ஞாயிறு, 4 அக்டோபர், 2009

ஈழம்




இது கதை அல்ல...

ஒரு பாவப்பட்ட இனம் சந்திக்கும் அவலம்...

ஹிட்லர், முசோலினி வரிசையில் இடம்பிடித்த கொடுங்கோலன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சிங்கள இன வெறியால் ஈழத்தில் ஒட்டுமொத்த தமிழினமே அழிக்கப்பட்டு வரும் நிலையில்... அங்கிருந்து அகதியாகவாவது தப்பித்து உயிர்பிழைப்போம் என்று திணறிய தமிழர்கள் நடந்து முடிந்த நம் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்வரை இருந்தனர்.
இப்போது, திறந்தவெளி சிறைக்குள் ஒட்டுமொத்த ஈழத் தமிழினமே அழிக்கப்பட்டு வருகிறது.

வந்தாரை வாழ வைத்த பெருமை எங்கள் தமிழ் இனத்திற்கு உரியது என்று மார் தட்டிக்கொண்டு திரியும் தமிழர்களாகிய நாம், பக்கத்து தேசத்தில் உடன்பிறவா சகோதர-சகோதரிகள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படும் அவலத்தை கண்டு அய்யோ பாவம்... என்று மட்டும் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஈழத் தமிழர்கள் இன்றும் என்றும் பாவப்பட்டவர்களாக இருப்பதற்கு நான் இங்கே எழுதியுள்ள கதையை சிறந்த உதாரணம்.

இக்கதை வெறும் கற்பனையில் எழுந்தது அல்ல. நான், பாம்பன் அகதிகள் முகாமில் நேரில் கண்ட... சுதந்திர விடியலைத் தேடும் ஒரு பாவப்பட்ட இனம் சந்தித்த உண்மையான அவலம்...

இதோ... அந்த கதை...



ஈர விழிகள்

மஞ்சள் தேய்த்து குளித்து முடித்த களைப்பில் இரவின் மடியில் தலை சாய காத்துக்கொண்டிருப்பதை உணர்த்தியது மாலை நேர வானம்.

அடிக்கடி வெடிகுண்டுகள் முழக்கமிடும் இலங்கையின் வவுனியா பகுதி தான் அன்று இப்படி அழகாக மின்னிக் கொண்டிருந்தது.

"படகு ரெடியா இருக்கு; எல்லோரும் வந்துட்டீங்களா? " - பெட்டி, படுக்கைகளுடன் பதட்டம் முகத்தில் தெரிய காத்திருந்தவர்களிடம் கேட்டான் படகோட்டி தாமஸ்.

"என்னோட படிக்கிற மேரி வர்றேன்னு சொன்னா. ஆனா, அவ இன்னும் வரல. கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா?" - சுதந்திரக் காற்றை பிறந்தது முதல் சுவாசிக்காத 17 வயது சாந்தி இப்படி கேட்டாள்.

"சரி... வர்றவங்க வரட்டும். முதல்ல எல்லோரும் பத்து ஆயிரம் எடுத்துட்டு வந்துட்டீங்கல்ல. பணத்தை முழுசா தந்தா தான் இந்தியாவுக்கு கூட்டிட்டு போவோன். இல்லேன்னா இங்கே தான், ராணுவத்துக்காரங்க குண்டடிபட்டு சாகணும்?" - திடீர் திடீரென குண்டு மழை பொழியும் அந்த இடத்தில் மீண்டும் படபடத்தான் தாமஸ்.

"தாமசு பணத்தை எல்லாம் பார்க்காத; பணம் இன்னிக்கு வரும், நாளைக்கு போகும். எங்கிட்ட ஐந்தாயிரம் தாம்பா இருக்கு. எங்கிட்ட கூடுதலா பணம் கேட்டுடாதப்பா?" - என்று 55 வயது யசோதம்மா பேசியபோது குறுக்கிட்டான் தாமஸ்.

"என்ன பேசிட்டு இருக்க; இன்னிக்கா, நாளைக்கான்னு உசுறு ஊசலாடிட்டு இருக்குற உனக்கே, உசுரு மேல அவ்ளோ பயம் இருக்கு. நீயெல்லாம் ஏன் உசுரு தப்பிக்க போகணும். பொறந்த இடத்துலயே போய் சேர வேண்டியது தானே?"- படபடவென பேசிய தாமஸ், அங்கிருந்தவர்களுக்கு அப்போது மனிதனாகவே தெரியவில்லை.

"எங்கட்ட இருக்கிறதே இந்த ஐந்தாயிரம் ரூபாய் தாம்பா. நான் இருந்த வீட்ட வேணும்ன்னாலும் நீயே அனுபவிச்சிக்க. எங்கிட்ட வேறு எதுவுமே இல்ல" என்று கூறிவிட்டு குனிந்த யசோதம்மாவின் காதில் கிடந்த பாம்படம் தாமசின் கண்களை உறுத்தியது.

"என்ன கிழவி ஒன்னுமே இல்ல, இல்லன்னு புலம்பிட்டு இருக்க. ரெண்டு காதுலேயும் தான் தங்கம் தொங்குதுல்ல; அதுல ஒன்னு மட்டும் கழட்டிக் கொடு. பணம் எல்லாம் வேண்டாம்?" - இப்படி தாமஸ் பேச, யசோதம்மாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

"பிறந்தபோது இருந்த சுதந்திரம், இடையில் பறிக்கப்பட்டதற்கு நான் என்ன செய்ய முடியும். என்ன பாவம் செஞ்சேனோ. அந்த மவராசனால மீண்டும் சொதந்திரமா இருந்திடலாம்ன்னு ஏங்கி, ஏங்கி எனக்கு வயசு தான் கூடிட்டே போகுது. கடைசி காலத்திலாவது நிம்மதி தேடலாம்ன்னு வந்தா, நீ வேற இப்படி பேசுற..." என்ற யசோதம்மாவால் மேற்கொண்டு பேச முடியவில்லை. பொளபொளவென கொட்டிய கண்ணீர் தாமசின் கால்களில் விழுந்து, அவனது மனதில் படிந்திருந்த அழுக்கை ஈரப்படுத்திவிட்டு சென்றது.

"ஏய்... கிழவி புலம்புறத நிப்பாட்டு. நீ ஐந்தாயிரம் கொடுத்தாலே போதும். உன்னையும் கூட்டிட்டு போறேன்?" - ஒருவழியாக யசோதம்மாவை சமாளித்து நெளிந்தான் தாமஸ்.

இந்த காட்சியை நேரில் பார்த்துக் கொண்டிருந்தவர்களாலும் பேச முடியவில்லை. ஏதாவது பேசப்போய், படகில் அழைத்துக் கொண்டு போக முடியாது என்று கூறிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவர்களை வாயிருந்தும் பேச முடியாத ஊமைகளாய் கட்டிப் போட்டிருந்தது.
அந்தநேரத்தில், மேரி, வேகமாக அங்கு வந்து சேர்ந்தபோது மணி எட்டை தாண்டி இருந்தது.

"சரி... எல்லோரும் படகுல ஏறிக்கோங்க. இப்போ கிளம்பினா தான் நள்ளிரவு 2 மணிக்காவது ராமேசுவரம் அல்லது தனுஷ்கோடி பக்கம் போக முடியும். விடிஞ்சா ரோந்து வர்றவங்க பிடிச்சிடுவாங்க" என்று தாமஸ் அவசரப்படுத்தியது தான், உயிர் தப்பிக்க ஓடுவதுபோல் வேகமாக படகை நோக்கி ஓடினர் அங்கிருந்த எல்லோரும்!

இரவின் நிசப்தத்தில் கரையை தொட்டு தாலாட்டிக்கொண்டிருந்த கடல் அலைகள், இவர்களின் கால்களை தழுவியபோது, அவர்களுக்கு இதுபற்றி யோசிக்க அப்போது முடியவில்லை என்றாலும், இதே இடத்தில் இவர்களது பாதங்களை நான் மீண்டும் முத்தமிட வாய்ப்பு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற தவிப்பில் அவை சிந்திய கண்ணீர், பாறையில் மோதி வெளிப்படும் தூறல்களாக வெளிப்பட்டது, கருமேகம் மறைக்க முயன்ற வண்ண நிலவுக்கு தெரிந்து கொண்டு தான் இருந்தது.

எல்லோரும் வேகமாக ஏறி அமர்ந்ததில் வலி தாங்காமல் அலறி ஆடியது படகு. 8 பேர் செல்ல வேண்டிய படகில் 19 பேர் ஏறி இருந்தார்கள்.
வயதான யசோதம்மாவால் வேகமாக ஓடிவர முடியாததால் அவரால் கடைசியாகவே படகை தொட முடிந்தது. அதற்குள் படகு நிரம்பி விட்டது. கால் வைக்கக்கூட சரியான இடம் இல்லை.

படகின் மீது கைவைத்து சுற்றும், முற்றும் பார்த்த யசோதம்மா, என்ன நினைத்தோரோ திடீரென வந்த வழியே திரும்பினார். படகில் இருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

"பாட்டி நில்லுங்க..." என்ற இளமையான குரல் தன் நோக்கி ஓடிவர மெதுவாக நின்று திரும்பினார் யசோதம்மா.
மேரி தான் வந்து கொண்டிருந்தாள்.

யசோதம்மாவின் கரத்தை வேகமாக வந்து பற்றிய மேரி, "பாட்டி, நான் வேண்டுமானால் இறங்கிக்கறேன். நீங்க இந்தியா போங்க. நான் அடுத்த முறை வர்றேன்" என்றபோது, அதுவரை வாடிப்போய் இருந்த யசோதம்மாவின் வறிய முகத்தில் மகிழ்ச்சியானது பவுர்ணமியின் பிரகாசமாய் தைரியத்தோடு வெளிப்பட்டது.

"இந்த ஒரு வார்த்தை போதும்மா. என் உசுறு, ராணுவத்தோடு குண்டு பட்டு இப்போ போனாக் கூட கவலைப்பட மாட்டேன்" என்ற யசோதம்மாவின் குரலில் அப்போது நம்பிக்கை அதிகமாகவே பளிச்சிட்டது.

"இப்படி உங்கள, நீங்களே சமாதானம் செஞ்சுக்க வேணாம் பாட்டி. நீங்க முதல்ல போங்க; நான் நாளைக்கு கூட அடுத்த படகுல வர்றேன்?" - மேரி இப்படி சொல்லவும் படகில் கிளம்ப தயாராக இருந்த தாமசும் கீழே இறங்கி அங்கு வந்தான்.

"பாட்டி, படகுல ஏறு. நான் சமாளிச்சி, பத்திரமா இந்தியாவுக்கு கூட்டிட்டு போறேன்" என்ற தாமசின் சமாதானத்தையும் அப்போது யசோதம்மா ஏற்கவில்லை.

"நீங்க எல்லோரும் இன்னிக்கு கிளம்புங்க. நான் ஏன் நாளைக்கு வரக்கூடாது" என்ற அவர், மற்றவர்களை வழியனுப்பி வைத்தார்.

எதையோ மறந்து விட்டுவிட்டு செல்வதுபோல் மேரியும் படகில் ஏற, அடுத்த நிமிடத்தில் புகையை கக்கிக்கொண்டு சுதந்திர பயணத்தை தொடங்கியது தாமசின் படகு.

படகில் இருந்த எல்லோரும் கையசைத்து, யசோதம்மாவிடம் இருந்து விடைபெற்றனர்.

"வாழ வேண்டிய எத்தனையோ பேர் சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும்போது, நான் ஏன் உயிர் தப்பிக்க ஓட வேண்டும். இது தான் ஒரு வீர தமிழச்சிக்கு அழகா" என்று மனதுக்குள் நினைத்தபடி நடக்கத் தொடங்கினார் யசோதம்மா.

இன்னிக்கோ, நாளைக்கோ அல்லது என்றாவது ஒரு நாளோ குண்டடிப்பட்டு சாகத் தயாராக வந்த யசோதம்மாவை நினைத்து வருத்தப்படுவதா, தாய் மண்ணில் கொலை செய்யப்பட இருந்த 19 பேர் சுதந்திரக்காற்றை சுவாசிக்க பறந்து போனதை நினைத்து சந்தோஷப்படுவதா என்ற குழப்பத்தில் கடல் அலைகள் அப்போது இருந்ததை, அவை கரைகளில் வந்து மோதி திரிந்தது உணர்த்துவதாக இருந்தது.


எழுதியவர்: நெல்லை விவேகநந்தா.
Share:

0 கருத்துகள்: