செவ்வாய், 16 நவம்பர், 2010

அய்யா வைகுண்டர் வரலாறு - 5


5. விதவையை மணந்ததால் வந்த வினை
 -நெல்லை விவேகநந்தா-

ருநாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தை அடுத்த புவியூர் என்ற கிராமத்திற்கு தொழில் நிமித்தமாக சென்றார் முத்துக்குட்டி. அங்கு திருமாலை என்ற பெண் அவருக்கு அறிமுகமானார். அந்தப் பகுதியில் உள்ள ஊரல்வாய்மொழி என்ற ஊரைச் சேர்ந்த ஒருவரோடு திருமணம் ஆகி விதவை ஆன அந்தப் பெண்ணுக்கு 2 குழந்தைகளும் இருந்தனர்.

ஒரு விதவைப் பெண்ணுக்குத்தான் வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்ற புரட்சி எண்ணம் கொண்ட முத்துக்குட்டி, திருமாலையை திருமணம் செய்ய முடிவு செய்தார். திருமாலையும் அதற்கு இசைந்தார். தனது விருப்பத்தைப் பெற்றோரிடம் கூறினார் முத்துக்குட்டி. இதைக் கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். மகனின் திருமண முடிவை எதிர்த்தனர். பெற்றோரை எதிர்த்துத் திருமாலையை திருமணம் செய்து இல்லறத்தில் இணைந்தார் முத்துக்குட்டி. 

திருமாலையுடன் இல்லறத்தில் இணைந்த முத்துக்குட்டி, பனை ஏறும் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பம் நடத்த முடியாமல் தவித்தார். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீரை சமஸ்தான கைக்கூலிகள் பறித்துச் சென்றதால் பல நாட்கள் குடும்பத்தோடு பட்டினி கிடக்கவும் நேர்ந்தது. பெற்றோரை எதிர்த்து விதவைப் பெண்ணை மணம் முடித்ததால், அவருடைய உறவினர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

பெற்றெடுத்த ஒரே பிள்ளை படும் கஷ்டத்தை தாங்க முடியாத முத்துக்குட்டியின் பெற்றோர், அடுத்துத் தங்களை மாற்றிக் கொண்டனர். மகனையும், மருமகளையும் ஏற்றுக்கொண்டனர். 

அவ்வாறு பிரிந்து கிடந்த குடும்பங்கள் ஒன்றாக இணைந்த போதுதான் பெரும் சோதனையும் ஏற்பட்டது. திடீரென்று மர்ம நோய் தாக்கி உடல் மெலிந்து படுத்த படுக்கை ஆனார், இளைஞரான முத்துக்குட்டி. என்ன நோய் தாக்கி இருக்கிறது என்பதை அவருக்கு சிகிச்சை அளித்த நாட்டு மருத்துவர்களால் உறுதி செய்ய இயலவில்லை. பல்வேறு வைத்தியர்களிடம் அழைத்துச் சென்றும் முத்துக்குட்டியின் நோய் மட்டும் தீர்ந்தபாடில்லை.

”வந்தவள் நேரம் சரியில்ல. ஏற்கனவே, புருசனை விழுங்கியவள்தானே... அதனால்தான் முத்துக்குட்டிக்கு இப்படி ஆகிவிட்டது... எல்லாம் விதவையை மணந்ததால் வந்த வினை... ” என்று முத்துக்குட்டியின் உறவினர்களும், நண்பர்களும் திருமாலையைக் குறை சொல்லத் தொடங்கினர்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. முத்துக்குட்டி படுத்த படுக்கையாகவே கிடந்தார். அவரது மரணம் நெருங்கியது எல்லோருக்கும் நன்றாகவே தெரிந்தது. அந்தச் சூழ்நிலையில்தான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகா மகம் வந்தது.

ஒருநாள் வெயிலாளின் கனவில் தோன்றிய திருமால், திருச்செந்தூரில் நடக்க உள்ள மாசித் திருவிழாவில் கடலில் முத்துக்குட்டியைப் புனித நீராட வைத்தால் முத்துக்குட்டியின் நோய் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு மறைந்தார்.

“வந்து சொன்ன உத்தரவை மகனே நீ கேளு என்று
விந்து வழிக் கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்க
சொல்லுகிறாள் அந்த சொற்பனத்தை அன்போரே
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுகிறாள் அன்போரே
ஆயிரத்து எட்டு ஆண்டு இதுவாம் இவ்வருடம்
மாசியென்னும் மாதமிது வாய்த்த தேதி பத்தொன்பது
இம்மாதம் இத்தேதி ஏற்ற திருச்செந்தூரில்
நம்மாணைக் கொடியேற்றி
நல்ல திருநாள் நடக்கும்
அங்கு உன் மகனை அழைத்து வருவாயானால்
எங்குளோரும் அறிய இப்பிணியும் தீர்த்து
நல்ல பேறும் கொடுப்போம்
நம் ஆணை தப்பாது...”
- என்று இதுகுறித்து அகிலத்திரட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனவு கலைந்து எழுந்த வெயிலாள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதுபற்றி கணவரிடம் கூறினார். மறுநாளே, அறுபடை நாயகன் முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருச்செந்தூர் செல்ல பொன்னுமாடன் நாடாரும், வெயிலாளும் ஏற்பாடுகளைச் செய்தனர்.
சாமித்தோப்பில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ள திருச்செந்தூர் செல்ல ஒன்று... வண்டி பூட்டி செல்ல வேண்டும் இல்லை கால்நடை பயணம்தான்.

திருவிதாங்கூர் சமஸ்தான கெடுபிடிகளால் வண்டி பூட்டி செல்ல முடியாது என்பதால், தூளி கட்டி அதில் முத்துக்குட்டியைக் கிடத்தி, வெயிலாளும், திருமாலையும் தூக்கிக் கொண்டனர். அவர்களுக்குத் தேவையான ஒரு வார உணவையும் கட்டிக் கொண்டனர். பொன்னுமாடனும் அவரது உறவினர் சிலரும் சேர்ந்து புறப்பட்டனர்.
சில நாள் பயணத்திற்கு பிறகு ஒருவழியாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தனர்.

அன்று மாசி 19-ந் தேதி (தமிழ் வருடப்படி 1008-ம் ஆண்டு). அன்றுதான் மகா மகம்.

திருச்செந்தூர் கடலில் புனித நீராட, தூளியில் படுத்துக் கிடந்த முத்துக்குட்டியைத் தூக்கி நிறுத்தினர். சிறிய பாத்திரத்தில் கடல்நீரை மொண்டு முத்துக்குட்டியின் மீது ஊற்றினர். அப்போதுதான் அவர்கள் எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்தது. திடீரென்று நோய் நீங்கியதுபோல் எழுந்து நின்றார் முத்துக்குட்டி. நேராக கடலுக்குள் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த அலை ஒன்று முத்துக்குட்டியை வாரி சுருட்டிக் கொண்டு சென்றது. அதை நேரில் கண்ட முத்துக்குட்டியின் உறவினர்கள் திகைத்துப் போனார்கள்.

(தொடரும்...)
Share:

0 கருத்துகள்: