தினமும் ஒரு சிவனடியாருக்காவது அமுது படைத்து விட்டு உண்பதுதான் சிவத் தொண்டரான பரஞ்ஜோதியார் குடும்பத்தின் வழக்கம். அன்று என்னவோ சிவனடியார் யாரும் அவர்களது இல்லத்திற்கு வருவதாக தெரியவில்லை. பக்கத்தில் எங்கேனும் சிவனடியார்கள் இருக்கிறார்களா என்பதை அறிய, பரஞ்ஜோதியார் வெளியில் சென்றார்.
ஆனால், எந்த சிவனடியாரும் அவரது பார்வைக்குக் கிடைக்கவில்லை.
மிகுந்த களைப்போடு வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அடுத்து என்ன செய்வது? என்பது போல் யோசித்தார்.
அப்போது, வீட்டிற்குள் இருந்து அவரது மனைவி வெளியே வந்தாள்.
“என்னங்க... இவ்வளவு நேரமா எங்கே போனீங்க?”
“ஒரு சிவனடியாராவது நம் பார்வைக்குக் கிடைக்க மாட்டாரா என்று தேடிப் போய் இருந்தேன். யாரும் கிடைக்காததால் வரத் தாமதமாகி விட்டது”.
“அந்தக் கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். சிறிது நேரத்திற்கு முன்புதான் நம் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வந்தார். அவரது தோற்றம் சற்று பயத்தை ஏற்படுத்தினாலும், மிகச் சிறந்த சிவனடியார் போன்று தெரிந்தது. நம் ஊரை ஒட்டியுள்ள ஆத்தி மரத்தடியில் இருப்பதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். அவரை அழைத்து வாருங்கள்...” என்றாள், கணவனைப் போலவே சிவநெறி வழுவாத பரஞ்ஜோதியாரின் மனைவி.
“சரி... நான் அவரை அழைத்து வருகிறேன். வீட்டில் நல்ல உணவு தயாரித்து வை!”
“ஆமாங்க... இப்போது நீங்கள் அவரை அழைத்து வரவேண்டியதுதான் பாக்கி...” என்றாள் அவள்.
ஆத்தி மரத்தடி நோக்கிச் சென்ற பரஞ்ஜோதியார், அங்கு காத்திருந்த சிவனடியாரை சரியாக அடையாளம் கண்டு கொண்டார்.
சிவனடியாரை பார்த்த மாத்திரத்தில் பரஞ்ஜோதியாருக்கும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நெற்றியில் திருநீறும், கழுத்தில் உருத்திராட்சக் கொட்டை மாலையும், காவி உடையிலுமே சிவனடியார்களை பார்த்துப் பழக்கப்பட்ட அவருக்கு, அவர் மட்டும் சற்று வித்தியாசமாகத் தெரிந்தார்.
அவரது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த எலும்பு மாலையும், ஒரு கையில் திரிசூலமும், மறுகையில் மண்டையோடும் பரஞ்ஜோதியாரை சற்று மிரள வைத்தன. நடுங்கியபடியே அவர் முன் போய் நின்றார்.
“சுவாமி! நான் சிவனடியாருக்கு உணவு படைக்கும் பொருட்டு, சிவனடியாரைத் தேடிச் சென்ற நேரத்தில் தாங்கள் என் வீட்டிற்கு வந்ததாக என் மனைவி கூறினாள். தங்களை அழைத்துச் சென்று உணவு படைக்கவே இங்கே வந்திருக்கிறேன்...” என்றார்.
“உணவு படைப்பது சரி. ஆனால் நீ கொடுக்கும் உணவு எனக்கு பிடித்த உணவாக இருக்க வேண்டும்.”
“சரி சுவாமி...”
“அப்படியென்றால், நான் கேட்கும் உணவை கண்டிப்பாக நீ தருவாயா?”
“இதில் என்ன சந்தேகம் சுவாமி? உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் என் பணி. என்னிடம் இருப்பதில் நீங்கள் கேட்பது எதுவாக இருந்தாலும் நிச்சயமாக நான் தருகிறேன்...”
“சரி... நான் கேட்பது கிடைக்கும் என்பதால் வருகிறேன். எனக்கு என்ன உணவு வேண்டும் என்பதையும் இங்கேயே உன்னிடம் சொல்லி விடுகிறேன்”
“தாராளமாகச் சொல்லுங்கள் சுவாமி.”
“நான் வடபுலத்தைச் சேர்ந்தவன். ஆறு மாதத்திற்கு ஒருமுறை உணவு உட்கொள்வதுதான் எனது வழக்கம். எனது உணவே மனித மாமிசம்தான். அதுவும், ஐந்து வயதுக்கு உட்பட்ட தலைமகனான பாலகனின் மாமிசத்தை மட்டுமே சாப்பிடுவேன். அந்த உணவைத்தான் நான் உன் இல்லத்தில் எதிர்பார்க்கிறேன்...”
அந்த சிவனடியார் சொன்ன உடன் அதிர்ந்து போய்விட்டார் பரஞ்ஜோதியார்.
அவரால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. உடல் முழுக்க வியர்த்தது. வார்த்தைகள் வர மறுத்து வாய் நடுங்கியது.
அந்த சிவனடியார் தொடர்ந்து பேசினார். “நான் விரும்பும் உணவை உன்னால் தர முடியாது என்று எனக்கு நன்றாகவேத் தெரியும். அதனால்தான் உன்னிடம் திரும்பத் திரும்ப கேட்டேன். பரவாயில்லை. நான் வேறு இல்லத்தில் எனக்கு பிடித்தமான உணவைச் சாப்பிட்டுக் கொள்கிறேன்...” என்றார் அவர்.
ஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு பேசினார் பரஞ்ஜோதியார்.
“அவசரப்பட வேண்டாம் சுவாமி. உங்களுக்குப் பிடித்தமான உணவுக்கு நானே ஏற்பாடு செய்கிறேன்...” என்று கூறி, அவரை தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
கணவன், சிவனடியாரோடு வருவதைக் கண்ட பரஞ்ஜோதியாரின் மனைவி முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால், பரஞ்ஜோதியாரின் முகமோ சற்று வாடிப்போய்தான் இருந்தது. சிவனடியாரை வீட்டிற்குள் அமர வைத்துவிட்டு, சமையலறைக்குள் கணவனை அழைத்துச் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டாள்.
சிவனடியார் கேட்ட உணவு பற்றி சொல்ல வாய் வர மறுத்தாலும், ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு சொன்னார். கணவன் கூறியதைக் கேட்டு அவளும் அதிர்ந்து போனாள். இருப்பினும் தருவதாக வாக்களித்தாகிவிட்டதே... என்று கருதிய அவர்கள், தங்கள் இளகிய மனதை கல்லாக்கிக் கொண்டு, தங்களது ஒரே மகனான ஐந்து வயது சீராளனை சிவனடியாருக்கு பலி கொடுத்து, உணவளிக்க முடிவெடுத்தனர்.
சீராளன் படித்து வந்த குருகுலத்திற்குச் சென்று அவனை அழைத்து வந்தார் பரஞ்ஜோதியார்.
வேகவேகமாக சிவனடியாருக்கு கறியமுது படைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிவபெருமானை மனதிற்குள் நினைத்துக் கொண்டு, ஒரே மகனை கறியாக்கி, அந்த சிவனடியாருக்கு படைத்தனர்.
இலையில் பரிமாறப்பட்ட பாலகனின் கறி உணவைச் சாப்பிட அமர்ந்த சிவனடியார், அடுத்த நொடியே கோபாமானார். “பாலகனின் கறி உணவு கேட்டால், நீ என்ன பசுவின் மாமிசத்தைக் கொண்டு கறி சமைத்து பரிமாறுகிறாயா?” என்று கோபத்துடன் கத்தினார்.
அவசரமாக மறுத்த பரஞ்ஜோதியார், “சத்தியமாக இது ஒரு பாலகனின் கறியமுதுதான்” என்று சொன்னார்.
அதை நம்ப மறுத்த சிவனடியார், “அப்படியென்றால்... தலைக்கறி எங்கே?” என்று கேட்டார்.
“தலைக்கறி உணவுக்கு ஆகாது என்று கருதி, அதை மட்டும் சமைக்காமல் விட்டுவிட்டோம். நாங்கள் செய்த இந்தக் குறையைப் பொறுத்து, தாங்கள் உணவு உண்ண வேண்டும்...” என்று அமைதியாக பதில் சொன்னாள் பரஞ்ஜோதியாரின் மனைவி.
ஆனாலும், சிவனடியார் விடுவதாக இல்லை. “எனக்குத் தலைக்கறிதான் வேண்டும்” என்று அடம் பிடித்தவர், “அந்தத் தலைக்கறி கிடைக்கா விட்டால் வெளியேறிவிடுவேன்...” என்று எச்சரித்தார்.
பரஞ்ஜோதியாரும், அவரது மனைவியும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிக்க... சமையலறைக்குள் இருந்து வெளியே வந்தாள் பணிப்பெண்.
“அம்மா... இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தே நான் தலைகறியை தனியாக சமைத்தேன். அதை இப்போது அடியாருக்கு பரிமாறுங்கள்...” என்றாள்.
முகத்தில் சிறிது மகிழ்ச்சியை வரவழைத்துக் கொண்டு தம்பதியர் இருவரும் சிவனடியாருக்கு அந்தத் தலைக்கறி உணவைப் பரிமாற முயன்றனர்.
அப்போது மீண்டும் கோபமானார் சிவனடியார்.
“நான் தனியொரு ஆளாகத் தலைக்கறி உணவு உண்பதில்லை. வேறு சிவனடியார் யாரேனும் இருந்தால் அழைத்து வரவும்...” என்றார்.
வேறு வழி தெரியாத பரஞ்ஜோதியார், வீட்டின் முற்றத்திற்கு ஓடிச் சென்று, யாரேனும் சிவனடியார்கள் வருகிறார்களா? என்று தேடிப் பார்த்தார். ஆனால், யாருமே அவர் கண்ணில் படவில்லை.
“யாருமே இல்லை” என்று அவர் சொல்ல... சிவனடியாரோ, “யாரும் இல்லை என்றால் என்ன, நீ என் அருகில் அமர்ந்து சாப்பிடு...” என்றார்.
‘என்ன கொடுமை இது? பெற்ற பிள்ளையைக் கொன்று கறி சமைத்து சாப்பிட்ட அவப்பெயரும் எனக்கு வர வேண்டுமா?’ என்று மனதிற்குள் குமுறியபடியே சிவனடியார் அருகில் அமர்ந்தார்.
சிவனடியாருக்கும், தனது கணவருக்கும் தன் பிள்ளைக்கறி உணவைப் பரிமாறினாள், பரஞ்ஜோதியாரின் மனைவி.
இப்போதாவது கறி உணவை சிவனடியார் சாப்பிட்டு விடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, மறுபடியும் ஏமாற்றமே மிஞ்சியது.
“உன் மகனை அழைத்து வா. அப்போதுதான் சாப்பிடுவேன்...” என்று மீண்டும் அடம்பிடித்தார்.
“அவனுக்கு இங்கே வேலை இல்லை...” என்று பரஞ்ஜோதியார் சொன்ன போது, “நீ அவனைக் கூப்பிடு; அவன் வருவான்...” என்றார்.
‘தவம் இருந்து பெற்ற மகன்தான் இங்கே கறி உணவாக இருக்கிறானே... எப்படி அவன் வருவான்?’ என்று மனதிற்குள் பரஞ்ஜோதியார் எண்ணினாலும், சிவனடியாரின் கோபத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக, வீட்டின் முற்றத்திற்குச் சென்று, “சீராளா...“ என்று அழைத்தார்.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
எந்த மகனைக் கறி சமைத்து சிவனடியாருக்கு பரிமாறினார்களோ, அதே சீராளன் ஓடி வந்தான். அவனைப் பார்த்த பரஞ்ஜோதியார் தம்பதியருக்கு இன்ப அதிர்ச்சி. அவனை அள்ளி அணைத்து கொஞ்சினர்.
கறி உணவு வேண்டி தங்கள் இல்லம் வந்த சிவனடியாரைப் பார்க்கத் திரும்பினர். அங்கே அவர் இல்லை. கறி உணவையும் காணவில்லை.
அப்போதுதான், பிள்ளைகறி கேட்டு வந்தவர் சாதாரண அடியார் இல்லை; அந்த சிவபெருமான்தான் என்பதை உணர்ந்தனர் அவர்கள்.
அப்போது, உமாதேவியுடன் காட்சி கொடுத்தார் சிவபெருமான். அடியாருக்காக தனது மகனையே கறியாய்ச் சமைத்த பரஞ்ஜோதியார் 63 நாயன்மார்களுள் ஒருவராக சிறுத்தொண்டு நாயனார் என்று பெருமை பெற்றார்.