4. முத்துக்குட்டியின் முடிவு
இன்றைய சாமித்தோப்பில் பொன்னுமாடன் நாடார் - வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்த முத்துக்குட்டியின் இளமைகால வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக அமையவில்லை. தாழ்த்தப்பட்ட ஜாதி பட்டியலில் இடம் பெற்றிருந்த நாடார் சமூகத்தில் பிறந்ததே அதற்கு காரணம். முத்துக்குட்டி கல்வி கற்கும் வயதை அடைந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் கல்வி கற்கக்கூடாது என்ற எழுதப்படாத சட்டம் இருந்ததால் முத்துக்குட்டியால் பள்ளிக்கூடத்திற்குச் சென்று கல்வி கற்க முடியவில்லை.
அப்போது, ஆதிக்க ஜாதியினருக்கு மட்டுமே கல்விக் கூடங்கள் செயல்பட்டன. பல இடங்களில் கோவில்களே கல்விக்கூடங்களாக மாறி கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. இங்கும் உயர் ஜாதியினரின் குழந்தைகள் மட்டும்தான் கல்வி கற்க முடியும். தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்த 18 ஜாதியினர் கோவில் பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் முத்துக்குட்டிக்கு எங்கே கல்வி கிடைக்கும்? ஆனாலும், சாமித்தோப்பு பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்டவர்களின் மரியாதைக்குரியவராக பொன்னுமாடன் இருந்ததால், அந்த ஊரில் பெரியவர் ஒருவர் நடத்திய பகுதி நேர திண்ணைப் பள்ளிக்கூடத்தில் முத்துக்குட்டியை சேர்த்து விட்டார். பெரியவரிடம் கல்வி பயின்ற முத்துக்குட்டி பல்வேறு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொண்டார்.
தந்தையைப் போலவே இரக்க குணமும் இவரிடம் நிரம்பியிருந்தது. அதேநேரம், தாழ்த்தப்பட்டவர்கள் அனுதினமும் நசுக்கப்படுவதை கண்டு உணர்ச்சி வசப்படுபவராகவும் இருந்தார். ஆதிக்க ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவதை நேரில் கண்டு மனம் வருந்திய அவர், ஆதிக்க ஜாதியினரின் கொட்டத்தை அடக்குவதற்கு வீரம் தேவை என்பதை உணர்ந்தார்.
அதையொட்டி, களறி உள்ளிட்ட சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு சிறந்த தேர்ச்சி பெற்றார். நாட்கள் வேகமாக நகர்ந்தன. முத்துக்குட்டி வேகமாக வளர்ந்து இளைஞர் ஆனார்.
தந்தை பொன்னுமாடன் தீவிர பெருமாள் பக்தர் என்பதால், அந்த தாக்கம் முத்துக்குட்டியிடமும் ஒட்டிக் கொண்டது. சிறு வயது முதலே திருமால் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார். ஆனால், அன்றைய சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் கோவில்களுக்குள் வரக்கூடாது என்ற ஆதிக்க ஜாதியினரின் தடை இருந்ததால், வீட்டிலேயே திருமால் பீடத்தை அமைத்து வணங்க ஆரம்பித்தார்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியில் திருமால் போன்ற தெய்வங்கள் கூட ஆதிக்க ஜாதியினரின் தெய்வங்களாகவே இருந்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களை வணங்க தகுதி அற்றவர்கள் என்றே அறிவிக்கப்பட்டனர். அதனால், தாழ்த்தப்பட்டோர் திருமால் போன்ற ஆதிக்க ஜாதியினர் வழிபட்ட தெய்வ விக்கிரகங்களை கண்ணால் பார்க்கக்கூட முடியாத நிலையே தொடர்ந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், திருமாலுக்கு வீட்டிலேயே பீடம் அமைத்து வழிபட்ட முத்துக்குட்டியை சமூக புரட்சியாளர் என்று தாராளமாகச் சொல்லலாம்.
முத்துக்குட்டி இளமையிலேயே புரட்சி எண்ணம் கொண்டு வளர்வதைக் கண்ட அவரது பெற்றோர் ஒருவகையில் கவலைப்பட்டாலும், மற்றொரு வகையில்... தாழ்த்தப்பட்டவர்களின் அடிமை விலங்குகளை உடைத்தெறிய இப்படியொருவன் நமது சமுதாயத்திற்கு தேவைதான் என்று எண்ணி பெருமிதப்பட்டுக் கொண்டனர்.
மேலும், முத்துக்குட்டியின் புரட்சி எண்ணங்கள், அவர் சார்ந்த சமுதாயத்தினருக்கும், பிற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் உற்சாகம் கொடுப்பதாக அமைந்தது.
“ஊருக்குத் தலைவன் உடைய வழிக்குந் தலைவன்
ஆருக்குந் தலைவன் என்று அன்னை பிதா வளர்த்தார்
ஞாயமிருப்பதனால் நாடாள்வானென்று சொல்லி
தாய் மக்களெல்லாம் தாங்கி மிக வளர்த்தார்
சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன்
மல்லுக்கும் வல்லவனாய் உபாயத்திலும் பெரியோன்
மங்கையர்க்கு மேற்றவனாய் மாமோகக் காமீகன்
எங்கும் பேர் கேட்க வைப்பான் இவன் கீர்த்தி நலவளமை
பல்லாக்கு ஏறிடுவான் பார் முழுதும் ஆண்டிடுவான்
எல்லார்க்கும் நல்லவனாய் இவன் சமைவான் என்று சொல்லி
ஈவதற்கு தர்மன் என எளியோரை கண்பார்த்து
ஆய்வதற்கு நல்லான் என்றே மிக வளர்ந்தார்...”
ஆருக்குந் தலைவன் என்று அன்னை பிதா வளர்த்தார்
ஞாயமிருப்பதனால் நாடாள்வானென்று சொல்லி
தாய் மக்களெல்லாம் தாங்கி மிக வளர்த்தார்
சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன்
மல்லுக்கும் வல்லவனாய் உபாயத்திலும் பெரியோன்
மங்கையர்க்கு மேற்றவனாய் மாமோகக் காமீகன்
எங்கும் பேர் கேட்க வைப்பான் இவன் கீர்த்தி நலவளமை
பல்லாக்கு ஏறிடுவான் பார் முழுதும் ஆண்டிடுவான்
எல்லார்க்கும் நல்லவனாய் இவன் சமைவான் என்று சொல்லி
ஈவதற்கு தர்மன் என எளியோரை கண்பார்த்து
ஆய்வதற்கு நல்லான் என்றே மிக வளர்ந்தார்...”
- இப்படி, முத்துக்குட்டியின் இளமை வாழ்க்கை பற்றி குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.
தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழி என்பார்கள். அதுபோல், முத்துக்குட்டியும் தந்தை மேற்கொண்ட பனை ஏறுதல் உள்ளிட்ட பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டார். ஆனால், அவருக்கு அதில் ஈடுபாடு இல்லை. காரணம், இங்கேயும் ஆதிக்கம் செலுத்தினர், உயர் ஜாதியினர். அதாவது, ‘கட்டுக்குத்தகை’ என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்கள் வைத்திருக்கும் சிறு சிறு நிலங்களையும் ஆதிக்க ஜாதியினர் பிடுங்கிக் கொண்டனர். அந்த நிலத்தில் அவர்களையே விவசாயப் பணிகள் செய்ய வைத்து, விளைச்சலை எல்லாம் ஒட்டு மொத்தமாக அபகரித்துக் கொண்டனர். இருந்த சிறு நிலத்தை மட்டுமின்றி, உழைப்பையும் பறி கொடுத்து, கூலி வேலையை விடவும் கேவலமான வேலையே தாழ்த்தப்பட்டவர்களுக்கு மிஞ்சியது.
இதையெல்லாம் பார்த்து சகிக்க முடியாத முத்துக்குட்டி வெகுண்டு எழுந்தார். “எவ்வளவு காலத்திற்குத்தான் நாம் எல்லாம் ஆதிக்க ஜாதியினருக்கு அடிமையாக இருப்பது? இப்படியே போனால் நமக்கு உணர்ச்சி என்பதே இல்லாமல் போய்விடும். அப்புறம்... களத்தில் சொன்னதைச் செய்யும் காளை மாட்டிற்கும், நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்...” என்று, தனது சமுதாய இளைஞர்களிடம் பொங்கியெழுந்தார். அவரது புரட்சிக்கரமான பேச்சு நாதியற்று, உரிமைப் பற்றி பேச திறனற்று கிடந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்களை உசுப்பி விட்டது.
மேலும், தந்தையைப் போலவே பனைத்தொழில் செய்து வந்த முத்துக்குட்டி, மேல் ஜாதியினரால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக்கப்பட... அவருக்குள் புரட்சித் தீ இன்னும் வேகமாக பற்றி எரிந்தது. அதைத் தொடர்ந்து, தனது சமுதாய மக்கள் ஏன் இன்னும் குட்டக் குட்ட குனிந்து கொண்டே போகிறார்கள்? என்ற தேடலிலும் இறங்கினார்.
காலம் காலமாக தொடர்ந்து வந்த மூடநம்பிக்கைகளும், எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அடங்கிப் போகும் குணமுமே தனது சமுதாய மக்கள் இன்னும் முன்னேறாமல், ஆதிக்க ஜாதியினரின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு காரணம் என்பதை உணர்ந்தார்.
இதையடுத்து, தனது சமுதாய மக்களிடம் என்னென்ன மூட பழக்கவழக்கங்கள் உள்ளன என்பது பற்றி ஆராய்ந்தார். அதில் முதலிடம் பிடித்தது, கணவனை இழந்த பெண்களின் நிலை. அவர்களை, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். இவற்றை நேரில் கண்ட முத்துக்குட்டி, திருமணம் என்று ஒன்று தனக்கு நடந்தால், அது கணவனை இழந்த ஒரு பெண்ணுடன்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தார். அப்போது முத்துக்குட்டிக்கு வயது 17 ஆகியிருந்தது.
(தொடரும்...)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக