்திருக்கும் ஒன்றிரண்டு நகைகளை விற்றுகூட குழந்தையை படிக்க வைக்கிறாள்.

குழந்தை படித்து முடித்து நல்ல நிலைக்கு வந்ததும் திருமணமும் செய்து வைக்கிறாள். திருமணத்திற்கு பிறகு அவளுக்கு பெற்ற குழந்தையின் ஆதரவு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

இப்படி வாழ்க்கையை அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்பவள் ஒரு பெண்தான். அவள்தான் தாயாக பரிணமிக்கிறாள்.

ஒரு குழந்தை நல்ல குழந்தையா? தீய வழியில் செல்லும் குழந்தையா? என்பது அதன் அன்னையாகிய தாய் வளர்ப்பதில்தான் இருக்கிறது.

இன்று நீங்கள் இந்த சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் தாயை மனதார வாழ்த்துங்கள். உங்களை இந்த அளவுக்கு ஆளாக்கிய அந்த தாய்க்கு நன்றி செலுத்துங்கள்.

அந்த உன்னத தாய் இன்று உயிரோடு இருந்தால், ஒரு தெய்வத்திற்கு இணையாக போற்றுங்கள். நடமாடும் தெய்வம் அவள் ஒருத்திதான்.
எந்த தாயும் தனது குழந்தை நல்ல வழியில் செல்ல வேண்டும், பிறர் போற்றும்படியாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவாள். இதற்கு விதிவிலக்கான தாயும் இருக்கலாம். இதுபற்றி விரிவாக அலச தேவையில்லை.

தனது பிள்ளைக்கு நல்லது நடக்கும் என்றால், அதற்காக தனது உயிரையே கொடுக்க துணிபவள்தான் உண்மையானத் தாய்.

நீங்கள் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்லும்போது Ôபாக்கெட் மணிÕக்கு பணம் இல்லையென்றால், அதற்காக அங்கு இங்கு என்று அலைந்து, அதை வாங்கிக்கொண்டு வந்து மகிழ்ச்சியோடு உங்களிடம் கொடுத்தவள் யார்? உங்கள் தாய்தானே?

நோயால் பாதிக்கப்பட்டு நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் உங்கள் காலடியிலேயே, உங்களுக்காக கிடந்து வேண்டுபவளும் அந்த தாய்தானே?

திருவிழாவில் பெற்ற பிள்ளை மற்றவர்களுக்கு இணையாக புத்தாடை அணிய வேண்டும் என்பதற்காக, பழைய ஆடையை அணிபவளும் அதே தாய்தானே?
இப்படிப்பட்ட தாயை நாம் எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும்? அதை நாம் செய்து கொண்டிருக்கிறோமா?

பெரும்பாலும் இல்லைதானே?

எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பெற்ற பிள்ளைக்காக வாழ்பவள்தான் தாய். அதனால்தான், இந்த பூமியைக்கூட பூமாதேவி என்கிறோம். நதிகளுக்குக் கூட பெண்ணின் பெயரை வைத்துதான் போற்றுகிறோம்.

பூமிக்கு, நதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பங்கையாவது பெற்ற தாய்க்கு கொடுப்போமே! அவளை நாம் போற்றாவிட்டால் வேறு யார்தான் போற்றுவார்கள்?
Share:

புதன், 3 மார்ச், 2010

சாமியார்கள் லீலைக்கு யார் காரணம்?



காம வலையில் பெண்களை வீழ்த்தும் போலிச் சாமியார்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க வேண்டும் என்றால் பக்தர்கள் மத்தியில்தான், குறிப்பாக பக்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

ஆசிரமத்தை தேடிச் சென்றால், அங்குள்ள அமைதியான சூழ்நிலையில் நிச்சயம் மக்களுக்கு மனசாந்தி கிடைக்கும். ஆனால், அங்குள்ள போலிச் சாமியார்கள் பற்றி உங்களுக்கு தெரியாதே?

இனியாவது, போலிச் சாமியாராக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த சாமியாராக இருந்தாலும் சரி, அவர்களைத் தேடிச் செல்வதை விட்டு விடுங்கள். வேண்டும் என்றால் கோவிலுக்குச் செல்லுங்கள்.

அங்கே சாமியிடம் மட்டும் முறையிடுங்கள். மனப்பாரம் குறையும். மாறாக, அர்ச்சகரிடம் சொன்னால்... போலி அர்ச்சகர்  எண்ணிக்கையும் அதிகமாகிவிடும்.

பொதுவாக, சாதாரண போலிச் சாமியார்கள் , போலி அர்ச்சகர்கள் பெண்களிடம் தங்களது வேலையை உடனடியாக காட்டிவிட மாட்டார்கள். படிப்படியாகத் தான் காயை நகர்த்துவார்கள்.

இவர்களது ஒரே குறி, இல்லற வாழ்க்கையில் தோற்றுப்போன, தோல்வி முகத்தில் உள்ள நடுத்தர வயது பெண்கள்தான்.

ஒரு பெண் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறாளா? இல்லையா? என்பதை அவளது முகத்தை பார்த்தே கண்டுபிடித்துவிடலாம். இந்த சபலங்கள் இந்த விஷயத்தில் அனுபவ ரீதியாக இன்னும் தேர்ச்சிப்பெற்று காணப்படுவார்கள்.

இப்படி, குடும்ப வாழ்க்கையில் திருப்தியற்ற நிலையில் வாழும் பெண்களிடம் இந்த சபலங்கள் தாங்களாகவே முன்வந்து பேச ஆரம்பிப்பார்கள். சம்பந்தப்பட்ட பெண் முன்பின் அறிமுகம் இல்லாதவளாக இருந்தாலும்கூட, இவர்களே அவர்களிடம் ஆஜராகி, ‘இப்படி செய்தால் பிரச்சினை சரியாகிவிடும்; நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே...’ என்று ஆறுதல் கூறி, ஒரு ஈர்ப்பை தேடிக்கொள்வார்கள்.

மனதில் பிரச்சினைகளை சுமந்து காணப்படுபவர்களிடம் யாரேனும் ஆறுதல் கூறினால், அந்த மனச்சுமை சற்று குறைவதுபோல் தோன்றும். இது இயற்கை.

இதேப்போன்று சபலங்கள் விரிக்கும் ஆறுதல் வலையில் முதல்கட்டமாக பிரச்சினைகளை சுமக்கும் பெண்கள் விழுந்து விடுகிறார்கள். வேறு நபர்களிடம் தனக்கான ஆறுதல் கிடைக்காதபட்சத்தில் இந்த பெண்களே, சம்பந்தமே இல்லாமல் ஆறுதல் சொன்ன சபலங்களைத் தேடி வருகிறார்கள்.
இப்படி ஒரு பெண் தங்களை தேடி வர ஆரம்பித்துவிட்டால், இந்த சபலங்கள் அடுத்தகட்ட முயற்சியில் இறங்குகிறார்கள்.

‘விளை நிலத்தில் களைச்செடிகள் இல்லாமல் இருந்தால்தான் பயிர்களில் நல்ல மகசூல் பெற முடியும்;  அதேப்போன்று, குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சினைகள் - பிரச்சினைக்குரியவர்கள் இல்லாமல் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும்...’ என்று ஆறுதல் சொல்வதுபோல் ஆசை வார்த்தைகள்கூறி, தங்கள் பக்கம் சாய்த்து விடுகிறார்கள்.

இப்படி, சபலங்கள் பக்கம் தன்னை அறியாமலேயே சாய்ந்துவிடும் பெண்கள், ஒருவித ஈர்ப்பில் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் ஆமாம் போட ஆரம்பித்து விடுகிறார்கள். ஒருக்கட்டத்தில் தங்களையே அவர்களிடம் ஒப்படைக்க தயாராகிவிடுகிறார்கள்.

ஒருமுறை இந்த ‘தவறு’ நடந்து, பின் அதை தவறு என்று உணர்ந்து சம்பந்தப்பட்ட பெண்கள் திருந்தினாலும்கூட, இந்த சபலங்கள் முன்பு நடந்த ‘தவறை’ ஆயுதமாக கையில் எடுத்து, முழுவதுமாக இந்த பெண்களை தங்கள் பிடியில் சிக்க வைத்து விடுகிறார்கள்.

இதுபோன்ற சபலங்களிடம் இருந்து குடும்பப் பெண்கள் தப்பிக்க என்ன செய்யலாம்?

* ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்றால் அங்கே கணவன்-மனைவி உறவு சுமூகமாக இல்லை என்றுதான் அர்த்தம். தங்களுக்குள் செக்ஸ் விஷயம் முதல் செல்லாத விஷயம் வரை எந்த பிரச்சினை இருந்தாலும், கணவன்&மனைவி இருவரும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையில் இன்னொருவர் மூக்கை நுழைத்தால், தம்பதியருக்குள் ஈகோ ஏற்பட்டு, பிரச்சினை இன்னும் பெரியதாகிவிடும். அதனால், முடிந்தவரை பிரச்சினையை உங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லாத சூழ்நிலையில், மனோதத்துவ ஆலோசனையை நாடலாம்.

* அந்தரங்க விஷயங்களை உங்கள் கணவனிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவர்கள் காதுகளுக்கு இந்த விஷயம் போனால் உங்களை சபலங்கள் பின்தொடரலாம்.

* முன்பின் தெரியாத ஆண்களிடம் உங்கள் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

*சமீபத்தில் அறிமுகமான ஒரு ஆண், உங்கள் விஷயத்தில் மெனக்கெட்டு அக்கறை எடுத்துக்கொண்டால் அப்போதே உஷாராகிவிடுங்கள்.

* சபலங்கள், ஒரு பெண்ணை தங்கள் வலையில் வீழ்த்த கடைசி கட்டமாக கையில் எடுப்பது செக்ஸ் விஷயங்களைத்தான். அந்த விஷயங்களைப் பற்றி மறைமுகமாக உங்களிடம் கோடிட்டு காட்டி பேச ஆரம்பித்துவிட்டால், அதோடு அவர் உடனான இணைப்பை துண்டித்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி அவர் உங்களை தொந்தரவு செய்தால் போலீசில் புகார் செய்துவிடுங்கள்.

* இப்போதெல்லாம் சிறுவர்கள்கூட கேமரா உள்ள செல்போனைத்தான் பயன்படுத்துகிறார்கள். இப்போதைய நவீன செல்போன் கேமராக்கள் மூலம் துல்லியமாக வீடியோ பதிவு செய்ய முடிகிறது. அதனால், உங்களது உடை அலங்காரம் எந்த சூழ்நிலையிலும் ஆபாசமாக இருக்க வேண்டாம்.

* முக்கியமாக, உங்களுக்குள் எந்த சூழ்நிலையிலும் சபலம் எட்டிப் பார்க்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்களே சபலத்தை நினைத்துவிட்டால், சபலங்கள் எய்த அம்பு உங்களை குறி தவறாமல் அவர்கள் வலையில் வீழ்த்திவிடும்.

இன்னொரு விஷயம்... பிரச்சினை இல்லாத குடும்பமே கிடையாது. எல்லா கணவன்-மனைவிக்குள்ளும் பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. அந்த பிரச்சினை அவர்களோடு தீர்க்கப்பட்டால் வாழ்க்கையில் எந்த தொல்லையும் இல்லை. பிரச்சினைகளை வீதிக்கு கொண்டு வந்துவிட்டால், அதனால் ஏற்படும் அவமானத்தையும், பின்விளைவுகளையும் சந்தித்துதான் ஆக வேண்டும்!

அதனால் உஷார்... உஷார்....
Share: