புதன், 8 செப்டம்பர், 2010

ஜூ.வி. ஆசிரியருடன் ஒரு பேட்டி...



துரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., முடித்த நான், ஜூனியர் விகடன் பற்றி ஆய்வு செய்து சமர்ப்பித்து தேர்வு பெற்றேன். சமூக அவல உண்மைகளை வெளியிடுவதில் ஜூனியர் விகடனின் பங்களிப்பு (ஜனவரி - ஜூன் 2007) என்ற தலைப்பில் ஆய்வு செய்தேன். 

சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நான் ஜூ.வி. பற்றி மேற்கொண்ட இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, அந்த புலனாய்வு இதழின் பொறுப்பாசிரியர் நட்புக்குரிய குள.சண்முகசுந்தரம் அவர்களிடம் பேட்டி எடுத்தேன்.

இதழியல் படிக்கும் மாணவர்கள் மற்றும் இதழியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு அந்த பேட்டி உபயோகமாக இருக்கும் என்பதால், இங்கே அதைத் தருகிறேன்.


கேள்வி : ஜூனியர் விகடன் தொடங்கப்பட்ட ஆண்டு...

பதில் : 1982.

கேள்வி : ஜூ.வி. தொடங்கப்பட்ட காலத்தில் எடிட்டர் ஆக இருந்தவர்?

பதில் : பாலசுப்பிரமணியன்.

கேள்வி : ஜூ.வி. தொடங்கப்பட்ட காலத்தில் வரவேற்பு எப்படி இருந்தது?

பதில் : வரவேற்பு நன்றாகவே இருந்தது. அப்போது ஜூ.வி.யில் புது ஸ்டைல் கொண்டு வந்தோம். ஒரு செய்தி என்றால், அது நிகழ்ந்ததற்கான காரணத்தை அப்படியே சொன்னோம். ஒரு கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளி, அந்த கொலையை செய்ய ஏதேனும் ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். அந்த காரணம் அவனைப் பொறுத்தவரையில் நியாயமானதாக இருக்கும். அத்தகைய நேரங்களில் கொலையாளி சொன்னதையும் பேட்டி கண்டு ஜூ.வி.யில் பிரசுரித்தோம். பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பாதிப்புக்கு காரணமானவர்கள் எந்த வகையில் அதற்கு காரணமாக அமைந்தார்கள் என்பதையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வகையில் இவ்வாறு செய்தி வெளியிடுகிறோம். இப்படி செய்யும்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கேள்வி : எந்தெந்த முறைகளில் மக்களிடம் செய்திகளை கொண்டு செல்கிறீர்கள்?

பதில் : முன்பு சாமானிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் செய்திகளை கொடுத்தோம். இப்போது ஸ்டாண்டர்டு ஆக செய்தியை கொடுத்தாலும், மக்கள் எளிதில் அதை புரிந்து கொள்கிறார்கள். இதனால் மக்களிடம் ஒரு செய்தியை கொண்டு செல்வது மிகவும் எளிமையாகிவிட்டது.

கேள்வி : எப்படிப்பட்ட செய்திகள் ஜூ.வி.யில் வெளியாகின்றன?

பதில் : ஸ்டூடியோவுக்குள் (போட்டோ ஸ்டூடியோ அல்ல, சினிமா ஸ்டூடியோ) மட்டுமே இருந்த தமிழ் சினிமாவின் கேமரா எப்படி பாரதிராஜா மூலம் கிராமப்புறங்களை நோக்கி போனதோ, அதேபோல முதன் முதலில் கிராமப்புறங்களை நோக்கிச் சென்ற முதல் இதழ் ஜூ.வி.தான். இதுதான் ஜூ.வி.யின் வெற்றிக்கு காரணம். சென்னை, புதுடெல்லி மற்றும் வெளிநாடு என்று தமிழன் எங்கெல்லாம் இருக்கிறானோ, அவன் எந்த மாதிரியான செய்திகளை விரும்புகிறானோ அவற்றை நாங்கள் பிரசுரம் செய்கிறோம். குக்கிராமத்தில் கிடைக்கும் செய்தி வழியாகக்கூட எல்லாத் தமிழர்களையும் ஈர்க்கலாம். ஜூ.வி.யைப் பொறுத்தவரை பெரும்பாலும் சமூக அவலங்களை வெளிப்படுத்தும் செய்திகளை பிரசுரம் செய்கிறோம். உசிலம்பட்டி பெண் சிசு கொலை, வரதட்சணை கொடுமை போன்ற சமூக அவலங்களை உதாரணமாக கூறலாம். இப்போதெல்லாம் விதவிதமான சமூக அவலங்கள் அரங்கேறுகின்றன. மேலும், மக்களை அய்யோ... என்று பதற வைக்கிற விஷயங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கிறோம்.

கேள்வி : எந்த மாதிரியான செய்திகளை அதிக அளவில் பிரசுரம் செய்கிறீர்கள்?

பதில் : அரசியல், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட செய்திகளை அதிக அளவில் பிரசுரம் செய்கிறோம். இந்த அரசியல் சார்பான விஷயங்களை தெரிந்து கொள்ளத்தான் மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளது. சென்னையில் உள்ளவர்கள் மதுரையில் நிலவும் அரசியல் நிலவரங்களையும், மதுரையில் உள்ளவர்கள் சென்னையின் அரசியல் நிலவரங்களையும் அறிய ஆவல் உள்ளவர்களாக உள்ளனர். அதனால்தான் அரசியல் செய்திகளை ஜூ.வி.யில் அதிகம் காண முடிகிறது.

கேள்வி : எந்தெந்த வகைகளில் செய்திகளை பெறுகிறீர்கள்?

பதில் : வாசகர்கள் எழுதி அனுப்பும் செய்திகள்கூட பெரிய, பெரிய செய்திகளாக வெளிவந்துள்ளன. பல வாசகர்கள் இங்கே இப்படியரு செய்தி இருக்கு, இப்படியெல்லாம் சம்பவம் நடக்கிறது என்று போன் வழியாக தகவல் சொல்வார்கள். எங்களது நிருபர்களை வைத்து அந்த விஷயங்களை சேகரித்து செய்தியாக வெளியிடுவோம். அண்மையில், சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு சிறுவனை மாடியில் இருந்து அவனது முதலாளி கீழே தள்ளிவிட்டதாக அங்குள்ள வாசகர் ஒருவரே போனில் தகவல் சொன்னார். தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் நாங்கள் சிங்கப்பூரில் உள்ள எங்களது முன்னாள் செய்தியாளர், போட்டோகிராபர் ஆகியோரை தொடர்பு கொண்டு, அந்த செய்தியை சேகரித்து படத்துடன் வெளியிட்டோம். நாங்கள் நேரடியாக சென்று சேகரிப்பது மட்டுமல்ல, வாசகர்கள் கொடுக்கும், தெரிவிக்கும் தகவல்கள் கூட பெரிய அளவிலான செய்திகளாக வந்துவிடுவது உண்டு. அரசு அதிகாரிகள் கூட, தவறு நடப்பதாக செய்தியைச் சொல்வது உண்டு.

கேள்வி : கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்களில் படம் எவ்வாறு பெறப்படுகிறது?

பதில் : இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் அதை லைவ் ஆக படம் எடுக்க முடியாது. சம்பவம் நடந்த பின்னர்தான் எடுக்க முடியும். பெரிய நகரங்கள் என்றால் இதுபோன்ற சம்பவங்களில், சம்பவம் நடந்த சிறிதுநேரத்திற்கு பின்னர் அங்கே சென்று விடலாம். ஆனால், தொலைவில் உள்ள பகுதி என்றால் படம் எடுப்பது மட்டுமின்றி, செய்தி சேகரிப்பதும் சற்று கடினம்தான். சிறிய ஊர்களுக்குப் போக 2 மணி நேரம் கூட ஆகும் என்பதால் அந்த மாதிரியான நேரங்களில் போலீஸ் தரப்பிலும் எங்களுக்கு உதவுவார்கள்.

கேள்வி : ஜூ.வி.யில் எவ்வாறு செய்திகளை துல்லியமாக வெளியிட முடிகிறது?

பதில் : செய்தியாளர்களின் பங்களிப்பு, விசாரணை பாணிதான் செய்திகளை துல்லியமாக வெளியிட முக்கிய காரணம். நடந்த ஒரு சம்பவத்தை ஒருவர் மிகைப்படுத்திக்கூட கூறலாம். அதனால், தேவையில்லாததை நீக்கி, தேவையானவற்றை மட்டும் கொடுக்கிறோம். ஒரு செய்தியை ஒரே நோக்கில் மட்டும் நோக்காமல் நான்கு கோணத்திலும் விசாரித்து சேகரிக்கும்போது தான் துல்லியமான செய்தியை கொடுக்க முடியும். அதை நாங்கள் தவறாமல் பின்பற்றுகிறோம்.

கேள்வி : செய்திகளை, அவை உண்மைதானா? என்று சரிபார்த்த பின்னர்தான் வெளியிடுகிறீர்களா?

பதில் : செய்தி உண்மை என்று தெரிந்தால்தானே வெளியிட முடியும்? சிலநேரங்களில் புகார் கொடுத்தவர் கூட குற்றவாளி ஆகலாம். அதனால், செய்தியின் தன்மை பற்றி முழுமையாக விசாரிக்காமல் வெளியிட மாட்டோம். விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்.

கேள்வி : கொலை, கொள்ளை, பெண் கொடுமை போன்ற செய்திகளை வெளியிடும் நீங்கள், நகைச்சுவையாக சமூகத்தின் பிற பகுதியையும் காண்பிக்க டயலாக் போன்ற பகுதிகள் வெளியிடுவது ஏன்?

பதில் : இதழை படிப்பவர்களுக்கு ஒரு ரிலாக்ஸ் வேண்டும். அதற்காக ஜாலியான தகவல் தெரிவிக்க வேண்டியது உள்ளது. இதனால்தான் பொதுஇடங்களில் மக்கள் பேசிக்கொள்வது போன்ற டயலாக் பகுதியை நகைச்சுவையாக வெளியிடுகிறோம். மேலும், சினிமா, ப்ளோ&அப் படம் போன்றவற்றையும் வெளியிடுகிறோம். இவ்வாறு செய்தால்தான் வாசகர்களை தக்க வைக்க முடியும்.

கேள்வி : மிஸ்டர் கழுகு பகுதியில் எப்படி துல்லியமாக, பின்னால் நடக்கப்போவதை ட முன்கூட்டியே எப்படி சரியாகச் சொல்ல முடிகிறது?

பதில் : எல்லாமே சோர்ஸ் (செய்தி மூலம்) மூலமாகத்தான். இந்த பகுதியை முன்பு ஒருவரே கவனித்து வந்தார். இப்போது எல்லோரும் கொடுக்கிற தகவல்களும் அதில் இடம்பெறுகின்றன. அதனால் ஒரு குக்கிராமத்தை பற்றிய விஷயம் கூட இந்த பகுதியில் வெளியிட முடிகிறது. கொலை நடந்தால் அதுபற்றி எப்படி விசாரணை நடத்துவோமோ, அதுபோல் தான் ஒரு யூகத்தின் அடிப்படையில் நடக்கலாம் என்கிற தகவலை சொல்கிறோம். இது பலநேரம் நடக்கவும் செய்யலாம். நடக்காமலும் போகலாம். இதில் தெரிவிக்கும் எதிர்கால கருத்துகள் யூகம் அடிப்படையானவைதான் என்றாலும், நம்பத் தகுந்தவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களாகத்தான் அவை இருக்கும்.

கேள்வி : அட்டை படத்தை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?

பதில் : அந்த வாரத்திற்குரிய மிக மிக முக்கியமான செய்திக்கான படம்தான் அட்டை படமாக இடம்பெறும். பலநேரம் 2, 3 படங்கள் அட்டைப் படத்தில் இடம்பெறலாம். ஒருசில நேரம் சுனாமி தாக்கம் போன்ற மிகவும் பரபரப்பான செய்திகள் வரும்போது, ஒரே செய்திக்குரிய படம் - படங்களை அட்டை படமாக தேர்வு செய்கிறோம்.
(பேட்டி தொடரும்...)

Share:

0 கருத்துகள்: