கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு என்ற இடத்தில் அவதரித்த அய்யா வைகுண்டர் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அதில் ஒன்று...
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது -
இயற்கையின் செல்வச் செழிப்புக்கு பெயர்போன கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அந்த ஊரின் பெயர் சாரையோடு. இந்த ஊரைச் சேர்ந்தவள் பிச்சையம்மாள் என்ற இளம்பெண். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவள் சின்ன வயதிலேயே தாய்-தந்தையை இழந்துவிட்டாள். அதனால், சித்தாப்பாவின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தாள்.
பிச்சையம்மாளுக்கு 18 வயது ஆனபோது அவளது சித்தப்பாவும் இறந்துவிட்டார். அதனால், தனது குல தொழிலான துணி வெளுக்கும் வேலையை செய்து வாழ்க்கை நடத்தி வந்தாள்.
பெயருக்கு ஏற்றதுபோல் வறுமை அவளது குடும்பத்தில் காணப்பட்டாலும் அழகில் பணக்காரியாகவே இருந்தாள் இந்த பிச்சையம்மாள். அவளது பருவ வயது அவளை இன்னும் அழகாக மெருகூட்டி இருந்தது.
அவளது அழகில் சொக்கிப்போனவர்கள், அவளை அடையவும் ஆசைப்பட்டார்கள். அவளிடம் தங்களது ஆசையை தீர்த்துக்கொள்ள ஆசைப்பட்டவர்கள், அவளை வாழ்க்கைத்துணைவியாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
காலம் வேகமாக சுழன்றது.
பிச்சையம்மாளின் வயது 26ஐ தொட்டுவிட்டது. தோள் கொடுத்து உதவ உற்றார்-உறவினர்கள் இல்லாததால் அவளது வாழ்க்கை பாலைவனமாய் வெறுமனே கிடந்தது.
"எனது வாழ்க்கை கடைசி வரைக்கும் இப்படியே போய்விடுமா?" என்று அவள் தனக்குள் புலம்பி அழுத நாட்கள் ஏராளம்! ஏராளம்!
ஒருநாள் சாமிதோப்புக்கு சென்ற பிச்சையம்மாள் அய்யா வைகுண்டரின் பாதத்தில் விழுந்து வணங்கினாள்.
அவளை "பிச்சையம்மா!" என்று அழைத்தார் அய்யா.
அப்போது பிச்சையம்மாளுக்கு ஒன்றும் ஓடவில்லை. நமது பெயர் எப்படி அய்யாவுக்குத் தெரியும்? என்று மனதுக்குள் பேராந்த பரவசத்திற்கு ஆனாள்.
அய்யாவிடம் தனது மனக்குறைகளை கொட்டி, அதற்கான தீர்வை வேண்டினாள். 26 வயது ஆகியும் இதுவரை திருமணம் ஆகவில்லை என்பதையும் சொன்னாள்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட அய்யா, "இன்று முதல் உன் துயரம் எல்லாம் நீங்கும். இன்னும் சில நாட்களில் நீ துணையோடு வருவாய்!" என்று வாழ்த்தினார்.
அய்யாவின் வாழ்த்தில் உள்ளம் பூரித்துப் போனாள் பிச்சையம்மாள். அய்யாவிடம் விடைபெற்று தனது ஊருக்கு திரும்பினாள்.
ஒருநாள் இரவு பிச்சையம்மாளின் கனவில் அய்யாவே தோன்றினார்.
"மகளே! உன் வீட்டுக்கு நாளை காலை எனது சீடர்கள் சிலர் வரவார்கள். அவர்களுக்கு உன் வீட்டிலேயே உண்ண உணவு கொடு" என்றார்.
ஏற்கனவே அய்யாவை நேரில் கண்டு பரவசம் ஆன பிச்சையம்மாள், தற்போது மீண்டும் அய்யாவே கனவில் தோன்றி அருளியதால் இன்னும் அதிகமான பரவசத்திற்கு ஆளானாள்.
மறுநாள் காலை அய்யாவின் சீடர்களை எதிர்பார்த்து வீட்டு வாசலில் வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு பரிமாற அறுசுவை உணவும் தயாரித்து வைத்திருந்தாள்.
சிறிதுநேரத்தில் அய்யாவின் சீடர்களான தர்ம சீசர், வீம சீசர், அர்ச்சுன சீசர், நகுல சீசர், சகாதேவ சீசர் ஆகிய 5 பேர் வந்தனர்.
தன் பெயரை தெரிவித்து, அவர்களை உள்ளம் மகிழ வரவேற்ற பிச்சையம்மாள், தனது குடிசை வீட்டிற்குள் அவர்களை அழைத்துச் சென்றாள். அய்யா கனவில் வந்து சொன்னது அப்படி நடந்துவிட்டதால் அப்போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.
அய்யாவின் வேண்டுகோளின்பேரில் தயாரித்து வைத்திருந்த உணவை அவர்களுக்கு பரிமாற தயாரானாள்.
ஆனால், அந்த சீடர்கள் என்ன நினைத்தார்களோ, உணவு உட்கொள்ளாமல், திருநாமத்தை மட்டும் அவளுக்கு பூசிவிட்டு திரும்பிவிட்டார்கள்.
பிச்சையம்மாளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தயார் செய்த உணவு வகைகளை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள்.
சிறிதுநேர யோசனைக்கு பிறகு அந்த முடிவை எடுத்தாள்.
தயார் செய்த அன்னம், சாம்பார் மற்றும் பதார்த்தங்களை, வீட்டின் பின்புறம் உள்ள காலியிடத்தில் ஆழமாக குழி தோண்டி, அதற்குள் பானையோடு புதைத்துவிட்டாள்.
அய்யா வைகுண்டர்
ஆசை ஆசையாய் தயார் செய்த உணவு வீணாகிவிட்டதே என்று வெகுநேரம் அழுதாள். பிறகு, தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.
இதற்கிடையில், பிச்சையம்மாள் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய அய்யாவின் சீடர்கள் 5 பேரும் மறுநாள் சாமிதோப்பை அடைந்தார்கள்.
அய்யாவை வணங்கி, கடந்த 7 நாட்களாக நாட்டு மக்களின் நிலையை அறிய சென்றபோது தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை சொல்ல முயன்றனர்.
அப்போது அய்யா வைகுண்டரே குறுக்கிட்டு பேசினார்.
"பிச்சையம்மாள் உங்களுக்கு உண்ண உணவு கொடுத்தாளா?" என்று கேட்டார்.
சீடர்கள் அப்படியே திகைத்துப் போய்விட்டார்கள்.
"எதற்காக வெளியே சென்று வந்தோம் என்பது பற்றி கேட்காமல், பிச்சையம்மாள் என்ற பெண்ணைப் பற்றி கேட்கிறாரே..." என்று எண்ணி அமைதியாக இருந்தனர்.
மீண்டும் அதுபற்றி அய்யாவே கேட்க, அங்கு சாப்பிடவில்லை என்ற உண்மையை பயந்தபடியே ஒத்துக்கொண்டனர் அவர்கள்.
அப்போது அய்யாவே பேசினார்.
"சீடர்களே! பாவிகளால் வகுக்கப்பட்ட சாதி என்ற பேதத்தை உங்கள் மனதைவிட்டு அகற்றிவிடுங்கள். எல்லோரும் என் மக்களே! அந்த பிச்சையம்மாள் என் மகள். அவள் உங்களுக்காக தயார் செய்த சாப்பாட்டை நீங்களே சாப்பிட்டாக வேண்டும். எங்கு யார் சாப்பாடு கொடுத்தாலும், அங்கே வேண்டாம் என்று நீங்கள் சொல்லக்கூடாது. இப்போது, உடனே பிச்சையம்மாள் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்று சாப்பிட்டு வாருங்கள்" என்று உத்தரவிட்டார் அய்யா.
அடுத்த நிமிடமே அந்த 5 சீடர்களும் பிச்சையம்மாளின் ஊரான சாரையோடுக்கு புறப்பட்டனர். மறுநாள், அவளது வீட்டை அடைந்தனர்.
அங்கே பிச்சையம்மாள் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அவளது வாடிய முகமும், தேகமும், அவள் சாப்பிட்டு சில நாட்கள் ஆகிவிட்டது என்பதை தெளிவுப்படுத்தின.
சீடர்கள் அவளை இந்த கோலத்தில் பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த விவரங்களை தெளிவாகக்கூறி அவளுக்கு ஆறுதல் கூறினர். அய்யாவே சாப்பிட்டு வருமாறு பணித்ததையும் தெரிவித்தனர்.
இதை கேட்ட மாத்திரத்தில் சோகத்தில் இருந்து மீண்டு மகிழ்ச்சி அடைந்தாள் பிச்சையம்மாள். உணவு படைக்க தயார் ஆனாள்.
அப்போதுதான் அவளுக்கு சமைக்கவே இல்லையே என்பது நினைவுக்கு வந்தது.
இருந்தாலும், சோர்ந்து போய்விடவில்லை அவள்.
4 நாட்களுக்கு முன்பு பூமிக்கு அடியில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த சாப்பாட்டை எடுக்க தோண்டினாள்.
அய்யாவே சீடர்களை சாப்பிட்டு வருமாறு தனது சீடர்களை அனுப்பி இருப்பதால், ஏற்கனவே புதைத்து வைத்து சாப்பாடு கெட்டுப்போய் இருக்காது என்ற நம்பிக்கையுடன் தோண்டினாள்.
புதைத்து வைத்திருந்த உணவு பானையை வெளியே எடுத்தாள்.
மூடியை திறந்தாள்.
அவள் எதிர்பார்த்ததுபோலவே உணவு கெட்டுப்போகாமல், அன்று சமைத்த உணவுபோல் அப்படியே இருந்தது.
அவளது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது.
அய்யாவின் சீடர்களும் அதைப் பார்த்து பரவசம் ஆனார்கள்.
சிறிதுநேரத்தில் விருந்து நடைபெற்றது. சீடர்கள் 5 பேரும் பிச்சையம்மாள் பரிமாறிய சாப்பாட்டை மனமார ஏற்று சாப்பிட்டனர்.
விருந்து முடிந்ததும் அவளை ஆசீர்வதித்துவிட்டு சாமிதோப்புக்கு திரும்பினர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் பிச்சையம்மாளுக்கு ஏற்ற வரன் அவளைத் தேடி வந்தது. அவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை தொடங்கினாள் அவள்.