அது 2002-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். மதுரையில் நாளிதழ் ஒன்றில் நிருபராக பணியில் சேர்ந்திருந்தேன். மதுரையில் இயங்கும் அமுதசுரபி கலைமன்றம் அமைப்பின் நிறுவனர் தலைவரான திரு.பாலகிருஷ்ணன் எனக்கு நன்கு அறிமுகம் ஆகியிருந்தார்.
அப்போதெல்லாம் சிறந்த சினிமா நடிகர்-நடிகையர், அமைப்புகள், சமுக தொண்டுகள் செய்தவர்களுக்கு தனது அமைப்பின் மூலம் விருதுகள் வழங்கி வந்தார். 2001-ம் ஆண்டு அவரது அமைப்பு சார்பில் சிறந்த நடிகையாக அபிராமி தேர்வு செய்யப்பட்டு இருந்தார். சிறந்த புதுமுக நடிகையாக தேர்வு செய்யப்பட்டு இருந்த சிநேகாவுக்கு புன்னகை இளவரசி என்கிற பட்டத்தையும் கூடுதலாக கொடுப்பதாக அறிவித்து இருந்தார்கள்.
மற்றும், சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர்... என்று பல விருதுகளையும் கொடுப்பதாக அமுதசுரபி கலைமன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
நான் பணிபுரிந்த நாளிதழ் சார்பாக செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். பத்திரிகையாளர்களுக்கான வி.வி.ஐ.பி. பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. முன் வரிசையில் எனக்கான சீட்டில் அமர்ந்திருந்தேன்.
மாலை 6.45 மணிக்குத்தான் நடிகர்-நடிகையர் தாங்கள் தங்கியிருந்த லாட்ஜ்களில் இருந்து, விழா நடைபெற்ற மாட்டுத்தாவணி செல்லும் சாலையில் உள்ள ராஜா முத்தையா மஹாலுக்கு வந்தனர்.
அவர்கள் வருவதாக மைக்கில் அறிவிப்பு வெளியிடப்பட ரசிகர்களுக்கான இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் சட்டென்று முண்டியடித்துக்கொண்டு முதல் வரிசைக்கு வந்துவிட்டனர். பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் அவர்களது கூட்டத்தை தங்களால் முடிந்த மட்டும் தடுத்துக் கொண்டிருந்தனர்.
சீட்டில் இருந்து எழுந்தால் கீழே தள்ளி விட்டு விடுவார்கள் என்று பயந்து அப்படியே அமர்ந்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் மேடையில் அனைத்து நடிகர், நடிகைகளும் சீட்கள் போடப்படாததால் அவர்கள் பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் முன் வரிசையின் முன்பு வந்து நின்றனர்.
விழாவுக்கு ஏற்பாடு செய்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் முன் வரிசையில் இருந்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களை சற்று எழுந்து நின்று, நடிகர்-நடிகைகளுக்கு இடம் கொடுக்குமாறு கேட்டுக்காண்டார்கள். ஒவ்வொருவராக எழுந்தார்கள். எனக்கு மிக அருகில் நடிகைகள் அபிராமியும், சிநேகாவும் நின்றதால் என் சீட்டுக்கு பின்புறம் ரசிகர்கள் பலமாக கூச்சல் போட்டுக்கொண்டு, நடிகைகளோடு பேசவும் கை கொடுக்கவும் முயன்றனர். அவர்களுக்குள் தள்ளுமுள்ளும் எழுந்தது.
அவர்களது ஆர்வ தள்ளுமுள்ளில் என்னால் சீட்டை விட்டு எழுந்திருக்க முடியவில்லை. முன் வரிசைக்கு முன்பு நின்று கொண்டிருந்த வி.ஐ.பி.கள் ஒவ்வொருவரும், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி. பார்வையாளர்கள் எழுந்துவிட்ட சீட்களில் அமர்ந்து கொண்டார்கள்.
எனக்கு நேர் எதிரே வந்து நின்ற சிநேகாவும் தான் அமர்வதற்கு சீட்டை தேடினார். இதற்கு மேலும் நாம் சீட்டில் இருப்பது மரியாதை இல்லை என்பதை புரிந்து கொண்டு சட்டென்று எழுந்துவிட்டேன். எனக்கு நன்றி சொல்லும் விதமாக தனது வெள்ளை முத்துப் பற்களால் சிரித்தார் சிநேகா. பதிலுக்கு நானும் சிரித்துக்கொண்டே வாசல் பகுதி நோக்கி சில அடிகள் எடுத்து வைத்தேன்.
அங்கேயும் வி.வி.ஐ.பி.க்கள் கூட்டம். சிநேகாவு அமர்வதற்கு நாம் அமர்ந்திருந்த சீட்டை விட்டு எழுந்து வந்து விட்டோமே... மறுபடியும் அமர்வதற்கு சீட் கிடைக்குமா என்கிற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு கூட்டம் குவிந்துவிட்டது.
சரி... சீட் கிடைக்கவில்லை என்றால் நின்று கொண்டாவது செய்தி சேகரித்துவிட்டு வெளியேறுவோம் என்று ஓரமாக ஒதுங்கி நின்றேன்.
அப்போதுதான் எனக்கு மிக அருகில் வேஷ்டி-சட்டையில் பளிச்சென்று ஒருவர் தெரிந்தார். அவரது முகத்தைப் பார்க்க... எனக்கும் திடீர் சந்தோஷம். சிரித்தவாரே அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.
அவர், ஜெயா டி.வி. பட்டிமன்ற நடுவர், பேராசிரியர், நடிகர் என பல முகம் கொண்ட கு.ஞானசம்பந்தன் அவர்கள்.
இதற்கு முன்பு அவரது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருக்கிறேன். அப்போது, தீபாவளி மலருக்காக கு.ஞானசம்பந்தன் அவர்களின் நகைச்சுவை கட்டுரை ஒன்று வேண்டும் என்று எங்களது நாளிதழின் ஆசிரியர் என்னிடம் கூறியிருந்தார்.
கு.ஞானசம்பந்தன் எழுதிய புத்தகத்தில் இருந்து காப்பி அடிப்பதைவிட, அவர் பங்கேற்று பேசும் நிகழ்ச்சியில் இருந்தே நகைச்சுவை தகவல்களை சேகரித்துக்கொள்வோமே என்று அதில் பங்கேற்றேன். ராஜாமுத்தையா மஹாலுக்கு அருகில் உள்ள மடீட்சியா ஹாலில் மாடியில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
நான் சேகரித்த கு.ஞானசம்பந்தனின் நகைச்சுவை கட்டுரை அந்த ஆண்டுக்கான தீபாவளி மலரில் இடம் பெற்றிருந்தது. அவரது பேச்சை, கட்டுரைக்காக சேகரிக்கச் சென்றபோது, நிகழ்ச்சி முடிய நேரம் இரவு மணி 10ஐ தாண்டிவிட்டது. நிகழ்ச்சி முடிந்த பின்னரும், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் அவருடன் பேசிக் கொண்டு இருந்ததால் அவரிடம் என்னால் நேரடியாக பேச முடியவில்லை.
அந்த வாய்ப்பு ஒரு சில மாதங்களுக்குப் பிறகு இப்போது நடிகர்&நடிகைகளுக்கான விருது வழங்கும் விழாவில் எனக்கு கிட்டியது. அந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக கு.ஞானசம்பந்தன் வந்திருந்தார்.
தீபாவளி மலரில் வந்த அவரது கட்டுரையை எழுதியது நான்தான் என்று நான் சொன்னபோது, ஓ... அது நீங்கள் தானா? நானும் உங்கள் ஆபீசிற்கு போன் போட்டு கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சிறப்பாகவே கட்டுரை இருந்தது என்று பாராட்டினார்.
அவரது குட்டி பாராட்டு மழையில் நனைந்து அவரிடம் விடைபெற்று, சற்று பின்னால் நகர்ந்தபோது இன்னொரு பட்டிமன்ற நடுவர் நின்று கொண்டிருந்தார்.
அவர்தான் திரு.சாலமன் பாப்பையா. அவரிடம் எனக்கு அறிமுகம் இல்லை. கு.ஞானசம்பந்தனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததை அவர் பார்த்து இருக்கிறார். அதனால்தான் என்னவோ நான் அவரை பார்த்த பாத்திரத்தில் அவருக்கே உரித்தான டிரேட் மார்க் சிரிப்பை பளிச்சென்று வெளிப்படுத்தினார். நானும் சிரித்தேன். அவ்வளவுதான்.
அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்த நேரத்தில், மேடையில் நடிகர்-நடிகைகள், சிறப்பு அழைப்பாளர்களுக்கான சீட்கள் போடப்பட்டுவிட... சாலமன் பாப்பையா மேடை நோக்கி நகர்ந்தார். சிநேகா, அபிராமி உள்ளிட்ட சினிமாக் கலைஞர்களும் மேடைக்கு சென்றனர்.
இதுதான் தக்க சமயம் என்று நினைத்த நான், முன்பு அமர்ந்திருந்த சீட்டில் போய் அமர்ந்து கொண்டேன். முதலில் நான் இருந்த சீட் அது. பின் அதில் சிநேகா இருக்க... மறுபடியும் இப்போதுநான்.
சிறிதுநேரத்தில் விழா துவங்கியது. புன்னகை இளவரசி பட்டம் பெற்ற சிநேகா, பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டே வந்தார். ஒரு பள்ளி மாணவி, உங்கள் திருமணம் காதல் திருமணமாக இருக்குமா அல்லது அரேஞ்டு திருமணமாக இருக்குமா என்று கேட்டார்.
அதற்கு பதில் அளிக்க பலமாக யோசித்த சிநேகா, அதுபற்றி எங்க அம்மாவிடம்தான் கேட்க வேண்டும் என்று தனக்கே உரிய சிரிப்பழகில் பதில் அளித்தார்.
அப்போதுதான் எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணை கவனித்தேன். காலுக்கு மேல் கால் போட்டிருந்தார். நிறைய அலங்காரம் செய்திருந்தார். அவர் உதட்டில் போட்டிருந்த லிப் ஸ்டிக் தனியாக தெரிந்தது.
அவரிடம், அருகில் இருந்தவர், உங்கள் பொண்ணுதான் கேட்குறாங்களே... நீங்களே பதில் சொல்லிவிட வேண்டியதுதானே... என்றார்.
அதன் பிறகுதான், என்னருகில் சீட்டில் அமர்ந்திருப்பது சிநேகாவின் அம்மா என்பது தெரிந்தது. அவரிடம், பேசிய நபர் சினிமா பி.ஆர்.ஓ. மவுனம் ரவி என்பதும் தெரிந்தது.
சிநேகாவை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. நானும் அதில் ஒருவன். அப்போது அவர் ஹீரோயினாக நடிக்க ஆரம்பிக்கவில்லை. பம்மல் கே.சம்பந்தம் படத்தில் சிம்ரனின் தோழியாக - அப்பாஸின் காதல் மனைவியாக வந்துவிட்டு போவார்.
ஆனாலும் அவருக்கு என்னுடைய செய்தியில் முக்கியத்துவம் தர வேண்டும் என்று நினைத்தேன். நான் பணிபுரிந்த நாளிதழில் பிட் செய்தியாகவே மேற்படி விருது வழங்கும் விழா நிகழ்ச்சியை பிரசுரித்தார்கள்.
அதேநேரம், நான் பணியாற்றிய நாளிதழ் குடும்பத்தில் இருந்து வெளிவரும் மகளிர் மாத இதழில் சிநேகா, அபிராமியின் பேட்டியை அனுப்பி பிரசுரிக்க வைத்தேன். அதில், ஹீரோயினாக அப்போது வலம் வந்த அபிராமியைக் காட்டிலும் சிநேகாவுக்கே அதிக முக்கியத்துவம் தந்து எழுதி இருந்தேன், ஆர்வக் கோளாறில்!
தமிழ் சினிமா உலகில் நம்பர் 1 இடத்தை நோக்கி சிநேகா முன்னேறிக் கொண்டிருப்பதாக அந்தக் கட்டுரையில் ஆரம்பத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.
நான் அவ்வாறு எழுதிய அடுத்த ஆண்டே அவர் ஹீரோயின் ஆனார். நம்பர் 1 இடத்திற்கு போட்டிப் போட்டார். எனது பேனா எழுதியது உண்மையானது என்கிற மகிழ்ச்சி அப்போது மட்டுமல்ல, இப்போதும் உண்டு.
- நெல்லை விவேகநந்தா
அடுத்து கேப்டன் விஜயகாந்த்...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக