எப்போதும் மங்கலகரமாக பேச வேண்டும் என்று சொல்வார்கள். கவியரசு கண்ணதாசனும் அதை பின்பற்றினார்.
ஆனால், அவர் கலந்துகொண்ட ஒரு விழாவில் பேசிய ஒருவர் அமங்கலமாக பேச, அப்போது ஏற்பட்ட தனது அனுபவம் பற்றி கண்ணதாசன் கூறியிருப்பதாவது :
சில சீர்திருத்த திருமணங்களுக்கு நான் தலைமை தாங்கி இருக்கிறேன். அப்படி நடந்த ஒரு திருமணத்தில் நான் கலந்து கொண்டேன். அங்கே பேசிய ஒருவர், மணமக்கள் மீது மஞ்சள் அரிசியும், பூக்களும் தூவப்பட்டது பற்றி குறிப்பிட்டார்.
"இங்கே மஞ்சள் அரிசி தூவினார்கள். இந்த முட்டாள்தனம் எதற்காக? பிணத்துக்கும் தான் மஞ்சள் அரிசி தூவுகிறார்கள். இவர்கள் மணமக்களா? இல்லை... பிணங்களா?" என்று அவர் பேசினார்.
அவரது இந்த பேச்சு எனக்கு நெஞ்சில் அடிப்பது போல் இருந்தது. திருமண வீட்டில் அமங்கலமாக பேசுகிறாரே... என்று வருந்தினேன்.
இதேபோல், இன்னொரு சீர்திருத்த திருமணத்திலும் நான் கலந்து கொண்டேன். அப்போதும் ஒருவர் இதேபோல் பேசினார்.
"இங்கே நடப்பது சீர்திருத்த திருமணம். 2 நிமிடத்தில் செலவில்லாமல் முடிந்துவிட்டது. அய்யர் வரவில்லை. ஓமம் வளர்க்கவில்லை. அம்மி மிதிக்கவில்லை. அருந்ததியும் பார்க்கவில்லை. இங்கே அய்யர் வராததால் இந்த பெண் வாழ மாட்டாளா? இவளுக்கு குழந்தை பிறக்காதா? அய்யர் வந்து நடத்தாததால் இவள் விதவையாகிவிடப் போகிறாளா? அப்படியே விதவையாகிறாள் என்றே வைத்துக் கொள்வோம். அய்யர் நடத்தும் திருமணங்களில் பெண்கள் விதவையாவதில்லையா? அந்த அய்யர் வீட்டிலேயே விதவைகள் இருப்பார்களே, அவர் வந்து கட்டக் கொடுத்தால் தான் தாலி நிலைக்குமா? நாங்கள் கட்டக் கொடுத்தால் அறுந்து விடுமா?" - அவர் பேசி முடிக்கவில்லை; நான் அவர் கையை பிடித்து இழுத்து அமர வைத்தேன்.
"நடப்பது திருமணம். நீ பேசுவது விதவையாவது எப்படி என்பதை பற்றி. பேசாமல் உட்கார்" என்றேன். பின்னர், நான் பேசும்போது நமது மங்கல மரபுகள் பற்றி குறிப்பிட்டேன்.
மங்கலம்-அமங்கலம் என்று இந்துக்கள் பிரித்தது மூடநம்பிக்கையல்ல; அது மனோதத்துவ மருத்துவம்.
நல்ல செய்திகள், வாழ்த்துகள் ஒரு மனிதனின் காதில் விழுந்து கொண்டே இருந்தால், அவனது ஆயுளும் அதிகரிக்கிறது; ஆனந்தமும் பொங்குகிறது. மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை.
நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரீக சம்பிரதாயத்தையே உருவாக்கி உள்ளன. அவற்றுள் பல அறிவியல் ரீதியானவை.
மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வரச் சொல்கிறார்கள்? மணவறையை சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்? ஊர்வலம் வர வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள்?
இப்படி எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன?
காரணம், பூமியே வலப்புறமாக சுழல்கிறது என்பது தான்.
மனிதனின் 2 கால்களில், 2 கைகளில், இடது கை&கால்களை விட, வலது கை-கால்கள் பலம் வாய்ந்தவை. இதனால் தான், சக்தியோடு வாழ நிரந்தரமாக எதிலும் வலப்புறமாக வருவது நல்லது என்று இந்துக்கள் நம்பினார்கள், நம்புகிறார்கள். வலம் என்பது நாம் வலிமை அடைவோம் என்றும் பொருள் தருகிறது.
சாதாரணமாக, நண்பர்கள் வீட்டுக்கோ, திருமணங்களுக்கோ செல்கிறவர்கள், திரும்பிச் செல்லும்போது, போய் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு போவார்கள். அதன் பொருள், இன்னும் பல திருமணங்கள், விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும்; நாங்கள் மீண்டும் வருகிறோம் என்பதே!
அமங்கல வீடுகளுக்கு செல்கிறவர்கள் திரும்பும்போது, போகிறேன் என்று சொல்லிக் கொண்டு போவார்கள். அதன் பொருள், இனி உன் வீட்டில் அமங்கலம் நேராது. நாங்கள் வரவேண்டி இருக்காது என்று நம்பிக்கை ஊட்டுவதாகும்.
பெண் ருதுவாவதை பூப்படைந்தாள், புஷ்பவதியானாள் என்பார்கள். அதாவது, பெண் மொட்டாக இருந்து புஷ்பம் போல் மலர்ந்திருக்கிறாள் என்பது இதன் பொருள்.
மணமக்களின் முதலிரவை சாந்திமுகூர்த்தம் என்பார்கள். காதலில் துடித்துக் கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்கு சாந்தியடைகிறது என்பதே அதன் பொருள்.
இதேபோல், இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்கலமே நிறைந்திருக்கும். நான் சொல்வது சராசரி இந்துக்களை - என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
3 கருத்துகள்:
நன்று...
kannadhasanai poruththavarai tamizhagathil bharathikkun pin kidaitha migap periya oru kavignar.avaar sollum ovvoru karuththum nitchayamana unmai.
candru
kannadhasan intha nootrandin migap periya oru thaththuvavathi.miga peria kavignan.indru irukkum paguththarivalargalukkellam avar oru simhasoppanam.
candru
கருத்துரையிடுக