திங்கள், 8 மார்ச், 2010

ஹிட்லரை புட்டுப் புட்டு வைத்த டைரி


ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர், யூதர்களுக்கு செய்த கொடுமைகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தனது பதவிக்காலத்தில் 60 லட்சம் யூத மக்களை கொஞ்சம்கூட ஈவு இரக்கமே இன்றி கொலை செய்ய உத்தரவிட்டு, கொன்று குவித்தவன் அவன்.

ஜெர்மனி மட்டுமின்றி, தன்னால் பிடிக்கப்பட்ட பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள யூத மக்களையும் கொல்ல அவன் தயங்கியது கிடையாது. ஹிட்லரின் நாஜிக் படையினரிடம் சிக்கிக்கொண்டால் மரணம் நிச்சயம் என்பதால் பல யூதர்கள் ஓடி ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.

ஹாலந்து நாட்டில் ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு யூத குடும்பம், நண்பர் ஒருவரது வீட்டில் ஒளிந்து வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்தில் ஒருத்தியான ஆன்னி பிராங்க் என்பவள், நாஜிக் படைகளுக்கு பயந்து தாங்கள் அனுபவிக்கும் அவஸ்தைகள் மற்றும் தனது மனதில் தோன்றும் ஆசா பாசங்கள், உயிர் வாழ உள்ள ஆசை போன்றவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்தாள்.

ஆனால், 1944ல் இவளது குடும்பம் நாஜிக் படையிடம் காட்டிக்கொடுக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் சித்ரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு ஆன்னி பிராங்க் கொல்லப்பட்டாள்.

அவளது தந்தை எப்படியோ தப்பித்து வந்து, மகள் ஆன்னி பிராங்க் எழுதிய டைரியை தேடி கண்டுபிடித்தார். இதற்குள் போர் முடிந்து, ஜெர்மனியும் சரணாகதி அடைந்துவிட்டது. ஹிட்லரும் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சூழ்நிலையில், ஆன்னி பிராங்கின் தந்தை, அவள் டைரியில் எழுதிய விஷயங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். ஒரு சிறுமி யூதர்கள் பட்ட கஷ்டங்களை கூறுவதுபோல் அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு இருந்தது.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி அந்த புத்தகம் உடனேயே 20 லட்சம் பிரதிகள் விற்று தீர்ந்தது. திரைப்படமாகவும் அது தயாரானது. இதுதவிர, பல மொழிகளிலும் ஆன்னி பிராங்கின் எழுத்துக்கள் மொழி பெயர்க்கப்பட்டன.
Share:

0 கருத்துகள்: