பானாசுரன் எனும் அரக்கன் மிகுந்த பலம் கொண்டவனாக மாற விரும்பி அதற்காக சிவபெருமானை வேண்டித் தவம் இருந்தான்.
பானாசுரனின் சீரிய தவம் ஈசனின் மனதைக் கரைத்தது. அவன் முன்பு தோன்றினார்.
“பக்தா! உன் வேண்டுதல் என்ன? எதற்காக என்னை நோக்கி தவம்?”
“தங்களிடம் வரம் வேண்டிதான் இந்த தவம் அய்யனே...”
“என்ன வரம் வேண்டும்? நீயே கேள்...”
“எந்த ஆண் மகனாலும் எனக்கு அழிவு ஏற்படக்கூடாது. ஒரே ஒரு கன்னிப்பெண் தவிர, வேறு எவருக்குமே போரில் என்னை வெல்லும் தகுதி இருக்கக் கூடாது...” என்று வரம் கேட்டான் பானாசுரன்.
சிவபெருமான், அவன் கேட்ட வரத்தைத் தந்து மறைந்தார்.
ஈசனிடம் பெற்ற வரத்தின் மூலம் மிகுந்த பலசாலி ஆன பானாசுரன் மனிதர்கள் மட்டுமின்றி தேவர்கள், முனிவர்கள் எல்லோருமே தனக்கு அடிமை என்று மமதை கொண்டான். அவர்களைப் பலவாறு துன்புறுத்தத் தொடங்கினான்.
அசுரனின் கொடுமை தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும் அன்னை பராசக்தியிடம் இது குறித்து முறையிட்டனர். அவனை அழித்துத் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். அவளும் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாள்.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் உதவுவதாக வாக்களித்த அன்னை பராசக்தி ஒரு கன்னிப் பெண்ணாகப் பூமியில் அவதரித்தாள். தென் தமிழகத்தில் முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் நின்றபடி தவம் புரிந்தாள்.
கன்னியாகுமரி அருகே உள்ள சுசீந்திரத்தில் கோவில் கொண்டுள்ள தாணுமாலயன் (சிவபெருமான்). அவளை முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனது விருப்பம் பற்றி பராசக்தியிடம் கூற... அவளும் திருமணத்திற்குச் சம்மதித்தாள்.
இதையறிந்த தேவர்களும், முனிவர்களும் வேறு மாதிரியாக சிந்தித்தனர். கன்னிப்பெண்ணாக அவதரித்த பராசக்திக்கு கல்யாண ஆசை வந்து திருமணமும் நடந்து விட்டால் பானாசுரனை அழிக்கும் எண்ணம் மாறிப் போய்விடும் என்று அஞ்சினர்.
இதுபற்றி ஈசனிடம் கூறத் துணிவில்லாததால் நாரதரிடம் உதவி வேண்டினர். அவரும் அவர்களுக்கு உதவுவதாக வாக்களிக்க, மகிழ்ச்சியுடன் திரும்பினர்.
தொடர்ந்து, நாரதரே அன்னை பராசக்தி சார்பில் தாணுமாலையனை சந்தித்து, திருமணம் சம்பந்தமாக பேசினார். தன்னை மணக்க இரு நிபந்தனைகளை பராசக்தி விதித்து இருப்பதாக அப்போது தாணுமாலையனிடம் அவர் கூறினார்.
“என்ன நிபந்தனை அவை? ” என்றார் தாணுமாலையன்.
“கன்னிப்பெண்ணை மணக்க வேண்டும் என்றால் சீர்வரிசைப் பொருட்களாக கண் இல்லாத தேங்காய், காம்பு இல்லாத மாங்காய், நரம்பு இல்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு, இதழ் இல்லாத பூ ஆகியவற்றை சீதனப் பொருட்களாக கொண்டுவர வேண்டும். இது முதல் நிபந்தனை”.
“அடுத்தது...?”
“சுவாமி! சூரிய உதயத்தில் திருமணம் நடைபெற வேண்டும். அதற்கு ஒரு நாழிகை முன்பாகவே மாப்பிள்ளை மணவறைக்கு வந்து சேர்ந்து விட வேண்டும். இவைதான் அன்னை பராசக்தியின் நிபந்தனைகள்”.
“சரி... நானும் அதை ஏற்றுக் கொண்டேன் என்று பதில் சொல்லிவிடும்” என்று நாரதரிடம் கூறினார் ஈசன்.
திருமணத்திற்காக குறித்த நாளும் வந்தது. அன்னை பராசக்தி கூறியபடி சீர்வரிசைப் பொருட்களை தேடிக் கண்டுபிடித்து வரவழைத்து விட்டார் ஈசன். அவற்றைக் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைத்தார். சரியான நேரத்திற்குள் மணவறைக்குச் சென்றுவிட வேண்டும் என்ற வேகத்தில் தாணுமாலயனும் குமரிக்குப் புறப்பட்டார்.
ஏற்கனவே நிபந்தனை என்ற பெயரில் கலகத்தை ஆரம்பித்து வைத்த நாரதர், தாணுமாலையன் செல்லும் வழியில் சேவல் உருவெடுத்து கொக்கரக்கோ... என்று கூவினார்.
‘முகூர்த்த நேரம் தவறி, இப்போதே விடிந்துவிட்டதே. பராசக்தி சொன்னபடி கன்னியாகுமரிக்கு செல்ல முடியாதே...’ என்று தவித்த தாணுமாலயன், வேறு வழியின்றி வந்த வழியே சுசீந்திரத்திற்கே திரும்பி விட்டார்.
அதேநேரம், தன்னைத் திருமணம் செய்து கொள்ள சிவபெருமான் வருவார் என்ற நம்பிக்கையில் பராசக்தி. நின்றபடியான தனது தவத்தைத் தொடர்ந்தாள்.
இதற்கிடையில், கன்னிப்பெண்ணான பராசக்தி குமரிமுனையில் தவம் இருப்பதை அறிந்த பானாசுரன், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவளுக்கு தூது அனுப்பினான். அவனது கோரிக்கையை நிராகரித்த பராசக்தி, ‘ஒரு அசுரனுக்கு இவ்வளவு தைரியமா?’ என்று பொங்கியெழுந்தாள்.
ஆனால், பானாசுரனோ, திருமணம் செய்தால், பராசக்தியைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக்காலில் நின்றான். எப்படியாவது அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த அவன், அதற்காக அவளை கடத்திக் கொண்டு வர முடிவு செய்தான்.
ஒருநாள் பராசக்தியைக் கடத்திச் செல்ல முயன்றான். ஆக்ரோஷமாக பொங்கியெழுந்தாள் தேவி. தேவர்கள், முனிவர்கள் எதிர்பார்த்தது போலவே இருவருக்கும் போர் மூண்டது. இறுதியில், பானாசுரனை வதம் செய்தாள் பராசக்தி. தேவர்களும், முனிவர்களும் பூமாரி பொழிந்து பராசக்தியை வாழ்த்தினர்.
பானாசுரனை அழித்த பிறகும் குமரி முனையில் தனது தவத்தைத் தொடர்ந்தாள் பராசக்தி. அவளது தவம் இன்றும் தொடர்வதாக நம்பிக்கை உள்ளது. தவத்திலிருக்கும் பராசக்திதான் குமரி பகவதி அம்மனாக நமக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறாள்.
அன்னை பராசக்தி குமரி முனையில் நின்றபடி தவம் புரிந்த பாறை ‘ஸ்ரீபாறை’ என்று அழைக்கப்படுகிறது. சுவாமி விவேகானந்தர் பாறைக்கு எதிரே இது உள்ளது.
விவேகானந்தர் பாறைக்கு எதிரே ‘ஸ்ரீபாறை’
பின்குறிப்பு : அன்னை பராசக்திக்குத் திருமண சீர்வரிசைப் பொருட்களாக தாணுமாலையன் அனுப்பி வைத்த கண் இல்லாத தேங்காய், காம்பு இல்லாத மாங்காய், நரம்பு இல்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு, இதழ் இல்லாத பூ ஆகியவையே பல்வேறு நிறம் கொண்ட மணல்களாக இன்றும் குமரி கடற்கரையில் கிடப்பதாக நம்பிக்கை.
(திருவிளையாடல்கள் தொடரும்)