செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 8


8. முதல் காதல் ஞாபகம்...
- நெல்லை விவேகநந்தா -

மே 2ஆம் தேதி திங்கட்கிழமை.

அமுதாவின் கண்கள் தூக்கத்தை தொலைத்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது. குணசீலனும் ஏறக்குறைய அதே நிலையில்தான் இருந்தான். அமுதாவின் சொந்த ஊரில் இருந்தே, நேராகத் திருநெல்வேலி சென்று, அங்கிருந்து ஊட்டி செல்வது என்பது குணசீலனின் பிளான்.

ஊட்டிக்குப் போய்ச் சேர்வதற்குள் 12 மணி நேரத்திற்கும் மேலாகிவிடும் என்பதால் புளியோதரைச் சாப்பாட்டைத் தயார் செய்யப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் அமுதாவின் அம்மா பாக்கியம். அவளை நெருங்கி வந்தான் குணசீலன்.

“அத்த... மதியச் சாப்பாடு எல்லாம் ரெடி பண்ண வேண்டாம். போகுற வழியில நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுக்கறோம். இப்போ, காலை டிபன் மட்டும் பண்ணுங்க போதும்.”

குணசீலன் சொன்னதற்கு சரியென்று தலையாட்டினாலும், பாக்கியம் ஏதோ சொல்ல நினைப்பது குணசீலனுக்கு புரிந்து விட்டது.

“என்னமோ சொல்ல வர்றீங்கன்னு நினைக்கிறேன். என்ன விஷயம்?”

“பெருசா ஒண்ணும் இல்லதான். திடீர்னு ஊட்டிக்கு கிளம்புறேன்னு சொல்றீங்களே... அதான் கையும் ஓடல, காலும் ஓடல.”

“நாங்க ஊட்டிக்குப் போற விஷயத்தை உங்ககிட்ட சொல்லாததுக்கு ஸாரி. சஸ்பென்ஸா இருக்கட்டுமேன்னு நினைச்சேன். அவ்ளோதான்.”

“அமுதாவும், நீங்களும் மட்டும்தான் போறீங்களா? இல்ல, வேறு யாரும் வர்றாங்களா?”

“நோ அத்த. ஒன்லி நாங்க ரெண்டு பேரும் மட்டும்தான். இந்த ப்ளான் ஏற்கனவே புக் பண்ணியாச்சு. திருநெல்வேலியில் இருந்து பிரைவேட் சொகுசு பஸ்லதான் போறோம். ஆரம்பத்துலேயே உங்க கிட்ட இதுபத்தி சொன்னா, ஏன் கல்யாணம் ஆன உடனேயே அவ்ளோ தூரத்துக்குப் போறீங்கன்னு நிச்சயம் கேட்பீங்க. அதான் அதுபற்றி யாரிடமும் சொல்லல. ஏன்... என்னோட அப்பா, அம்மா கிட்டகூட நேத்து மதியம் இங்கே புறப்பட்டு வரும்போதுதான் சொன்னேன்.”

“என்னவோ மாப்பிள்ளை... அமுதாவும், நீங்களும் சந்தோஷமா ஊட்டிக்குப் போயிட்டு வந்தாலே போதும்...” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்த பாக்கியம், நேராக அமுதா முன்பு வந்து நின்றாள்.

“என்னடீ... மூஞ்ச உம்முன்னு வெச்சுட்டு இருக்க? முகத்தப் பாத்தா நேத்து நைட்டு நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்த மாதிரியே தெரியலீயே... என்ன பிரச்சினையா இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிப் போ. அதான் நல்ல பொண்ணுக்கு அழகு. மாப்ள, உம் மேலே ரொம்பவும் பிரியப்பட்டுதான் ஊட்டிக்கெல்லாம் கூட்டிட்டு போறாரு. அங்கேயும் இப்படியே இருக்காத. நல்லா சிரிச்சுப் பேசு. வாய்விட்டுப் பேசினா எல்லாப் பிரச்சினையும் காணாம போயிடும்.”

அறிவுரையோடு, தனக்கு தெரிந்த தத்துத்தையும் சொல்லிவிட்டுப் போனாள் பாக்கியம்.

ஆனால், அமுதாதான் காலையில் எழுந்தது முதல் மவுன விரதம் இருந்து வந்தாள். தனது திருமண வாழ்க்கை ஆரம்பம் முதலே குழப்பத்தில் தத்தளிப்பது மட்டும் அமுதாவுக்கு நன்றாக புரிந்தது.

“ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது? என்னையே கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்ட அசோக்கை எப்படி நான் மறந்தேன். நான் பார்த்த மாப்பிள்ளையைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு அம்மா சொன்னப்போ, எனக்கு மட்டும், அது முடியவே முடியாதுன்னு சொல்ல தைரியம் வரல. அப்பவும் தைரியம் வரலன்னா, கல்யாண மண்டபத்துல கூட தாலி கட்டும்போது, இந்த மாப்ள எனக்கு பிடிக்கலன்னு சொல்லிட்டு எழுந்து இருக்கலாமே... இதையெல்லாம் நான் ஏன் செய்யல? வீட்டுக்கு மூத்தப் பொண்ணுங்றதுனால, எனக்கான பொறுப்புகள் கூடிப்போயிடுச்சா? அசோக்கை நான் விரும்புறது தெரிஞ்சும், அவனைக் கல்யாணம் செய்துக்க சம்மதிக்க மாட்டேன்னு அம்மா சொன்னப்போ, நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி, அவன் கூடவே ஓடிப்போய் கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாமே... அப்போ எல்லாம், அமைதியா இருந்துட்டு, இப்போ ஏன் நானாக தவிக்கிறேன்...” என்று, தனது கடந்த கால ப்ளாஷ்பேக்கை கொஞ்சம் திருப்பிப் பார்த்த அமுதாவின் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர்த் துளிகள் உதிர்த்தன. லேசான மயக்கத்தில், நின்றிருந்த இடத்திலேயே சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து விட்டாள்.

ட்ரிங்... ட்ரிங்...

திடீரென்று அமுதா அருகில் இருந்த டெலிபோன் அலறியது. அவள்தான் எடுத்துப் பேசினாள்.

“அமுதா, நான்தான் அசோக்.”

“எப்படி இருக்க அசோக்? ரெண்டு நாளா ஏன் பேசல?”

“சும்மாதான். காத்திருந்தா காதல் இன்னும் பலமாகும்னு சொல்வாங்க இல்லீயா? அதான், கொஞ்சம் காத்திருந்துப் பார்த்தேன்.”

அசோக் இப்படிச் சொன்னதும், டெலிபோனின் ரிசீவரைக் கையால் பொத்தித், தனக்குத்தானே சிரித்துவிட்டு, விளையாட்டாக கேட்டாள் அமுதா.

“என்ன சொல்ற அசோக்? நீ லவ் பண்ணுறீயா? யாரை லவ் பண்ணுற? அந்தப் பொண்ணு பத்தி எங்கிட்டே நீ சொல்லக்கூடாதா?”

“ஆமாடீ... இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி நடிப்பீங்க...”

இப்படித்தான் அமுதாவிடம் கேட்க வேண்டும் என்பதுபோல் இருந்தது, அசோக்கிற்கு. ஆனால், அவன் அப்படிக் கேட்கவில்லை.

“ஏன், நான் யாரை லவ் பண்ணினேன்னு உனக்கு தெரியாதாக்கும்?”

“தெரிஞ்சா நான் ஏன் உங்கிட்ட கேட்கப் போறேன்?”

“சரி, அந்த விஷயத்தை இப்போதைக்கு விடு. நான் லவ் பண்ணுற பொண்ணுக்கு ஸ்வீட்டா, க்யூட்டா ஒரு கவிதை எழுதி, அந்தக் கவிதையை அவளுக்குப் பிடித்த ஒரு புக்குக்கு உள்ளே 112 , 113 பக்கங்களுக்கு இடையே வெச்சு, அந்த இரு பக்கத்தையும் லேசா ஒட்டி அவளுக்கே பரிசா அனுப்பி இருக்கேன். எப்படியும் அந்த புக் இன்னிக்கு அவளுக்கு கிடைச்சிடும்னு நினைக்கிறேன். ஆனா, இன்னமும் அந்த புக் அவளோட கைக்குப் போய்ச் சேரலன்னு நினைக்கிறேன்.”

“எப்படி, இப்படி கரெக்ட்டா சொல்ற?”

“புக் கிடைச்ச உடனே அவ என்கிட்ட பேசியிருப்பாளே...”

“ஏன், இன்னும் அவ உன்கிட்ட பேசலீயாக்கும்?”

“அவ பேசாதது ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த க்யூட் கவிதையை யார் கிட்டேயாவது சொல்லனும் போல இருக்கு. உன்கிட்ட சொல்லவா?”

“எங்கிட்ட ஏன் சொல்ற, உன்னோட லவ்வர் கிட்ட முதல்ல சொல்ல வேண்டியதுதானே?”

“அது சஸ்பென்ஸ் இல்லீயா? அதான், உன்கிட்ட சொல்லலாம்னு போன் பண்ணினேன்.”

“சரி, சொல்லு...”

“இதோ படிக்கிறேன்; கேளு...”

“ஒரு நிமிஷம்... அம்மா வர்றாங்க. அப்படியே லைன்ல இரு...” என்று, அசோக்கிற்கு அன்புக் கட்டளை இட்டவள், டெலிபோன் ரிசீவரைக் கையால் பொத்திக்கொண்டு அம்மாவைப் பார்த்தாள்.

“யாரோ தபால்ல உனக்கு புக் அனுப்பி இருக்காங்க. போஸ்ட்மேன் குடுத்துட்டுப் போறாரு. ஆனா, யாரு அனுப்புனாங்கன்னு தெரியல. நீ படிக்கிற யுனிவர்சிட்டியில் இருந்து வந்திருக்கான்னு பாரு...” என்ற பாக்கியம், அந்தப் புக்கை அவளது கையில் திணித்துவிட்டு சமையலறையை நோக்கி வேகமாக நடந்தாள்.

அம்மா அங்கிருந்து சென்றதும் ரிசீவரைக் காதில் வைத்து அசோக்கிடம் பேசினாள் அமுதா. அதே நேரம், தன்னிடம் அம்மா தந்துவிட்டுப் போன, தபாலில் வந்த புத்தகத்தில் 112, 113 ஆம் பக்கங்களை அவசரமாகத் தேடினாள். அவள் எதிர்பார்த்தது போலவே அது ஒட்டப்பட்டு இருந்தது.

“அமுதா... என்ன பண்ணிட்டு இருக்க? நான் வேணும்னா இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுப் பேசவா?”

அசோக் இப்படிச் சொன்னதும், அவனிடம் உடனடியாகப் பேசினாள்.

“திடீர்னு அம்மா வந்துட்டாங்க. நல்லவேளை யாருகிட்ட பேசிட்டு இருக்கன்னு மட்டும் கேட்கல. ஆமா... க்யூட்டா கவிதை சொல்றேன்னு சொன்னீயே, அத சொல்லு.”

உடனே அசோக், அந்தக் கவிதையை போனிலேயே படித்தான்.

“வெளியில்
அடை மழை பெய்தும்
குடைக்கு குளிரவில்லை;
உன்
வெண்டை விரல்கள்
அதை முத்தமிடாதவரை...

மயக்கும்
மதுரை மல்லிகைக்கு மவுசில்லை;
உன் கூந்தலில்
அது குடியேறாதவரை...

முன்னறிவிப்பின்றி விலையேறும்
தங்கத்திற்கும் மதிப்பில்லை;
உன்
பல் இடுக்குகளில்
அது சிக்காதவரை...

பேனா தீண்டும்
எழுத்துக்களுக்கு உயர்வில்லை;
அது
உன் பெயராக இல்லாதவரை...

தூரிகை தீட்டும்
ஓவியங்களுக்கு உயிரில்லை;
அது
நீயாக இல்லாதவரை...!

ஏன்...
உன் கைப்பட்ட
தீபாராதனையில்தான்
கண் திறக்கிறார்
அந்த இறைவனும்!”

அசோக் கவிதையைப் படித்து முடிக்கவும், அமுதா பரபரப்போடு 112,113 ஆம் பக்கங்களைப் பிரித்து, அதிலிருந்த கடிதத்தை எடுக்கவும் சரியாக இருந்தது. அசோக் போனில் வாசித்த அதே கவிதை புத்தகத்திற்குள்ளும் இருந்தது. அந்தக் கவிதையைப் பார்த்த மாத்திரத்தில் அவள் முகம் மலர்ந்தது. அதே நொடியே அதிர்ச்சியும் காத்திருந்தது.

கவிதையை மனதிற்குள் படித்துவிட்டு அமுதா நிமிர்ந்த போது, அவளது அம்மா பாக்கியம் எதிரே நின்றாள். அதிர்ச்சியில் புத்தகத்தை கீழே போட்டுவிட்டாள் அமுதா. கீழே விழுந்த புத்தகம் சரியாக அவளது வலது கால் பெருவிரலில் விழுந்தது. புத்தகம் விழுந்த வேகத்தில், ரிசீவரைப் போனில் வேகமாக வைத்துவிட்டு “அம்மா...” என்று கத்திவிட்டாள்.

சுவரில் சாய்ந்திருந்த அமுதா கத்தியபடி தரையில் சாய்ந்ததைப் பார்த்து வேகமாக ஓடி வந்தான் குணசீலன்.

“அமுதா உனக்கு என்ன ஆச்சு?”

அமுதாவைத் தூக்கிப் படுக்கையில் கிடத்திய குணசீலன், அருகில் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவளது முகத்தில் தெளித்தான். மயக்கமாகிக் கிடந்தவள் சிறிதுநேரத்தில் தெம்பாக எழுந்தாள்.

“என்ன நடந்தது அமுதா? ஏன்... அம்மான்னு கத்திக்கிட்டே தரையில் சாய்ந்தே?”

கணவன் குணசீலன் கேட்க... அதற்கு என்ன பதில் சொல்வது என்ற தெரியாமல் முகத்தில் குழப்ப ரேகையை ஓடவிட்டாள் அமுதா.

(தேனிலவு தொடரும்...)

Share:

சனி, 25 பிப்ரவரி, 2012

இரண்டாம் தேனிலவு பகுதி - 7


7. ஏன் இந்த கொலைவெறி?


- நெல்லை விவேகநந்தா -

ன்றரை மணி நேரத்திற்கு முன்பாக ஈரோட்டில் நடந்த திடீர் களேபரத்திற்குப் பிறகு ஆனந்த், ஷ்ரவ்யா இருவரும் அதிகம் பேசாமல் மவுனமாகவே கோவை எக்ஸ்பிரஸில் பயணித்தனர். மணி இரவு பத்தைக் கடந்த சிறிது நேரத்தில் கோவை நகருக்குள் பயணித்தது ரெயில்.



"ஷ்ரவ்யா..."



அதுவரை அமைதியாய் ஏதோ சிந்தனையில் மூழ்கிப்போய் இருந்த ஷ்ரவ்யாவை தனது குரலால் எழுப்பினான் ஆனந்த்.



"கூப்பிட்டீங்களா?" ஷ்ரவ்யா கேட்டாள்.



"ஆமா... நாம கோவை வந்துட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்துல ரெயில்ல இருந்து இறங்கணும். அதான் கூப்பிட்டேன்."



"சரி, இதோ நான் ப்ரெஷ் ஆயிட்டு வந்துடுறேன்..." என்ற ஷ்ரவ்யா பாத்ரூம் பக்கம் உள்ள வாஷ் பேஷினை நோக்கி நடந்தாள்.



கோவை ரெயில் நிலையம் நெருங்கி வந்ததால் வாஷ் பேஷினை ஒட்டியிருந்த கம்பார்ட்மென்ட் வாசலில் சிலர் தங்களது லக்கேஜ்களை அடுக்கி வைத்திரு ந்தனர். கொஞ்சம் சிரமப்பட்டு வாஷ் பேஷின் கண்ணாடி முன்பு போய் நின்றவள் வெகுநேரத்திற்குப் பிறகு தனது முகத்தை உன்னிப்பாகக் கவனித்தாள்.



ஏதோ ஒருவித சோகம் அவளது முகத்தில் இழையோடிக் கொண்டிருந்தது. கண்களும் தூக்கத்தை தொலைத்ததாய் பொலிவிழந்து காணப்பட்டன.



தற்காலிகமாய்க் காணாமல் போயிருந்த தனது அழகை அவளாலேயே காண முடியவில்லை போலும். இரு கைகளிலும் தண்ணீரை பிடித்தவள், மெதுவாய் அதை முகத்துக்கு கொண்டு சென்று, அதில் படிந்திருந்த கவலை ரேகைகளை அழித்து விட்டாள்.



முகம் கழுவி முடித்ததும், இடுப்புப் பிரதேசத்தில் சொருகி வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தில் அடம் பிடித்து ஒட்டிக் கொண்டிருந்த தண்ணீரை ஒற்றியெடுத்தாள். சற்று இடம் மாறியிருந்த குட்டியான ஸ்டிக்கர் பொட்டை இரு புருவங்களுக்கும் மத்தியில் சிறைப்பிடித்தாள்.



கோவை ரெயில் நிலையம் வந்துவிட்டபடியால் ஷ்ரவ்யாவை சுமந்து வந்த ரெயிலின் வேகம் தணிந்தது. வேகமாக ஆனந்த் அருகில் சென்றவள் தனக்குரிய ல க்கேஜை தூக்கிக் கொண்டாள். ஆனந்தும் அவனுக்குரிய சூட்கேசை எடுத்துக் கொண்டு இறங்குவதற்கு தயாரானான்.



கோவை ரெயில் நிலையத்திற்குள் முழுவதுமாய் நுழைந்த கோவை எக்ஸ்பிரஸ் ஓய்வெடுத்துக் கொள்ள, சக பயணியரோடு இறங்கி நடக்க ஆரம்பித்தனர் ஆனந்தும், ஷ்ரவ்யாவும்!



ரெயில் நிலையத்திற்கு முன்பாக வந்து நின்றபோது தனது வாட்சைப் பார்த்தான் ஆனந்த். அது, இரவு 10.20 மணி என்று காட்டியது.



நள்ளிரவை நோக்கிப் பயணிக்கும் நேரம் என்பதால் ரெயில் நிலையம் முன்பு ஆட்டோக்களும், கால் டாக்ஸிகளும் மட்டுமே நின்றிருந்தன.



ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளில் பலர் ஆட்டோ டிரைவர்களிடம் பேரம் பேசாமல் பயணிக்க ஆரம்பித்தார்கள். ஆனந்த் மட்டும் கையைப் பிசைந்து கொண்டு நின்றிரு ந்தான்.



”ஆனந்த்... இப்போ நாம எங்கே போகப் போறோம்? இப்பவே ஊட்டிக்கு கிளம்புறோமா-? இல்ல... இங்கே லாட்ஜ் எங்கேயும் தங்கிட்டு, நாளைக்கு காலையில புறப்படுறோமா?”



”இன்னிக்கு நைட் இங்கேதான் ஸ்டே பண்ணுறோம். நாம தங்கப் போகுற இடம் லாட்ஜ் இல்ல, என்னோட ப்ரெண்ட் வீடு.”



”ப்ரெண்ட் வீடுன்னு சொல்றீங்க. நம்மள தப்பா நெனைக்க மாட்டாங்களா?”



”தப்பாதான் நெனைப்பாங்க. ஆனா, நான் சொல்லப் போகுற பொய்யில் அந்த தப்பு எல்லாம் காணாமல் போய்விடும்.”



”அப்படி என்ன பொய் சொல்லப் போறீங்க?”



”அது மட்டும் சஸ்பென்ஸ்.”



”ஆனந்த்... நான் ஒண்ணு கேட்பேன்; தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே...”



”ஒண்ணு இல்ல, ரெண்டே கேளு...”



”வேறு ஒண்ணும் இல்ல; இன்னிக்கு ஒரு நாள்லயே நான் உங்க முகத்துல ஏகப்பட்ட சந்தோஷங்களையும் பார்த்து விட்டேன், சோகங்களையும் பார்த்து விட்டேன். கூடவே, விளையாட்டுப் பிள்ளையாய் பேசும் பேச்சையும் ரசித்து விட்டேன். நீங்க எப்போதுமே இப்படித்தானா? இல்ல... இன்னிக்கு மட் டும்தான் இப்படியா?”



”பட்டிமன்றம் நடத்துற நேரம் இது இல்ல. முதல்ல என்னோட ப்ரெண்ட் இங்கே எங்கே இருக்குறாருன்னு கண்டுபிடிப்போம்.”



”அவரு உங்க ப்ரெண்ட் தானே? வேறு எப்படி அட்ரஸ் தெரியாம இருக்கும்?”



”நான் இதுக்கு முன்னாடி கோவைக்கு வந்து இருந்தாலும், இந்த ப்ரெண்ட் வீட்டுக்கு போனது கிடையாது. இவரும் 6 மாசத்துக்கு முன்னாடிதான் எங்க சென்னை ஆபீஸ்ல இருந்து டிரான்ஸ்பர் வாங்கிட்டு இங்கே வந்திருக்காரு. இப்போ நான் இங்கே வர்றது பற்றி அவருக்கு தகவல் சொல்லவே இல்ல. அதான் எப்படி பேசலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்.”



”அப்போ... நாம உங்க ப்ரெண்ட் வீட்டுக்கு போக வேண்டாம். ஏதாவது ஒரு நல்ல லாட்ஜ்ல தங்கிட்டு நாளைக்கு காலையில ப்ரெஷ் ஆக புறப்படுவோம்.”



”நோ ஸ்ரவ்யா. எனக்கு இதுக்கு முன்னாடி லாட்ஜ்ல தனியா தங்கின அனுபவம் எனக்கு கிடையாது. அதுவும் உன்னைப் போல ஒரு பொண்ணோட திடீர்னு லாட்ஜ் பக்கம் போய் நின்னா, அங்கே உள்ள எல்லோருமே ஒரு மாதிரியா பார்ப்பாங்க. அப்படியொரு அவமானம் வேண்டாம்னு நினைக்கிறேன்.”



”அப்படீன்னா, இப்போ நாம எதுக்குதான் ஊட்டிக்குப் போறோமாம்?”



ஷ்ரவ்யாவின் இந்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த ஆனந்த், மொபைல் மூலம் தனது ப்ரெண்டைத் தொடர்பு கொண்டான்.



”என்ன ஆனந்த்... எப்படி இருக்குறீங்க? எங்கே இருக்குறீங்க? திடீர்னு இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க” - எதிர்முனையில் ஆனந்தின் நண்பர் அண்ணாத்துரை பேசினார்.



”அது ஒண்ணும் இல்ல, ஊட்டிக்கு போகலாம்னு வந்தேன். இப்போ நைட் ஆகிட்டதுனால உங்க வீட்டுல தங்கிட்டு போகலாமான்னு தோணுச்சு. அதான் பேசுறேன்.”



”அப்படீன்னா... நீங்க இப்போ கோவையிலேயா இருக்குறீங்க?”



”ஆமாம்...”



“அப்போ உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க. பக்கத்துல உள்ள ஆட்டோ டிரைவர் கிட்ட மொபைலை குடுங்க. அவரு கிட்ட நான் அட்ரஸ் சொல்றேன். ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து இங்கே வர்றதுக்கு 60 ரூபாதான். அதுக்கு மேலே ஒரு பைசா கூட குடுக்காதீங்க...” என்று அண்ணாதுரை சொல்ல... மொபைலை பக்கத்தில் வந்து நின்ற ஆட்டோ டிரைவரிடம் கொடுத்தான். டிரைவரும், எதிர்முனையில் பேசிய அண்ணாதுரை வசிக்கும் வீட்டின் முகவரியை மனதிற்குள் உள்வாங்கிக் கொண்டான்.



ஆனந்தும், ஷ்ரவ்யாவும் ஆட்டோவில் ஏறி அமர்ந்தனர்.



“ஸார்... இது மிட்நைட் நேரம். நீங்க 120 ரூபா கொடுத்தாதான் நான் அங்கே வரைக்கும் போக முடியும். முடியாதுன்னா இப்பவே கீழே இறங்கிடுங்க...”



ஆட்டோ டிரைவரின் மிரட்டல் தொனியில் அமைந்த பேச்சு ஆனந்தை எரிச்சல் படுத்தினாலும் அமைதியாகவேப் பேசினான்.



”முதல்ல அந்த அட்ரசுக்கு போங்க. 120 என்ன, 150 ரூபாயே தர்றேன்” என்று ஆனந்த் சொன்ன பிறகு ஆட்டோவை வேகமாகக் கிளப்பினார் டிரைவர்.



சுமார் 15 நிமிடத்தில் அண்ணாதுரை வசித்து வந்த வாடகை வீட்டு முன்பு நின்றது ஆட்டோ. நண்பனை வரவேற்க வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார் அண்ணாதுரை.



ஆட்டோவில் இருந்து இறங்கிய ஆனந்த்தை உற்சாகமாக அழைக்க நெருங்கியவர், அவனுக்கு அருகில் இருந்த ஷ்ரவ்யாவைப் பார்த்துவிட்டு அப்படியே நின்றார். ஷ்ரவ்யா யார் என்று நண்பர் கேட்பதற்குள் ஆனந்தே முந்திக்கொண்டு சொன்னான்.



”இவ என்னோட அத்தை மகள்தான். இன்னும் தெளிவா சொன்னனும்னா இவ என்னோட உட்பீ. அதான் என்னோட வந்திருக்கா...” என்று ஆனந்த் சொல்ல, ஷ்ரவ்யாவையும் புன்னகையோடு வரவேற்றார் அண்ணாதுரை.



கராறாக ரேட் பேசி வந்த ஆட்டோ டிரைவரிடம் 150 ரூபாயை ஆனந்த் திணிக்க... ”ரொம்ப தாங்ஸ் ஸார்” என்று சொல்லிவிட்டு பறந்தான் ஆட்டோ டிரைவர்.



”நீங்க ரெண்டு பேரும் வருவீங்கன்னு முன்னாடியே சொல்லியிருந்தா தடபுடலா சாப்பாட்டிற்கு ஏற்பாடு செஞ்சிருப்பேன். இப்பதான் நாங்க எல்லோரும் சாப்பிட்டு விட்டு படுத்தோம். கால் மணி நேரம் பேசிட்டே இருங்க. கொஞ்ச நேரத்துல சட்னி வெச்சு, தோசை சுட்டு கொண்டு வருகிறேன்...” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தார் அண்ணாத்துரையின் மனைவி ரஞ்சனி.



ஆனந்த்தும், ஷ்ரவ்யாவும் அடுத்தடுத்து பாத்ரூமிற்குள் சென்று ப்ரெஷ் ஆகிவிட்டு வெளியே வந்த சற்று நேரத்தில் சுடச்சுட தோசையோடு, தேங்காய்ச் சட்னியையும் கொண்டு வந்து வைத்தார் ரஞ்சனி. இருவரும் ருசித்து சாப்பிட்டார்கள்.



படுக்கும் நேரம் வந்தது. ஷ்ரவ்யாவை தனியாக அழைத்தார் ரஞ்சனி.



”கல்யாணத்துக்குப் பிறகுதான் ரெண்டு பேரும் சேர்ந்து படுக்கணும். அதுவரைக்கு தனித்தனியா படுக்குறதுதான் நல்லது...” என்று ஸ்ரவ்யாவின் காதுகளுக்குள் கிசுகிசுத்தவர், அவளைத் தனது படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார்..      



ஆனந்தும், அண்ணாத்துரையும் லிவ்விங் ரூமில் பாய் விரித்து படுத்தனர். நீண்ட தூர பயணக் களைப்பில் சட்டென்று உறங்கிப் போனான் ஆனந்த். அதேநேரம், அவன் மனதிற்குள் ஊசலாடிக்கொண்டிருந்த ”கொலை வெறி” மிருகம் மட்டும் விழித்துக் கொண்டது.


(தேனிலவு தொடரும்...)
Share:

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் பாராட்டு!




நெல்லை விவேகநந்தா எழுதியுள்ள, இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ள இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர் - விறுவிறுப்பான நடையில் வீரத் துறவியின் விரிவான வரலாறு என்கிற நூலுக்கு ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆன்மிக - பண்பாட்டு மாத இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர் வழங்கியுள்ள அணிந்துரை இங்கே உங்கள் பார்வைக்கு...


சுவாமி விவேகானந்தரின் வரலாற்றை மற்றும் சொற்பொழிவைப் படிக்கும்போது அவருடன் வாழ்கின்ற அனுபவமே கிடைக்கும்.


சுவாமிஜி ஓர் அறிவுக்கடல்; அருட்புனல்; சிறந்த சிந்தனைவாதி; செயல்திறன் மிக்கவர்; சிறந்த ஆசிரியர்; மிகச்சிறந்த யோகி.


பாரத நாட்டின் மீதும், அதன் பாமர மக்கள் மீதும் பேரன்பு கொண்டவர். என்று பிறந்தது என்று கூற இயலாத இந்து மதத்தினை உலகெங்கும் எடுத்துச் சென்றவர்.


இந்திய நாட்டுப் பெண்களின் முன்னேற்றம், பாமரனுக்கும் கல்வியறிவு என்ற குறிக்கோள்களை உருவாக்கி, செயல் படுத்திக் காட்டியவர். அவரது பன்முகத் திறன்களைப் பற்றித் தனித்தனியாகப் புத்தகங்கள் எழுதிக் கொண்டே போகலாம். எழுதப்பட்டும் வருகின்றன.


இந்நூலாசிரியர் நெல்லை விவேகநந்தா அவர்கள், சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தொகுத்து, 'இந்து மதத்தின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்' என்ற தலைப்பில் விறுவிறுப்பான ஒரு தொடர் நாவலைப் போல சுவாமிஜியின் வாழ்க்கையை எழுதி இருக்கிறார்.


சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் உலக மெங்கும் கொண்டாடப்பெறும் இவ்வருடம் இந்நூலை வெளியிடுவது தனிச்சிறப்பு பெறுகிறது.


சுவாமிஜியின் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்களை 240 பக்கங்களுக்குள் சுருக்கமாக அந்தந்த தலைப்புகளில் அடக்கியிருப்பது பாராட்டுக்குரியது.


வரலாற்றுப் புகழ்பெற்ற சுவாமிஜியின் சிகாகோ சொற்பொழிவு, 'அமெரிக்க சகோதரிகளே... சகோதரர்களே...' என்று தொடங்கப்பட்டபோது, 'அடுத்த நொடியே பலர் எழுந்து நின்று கைதட்டினர். அந்தப் பலத்த ஓசையில் அந்த அரங்கமே அதிர்ந்தது' (பக்கம் 129) என்று ஆசிரியர் நெகிழ்ந்து குறிப்பிடுகிறார்.


இதைப் பற்றி சகோதரி நிவேதிதை எழுதும்போது, 'சுவாமிஜி இந்துக்களின் மதக் கோட்பாடுகளைப் பற்றி பேச ஆரம்பித்தார். அவர் முடித்தபோது இந்து மதம் உருவாக்கப் பட்டிருந்தது' என்று குறிப்பிடுவதை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.


இந்த நூலின் 12-வது அத்தியாயத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் கட்டளைப்படி தட்சிணேஸ்வரம் காளி தேவியிடம் தனது குடும்ப வறுமைக்காக சுவாமி விவேகானந்தர் பிரார்த்தனை செய்ய போனதும், தேவியைப் பார்த்தும் எதுவும் கேட்கத் தோன்றாமல், மூன்று முறை திரும்பி வந்ததும் இந்நூலில் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.


சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் இது ஓர் உணர்ச்சிகரமான கட்டம். சுவாமிஜி, முதன் முதலாக தன் கண்ணெதிரே காளிதேவியே எழுந்தருளிப் புன்னகை புரிந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவரது கொள்கை அடியோடு மாறியது. பின்னாளில், உலகம் முழுவதும் அத்வைதக் கொள்கையை சுவாமி போதித்து வந்தாலும், உருவக் கடவுளின் தேவைப் பற்றியும் உறுதிபட அவர் எடுத்துரைத்தார்.


அதேபோல, 'சென்னையில் சுவாமிஜி' என்ற தலைப்பில் (அத்:20) சுவாமிஜியின் முதல் சென்னை விஜயம் (1893) பற்றிய செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.


சுவாமிஜியை சிகாகோ சர்வ சமய மாநாட்டில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவிற்கு அனுப்ப சென்னை இளைஞர்கள் பட்ட பாடும், போய் வந்த பின்பு சுவாமிஜியின் வெற்றிச் செய்தியையும், செயல் திட்டங்களையும் மக்களிடையே எடுத்துச் சென்றதில் சென்னை இளைஞர்கள் ஆற்றிய பங்கும் அளவிற்கரியது.


இதுபோன்ற எண்ணற்ற சுவையான நிகழ்ச்சி களையும், சுவாமிஜியுடன் தொடர்புடைய மனிதர்களையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை இந்நூல் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.


இந்த நூலை வாசிக்கும் அனைவருக்கும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருள் பெருகட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.



இறைவன் தொண்டில்
(சுவாமி விமூர்த்தானந்தர்)

ஆசிரியர்

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

ஆன்மிக - பண்பாட்டு மாத இதழ்

ஸ்ரீராமகிருஷ்ண மடம்,


மயிலாப்பூர், சென்னை -- 600 004
Share: