வியாழன், 9 செப்டம்பர், 2010

ஜூ.வி. ஆசிரியருடன் ஒரு சந்திப்பு - பாகம் 2



ஜூ.வி., பொறுப்பாசிரியர் திரு.குள.சண்முகசுந்தரம் உடனான பேட்டியின்  தொடர்ச்சி...

கேள்வி : ஜூ.வி.,யில் விளம்பரம் அதிகம் வருவது இல்லையே... இடப்பற்றாக்குறையா? அல்லது சமூக அவலங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைபாடா?

பதில் : சமூக அவலங்களை எடுத்துரைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். மற்றபடி, நாங்கள் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. விளம்பரம் தேடி வந்தால் மாத்திரமே வாங்கிக்கொள்வோம். ஒரு செய்தியை பிரசுரிக்க ஒரு விளம்பரத்தை நிறுத்திதான் ஆகவேண்டும் என்றால், நிச்சயமாக அந்த விளம்பரத்தை நிறுத்திவிடுவோம். ஜூ.வி.யை பொறுத்தவரை செய்திகளுக்கே முதலிடம்!

கேள்வி : சமூக சேவையில் ஜூ.வி., தானே இறங்கியது உண்டா?

பதில் : நிறைய உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக விகடன் நிறுவனம் செய்துள்ளது. செய்தும் வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டு எலிக்கறியை உணவாக உட்கொள்ளும் நிலைக்கு ஆளான நரிமணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு உதவி செய்தோம். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு மாதம்தோறும் 30 கிலோ அரிசி வழங்கினோம். எங்கள் ஆசிரியர்கள், செய்தியாளர்கள் அனைவருமே இந்த சேவையில் இறங்கி ஈடுபட்டோம். இதுபோன்று பல உதவிகளை செய்துள்ளோம். தற்போதும் இது தொடர்கிறது.

கேள்வி : அரசியல், ஊழல், கற்பழிப்பு, கொலை போன்ற செய்திகளை வெளியிடும்போது கொலை மிரட்டல் அல்லது வேறுவிதமான பாதிப்பு ஏற்படுமா? அப்படி ஏற்பட்டால் எப்படி சமாளிப்பீர்கள்?

பதில் : என்னை பொறுத்தவரை கொலை மிரட்டல் அதிகம் வருவதில்லை. ஆனால், மிரட்டல் நிறையவே வரும். செய்தி சேகரிக்க செல்லும் இடங்களில் அடி-உதை விழுந்ததும் உண்டு. நானும் இந்த வகையில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். கடந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பற்றிய ஒரு சிறிய பாக்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தோம். காலை 7 முதல் 10 மணி, மாலை 7 முதல் 10 மணி என அவரது தேர்தல் பிரச்சார நேரம் முரசொலி இதழில் வெளியாகி இருந்தது. அதை வைத்து, கிளப் நேரம் போக மற்ற நேரம் ஓட்டு கேட்கப் போகிறார் போலிருக்கு என்று அந்த செய்தியை வெளியிட்டு இருந்தோம். செய்தி வெளியானபோது அவர் இதுபற்றி ஒன்றும் கேட்கவில்லை. அவர் வெற்றிபெற்ற பின்னர், வெற்றி குறித்து அவரிடம் கேட்க சென்றபோது, அவருடன் இருந்த சிலர் மேற்கண்ட செய்தி வெளியிட்டதற்காக என்னை தாக்கிவிட்டார்கள். உடனே போலீசுக்குச் சென்றோம். வழக்குப்பதிவு செய்யும்போது பி.டி.ஆர். உயிருடன் இல்லை. பெரிய செய்திதான் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது இல்லை. சிறிய செய்தி கூட பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தலாம்.



கேள்வி : பிற புலனாய்வு இதழ்களுக்கும், ஜூ.வி.,க்கும் உள்ள வித்தியாசம்?

பதில் : ஒற்றுமை என்று எடுத்துக்கொண்டால் ஒரே பாணியைதான் பின்பற்றுகிறோம். எல்லோரும் என்பதைவிட முன்னணியில் உள்ள ஜூ.வி., குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். வேற்றுமை என்றால், எங்களது நடைமுறையைச் சொல்லலாம். அதாவது, சில நேரங்களில் வெளியிடப்படும் செய்திகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் இருந்து மறுப்பு கடிதம் வரும். அதை நாங்கள் உதாசீனப்படுத்தாமல், அதற்கு மரியாதை கொடுத்து, இன்ன இன்ன ஆதாரங்கள் செய்தி வெளியிட்டதற்கு இருக்கின்றன என்று பதில் கடிதம் எழுதுவோம். அதன்பின்னர் அவர்கள் அதுபற்றி மீண்டும் எதுவும் கேட்க மாட்டார்கள். சிலநேரங்களில் ஆதாரம் இல்லாவிட்டால் மறுப்பை பிரசுரம் செய்யவும் செய்கிறோம். விளக்கம் கேட்பவரை மதிக்கும் இந்த தன்மையை நாங்கள் பின்பற்றி வருவது, மற்ற புலனாய்வு இதழ்களில் இல்லாதது.

சந்திப்பு : நெல்லை விவேகநந்தா.

(பேட்டி நிறைவுற்றது)

Share:

0 கருத்துகள்: