ஞாயிறு, 1 ஜனவரி, 2012

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 6


6. முதலிரவு பரபரப்பு
 - நெல்லை விவேகநந்தா -

வெள்ளைச் சுவற்றில் நின்று கொண்டே ஓடிக்கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள் அமுதா. மணி, இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

'இந்நேரம் பெட்ரூம் முழுக்க பூக்களை கொட்டி பஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்திருப்பாளே அம்மா... அப்படியொரு சம்பவத்தை நடக்க விடக்கூடாதே...' என்று மனதிற்குள் பரபரப்பானாள் அமுதா.

ஒருவேளை குணசீலன் தன்னை கட்டாயப்படுத்தினால் என்ன செய்வது என்ற அச்சமும் அவளது முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது.

தனக்கு ஏற்பட்ட இப்படியொரு நிலை, காதலித்துக் கொண்டிருக்கும் வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்றும் தன் குல தெய்வம் ஆனந்தவல்லி அம்மனை வேண்டிக் கொண்டாள்.

அமுதா மனதிற்குள் கனமாக யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவளது அம்மா பாக்கியம் பெரும் குரலெடுத்து கூப்பிட்டாள்.

"என்னடி... நல்ல காரியம் நடக்கப் போகுற நேரத்துல மூஞ்ச உம்முன்னு வெச்சிட்டு இருக்க. பெட்ரூம்ல உன்னோட புருஷன் வெயிட் பண்ணிட்டு இருப்பாரு. சீக்கிரமா உள்ளே போ. ரொம்ப நேரம் பேசிட்டு க்காதீங்க. சீக்கிரமாவே விளக்க அணைச்சுக்கோங்க. புருஷன் என்ன செஞ்சாலும் திமிறி நடந்துக்காத. எல்லாம் உன்னோட நன்மைக்குத்தான் சொல்றேன்..." என்று, சில அறிவுரைகளை ஒப்பித்த பாக்கியம் பாய், தலையணை, போர்வைகளை எடுத்துக்கொண்டு வீட்டு வராண்டாவிற்குள் போய்விட்டாள்.

எப்போதும் அமைதியாய் வலம் வரும் பாக்கியத்தின் கணவர் தங்கதுரையும் அங்கே அமைதியின் ஒட்டுமொத்த உருவமாக அமர்ந்திருந்தார்.

"என்னங்க... சின்னஞ் சிறுசுக இன்னிக்குதான் ஒண்ணாகப் போறாங்க. எதுவும் பேசாம படுத்துத் தூங்குங்க. எது பேசனும்ன்னாலும் காலையில பாத்துக்கலாம்..." என்று, கணவனுக்கு அதிகாரமாய் உத்தரவிட்டு விட்டு பாயில் படுத்துக் கொண்டாள்.

என்ன நினைத்தாரோ தங்கதுரை, திடீரென்று பேச வாயெடுத்தார்.

"ஆமா... இளையவ வாணி எங்கே இருக்குறா?"

"பேசாம படுங்கன்னுதானே சொன்னேன். அவள உங்க அண்ணன் வீட்டுலதான் இன்னிக்கு ராத்திரி மட்டும் படுக்கச் சொல்லி இருக்கேன். நாளைக்கு காலையில வந்திடுவா..."

பாக்கியம் சொல்லி முடிப்பதற்குள், கம்மென்று திரும்பிப் படுத்துக் கொண்டார் தங்கதுரை.

நேரம் வேகமாக ஓடத் துவங்கியது.

தனக்கு முன்பு வந்து நின்ற அமுதாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் குணசீலன்.

கையில் ஒரு சொம்பு நிறைய சுண்டக்காய்ச்சிய பால் வைத்திருந்தவள், அதை ஒரு வெள்ளி டம்ளரால் மூடியிருந்தாள். இரு கைகளிலும் நிரம்பி வழிந்த தங்க வளையல்கள் பால் நிரம்பியிருந்த சொம்பை ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தன.

திருமணத்தன்று கட்டியிருந்த மாம்பழக் கலர் பட்டுப்புடவையைக் கட்டியிருந்தாள். வெட்கப்படுவது போல் தலை குனிந்திருந்தாள். மற்றபடி முகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக மேக்கப் எதுவும் இல்லை.

உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், நம் தமிழ் சினிமாக்களில் முதலிரவு காட்சிகளில் வரும் ஹீரோயின் போலவே ஜொலித்தாள் அமுதா. குணசீலனுக்கும் இது நினைவுக்கு வராமல் இல்லை. உடனே அவளது காலைப் பார்த்தான்.

அமுதாவின் வலது கால் பெருவிரல் கோலப்பொடி இல்லாமலேயே கோலம் போடுகிறதா என்று உன்னிப்பாகப் பார்த்தான். ஆனால், அப்படியொரு காட்சி கிடைக்காமல் அவனது கண்கள் ஏமாந்து போனதுதான் மிச்சம்.

“சரி... சினிமாவில் வருவதை எல்லாம் நிஜத்தில் எதிர்பார்க்க முடியுமா?” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டவன், அவளது முகத்துக்கு நேராகப் பேசினான்.

"என்ன அமுதா. ரூமிற்குள் வந்த வேகத்தில் நின்று விட்டாய். நான் உன் கணவன்தானே? பக்கத்தில் வந்து உட்கார்" என்றான்.

அமுதா பட்டுச்சேலையில் பளபளத்தாள் என்றால், குணசீலனும் திருமணத்தன்று கட்டியிருந்த பட்டு வேஷ்டி, சட்டையில் புதுமாப்பிள்ளை போலவே... ஆனால் கொஞ்சம் வெட்கத்தோடு அமர்ந்திருந்தான்.

கொண்டு வந்த பசும்பாலை ஒரு ஓரமாய் வைத்த அமுதா மறுபடியும் தனது மவுனத்தை தொடர்ந்தாள்.

“என் மேல எதுவும் கோபமா? வந்தது முதல் அமைதியா இருக்கிறாயே...”

குணசீலன்தான் அமுதாவின் மவுனத்தை கலைக்கும் விதமாக பேசினான்.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. கொஞ்சம் உடம்புக்கு சரியில்ல...”

அமுதா சொல்லி முடிப்பதற்குள்ளாகவே பதற்றத்தை அவசரமாக வெளிப்படுத்தினான் குணசீலன்.

“என்னது... உடம்பு சரியில்லையா? காய்ச்சல் அடிக்குதா? இல்ல... வேறு ஏதும் பிரச்சினையா?” என்றவன், அவளை தொட முயன்றான்.

அமுதா இதை எதிர்பார்த்தாளோ என்னவோ, சட்டென்று விலகி அமர்ந்தாள்.

“பரவாயில்ல... பெருசா பிரச்சினை ஒண்ணும் இல்ல. மனசுதான் சரியில்ல.”

“அப்படீன்னா...?”

“அத எப்படி சொல்றதுன்னுதான் தெரியல.”

சில நொடிகள் மவுனத்தில் கரைந்தவன், அமுதா இப்படிச் சொல்ல, அதுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று அவனாக ஒரு காரணத்தை கண்டுபிடித்தான்.

“யூ மீன் தட் த்ரி டேஸ் ப்ராப்ளம்?”

குணசீலன் சொன்னது அமுதாவுக்கு புரியாமல் ஒன்றும் இல்லை.

“அது இல்ல. இப்போ நான் நார்மல் ஆகத்தான் இருக்கேன். ஆனா...”

“புரிஞ்சுக்கிட்டேன் அமுதா. திடீர்னு பஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செஞ்சிட்டாங்களே... அங்கே எப்படி நடந்துக்கறதுன்னுதானே யோசிக்கிற?”

“ஆமாம்” என்று சொல்வது போல் தலையை மவுனமாக ஆட்டினாள் அமுதா.

“சரி, இதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்ல. பஸ்ட் டிரிப் என்றால் அப்படித்தான் இருக்கும். போகப்போக சரியாகிவிடும்.”

இப்படி “அனுபவசாலி” போல் பேசிய குணசீலனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் அமுதா.

அவளது பார்வை கேட்ட கேள்வியை புரிந்து கொண்டான் குணசீலன்.

“தப்பா நெனைச்சுக்காத அமுதா. நான் பொதுவாகத்தான் சொன்னேன். எந்தவொரு புது விஷயமா இருந்தாலும் முதல்ல தயக்கம் இருக்கும். போகப்போகத்தான் அது சரியாகும். அதுமாதிரி இதுவும் இருக்கலாம்ங்குற யூகத்துலதான் அப்படி சொன்னேன். மற்றபடி, நானும் அந்த விஷயத்துல உன்ன மாதிரியே ஒண்ணாம் வகுப்புதான்.”

குணசீலன் இப்படிச் சொன்னதும்தான் தன்னையே மறந்து சிரித்துவிட்டாள் அமுதா.

அவளது சிரிப்பில் குணசீலனின் திடீர் டென்ஷனும் பட்டென்று மறைந்து போனது.

“இத... இதத்தான் உன் கிட்ட எதிர்பார்க்குறேன் அமுதா.”

“எப்போதும் சிரிச்சுட்டு இருக்குறதயா?”

“ஆமா... உன்கிட்ட எனக்கு பிடிச்ச முதல் விஷயமே இந்த சிரிப்புதான். அதுக்கு என்ன விலை... ஏன், நீ என்ன வரம் கேட்டாலும் கூட கொடுக்கலாம்தான்...” என்று கூறி சற்று இடைவெளி விட்டவன், அமுதாவின் முகத்துக்கு அருகே தன் முகத்தை கொண்டு சென்று, “உனக்கு என்ன வரம் வேண்டும் என்றாலும் கேள். இப்போதே தந்து விடுகிறேன்” என்றான்.

வரம் தருகிறேன் என்று சொன்ன குணசீலனை புதிராகப் பார்த்தாள் அமுதா.

“பொதுவா சாமிதானே வரம் கொடுக்கும்?”

“இங்கே என்னையும் சாமின்னு வெச்சுக்கோயேன்...”

“எனக்கு இப்போ வரம் தேவையில்லை. நான் கேட்கும்போது கொடுத்தா போதும்.”

“நீ இப்பவே ஏதாவது கேட்டுடுவியோன்னு நானே பயந்தேன். நல்லவேளை அப்படி கேட்கல. நீ எப்போ கேட்டாலும் அந்த வரத்தை நான் கொடுக்கத் தயார்” என்ற குணசீலன், தன் இரு கைகளையும் அவளை ஆசீர்வதிப்பது போல் தூக்கிக் காண்பித்தான்.

குணசீலனின் விளையாட்டுத்தனத்தைப் பார்த்து மறுபடியும் கொஞ்சம் சிரித்து வைத்தாள் அமுதா.

“உன் சிரிப்பை திரும்பத் திரும்ப கேட்கும்போது எனக்கு ஒரு கவிதையும் தோன்றுகிறது. அதை உன்னிடம் சொல்லலாம்தானே?”

“ம்... சொல்லலாம்.”

தன் தொண்டையை லேசாக இறுமி சரி செய்து கொண்டவன் அந்த திடீர் கவிதையை அந்த அழகான ஓவியத்திடம் ஒப்புவித்தான்.

“நீ
சிந்துவது
சில்லறையும் அல்ல
செல்போன் சினுங்களும் அல்ல
சினேகாவின் புன்னகையும் அல்ல

பிரம்மனின் தூரிகை
ஒன்றுக்குத்தான் தெரியும்
அந்த ரகசியம்...!”

இதற்கு மேல் போகாமல் கவிதையை நிறுத்திக் கொண்டவனிடம், அவ்ளோ பெரிய ரகசியமா என் சிரிப்பில் புதைந்து கிடக்கிறது?” என்று அப்பாவியாய்க் கேட்டாள் அமுதா.

“அப்படித்தான் வைத்துக்கோயேன்...” என்று சொல்லியபடியே அவளை கட்டியணைக்க முயன்றான் குணசீலன்.

அவள் என்ன நினைத்தாளோ, தன்னை அணைக்க வந்த கைகளை தன்னை அறியாமலேயே தட்டி விட்டு விட்டாள். அக்கணமே தன்னையும் அறியாமல் அழுதுவிட்டாள். அதேநேரம்,

குணசீலன் டென்ஷன் ஆகிவிட்டான்.

“உனக்கு என்ன ஆச்சு அமுதா? நான் உன்னை தொட வந்தா, ஒண்ணு பதற்றமாயிடுற; இல்லன்னா விலகிடுற. உன் மனசுக்குள்ள ஏதோ ஒரு பிரச்சினை இருக்குன்னு மட்டும் எனக்கு கன்பார்மா தெரியுது. அந்த பிரச்சினையை நாம பேசித் தீர்த்துக்குற இடம் இது இல்ல. நாளைக்கே நாம ஊட்டிக்கு புறப்படுறோம். அங்கே போயாவது நீ மனசு மாறிடுவாயான்னு பாக்குறேன்...” என்று அவன் சொன்னபோது சுனாமி தாக்கிய பேரதிர்ச்சிக்கு ஆளானாள் அமுதா.

(தேனிலவு தொடரும்...)
Share:

0 கருத்துகள்: