செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

விடுதலை கொடு அன்பே...


எனக்கு
ரொம்ப பிடிக்கும்
அன்றலர்ந்த தாமரையாய்
உந்தன் முகத்தில் பிரகாசிக்கும்
அந்த
வெள்ளி நீர்வீழ்ச்சிச் சிரிப்புகள்...

அதை காண
கண்கள் கோடி வேண்டும்...
வரம் அருள மாட்டாரா
அந்த பிரம்மன்?
எத்தனிக்கும்
எந்தன் ஆவல்களுக்கு
ஆறுதல் தேடுகிறேன் பல நேரம்!

உந்தன்
பொற்பாதத்தில் சிணுங்கும்
கொலுசொலியின் கீதத்தில்
என்னை எனக்குள்ளேயே
நானே தொலைத்த நாட்கள்
அனுதினமும் மலராதா?

மெல்லிய உரையாடலில்
ஏகத்துக்கும் எனை தழுவிய
உந்தன் ஞாபகங்களின் தாலாட்டில்
எந்தன் வாழ்க்கைக்கு - ஓர்
அர்த்தம் பெறுகிறேன்...

உந்தன்
சின்ன விரல்களின்
இனிய தீண்டலில்
முன்னுரையுடன் பயணமாகும்
எந்தன் கனவுகளுக்கு
உயிர் கொடுக்க மாட்டாயா?

நான் - நான்தானா?
என்னுள் பலபரீட்சை
செய்வித்த நீ - உந்தன்
அழியா நினைவுகளுடன்
எந்தன் வாழ்வில்
அணைபோட மாட்டாயா?

உந்தன் விழி வலையில் சிக்கி
தூக்கத்தை தொலைத்த
எந்தன் கண்களுக்கு
விடுதலை கொடுத்துவிடு;
அப்படியே
என்னையும்
உனதாய் ஏற்றுவிடு...!
- கவிஞர் நெல்லை விவேகநந்தா.

Share:

கேப்டனுடன் ஒரு நாள்...


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அரசியலுக்கு வர வேண்டும், தமிழக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால், அவர் ஆட்சிக்கட்டிலில் அமரும் நாள்தான் இன்னும் கைகூடவில்லை. விரைவில் அந்த நாள் வரும் என்று நம்புகிறேன்.

ஒருமுறை அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒரு பத்திரிக்கையாளன் என்பதால் அப்போது நீண்ட நேரம் அவருடன் பேச முடிந்தது. காரைக்குடியில் உள்ள ஒரு செட்டிநாட்டு பங்களாவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் பேசினேன்.

கேப்டன் அரசியலுக்கு வந்தது ஏன்? என்பதில் தொடங்கி, இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்கிற - அவரது ஆழ்மனதில் புதைந்து கிடக்கிற பேராசை, லஞ்சம் ஒழிய வேண்டும் என்கிற அவரது கொந்தளிப்பான பேச்சு... என்று என்னை அப்போது அவரிடம் இருந்து கவர்ந்த விஷயங்கள் பல.

இந்த சந்திப்புக்கு முன்னதாகவே, கேப்டன் அரசியலுக்கு வந்த புதிதில் அவருக்காக ஒரு பாடல் எழுதி இருந்தேன். ஒருவேளை நான் சினிமா பாடலாசிரியராக இருந்தால் நிச்சயம் அந்த பாடல் அவரது ஒரு படத்தில் ஓப்பனிங் சாங் ஆக இடம் பெற்றிருக்கும். ஆனால், நான் சாதாரண பத்திரிக்கையாளன் தானே...

அதேநேரம், அந்த பாடலை நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்ற எனது ஆசை வெகுநாட்களுக்கு பிறகு இப்போது எனது இந்த வலைப்பூ வழியாக நிறைவேறியுள்ளது. அதற்காக நான் மட்டற்ற மகிழ்ச்சி அடையும் அதேநேரத்தில், உங்களையும் எனது பாடல் ஈர்க்கும் என்று நம்புகிறேன்.

இதோ அந்த பாடல், சரணம் - பல்லவியுடன்...

பல்லவி
வர்றாரு... வர்றாரு... நம்ம தலைவரு வர்றாரு
நம் நாடு செழிக்கப் போகுது;
தரணி மகிழப் போகுது, சொல்றாரு - அத
செய்வாரு நம்ம தலைவரு!

இமயத்த விட உயர்ந்தவன்டா
ஏழைகள் மனச புரிஞ்சவன்டா
இப்படி ஒருவன் இந்த உலகில் யாரடா?
அதுதான் நம்ம தலைவரு,
சொல்றாங்க மக்கள் சொல்றாங்க (வர்றாரு...)

சரணம் - 1

கப்பலுக்கு தேவை ஒரு கேப்டன் - நம்ம
மக்களுக்கு தேவை இந்த கேப்டன்!
எதிரியும் இவருக்கு சிலர் இருந்ததுண்டு
மதியும் மறந்து அவர்கள் பேசியதுண்டு
பொறுத்தார் பூமியாள்வார் - சொன்னவர்
நம்ம தலைவரடா - இனி
அதை செய்பவரும் நம்ம தலைவரடா! (வர்றாரு...)

சரணம் - 2

வாரி கொடுப்பதில் தராதரம் தெரியாது இவனுக்கு
அவனுக்கு துரோகம் செய்தால்... - அவன்
பார்வை ஒன்றே போதுமே எதிரிக்கு!

கொடுத்து கொடுத்து கரம் சிவந்தவன் இவனடா
வாரி வழங்குவதில் இவனுக்கு ஈடு யாரடா? (வர்றாரு...)

சரணம் - 3

இவன் அகராதியில் அச்சத்திற்கு பொருளில்லை - அந்த
சிந்தைக்கும் இங்கே இடமில்லை!
இவன் பார்த்தால் எரிமலையும் அடங்கிவிடும்;
சீறும் அலை கடலும் இவன் காலடியில் பணிந்துவிடும்!

இவனுக்கோர் சிம்மாசனம் உள்ளதடா
இந்த மக்கள் மத்தியில் அது தெரியுதடா
இனி நாளும் நல்லநேரம்தான் - அது
உனக்கும் எனக்கும் தெரியும்தான்! (வர்றாரு...)

சரணம் - 4

தொடங்கட்டும் ஒரு புரட்சி
மலரட்டும் புதிய ஆட்சி
அதற்கு நாமே சாட்சி! (வர்றாரு...)

- கவிஞர் நெல்லை விவேகநந்தா.

Share:

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

தோழியான காதலி


கவிதை எழுத
காத்திருந்த நேரத்தில்
கவிதை வடிவாய் - என்
கற்பனையில் உதித்தவள்
நீ தான்!

வாழ்வின் அர்த்தங்களுக்கு
விடை தெரியாமல்
விழித்தபோது - அதை
விளங்க வைத்தவளும்
நீ தான்!

ஏன்...
என் வாழ்வே
திசைமாறியபோது
வழிகாட்டியானவளும்
நீயே தான்!

அன்று -
உன் காந்த விழிப் பார்வையில்
நின் வசமான நான்
இன்று
நீ காட்டிய பாசத்திலே
கட்டுண்டு விட்டேன்...

காதலிக்க - உனை
உயிராய் நேசித்தவனுக்கு
காதலிக்கவே
கற்றுக்கொடுத்தாய் அன்பை;
ஒரு தோழியாக...

என் மீது படர்ந்த
உன் பாசத்திற்கு - ஓர்
விளக்க வுரையையே
அறிந்துவிட்டேன்
நின் நன்னடத்தையில்...

காதலியை
கற்பனையில் உன்னுள் செதுக்கி
அவளை விடவும்
நின் அன்பையே
நான் ஏற்றுவிட்டேன்
இப்போது!

இதுபோதும் எனக்கு;
நாம் சந்தித்த நிகழ்வுகள்
வசந்த நாட்களாகும்
என் வாழ்வில்
இனி வரும் நாட்களில்...

ஆனாலும்
என் இதயத்தில்
எங்கோ வலிக்கிறது
நாளும் உனை நினைத்து...

- கவிஞர் நெல்லை விவேகநந்தா

Share:

சனி, 14 ஆகஸ்ட், 2010

மெரீனாவில் ஒரு மாலை நேரம்...



மெரீனா பீச் என்று சொன்னாலே, காதலர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் ஒருவித கிளுகிளுப்பு தொற்றிக்கொள்கிறது. காரணம், இன்றைய நவீன காதலர்களின் உல்லாசபுரி அது. 

 உலகின் மிக நீளமான கடற்கரைகளுள் ஒன்றான இது 13 கிலோமீட்டர் நீளம் கொண்டது.

ஒரு மாலைநேரம் நாமும் அங்கே ஒரு விசிட் அடித்தோம், காதலர்கள் எப்படி தங்களது காதலை வளர்க்கிறார்கள் என்பதை அறிய.

வழக்கமாக மதிய வெயிலையே பொருட்படுத்தாமல் காதல் வளர்க்கும் காதல் ஜோடியினர், நாம் சென்ற நேரம் அதிக அளவிலேயே குவிந்திருந்தார்கள்.

சிலர் பாதுகாப்புக்காக காதலியின் துப்பட்டாவை குடை பிடித்திருந்ததால், காதலன்கள் காதலியின் மடியில் படுத்து, இரவுநேர கற்பனைக் கவிதைகளுக்கு உயிர் மூட்டிக்கொண்டிருந்தனர்.

ஒருசில காதலர்கள் கடற்கரையோரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த படகுகளின் நிழலில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் வெயிலுக்கு பயந்து கடலின் பால் நுரை அலைகளில் கால் நனைத்து விளையாடி மகிழ்ந்தனர்.

அவர்களில் ஒருசிலர் ஆர்வ மிகுதியில் கடலுக்குள் இறங்கி குளிர்ந்த காற்றின் இதத்திற்கும், அலைகளின் இசைக்கும் ஏற்ப ஆட்டம் போட்டனர். அலை வேகமாக வந்து மோதும்போது காதலி காதலனை இறுக்கிப் பிடித்துக்கொள்ள, அவனோ இதுதான் சமயம் என்று அவளை எசக்குபிசக்காக பிடித்து சிலிர்த்துக்கொண்டான்.

காதலனின் அந்த தீண்டல் காதலிக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், அந்த தீண்டல் தந்த சுகத்தை மீண்டும் மீண்டும் எதிர்பார்த்தாள். இதற்காக, அலை வந்து மோதுவதற்கு முன்பே இவள் காதலன் மீது மோதி, அவனோடு அலையில் விழுந்து உருண்டு புரண்டாள்.

இதற்கிடையில், கடல் அலைகளோடு விளையாடி மூழ்காமல் காதல் முத்தெடுத்த ஜோடிகள் ஆங்காங்கே கிடைத்த நிழலில் ஒதுங்கி அமர்ந்து கொண்டனர். எவரது பார்வையும் தங்களை படமெடுக்காததால் விரலின் ஸ்பரிசங்களால் சிலிர்த்துக்கொண்டார்கள். காதலியின் அழகு பொங்கும் அங்கங்களில் அனுமதியின்றி இடம் பிடித்திருந்த கடல் மண்ணை, அவள் அனுமதியின்றியே அகற்றி, தனது இதயத்தின் லப்-டப் வேகத்தை ஏற்றிக்கொண்டான் காதலன். கூடவே, காதலியின் இதயத் துடிப்பும் தங்கத்தின் விலைபோல் சட்டென்று எகிறியது.

- இப்படியாக, மெரீனாவில் காதல் ஜோடிகள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்க... அவர்களது காதல் பற்றி அறிய சில ஜோடிகளிடம் முயன்றோம். பேட்டி என்று சொன்ன மாத்திரத்தில் அய்யோ... வேண்டாம்... என்று அவசரகதியில் எழுந்து ஓட ஆரம்பித்துவிட்டார்கள்.

3 ஜோடி மட்டுமே பேட்டிக்கு அரைகுறை மனதோடு ஒத்துக்கொண்டது, அதுவும் பெயர், போட்டோ வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன். நாமும் சரியென்று தலையாட்டிவிட்டு அவர்களிடம் பேச்சை துவங்கினோம்.

முதலில் பேசியவர்கள் ஆகாசும், அமிர்த்தாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அமிர்த்தாவே முதல் ஆளாக பேச்சை ஆரம்பித்தார்.

‘நாங்க இருவருமே சென்னையில் உள்ள பிரபல காலேஜில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறோம். முதலாம் ஆண்டு படிக்கும்போதே இவன் (இப்படித்தான் ‘மரியாதை‘யோடு? பேசுகிறார்கள்) என்னிடம் காதலை ப்ரபோஸ் பண்ணினான். நான் தான் ஒத்துக்கல. தொடர்ந்து... எங்கே போனாலும் என் பின்னாடியே வந்தான். பார்க்க பரிதாபமா இருந்துச்சு. அதுக்கு அப்புறம்... சரின்னு காதலை ஏத்துக்கிட்டேன்‘ என்ற அமிர்த்தா, ஆகாசின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டார்.

‘இவள் சொல்வதை அப்படியே நம்பிடாதீங்க...‘ என்று அடுத்ததாக வாய் திறந்த காதலன் ஆகாஷ், ‘இந்த பொண்ணுங்களே அப்படித்தான் ஸார்... ஐ லவ் யூன்னு சொல்ல வந்தா எட்டி ஓடுவாளுவ. காதல் ஒர்க்கவுட் ஆன பிறகு, பீச்சுக்கு கூட்டிட்டு போ... இ.சி.ஆர். ரோட்ல கடற்கரையோரமா ஆள் நடமாட்டம் அதிகமா இல்லாத நல்ல ரெஸ்டாரண்டுக்கு கூட்டிட்டு போன்னு உசுர எடுக்க ஆரம்பித்து விடுவாளுவ...‘ என்று கலாய்த்தார். பதிலுக்கு அமிர்த்தா செல்லமாக கோபித்துக்கொண்டு, தனது அழகான முகத்தை இன்னும் சிவப்பாக்கிக் கொண்டார்.

சரி... சண்டையெல்லாம் போட வேண்டாம் என்று சமாதானப்படுத்திவிட்டு, அடுத்த ஜோடியை தேடினோம்.

நாம் அருகில் நிற்கிறோம் என்பதுகூட தெரியாமல் கட்டியணைத்துக் கொண்டு கிடந்தனர் அவர்கள். காதலன் மடியில் தன்னை மறந்து படுத்துக்கிடந்தாள் காதலி.

நாம் அவர்களுக்கு நேராக வந்து நின்றதும் ஆடையை ஒதுங்கிக்கிடந்த ஆடையை வேகமாக சரி செய்து கொண்டு எழுந்தனர். பேட்டி என்றதும் வழக்கம்போல் எஸ்கேப் ஆக தயாரானார்கள்.

பெயர், போட்டோ எல்லாம் வராது. உங்கள் காதல் அனுபவத்தை மட்டும் லைட்டா சொல்லுங்க போதும்... என்ற பிறகுதான் நம்மிடம் பேசவே ஆரம்பித்தனர்.

‘பக்கத்து மாவட்டத்தில் உள்ள கிராமம்தான் எங்கள் இருவரது ஊரும். அங்குள்ள கலைக்கல்லு£ரி ஒன்றில் எம்.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறோம். கடந்த 3 வருசமா காதலிச்சிட்டு இருக்கோம். அப்பப்போ காலேஜை கட் அடித்துவிட்டு இங்கே வந்துவிடுவோம். மனம் விட்டு பேசிப்போம்...‘ என்றவர்களிடம், ‘இங்கே காதலர்கள், மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்து கொள்வதாக புகார்கள் வருகிறதே...‘ என்று மடக்கினோம்.

‘இதுல என்ன தப்பு இருக்கு... என்று வேகமாக கேட்டவர்கள், காதலர்கள் கட்டிப் பிடிக்கிறதுலேயும், முத்தத்தை பகிர்ந்து கொள்வதிலும் என்ன தப்பு இருக்கு? மத்தவங்க நினைக்கிற மாதிரி நாங்க டைம் பாஸ் காதல் ஜோடி இல்ல. படிப்பு முடிந்த உடனேயே ஒரு வேலையையும் தேடிக்கிட்டு, கல்யாணமும் பண்ணப் போறோம். அப்படி இருக்கும்போது, இப்பவே நாங்க கணவன்&மனைவியா பழகுறதுல என்ன தப்பு இருக்கு...?‘ என்று அவர்கள் நம்மை திருப்பி கேட்க... வாழ்க உங்கள் காதல் என்று வாழ்த்திவிட்டு ஜூட் விட்டோம்.

அடுத்ததாக யாரை மடக்கலாம் என்று பார்வையை சுழற்றியபோது அந்த ஜோடியினர் நம் கண்ணில் சிக்கினார்கள்.

காதலியின் தலையில் எதையோ தேடிக் கொண்டிருந்தார் அந்த காதலன். பார்வையை கூர்மையாக்கியபோதுதான் காதலியின் தலையில் அவர் பூ வைப்பது சரி. நல்லவேளை... காதில் பூவை வைக்கவில்லை என்று மனதிற்குள் எண்ணியபடியே அவர்கள் முன் ஆஜரானோம்.

நம்மை நேருக்கு நேராக பார்த்தவர்களுக்கு திடீர் அதிர்ச்சி. காதலி தலையில் வைத்துக்கொண்டிருந்த 2 முழம் மல்லிகைப்பூ காதலன் கையில் இருந்தது. கூர்ந்து கவனித்தபோது அவரது கை நடுங்குவது நன்றாகவேத் தெரிந்தது. இவருவரும் மாணவ-மாணவிகள் போல் தெரியவில்லை. இருவருமே ஜீன்ஸ், டீ-சர்ட்டில் கலக்கலாக இருந்தார்கள். அந்த பெண் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்சும், இறுக்கமான குட்டை டீ-சர்ட்டும் அவளை அல்ட்ரா மாடர்ன் கேர்ள் என்பதுபோல் காட்டியது.

நம்மை போலீஸ் என்று நினைத்து பயந்துவிட்டார்கள் போலும். ‘நீங்கள் நினைக்கிற மாதிரியான ஆட்கள் இல்லை நாங்கள். உங்களால் எங்களுக்குத்தான் காரியம் ஆகவேண்டும்‘ என்று இறங்கி பேசியபோதுதான், அப்படியா? என்று தெம்புடன் கேட்டார்கள். அவர்களிடம், பேட்டி என்றோம். இவர்களும் நோ போட்டோ, நோ நேம் என்ற எழுதப்படாத அக்ரிமென்ட்டுடன் பேசினார்கள்.

‘நீங்க நினைக்கிற மாதிரி காதல் ஜோடி இல்ல நாங்கள். இன்னிக்கு நாங்க டேட்டிங் வந்து இருக்கோம்...‘ என்று அவர்கள் ஆரம்பித்தபோதே நம் முகத்தில் அதிர்ச்சி. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசுவதை அமைதியாக கேட்டோம்.

‘இங்குள்ள ஐ.டி. கம்பெனியில இருவரும் வேலை பார்க்குறோம். சனிக்கிழமையும், சன்டேயும் லீவுங்றதனால இப்படி வெளியே கிளம்பிடுவோம். தியேட்டருக்கு போய் ஆங்கில படம் பார்ப்போம். அப்புறமா பெரிய ஓட்டலுக்கு சாப்பிட போவோம். நைட் ஆனா டிஸ்கோதேவுக்கு போயிடுவோம்...‘ என்று சர்வசாதாரணமாக சொன்னார்கள் அவர்கள்.

இதற்கு மேல் அவர்களிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை என்று எண்ணியபடியே ஓட்டம் பிடித்தோம்.

கரையோரமாக நின்றிருந்த ஒரு படகுக்கு அருகில் இளைப்பாற ஒதுங்கியபோதுதான் அந்த சத்தம் நம் காதுகளில் மெதுவாக விழுந்தது.
‘ச்சீ... நீங்க ரொம்ப மோசம்...‘ என்றபடியே ஒரு பெண் மெதுவாக சொல்ல... அங்கே சற்று திரும்பிப் பார்த்தோம்.

காதலியை தன் மடியில் கிடத்தி, எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தார் அந்த காதலன்?!

சந்திப்பு : நெல்லை விவேகநந்தா

பின்குறிப்பு : இங்கே இடம்பெற்ற படங்களில் உள்ளவர்கள் மெரீனா பீச்சில் காதல் வளர்ப்பவர்களே. ஆனாலும், இவர்களுக்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லை.
- ஆசிரியர்

Share:

ஒரு யுவதியின் கடிதம்...


அழகான ஆடை
அம்சமான அழகு
ஆராதிக்கப்பட வேண்டும் பிறரால்!

ஆனால்
என்ன நடக்கிறது?

சுதந்திரத் துள்ளலில்
வெளியில் சென்றால்
எத்தனை "பார்வைகள்" - அந்த
பார்வைகளுக்குள் எத்தனை "ஏக்கங்கள்"?

இழுத்துப் போர்த்திச் சென்றால்
அங்கேயும்
அலைபாயும் காமக் கண்கள்...
எங்கே விலகி இருக்கிறது என்ற
அர்ப்பத் தேடல்கள்...

மார்டன் ஆடையில் வந்தால்
ஆடை ஒவ்வொன்றையும்
அப்பட்டமாய் உரிக்கும் பார்வைகள்...

ஷாப்பிங் சென்றால்
விம்மும் அழகை
குறி வைத்து இடிக்கும்
இடி மன்னன்கள்!

பஸ்ஸில் பயணப்பட்டால்
இன்னும் தொல்லை...

உச்சி முதல்
உள்ளங்கால் வரை பார்த்து
காம தாகம் தணிக்கும்
போதை கண்களால்
பேதைகள் நாங்கள்
பெண்ணாய் பிறந்ததற்காய் வருந்துகிறோம்...

ஓட்டலில்
குனிந்து சாப்பிட்டாலும்
தெரியாமல்
உள்ளாடை வெளியில் தெரிந்தாலும்
ஒதுங்கிப்போன துப்பட்டாவை
சரி செய்தாலும்
அங்கேயும் எங்களை
போகிக்கும் பார்வைகள்...

எங்களுக்கு
எப்போது வரும் சுதந்திரம்?
அதற்காக
துணை வருவார்களா,
பிற பெண்ணையெல்லாம்
தாயாய் - சகோதரியாய்
பாவிக்கும் ஆண்கள்...?

- இப்படிக்கு
ஒரு சென்னை யுவதி

- கவிஞர் நெல்லை விவேகநந்தா

Share: