சனி, 23 ஏப்ரல், 2011

சாய்பாபாவின் சரித்திரம்


மக்களை நல்வழிப்படுத்த மகான்கள் அவ்வபோது அவதரிப்பார்கள். அந்த வகையில், அவதாரம் எடுத்தவர் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா.

சாய்பாபாவின் சரித்திரம்: 


சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.

ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவற்றதாகவும், இது ஒரு அதிசய நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

சாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் திறமயாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். 


தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் இவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, "என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். 

அதற்கு சாய்பாபா, "நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். சீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: 


பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

1993 ஜூன் 6ல் சாய்பாபாவை கொல்ல நடந்த முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தியுள்ளன.

சமூகத்தொண்டு: ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு ¬முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது.

சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.

"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.

பொன் மொழிகள்

* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.
* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.
* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.
* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
* மனதை - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.

பாபாவின் சேவைகள்...
* பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக விருத்தாஸ்ரமம் என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
* பாபா குறித்த நூல்கள், சிடிக்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகின்றன.
* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
* ஒயிட்பீல்டு ஆசிரமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்த வங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
Share:

விபரீத 'ஆசை' தந்த மன பாதிப்பு


உடலுக்குள்ளும், மனதுக்குள்ளும் இளம்பருவம் நிகழ்த்தும் மாயாஜாலத்தின் விளைவால் ஆணும், பெண்ணும் உடலால்-உள்ளத்தால் பின்னிப்பிணைந்து புதிய உயிரின் தேடலுக்கோ அல்லது உடலுக்கும், உள்ளத்துக்குமான திருப்திக்கோ ஈடுபடும் பிணைப்புதான் செக்ஸ்.

அந்த புனித உறவில் கணவன்-மனைவியருக்குள் ஆத்மார்த்த திருப்தி, மனங்களை ஆழமாக தொட்ட புரிதல் இருக்க வேண்டும். அங்கேதான் செக்ஸ் புனிதம் பெறுகிறது.

ஆனால், இன்று எத்தனைபேர் ஒருவரையருவர் புரிந்துகொண்டு செக்ஸில் ஈடுபடுகிறார்கள்?

இந்த பட்டியலில் வந்து சேர்வோர் குறைவு என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஏதோ ஒரு திருப்திக்காக துணையுடன் இணையும் இவர்கள், அந்த புனித பந்தம் பற்றி கடைசி வரையில் தெரியாமலேயே போய்விடுகிறார்கள். தங்களது வருங்கால சந்ததியினருக்கும் அதை அறிவுறுத்த மறந்து விடுகிறார்கள்.

தம்பதியர் தங்களுக்குள் மனம் விட்டு பேசினாலே செக்சைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ளலாம். ஆனால், அதற்கு எத்தனைபேர்தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள்? பெரும்பாலும், அவர்களுக்குள் எட்டிப்பார்க்கும் ஈகோ அதை தடுத்து விடுகிறது.

துணையின் மனதையும், ஏக்கங்களையும் புரிந்து கொள்ளாதவர்கள் தவறான வழிக்காட்டலில் பயணித்து, குற்ற உணர்வுக்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஐரோப்பிய இளைஞர்கள் செக்ஸ் விஷயத்தில் எப்படி இருக்கிறார்கள் என்கிற கோணத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று அதிர்ச்சியான தகவலை தெரிவிக்கிறது.

அங்குள்ள இளம் வயதினர் தங்களது செக்ஸ் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. மேற்படி மது, போதை பொருளால்தான் தங்கள் அந்த உறவில் முழு திருப்தி அடைய முடியும் என்ற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டதுதான் இதற்கு காரணம்.

"உங்கள் கணிப்புபடி நீங்கள் மது, போதை பொருள்களால் செக்ஸ் உறவில் திருப்தி அடைகிறீர்களா?" என்று ஆராய்ச்சியாளர்கள் கேள்வியை கேட்டு, தகவல்களை சேகரித்தார்கள். அதற்கு பதிலளித்த ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினரும், பெண்களில் நான்கில் ஒரு பகுதியினரும் அதற்கு ஆம் என்று பதிலளித்து உள்ளனர்.

இந்த விபரீத தேடலால், ஐரோப்பிய இளம் வயதினர் பாதுகாப்பற்ற உறவு வைத்துக்கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது என்று தங்களது ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள், இந்த காரணத்தால் அவர்கள் பாலியல் நோய்க்கும் ஆளாகின்றனர் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஐரோப்பாவில் மட்டுமல்ல; பல்வேறு நாட்டினரிடமும் இந்த தவறான எண்ணம் பரவி காணப்படுவது, இந்த சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

இங்கிலாந்தில் 30 சதவீதம் பேரும், இத்தாலியில் 36 சதவீதம் பேரும், ஸ்பெயினில் 37 சதவீதம் பேரும், ஆஸ்திரியாவில் 50 சதவீதம் பேரும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதற்கு முன்பாக மது அருந்துகிறார்களாம்.

இந்த விபரீத போதை உறவில் ஈடுபடுவோர் கூறும்போது, வெட்க உணர்வை மறந்து, புதிய வகையில் உறவு கொள்ளவே தாங்கள் அதை தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.

"இந்த பழக்கம் தவறான ஒன்று. ஆரம்பத்தில் திருப்தி தருவதாக தோன்றினாலும், போகப்போக உடல் ரீதியான, மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்" என்று எச்சரிக்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

வெளிநாடுகளில் பரவலாக காணப்படும் இந்த விபரீத ஆசைகள் நம் இந்தியர்களையும் தற்போது தொற்றிக்கொண்டுள்ளது. மது, போதைகளில் அடிக்கடி திளைப்பவர்கள் இந்த ஆசையை விரும்புகிறார்களாம்.

அதற்கு இந்த அமுதாவையே உதாரணமாக கூறலாம்.

ஒருநாள் அவளது கணவன் அவளிடம் தனது விபரீத ஆசையை கூறினான்.
'பீர் குடித்துவிட்டு செக்ஸ் உறவில் ஈடுபட்டால் முழு திருப்தி கிடைக்கும் என்று என் நண்பன் கூறினான். அதற்கு நீ ஒத்துக்கொள்வாயா?' என்று கேட்டான்.

அவளும் ஒருநாள்தானே என்று அனுமதி கொடுத்தாள். அன்று அவர்களுக்குள் நிகழ்ந்த உறவில் வித்தியாசமான இன்பத்தை அமுதா உணர்ந்தாள். அவளுக்கு அந்த இன்பம் அடிக்கடி வேண்டும் என்பதுபோல் இருந்தது.

மறுநாளும் பீர் வாங்கி வருமாறு கணவனிடம் கூறினாள். அன்றைய உறவிலும் அவளுக்கு வித்தியாசமான இன்பம்-அனுபவம் கிடைத்தது.

ஒருகட்டத்தில் அந்த இன்பத்திற்கு அவள் அடிமையே ஆகிவிட்டாள். கணவன் பீர் பாட்டில் வாங்கி வராவிட்டால், இவளே பக்கத்து வீட்டு பையனிடம் பணத்தை கொடுத்து, அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் அதை வாங்கி வரச் செய்தாள்.

இதன்விளைவு... வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ பீரை கையில் எடுத்த அமுதாவின் கணவன், அந்த மதுவுக்கு நிரந்தர அடிமை ஆகிவிட்டான். அமுதாவும் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகிவிட்டாள்.

உண்மையைச் சொல்லப் போனால் திருப்தியான செக்ஸ் உறவுக்கு மனம் விட்டு பேசுவதே சிறந்த மருந்து. அதுதான் செலவு இல்லாத, பின்விளைவுகளை ஏற்படுத்தாத அற்புத மருந்து.

உங்கள் மனதை நீங்கள் புரிந்துகொண்டால், உங்கள் மனம் அழகானதாக இருந்தால் செக்ஸ் என்கிற அந்த புனித உறவும் அழகானதாக இருக்கும்.

அதற்கு என்ன செய்யலாம்?


* மேலே அதிகமாக குறிப்பிட்டதுபோல் மனம்விட்டு பேசுங்கள். அது எப்போதும் உங்களுக்குள் நிகழட்டும். மனதிற்குள், துணை பற்றிய ஏதோ ஒரு கருத்தை புதைத்துக்கொண்டு, அவரை உறவுக்கு அழைக்காதீர்கள்.

* எப்போதுமே உங்களை அழகாக உணருங்கள். நான் அழகாக இருக்கிறேன் என்று எப்போதும் நினைத்திருங்கள். உங்கள் மனம்-எண்ணங்கள் அழகாக இருந்தால்தான் நீங்கள் உடல் அளவிலும் அழகாக இருக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
* ஆடை விஷயத்திலும் அழகாக இருங்கள். கணவர் வீட்டுக்கு வரும்போது புதிய ஆடையில் இல்லாவிட்டாலும் சுத்தமான-தூய்மையான ஆடையில் இருங்கள். முகத்தில் புத்துணர்வும், மகிழ்ச்சியும் பொங்கட்டும். அப்போதுதான், உங்களை பார்த்த மாத்திரத்தில் உங்கள் கணவருக்கு உற்சாகம் பிறக்கும். அலுவலகத்தில் இருந்து உங்கள் கணவர் டென்ஷனாக வந்தாலும், உங்கள் மலர்ச்சியைப் பார்த்து அவரும் மகிழ்ந்து போவார்.
* உள்ளாடை விஷயத்தில் முக்கிய கவனம் செலுத்துங்கள். அதெல்லாம் தேவையற்ற விஷயம் என்று எண்ணி விடாதீர்கள். கிழிந்துபோன உள்ளாடைகளை தவிர்த்துவிடுங்கள்.
* நீங்களும், உங்களவரும் தனிமையில் இருக்கும்போது வெளிப்படையாக இருங்கள். அந்தநேரம் நீங்கள் செக்ஸியாக ஆடை அணிந்திருப்பதிலும் தவறில்லை. செக்ஸியாக உங்களைக் காட்டிக் கொள்வதிலும் தவறில்லை.

* உங்கள் துணைக்கு எங்கே தொட்டால், முத்தமிட்டால் பிடிக்கும் என்பதை தெரிந்து வைத்திருங்கள். அந்த இடங்களில் கிச்சுகிச்சு மூட்டி மகிழ்ச்சிப்படுத்துங்கள். உங்கள் மனம் இலவம் பஞ்சாய் பறக்கும்.
* செக்ஸ் விஷயத்தில் துணையின் எதிர்பார்ப்புகளை-விருப்பங்களை தவறாமல் கேளுங்கள். அந்த எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். இல்லாவிட்டால், முயற்சியாவது செய்யுங்கள்.
* சுவிட்ச் போட்டவுடன் இயங்கும் இயந்திரம்போல் வேகமாக இயங்கி, வேகமாக இன்பத்தை முடித்துக் கொள்ளாதீர்கள். தேனை மொத்தமாக குடித்தால் பின்விளைவுகள் வேறுமாதிரியாகிவிடும். அதை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குடிக்க வேண்டும். இன்பமும் அப்படித்தான். அதை சிறிது சிறிதாகத்தான் அனுபவிக்க வேண்டும்.
* உறவுக்கு முன் துணையை கொஞ்சி மகிழுங்கள். வீணையை மீட்டுவதுபோல் ஆங்காங்கே மீட்டி கிளுகிளுப்பாக்குங்கள்.
* ஈகோ உணர்வு உங்களுக்குள் ஒருபோதும் வரவேண்டாம். ஓரிடத்தில் ஈகோ இருந்தால் அங்கே மனம் நிச்சயம் அமைதியாக இருக்காது. மனம் அமைதியாக இருக்காவிட்டால் வாழ்க்கை நிச்சயம் இனிக்காது. ஸோ... ஈகோ வேண்டவே வேண்டாம்!

மொத்தத்தில் விட்டுக்கொடுங்கள்; மனம்விட்டு பேசுவதைத் தவிர!

அப்புறம் என்ன...?

'திருப்தி'யான வாழ்க்கையை நீங்களும் உணர்வீர்கள்.



Share:

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

பியர் சொர்க்கம்!


பீர் என்கிற பியரை அறியாத இளைஞர்கள் இருக்க முடியாது. இந்த பெருமை தமிழக அரசைத்தான் சேரும்.


ஆம்... டாஸ்மாக் உபயத்தால் இன்றைய இளைஞர்கள் பலரும் பியர் விரும்பிகளாகிவிட்டனர்.


பியரை சாப்பிட்டால் மட்டும் போதாது, தண்ணீருக்குள் இருந்து கொண்டு தண்ணி அடிப்பது போல, பியருக்குள் இருந்து கொண்டு பியர் அடித்தால் எப்படி இருக்கும் என்கிற சிந்தனையில் உருவானதுதான் செக் குடியரசு நாட்டில் உள்ள அந்த ஆடம்பர ஓட்டல். அந்த ஓட்டலின் பெயர் சோடாவார்.


இந்த சொகுசு ஓட்டலில் எந்த குழாயை திருகினாலும் தண்ணீருக்குப் பதிலாக பியர் வருகிறது. அதனால், இந்த ஓட்டலை அங்குள்ள மது பிரியர்கள் பியர் ஓட்டல் என்றே அழைக்கிறார்கள்.


சோடாவார் ஓட்டலின் முகப்பு பகுதியில் அலங்கார நீரூற்று ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதன் அருகில் உள்ள குழாயை திருகினாலும் கூட பியர்தான் வருகிறது.


இந்த ஆடம்பர ஓட்டல் பியருக்கு பெயர் போனது என்பதை உறுதி செய்யும் வகையில், ஓட்டலின் முகப்பிலேயே இரும்பு கம்பிகளால் ஆன அலங்கார வளைவு வைத்திருக்கிறார்கள்.


பியர் நிரப்பப்பட்ட தொட்டியில் இளம்பெண் ஒருத்தி குளிப்பது போல் அதில் காட்சி இடம்பெற்றுள்ளது.



ஓட்டலுக்குள் நுழைந்தாலும் அதே காட்சியைக் காண முடிகிறது. இந்த ஓட்டலில் படுக்கையறை பெரிதாக இருக்கிறதோ இல்லையோ, அத்தனை குளியல் அறைகளையும் பெரிய அளவில் அமைத்து இருக்கிறார்கள்.


ஓட்டலின் வரவேற்பு அறையே நம்மை மிரள வைக்கிறது. ஒரு குண்டு பெண் கையில் பியர் நிரப்பப்பட்ட கண்ணாடி டம்ளர்களை ஏந்தியபடி காட்சித் தருகிறார். அவரது மேலாடை சற்று கீழே இறங்கி நம்மை கிளுகிளுக்க வைக்கிறது.


‘வழிந்தபடியே’ அந்த பெண்ணை நெருங்கினால் ஏமாற்றம்தான் மிச்சம். உண்மையில் அவர் பெண் அல்ல. ஒரு பெண் போன்ற மெழுகுச்சிலை. ஆனால், அவர் கையில் உள்ள கண்ணாடி டம்ளர்களில் காணப்படும் பியர் ஒரிஜினல்தான்.


இந்த ஓட்டலில் தண்ணிக்குள் இருந்தபடியே தண்ணி அடிக்க விசேஷ ஏற்பாடுகள் செய்து தரப்படுகின்றன. செலவுதான் மிக அதிகம்.


ஆண் வாடிக்கையாளர்களை கவர்ச்சியான ஆடை அணிந்த அழகிய இளம்பெண்கள் குளியல் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவரது ஆடையை அந்தப் பெண்களே களைகிறார்கள்.


பின்னர், ஜில் பியர் நிரப்பப்பட்ட தொட்டிக்குள் அவரை இறங்க வைக்கிறார்கள். அவரும் அந்த பெண்களின் அழகில் கிறங்கிப்போய் தொட்டிக்குள் இறங்குகிறார்.


கழுத்தளவு பியரில் அவர் படுத்துக்கொள்ள அதன்பிறகு அவருக்கு விலை உயர்ந்த கண்ணாடி டம்ளரில் இளம் பெண்கள் பியரை ஊற்றிக் கொடுக்கிறார்கள். அவரும் அதை வாங்கி உதட்டுக்கு கொடுதது சப்புகிறார்.


சொர்க்கம் வேறு எங்கேயும் இல்லை, அது இங்கேதான் என்கிற உணர்வு அவருக்குள் ஏற்படுகிறது.


இப்படித்தான் பலரும் இந்த ஆடம்பர சொகுசு பியர் ஓட்டலுக்கு வந்து சொர்க்கத்தின் இன்பத்தை அனுபவித்துச் செல்கிறார்கள்.


ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இங்கு வந்து பியரில் குளித்துக் கொண்டே பியர் குடித்து மகிழ்கிறார்கள். சொர்க்கத்தை தேடுகிறார்கள்.


உலகம் எங்கேயோ போய்க்கிட்டு இருக்குங்க...!
Share:

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

விக்கிபீடியாவில் நெல்லை விவேகநந்தாவின் நூல்

அய்யா வைகுண்டர்
வரலாறும் அற்புதங்களும் (நூல்)
Ayya vaikundar book cover.jpg
நூல் பெயர் அய்யா வைகுண்டர்
வரலாறும் அற்புதங்களும்
நூல் ஆசிரியர் நெல்லை விவேகநந்தா
வகை வரலாறு
பொருள் ஆன்மிக வரலாறு
இடம் வானதி பதிப்பகம்,
23, தீன தயாளு தெரு,
தி. நகர்,
சென்னை
- 600 017.
மொழி தமிழ்
பதிப்பகம் வானதி பதிப்பகம்
பதிப்பு டிசம்பர், 2010
பக்கங்கள் 232
ஆக்க அனுமதி ஆசிரியருக்கு
அய்யா வைகுண்டர் வரலாறும் அற்புதங்களும் அய்யா வைகுண்டர் பற்றி நெல்லை விவேகநந்தா எழுதிய 232 பக்க வரலாற்று நூல். இது சென்னை, வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்

மாவட்டத்திலுள்ள குட்டம் என்கிற கடற்கரையோர கிராமத்தில் பிறந்த ஜெயமுருகானந்தன் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டமும், இதழியல் சென்னையில் 
விவேகானந்தர் மேல் கொண்ட பற்றுதலால் நெல்லை விவேகநந்தா என்கிற புனைப் பெயரில் கட்டுரைகள், தொடர்கள் போன்றவற்றை தமிழில் வெளியாகும் அச்சிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் எழுதி வருகிறார். மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப்பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். நாளிதழ் ஒன்றில் துணை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் சுவாமி

வாழ்த்துரை

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பின்ராக இருக்கும் எஸ். ஆர். ஜெயதுரை இந்நூலிற்கு வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.

அணிந்துரை

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியின் தர்மகர்த்தா மற்றும் அய்யா வைகுண்டர் நற்பணி சங்கத்தின் தலைவராகவும் உள்ள எஸ்.பால்பையன் இந்நூலிற்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

பாராட்டுரை

சென்னை, மணலிபுதுநகர் அய்யா வைகுண்டர் தருமபதியின் துணைத் தலைவர் எஸ். தேவதாஸ் பாராட்டுரை வழங்கியிருக்கிறார்.

விமர்சனப் பார்வை

முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி. எம். சுப்பிரமணி இந்நூல் குறித்த விமர்சனப் பார்வையை அளித்திருக்கிறார்.

மதிப்புரை

சென்னையைச் சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் “தமிழ்மாமணி” பனையபுரம் அதியமான் மதிப்புரை தந்திருக்கிறார்.


இந்த நூல் வரலாறு, அய்யா நிகழ்த்திய அற்புதங்கள், வழிபாட்டுப் பாடல்கள் எனும் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு

 

  1. நாஞ்சில் நாடு, திருவாங்கூர் சமஸ்தானம் - ஒரு பார்வை
  2. விதியை மாற்ற அவதரித்த பகலவன்
  3. கொடுமைகள் - ஈன துரோகங்கள்
  4. சிந்தனையைத் தூண்டிய இளமைப் பருவம்
  5. ஒட்டிக் கொண்ட தீரா நோய்
  6. கடலில் நடந்து வந்தார்.
  7. சம்பூர்ணதேவன் கதை
  8. கடலுக்குள் நடந்தது என்ன?
  9. தவமும், சாட்டி நீட்டோலை உதயமும்
  10. ஆதிக்க வெறிக்கு எதிராகக் கிளர்ந்து எழல்
  11. அய்யாவைத் தேடி வந்த சூழ்ச்சி
  12. அய்யாவிடம் அமிர்தமான விஷம்
  13. கைது செய்ய உத்தரவு
  14. அய்யா கைது, பக்தர்கள் கதறலும்
  15. தெய்வத்திற்கே சோதனை
  16. மீண்டும் தவம்
  17. அய்யாவும், அகிலத்திரட்டு அம்மானையும்
  18. அய்யாவும் ஆன்மிகமும்
  19. தோள்சீலை போராட்டம் - ஒரு பார்வை
  20. தோள்சீலை போராட்டமும் சான்றோரும்
என்கிற 20 உள் தலைப்புகளில் அய்யா வைகுண்டர் வரலாறு முழுமையாகத் தரப்பட்டுள்ளன.
  
அய்யா நிகழ்த்திய அற்புதங்கள்
  1. நிறைவேறிய ஒரு கன்னிப்பெண் ஆசை
  2. பாம்பாக மாறிய பாம்படம்
  3. உயிர் காத்த சாமித்தோப்பு திருமண்
  4. ஊமை பேசிய அதிசயம்
  5. 46 வயதில் குழந்தை பாக்கியம்
  6. அய்யாவை இகழ்ந்ததால் வந்த சோதனை
  7. ஐயம் நீங்கிய ஐவர்
  8. பக்தி விலக்கிய சேறு
  9. பேய் உண்டா? இல்லையா?
  10. ஜாதியை வென்ற அய்யா வாக்கு
  11. மெய்சிலிர்த்த கிறித்தவர்!
  12. நகை கொண்டு வந்த பருந்து
  13. ஆணவத்தால் வந்த சோதனை
  14. அய்யா கொடுத்த புதையல்
  15. வறுமை - நோய் தீர்த்த தீர்த்தம்
எனும் தலைப்புகளில் அய்யாவின் அற்புதங்கள் சில தரப்பட்டுள்ளன.
 

வழிபாட்டுப் பாடல்கள்

 

 

  1. போதிப்பு
  2. உச்சிப்படிப்பு
  3. உகப்படிப்பு
  4. வாழப்படிப்பு
  5. கல்யாண வாழ்த்து
  6. அய்யா வைகுண்டரின் பொன்மொழிகள்
எனும் தலைப்புகளில் அய்யா வழியைப் பின்பற்றுபவர்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்த வேண்டிய பாடல்களுடன் அய்யாவின் பொன்மொழிகள் சிலவும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

Share:

ஞாயிறு, 13 மார்ச், 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 12


12. அய்யாவிற்கு கொடுக்கப்பட்ட விசம்

இலங்கையில் ஸ்ரீராமரின் படைகளுக்கும், ராவணனின் படைகளுக்கும் இடையே கடும்போர். போர்க்களத்தில் ஸ்ரீராமர், அவரது இணை பிரியா தம்பி லட்சுமணர் மற்றும் வானரப் படையினர் ராவணன் படைகள் மீது எதிர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, ராவணனின் மகன் இந்திரஜித் எய்த நாகபாணம் ஒன்று லட்சுமணர் மீது தைக்க... அடுத்த நொடியே வில், அம்புகளோடு சரிந்தார் அவர். இதைக் கண்ட ஸ்ரீராமருக்கு ஒன்றும் ஓடவில்லை. தம்பியின் நிலையைப் பார்த்து தவித்தார்.

ஸ்ரீராமரின் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்ட விபீஷணன், சஞ்சீவி மலையில் உள்ள ஒரு மூலிகையை கொண்டு வந்தால் மட்டுமே லட்சுமணரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றார்.

உடனே, அந்த மூலிகையைத் தான் கொண்டு வருவதாகக் கூறிப் பறந்தார் ஆஞ்சநேயர்.

சஞ்சீவிமலையை அடைந்த ஆஞ்சநேயர் கண்களில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் தென்பட்டன. அவற்றில் எந்த மூலிகையை எடுத்துவர வேண்டும் என்பது தெரியாமல் தவித்த அவர், அந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்துக்கொண்டு வந்தார்.

அவர், வான் வழியே சஞ்சீவி மலையை கொண்டு சென்றபோது, அதன் ஒரு சிறு பகுதி ஓரிடத்தில் கீழே விழுந்தது. அந்த மலைதான், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்துவாழ்மலை.

பல்வேறு அற்புத குணங்கள் கொண்ட அழுகண்ணி ஜோதிப்புல், நீலத்தும்பை அருவதா, நீலக்கொடிவேலி வில்வம், குமரி மிளகரனை, நீர்க்கிராம்பு, மாவிலங்கம், சர்க்கரை வேம்பு, தழுதாழை அசோகு, வெண்கொடி வேலி சீதா, சர்ப்பகந்தி சீனித்துளசி, ராமசீதா வெட்பாலை, நாராயணப் பச்சிலை, செங்கீழாநெல்லி, புல்லாமணக்கு, தைவேளை, கானாம் வாழை உள்ளிட்ட மூலிகைகள் அங்கு இன்றும் விளைகின்றன. சித்தர்கள் வாசம் செய்வதாகவும் நம்பப்படுகிறது. ஆன்மிகம் கலந்த மருத்துவச் செழிப்பு கொண்ட இந்த மலையைச் சுற்றி பல்வேறு வர்ம வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன.

அந்த மலையில்தான் இப்போது நம் அய்யா வைகுண்டருக்கு விருந்து. அந்த மலையின் அடிவாரப் பகுதியில் தற்காலிகப் பந்தல் அமைத்து விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள், ஆதிக்க ஜாதியினர்.

பூமியை முத்தமிடும் வேஷ்டியும், தலையில் தலைப்பாகையுமாக மிகவும் எளியத் தோற்றத்தில் தனியொரு ஆளாக அங்கே சென்றார் வைகுண்டர். விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த பந்தலுக்குள் நுழைவதற்கு முன்னதாக அந்த மலையை ஒருமுறை மேல்நோக்கிப் பார்த்தார்.

மலை முழுக்க இயற்கைப் பச்சை வண்ண ஆடை அணிந்திருந்தது. அங்கு விளையும் குளிர்ந்த மூலிகைகளின் வியர்வைத் துளிகளை சுமந்து வந்த தென்றல் காற்று அய்யாவின் மேனியில் அந்த மூலிகைகளின் சக்தியை ஒற்றி வைத்துவிட்டு பறந்து காணாமல் போனது. சில மைல் தூரம் கடந்து வந்த களைப்பு, அந்த இயற்கைக் காற்று கொடுத்த ஒற்றடத்தில் மாயமானது.

தனி ஆளாக வைகுண்டர் வருவார் என்பதை எதிர்பார்க்காத ஆதிக்க ஜாதியினருக்கு இன்ப அதிர்ச்சி. அவர்களது முகத்திலேயே அது அப்பட்டமாக தெரிந்தது.

விருந்துண்ண வந்த வைகுண்டரை பலமாக உபசரித்து வரவேற்றனர். அவர்கள் கொடுத்த விருந்தில் பங்கு கொண்டு சாப்பிட்டார் அய்யா. சிறிதுநேரம் அவர்களிடம் பேசிவிட்டு அங்கிருந்து விடை பெற்றுப் புறப்பட்டார்.

அய்யா அங்கிருந்து அகன்ற அடுத்த நொடியே ஆதிக்க ஜாதியினர் அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. “இன்றோடு நம் எதிரி காலி” என்று ஆனந்தக் கூத்தாடினர். காரணம், அய்யா சாப்பிட்ட உணவில் அவர்கள் விசத்தைக் கலந்து கொடுத்திருந்தனர்.

அலைகடலால் இழுத்துச் செல்லப்பட்டு, அந்த மாபெரும் மகா சமுத்திரத்திற்குள்ளேயே 3 நாட்களாக இருந்தவரை இந்த விசம் என்ன செய்யும்?

அய்யா வைகுண்டருக்கு, ஆதிக்க ஜாதியினர் கொடுத்த விசம் அமிர்தமாகவே மாறிவிட்டது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அவரிடம் வழக்கத்தைவிடக் கூடுதல் உற்சாகம் பிறந்தது.

இதையறிந்த ஆதிக்க ஜாதியினர் ஆடிப்போய் விட்டனர். ‘என்னது... விசம் வேலை செய்யவில்லையா?’ என்று பெருமூச்சு விட மட்டுமே அவர்களால் முடிந்தது. வெட்கமும் வேதனையும் அடைந்த அவர்கள், அடுத்ததாக சமஸ்தான மன்னரிடமே முறையிட முடிவு செய்தனர்.

அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக இருந்தவர் சுவாதி திருநாள். முந்தைய சமஸ்தான மன்னர்களைவிட இவரது ஆட்சியில்தான் ஜாதியக் கொடுமைகள் தலைவிரித்து ஆட்டம் போட்டன. மனிதர்கள் என்றாலே, அது மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது இவரது தாரக மந்திரம். அதனால், தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருந்த 18 ஜாதியினர் பல்வேறு வழிகளில் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

நாடார் சமூகத்தைச் சேர்ந்த அய்யா வைகுண்டர் பற்றி மேட்டுக்குடியினர் சொன்ன போது கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான் அந்த மன்னன்.
“நமது நாட்டில் நாம் வைப்பது சட்டமாக இல்லாமல், அடுத்தவன் வைப்பது சட்டமா? எந்த தைரியத்தில் அவன் தனிக்கூட்டம் நடத்துகிறான்?” என்று கொக்கரித்தான் அவன்.

மன்னனின் ஆவேசத்தைக் கண்ட ஆதிக்க ஜாதியினர், மேலும் சில குறைகளையும், கடலில் நங்கூரம் பாய்ச்சுவது போல் அவனது காதில் பலமாகப் போட்டனர்.

“அதுமட்டும் இல்லை மன்னா... தங்களுக்கு எதிராக ஒரு புரட்சிப் படையையும் அந்த வைகுண்டன் உருவாக்கிக் கொண்டிருக்கிறான். நாம் வரி கேட்கச் சென்றால், அதைக் கொடுக்க மறுப்பதோடு, நமக்கு மரியாதையே கொடுக்க மறுக்கிறார்கள். நம் முன்னால் கை கட்டி, வாய் பொத்தி நின்றவர்கள், சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள். பூமியை உரசும்படி வேஷ்டி கட்டுகிறார்கள். தலையில் தலைப்பாகை கட்டுகிறார்கள். தங்களுக்கு என்று தனியாக ஒரு கோவிலையும் உருவாக்கிக் கொண்டு வழிபாடு நடத்துகிறார்கள். அங்கே, அவர்களது ஒற்றுமையை வளர்க்கிறார்களாம்...

மேலும்... நம்மைக் கண்டால் மார்பை திறந்து காட்டி மரியாதை கொடுத்து வந்த அந்த 18 ஜாதிப் பெண்கள், இன்று மார்பை மறைத்துக் கொண்டு ஆனந்தமாக உலா வருகிறார்கள். போதாக்குறைக்கு அந்த வைகுண்டனை தங்கள் கடவுள் என்றே அவர்கள் மார் தட்டுகிறார்கள். அவன் விஷ்ணுவின் அவதாரமாம். போகிற போக்கைப் பார்த்தால், நம்மையே நாஞ்சில் நாட்டில் இருந்து விரட்டி விட்டு விடுவார்கள் போலும்...” என்று மூச்சு விடாமல், இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி முடித்தார்கள்.

ஏற்கனவே மன்னன் சுவாதி திருநாளுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் ஆகாது. அப்படி இருக்கும் போது, அவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்று தெரிந்தால் கேட்கவும் வேண்டுமா என்ன? அந்த நிமிடமே அந்த உத்தரவை பிறப்பித்தான்.

“ஒருவேளை பகவான் விஷ்ணு மானிட அவதாரம் எடுத்தால், நம் உயர் குலத்தில் அல்லவா எடுப்பார்? அதனால், நாஞ்சில் நாட்டுக்கு உடனடியாக சென்று அங்கே என்ன நடக்கிறது என்பதை எனக்கு உடனடியாக தெரிவியுங்கள்...” என்று தனது தலைமை அமைச்சரிடம் கர்ஜித்தவன், தான் நாஞ்சில் நாடு செல்லத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கட்டளையிட்டான். 

(தொடரும்...)
Share:

வெள்ளி, 4 மார்ச், 2011

அய்யா வைகுண்டர் வரலாறு இப்போது புத்தகமாக...

 உங்கள் நெல்லை விவேகநந்தா எழுதிய அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு இப்போது நூலாக வெளி வந்துவிட்டது.

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றுடன், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் மற்றும் அய்யா வழி மார்க்கத்தில் பயன்பாட்டில் உள்ள உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, கல்யாண வாழ்த்து, வாழப்படிப்பு போன்ற பக்திப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

வானதி பதிப்பகம் இந்த நூலை வெளியி
ட்டுள்ளது. நூலின் விலை ரூ.100. மொத்த பக்கங்கள் 233.

உங்களுக்கும் அய்யா வைகுண்டர் வரலாற்று நூல் வேண்டுமா?

கீழ்கண்ட
வானதி பதிப்பக முகவரி அல்லது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு வாங்கி படித்து, அய்யாவின் அருளைப் பெறுங்கள்.







முகவரி : 23, தீனதயாளு தெரு


தியாகராஜா நகர்


சென்னை - 600017


இந்தியா





தொலைபேசி இலக்கம் :  044 - 24342810





உரிமையாளர் : திருநாவுக்கரசு




இணையதளம் : www.vanathi.in





மின்-அஞ்சல் : vanathipathippagam@vsnl.net




*****

எனது, "அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்" என்ற இந்த நூலுக்கு தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு.எஸ்.ஆர்.ஜெயதுரை அவர்கள் வழங்கிய வாழ்த்துரை இங்கே...

வாழ்த்துரை

அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும் என்ற இந்த நூலை வெளியிடும் தம்பி நெல்லை விவேகநந்தா, அய்யா வைகுண்டரின் அவதார நோக்கம் மற்றும் அவர் நிகழ்த்திய - நிகழ்த்திக் கொண்டிருக்கும் அற்புதங்கள் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார்.

அய்யா வைகுண்டர் மனித உருவில் வாழ்ந்தபோதும் சரி, இப்போதும் சரி, அவரது அற்புதங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. திருமணம் ஆகாதவர்கள் அய்யாவின் அருளால் திருமணமாகியுள்ளனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், அந்த பாக்கியம் பெற்றுள்ளனர். 
இதுமட்டுமின்றி, எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் தீராத நோய்களால் தவிப்போர், அந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்த சம்பவங்களை ஆதாரத்தோடு, அய்யா நிகழ்த்திய அற்புதங்களாக எழுதியுள்ளார் தம்பி நெல்லை விவேகநந்தா.

மேலும், 

தாழ்த்தப்பட்ட மக்களில் பெண்கள்... தோள் சீலை அணியக்கூடாது, பொதுக்கிணற்றில் குடிநீர் எடுக்கக்கூடாது, ஆண்கள்... மாடி வீடு கட்டக்கூடாது, துண்டை இடுப்பில்தான் கட்ட வேண்டும், மேல் ஜாதியினரிடம் பேசும்போது 36 அடி, 60 அடி என ஜாதியைப் பொறுத்து தூரமாக நின்று, தலை குனிந்து, வாய் பொத்தி பேச வேண்டும் - இப்படி அடிமைத்தனத்தோடு வாழ்ந்த மக்களுக்காக போராடி, அவர்களை அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீட்டவர் அய்யா வைகுண்டர். 

இன்றைக்கு அந்தப் பணியை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் செம்மையாக செய்து கொண்டிருக்கிறார்.

இன்றைய சில இந்து மத வழிபாட்டு முறைகளில் உயிரினங்களை பலியிடுதல் வழக்கத்தில் உள்ளது. ஆனால், அய்யா வழியில் இவற்றுக்கு இடம் கிடையாது. தேங்காய் உடைப்பதும், எலுமிச்சம்பழத்தை வெட்டுவதும் கூட அங்கே பலியிடுவதற்கு சமம் என்று கருதப்படுவதால், தேங்காயை உடைப்பதில்லை; எலுமிச்சம்பழத்தை வெட்டுவதில்லை. இந்த வழிபாட்டு முறைகளை வேறு எந்த மார்க்கத்திலும் காண முடியாது என்பதை அழகாக விவரிக்கிறது இந்த நூல்.

அய்யா வழி மக்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்கு அய்யாவிடம் மன்னிப்பு வேண்டுவதும், தங்களது வியாபாரம் செழிக்க, நோய்&நொடிகள் இன்றி நல்வாழ்வு வாழ இறைஞ்சுவதும் வழக்கத்தில் உள்ளது. இதுபற்றியும் தெளிவாக விளக்குகிறது இந்த நூல்.

இளம் வயதில் அய்யா வைகுண்டரின் வரலாற்றை வெளியிடும் தம்பி நெல்லை விவேகநந்தா, மேலும் பல நூல்கள் எழுத வேண்டும், அய்யாவின் புகழ் பரப்ப வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

மனிதன் எவ்வாறு சிறப்பாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த நூலை படித்து, அதை பின்பற்றுவோரும் சிறப்பான வாழ்வு பெறுவார்கள் என்று மனதார நம்புகிறேன்.

டாக்டர் எஸ்.ஆர்.ஜெயதுரை
பாராளுமன்ற உறுப்பினர்,
தூத்துக்குடி தொகுதி

Share:

சனி, 19 பிப்ரவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 11



11. ஆதிக்க சாதியினரின் அழைப்பு
 - நெல்லை விவேகநந்தா -
அய்யா வைகுண்டரின் போதைனைகள், வழிகாட்டல்கள்... தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியினருக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. அவர்கள் அய்யாவின் பின்னால் அணி திரண்டனர்.

மேலும், சித்த மருத்துவத்திலும் கைதேர்ந்தவராக இருந்த வைகுண்டர், தீராத நோயால் அவதியுற்றோரை குணமாக்கினார். புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளிகளை தொட்டு தூக்கி, அவர்களது நோய் நீங்கச் செய்தார். அற்புதங்கள் பலவும் அவர் வழியாக நிகழ்ந்தன.

எந்தவித ஊடக வசதியும் இல்லாவிட்டாலும் காட்டுத்தீ போல் பரவியது இந்தத் தகவல். அய்யாவை தேடி வருவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு சாதாரண கிராமமாக இருந்த சாமித்தோப்பு பரபரப்புமிக்க ஊரானது.

அய்யாவின் ஆதரவால் தாழ்த்தப்பட்டவர்களாக ஒதுக்கப்பட்டவர்கள் தலை நிமிர்ந்து நடப்பது மேட்டுக்குடியினரின் கண்களை உறுத்தியது. தங்களைப் பார்த்த மாத்திரத்தில் தலை குனிந்து, துண்டை கை இடுக்குகளில் சொருகிக்கொண்டு ஒதுங்கி நின்றவர்கள், அதே துண்டை தலைப்பாகையாக கட்டிக் கொண்டு பூமியை முத்தமிடும் அளவுக்கு வேட்டி அணிந்து கொண்டு கம்பீரமாக நடந்து சென்றவர்களைப் பார்த்து பொறாமை கொண்டனர்.

இதை இப்படியே விட்டால் தங்களுக்கு நல்லதல்ல என்று முடிவு செய்தவர்கள், ஒரு கூட்டம் போட்டு, தாழ்த்தப்பட்டவர்களை என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.

‘அந்த வைகுண்டன் எங்கிருந்து வந்தானோ, அவன் வந்த பிறகு அவர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக மாறிப் போய் விட்டார்கள். அந்த வைகுண்டனை நமது தெய்வமான திருமாலின் அவதாரம் என்கிறார்கள். அந்தத் தைரியத்தில் அவர்கள் நம்மை இப்போது மதிக்க மறுக்கிறார்கள். கூலி வேலை செய்ய யாரும் வர மறுக்கிறார்கள். நிலத்தில் விளையும் பயிரையும், பதனீரையும் இலவசமாக கொடுத்து வந்தவர்கள் இப்போது தரத் தயாராக இல்லை. இதை இப்படியே விட்டுவிட்டால், நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். அதனால், இந்த பிரச்சினைக்கு இப்போதே ஒரு முடிவெடுக்க வேண்டும். உடனே நம் சமஸ்தான மன்னரின் தகவலுக்கு இதைக் கொண்டு செல்வதைவிட நாமே ஏதாவது செய்ய வேண்டும்...’ என்று ஒருமனதாக கூட்டத்தில் முடிவெடுத்த மேட்டுக்குடியினர், வைகுண்டரை சூழ்ச்சி செய்து கொல்லத் துணிந்தனர்.

ஒருநாள் வைகுண்டர் தங்கியிருந்த பூவண்டர் தோப்புக்கு ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த சிலர் வந்தனர். அவர்களைப் பார்த்த, அய்யா குடிலுக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம். “இவர்கள் எப்படி இங்கே?” என்று மனதிற்குள் யோசித்தனர்.

நேராக குடிலுக்குள் புகுந்த ஆதிக்க ஜாதியினர், அய்யாவின் முன்பு அமர்ந்தனர். அவர்களது முகத்தைக் கூர்ந்து பார்த்தார் அய்யா.

வழக்கமாக, 18 ஜாதியினரைப் பார்த்தால் பொங்கியெழும் இவர்கள் சாந்த சொரூபமாக அமர்ந்திருந்தனர். நாங்கள் கோபப்பட்டதே இல்லை என்பது போல் தங்களது முகத்தை குழந்தைத்தனமாக வைத்திருந்தனர்.
அப்போது, அய்யாவே அவர்களிடம் பேசினார்.

“எல்லோரும் வாருங்கள்... திடீரென்ற உங்களது வருகை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் நோக்கம் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

“தங்களை எல்லோரும் தெய்வமாக கருதுவதாக அறிந்தோம். நீங்கள் சொல்வதையும் அப்படியே கேட்கிறார்கள். அதனால்தான், நாங்களும் உங்களை ஒருமுறை பார்த்து பாராட்டிவிட்டுச் செல்வோம் என்று வந்தோம்...” என்றனர், அந்த மேட்டுக்குடியினர். 

அவர்களது பேச்சில் விஷம் தடவப்பட்டு இருக்கிறது என்பதை சட்டென்று கணித்துவிட்டார் அய்யா. ஆனாலும், அதை அவர் வெளிக்காட்டக் கொள்ளவில்லை.

“சரி... இப்போது என்னால் உங்களுக்கு காரியம் ஏதேனும் ஆக வேண்டுமா?” என அய்யாவே கேட்டார்.

“காரியம் எல்லாம் ஒன்றுமில்லை. எங்களைப் பகைவர்களாகப் பார்க்காமல், உங்களது சீடர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதோடு, எங்களது விருப்பம் ஒன்றையும் தாங்கள் நிறைவேற்றித் தர வேண்டும்...”

“என்ன விருப்பம்?”

“நாங்கள் வைக்கும் விருந்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் எல்லோரது விருப்பம்”.

“நிச்சயமாக உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன். விருந்து எங்கே என்பதை மட்டும் சொல்லுங்கள். நான் தவறாமல் வந்துவிடுகிறேன். ஆமாம்... விருந்து எங்கே?”

“நம்ம மருந்துவாழ் மலையில்தான். நாங்கள் உங்களை ஆவலோடு எதிர்பார்ப்போம்...” என்று கூறிய ஆதிக்க ஜாதியினர், விருந்துக்கான தேதியையும், நேரத்தையும் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றனர்.
புலி பாயத்தான் பதுங்குகிறது என்று கணித்துவிட்டார் அய்யா.

விருந்து நடைபெறும் நாள் வந்தது. மருந்துவாழ்மலைக்குச் செல்லத் தயாரானார். ஆனால், தனி ஆளாக புறப்பட்டார்.

அவரது சீடர்கள், ‘சதி நடக்கிறது... திட்டமிட்டுத்தான் தங்களை வரச் சொல்லி இருக்கிறார்கள்... அதனால், நாங்களும் உங்களுடன் பாதுகாப்புக்கு வருகிறோம்...’ என்று எவ்வளவோ சொல்லியும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனி ஆளாக அங்கே சென்றார் அய்யா வைகுண்டர். 

(தொடரும்...)
Share:

சனி, 5 பிப்ரவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 10


10. உயர்வு தாழ்வு எதுவுமில்லை
 -நெல்லை விவேகநந்தா-

இறைவனை ஒருவன் காண  வேண்டும் அல்லது அடைய வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு அழகாகப் பதில் சொன்னார் அய்யா வைகுண்டர்.

“யார் அவன்? யார் அவன்? என்று நீ பிறந்தது முதல் தேடும் அந்த இறைவனை நீ அறிய வேண்டும் என்றால், முதலில் நீ யார் என்பதை அறிய வேண்டும். உன்னுடைய ஆரம்பத்தையும், முடிவையும் தெரிந்து கொண்டு, உனக்குள் இருக்கும் சக்தியையும் அறிந்தால் மட்டுமே இறைவனை உணர முடியும்” என்றார் வைகுண்டர்.
அதோடு, அன்றைய வழிபாட்டு முறைகளையும் உரிமையோடு கண்டித்தார்.

“உண்டு பண்ணி வைத்த உட்பொருளை தேடாமல்
கண்டதெல்லாம் தெய்வமென கையெடுப்பார் சண்டாளர்...” 

- என்று, மூட நம்பிக்கைகள் நிறைந்த அன்றைய வழிபாட்டு முறைகளை கண்டித்தவர், பணத்தை தண்ணீராக செலவு செய்து பூஜை மற்றும் புணஸ்காரம் செய்ய வேண்டாம்... உருவ வழிபாடு வேண்டாம்... உயிர்ப்பலி கொடுக்க வேண்டாம்... மூடநம்பிக்கைகளில் மூழ்க வேண்டாம்... என்று மக்களை வலியுறுத்தினார்.

ஆன்மிகத்தில் மூட நம்பிக்கைகளை எதிர்த்த வைகுண்டர், எப்படிப்பட்ட ஆன்மிகம் தேவை என்பதையும் வரையறுத்தார்.

“சக மனிதர்களிடம் மட்டுமின்றி, எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். அவ்வாறு அன்பு செலுத்தப் பழகிக் கொண்டால் இறைவனை உணர்ந்து, அவனை அடைவதற்கான வழியும் கிடைத்து விடும். இறைவனை அடைய வேண்டும் என்பதற்காக இல்லறத்தை துறப்பது தவறான செயல். இல்லறம் போன்ற மிகப்பெரிய தவம் வேறொன்றும் இல்லை... அதோடு, முடிந்தவரை பிறருக்குத் தருமம் செய். யாரும் தேடி வந்து உதவி கேட்பதற்கு முன்பு, நீயே அவர்களை தேடிச் சென்று உதவு. அவர்களை மனம் குளிரச் செய். அவர்களது மகிழ்ச்சியில் நீயும் ஆனந்தப்படு. அதுதான் உண்மையான தருமம். அவ்வாறு, பிறருக்கு தருமம் செய்தாலே போதும்; அதுதான், நீ இறைவனுக்குச் செய்யும் உண்மையான வழிபாடு...” என்கிறார் வைகுண்டர்.

ஆன்மிக நெறிகளோடு தகுந்த ஆன்ம நெறிகளையும் அய்யா வலியுறுத்தினார். “தேவையற்ற வாய் வார்த்தைகள் ஒருவனது வாழ்நாளைக் குறைத்து விடும். அதேபோல், அடக்கம் இல்லாத ஆர்ப்பாட்டமான வாழ்க்கை அமைதியைச் சிதைத்துவிடும்” என்றார்.

இவ்வாறு ஆன்மிகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறிய வைகுண்டர், அன்றைய அடக்குமுறையான வாழ்க்கைக்கு எதிராகவும் மக்களை உசுப்பிவிட்டார்.
  • கை கட்டி, வாய் பொத்தி அடுத்தவனிடம் அடங்கி கிடக்கும் அடிமை வாழ்வு ஒழிய வேண்டும்.

  • ஆதிக்க ஜாதியினர் செய்யும் சூழ்ச்சியில் சிக்கி தனிமைப்பட்டு கிடக்காதீர்கள். எல்லோரும் ஒற்றுமையாக வாழுங்கள். 

  • எவருக்கும் எதற்கும் வரி என்ற பெயரில் பணத்தை கொடுக்காதீர்கள். 

  • இந்த பூமியில் வாழப் பிறந்தவர்கள்தான் நீங்கள்; அந்த வாழ்க்கையை அடுத்தவனிடம் கேட்டுப் பெறவேண்டிய அவசியம் உங்களுக்கு வேண்டாம்.

  • எவனையும் போற்றி வணங்க வேண்டாம். அதேபோல், எவனுக்கும் அஞ்ச வேண்டாம். உங்களுக்கு நீங்கள் அடங்கி நடந்தாலே போதும்.
- இப்படி, புரட்சிக்கரமான கருத்துக்களையும் கூறி, அன்றைய அடக்கு முறைகளுக்கு ஆளான இளைஞர்களிடம் சுதந்திர வேட்கையை உண்டாக்கினார் வைகுண்டர்.

மேலும், “வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உடனே கூலி கொடு. உரிய கூலி கொடுக்காமல் ஏமாற்றினால் இறைவன் உன்னை மன்னிக்க மாட்டான்...” என்று அன்றைய முதலாளித்துவ ஆதிக்கத்தையும் சாடினார்.

“இனி நீ அடிமை கிடையாது. ஆதிக்க ஜாதியினருக்கு பயந்து கால் முட்டிக்கு மேலே வேஷ்டி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. பூமியை முத்தமிடும் அளவுக்கு நீ வேஷ்டி கட்டலாம். கை இடுக்கில் துண்டைச் சொருகி வைத்து குனிந்து நின்ற நீ இனி முதல் நெஞ்சம் நிமிரலாம். அந்தத் துண்டை உன் தலையில் தலைப்பாகையாகக் கட்டு... ஆதிக்க ஜாதியினர் வணங்கும் கோவில்களில்தான் இறைவன் இருக்கிறான் என்று தப்பு கணக்கு போடாதே. உனக்குள்ளேயே உள்ள இறைவனை நான் சுட்டிக்காட்டும் கோவிலில் வழிபடு. அந்தக் கோவிலில் உங்கள் சக்தியை நீங்களே தரிசியுங்கள் (திருநாமமும், அதன் பின்னணியில் கண்ணாடியும் கொண்ட இந்த வழிபாட்டு முறைதான் இன்றும் அய்யா வழி தர்மபதிகளில் பின்பற்றப்படுகிறது).

இன்றுமுதல் நீங்கள் புதிய மனிதராகிவிட்டீர்கள். உங்களுக்குள் ஜாதி, மத வேறுபாடுகள் எல்லாம் வேண்டாம். முத்திரிக் கிணற்றில் எல்லோரும் ஒன்றாக நீரெடுத்து அருந்துங்கள்... ஆதிக்க ஜாதியினருக்கு பயந்து செருப்பு அணிவதையே மறந்து போன நீங்கள், இனி யாருக்கும் அஞ்சாமல் செருப்பு அணியுங்கள். குடையும் எல்லோருக்கும் உரியதுதான். வெயிலில் செல்லும் போதும் அதை பிடித்துச் செல்லுங்கள். எல்லா ஊர்களும் நமது ஊரே. நீங்கள் எங்கே சென்றாலும் தைரியமாக சுதந்திர உணர்வுடன் செல்லுங்கள்.

ஆண்களைப் போல் பெண்களும் இன்று முதல் சுதந்திரம் பெற்றுவிட்டார்கள். என்னைப் பார்க்க வரும் பெண்கள் கண்டிப்பாக தோளுக்குச் சீலை அணிந்து மார்பை மறைத்தே வரவேண்டும். எல்லா சுதந்திரமும் பெண்களுக்கு உண்டு.

மனிதப் படைப்பில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் கிடையாது. எல்லோரும் இறைவனின் படைப்புகளே! இவர்களிடம் வேறுபாட்டை ஏற்படுத்துபவர்களை துரத்தியடிக்க வேண்டும்...”

- இப்படி, பல்வேறு சுதந்திரக் கொள்கைகளை அடக்கி ஆளப்பட்டவர்களுக்காக வகுத்துக் கொடுத்தார் அய்யா வைகுண்டர். அவரது இந்த உபதேசங்கள் 18 ஜாதியினரின் சிந்தையை தூண்டிவிட்டது. ஆதிக்க ஜாதியினரைப் பார்த்துக் குனிந்து குனிந்து பழக்கப்பட்டு, கூன் விழுந்த முதுகு ஆகிவிட்ட இளைஞர்கள் முதன் முறையாக நெஞ்சம் நிமிர்ந்தார்கள். 

 “கடைசி வரையிலும் நம் வாழ்க்கை இப்படித்தானா? நமது மகளும் இதே வேதனைகளை அனுபவிக்க வேண்டுமா?” என்று துடித்த பெண்கள் மனதில் தைரியம் பிறந்தது.

"குகையாளப் பிறந்தவனே...
எழுந்திரடா என் குழந்தாய்
அதிகமுள்ள நீசனும் தான்
மற்பிடித்து அடிக்கிறானே...
படையெடுக்க வா மகனே...
பாருலகம் சுட்டழிக்க
வரிசை பெற்ற நீ மகனே
மான மறுக்கம் பொறுக்கலையோ..." 

- என்று, வைகுண்டர் ஊட்டிய புரட்சிப்பால் பற்றி குறிப்பிடுகிறது, அகிலத்திரட்டு. 

(தொடரும்...)
Share:

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 9


9. வைகுண்டரின் தவமும் போதனையும்
- நெல்லை விவேகநந்தா -

சாமித்தோப்புக்குத் திரும்பிய வழியில் அய்யா வைகுண்டருக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைப் பெரும் மக்கள் கூட்டம் பின் தொடர்ந்தது. அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டு தானாகத் திரண்ட கூட்டம் அது.

நாடார் சமூகத்தில் அவதரித்த வைகுண்டர் பின்னால் ஒரு கூட்டமே திரண்டதை கண்ட ஆதிக்க ஜாதியினர் பொறாமையால் துடிதுடித்தனர். ‘ஒரு பைத்தியத்தின் பின்னால் பைத்தியக் கூட்டமே திரண்டு போகிறது...’ என்று ஏளனம் செய்தார்கள். இன்று மெக்காவில் சாத்தான் மீது கல் எறியும் இஸ்லாமியர், அன்று வைகுண்டர்மீது கல்லை எறிந்து அவமானப்படுத்தியதாகவும் தகவல் உண்டு.  

இப்படி, தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவோடும், ஆதிக்க ஜாதியினரின் அவமானங்களை எதிர் கொண்டும் சாமித்தோப்பு வந்து சேர்ந்தார் வைகுண்டர். அங்கே அவரை வரவேற்க முதல் ஆளாக வந்திருந்தார் பூவண்டர் என்ற யாதவர் (பசு மாடுகளைப் புனிதமாக கருதிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தினர், அவைகளை பராமரிப்பதற்கு என்று யாதவர் சமூகத்தினரை நியமித்து இருந்தனர். அந்தவகையில், சமஸ்தானத்தினர் அவர்கள் மீது மரியாதை வைத்திருந்தனர். பூவண்டர் போன்ற சிலர், சமஸ்தானத்தின் நிர்வாகப் பணிகளில் இருந்தனர்).

முத்துக்குட்டியாகச் சென்று, அய்யா வைகுண்டராக வந்தவரை பணிவோடு வரவேற்று, அவர் தங்குவதற்கு என்று தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பு ஒன்றையும் கொடுத்தார், பூவண்டர். அதை மகிழ்வோடு ஏற்ற வைகுண்டர், அந்தத் தென்னந்தோப்பில் ஒரு குடில் அமைத்து, சொந்த பந்தங்களை துறந்து தங்கினார். குறிப்பிட்ட நாளில் தவம் இருக்கவும் ஆரம்பித்தார். தவம் என்றால் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அல்ல. தொடர்ந்து 6 ஆண்டுகள்!

‘ஏன் இந்த திடீர் தவம்?’ என்று அவரிடமே கேட்டபோது, ‘இது எனது இறைத்தந்தை எனக்கு இட்டளை’ என்று கூறி, கேட்டவர்கள் வாயை அடைத்து விட்டார். மாமரத்தின் அடியில் தவத்தைத் துவங்கிய வைகுண்டர், முதலில் 3 அடி அகலமும், 6 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி, அதனுள் நின்று கொண்டு முதல் இரண்டு ஆண்டுகள் தவம் செய்தார். கலியுகத்தை அழித்து தர்மயுகத்தை தோற்றுவிப்பதற்கான ஆரம்பக்கட்ட முயற்சியாக அது அமைந்தது.

அடுத்த இரண்டு ஆண்டுகள் வீராசனம் இட்டு, தரையில் அமர்ந்து தவம் செய்தார். ஜாதி, மத வேறுபாடுகளைக் களையும் நோக்கில் இந்த இரண்டாம் வகை தவம் அமைந்தது.

தவம் மேற்கொண்ட இந்த காலக்கட்டத்தில், வைகுண்டரைத் தேடி பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வரத் தொடங்கினார்கள். அவர்களிடம் எதுவும் பேசாமல், செய்கைகள் மூலம் ஆசி வழங்கியவர், பசியைப் போக்கிக் கொள்ள வெறும் பால் மட்டுமே அருந்தி வந்தார்.

மூன்றாவது இரண்டு ஆண்டுகால தவத்தை, ஒரு கட்டிலில் கால் விரித்து அமர்ந்தபடி தொடங்கினார். ஒருவழியாக மூன்றாவது தவக்காலமும் நிறைவுற்று, வைகுண்டர் கூறியபடி 6 ஆண்டுகள் நிறைவடைந்தன.

தாழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் மகான் தோன்றியுள்ளார்; ஏன்... இறைமகனாக வந்துள்ளார்... என்பதை அறிந்த, 18 ஜாதியினரும் திரளாக சாமித்தோப்புக்கு வந்தனர். தன்னைத் தேடி வந்தவர்களை எல்லாம் ஒருசேர அமர வைத்து விருந்தளித்து மகிழ்ந்தார் வைகுண்டர். அவரிடம் சீடர்களாகவும் சிலர் சேர்ந்து, தாழ்த்தப்பட்ட சமுதாய முன்னேற்றத் தொண்டில் இறங்கினர்.

திருவிதாங்கூர் சமஸ்தானம் தாழ்த்தப்பட்டதாக அறிவித்த 18 ஜாதிகளிலும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. அதனால் அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதா? வேண்டாமா? என்று வெளியில் சொல்ல முடியாமல் தவித்தனர். அதனை உணர்ந்த வைகுண்டர், முதலில் 18 ஜாதியினர் இடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று கருதினார். ஒன்றாக அமர்ந்து விருந்து உண்ண மறுத்தவர்களை ஒருவழியாக சமாளித்து விருந்துண்ணச் செய்தார்.

18 ஜாதியினரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை கண்ட வைகுண்டருக்குள், நிச்சயம் அவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

அந்தக் காலத்தில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்ற விதிமுறை இருந்தது. அதனால், பராமரிப்பு இல்லாத ஏரியிலோ, குட்டையிலோ நீரெடுத்து குடித்தனர் அவர்கள். இதை போக்குவதற்காக பொதுக்கிணறு ஒன்றை ஏற்படுத்தினார் வைகுண்டர். ‘முத்திரி கிணறு’ என்று அதற்கு பெயரும் சூட்டினார் (அய்யா வழி தர்மபதிகளுக்கு - கோவில்களுக்குச் சென்றால் இந்த புனிதக் கிணற்றை நீங்களும் பார்க்கலாம். முத்திரி என்றால் உத்தரவாதம் தருதல் அல்லது நியமித்தல் என்று பொருள்). அந்தப் பொதுக்கிணற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒன்றாக தண்ணீர் எடுத்து மகிழ்ந்தனர்.

ஒருநாள் மாமரத்தின் அடியில் தியானத்தில் மூழ்கியிருந்த வைகுண்டர், தனது சீடர்களில் ஒருவரை அழைத்து, “நான் சொல்வதை அப்படியே எழுது” என்றார். அந்தச் சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும், எழுத்தாணியையும், எழுதப்படாத பனை ஓலைச்சுவடிகளையும் வேகவேகமாக எடுத்து வந்தார். வைகுண்டர் சொல்லச் சொல்ல ஒன்றுவிடாமல் எழுதினார்.

தனது மானிட பிறப்பு, தனக்கு திடீரென்று ஏற்பட்ட நோய், மகாவிஷ்ணுவை தரிசித்த அனுபவம், அவர் தனக்கு கூறிய உபதேச மொழிகள்... இவற்றோடு உலக நடப்புகளையும், எதிர்கால நிகழ்வுகளையும் கணித்துக் கூறினார். ஒருவித பாடல் வடிவில் அவரது உபதேசங்கள் அமைந்திருந்தன.

“திருச்சம்பதியில் புக்கித் தீர்த்தக் கரையில் செல்ல
திரைவந்து இழுத்ததையோ சிவனே அய்யா...
அலைவாய் கரையில் இருந்து தலைமேலே கையை வைத்து
அம்மை அழுததை என்ன சொல்வேன் சிவனே அய்யா...
கடலிலே போன மகன் இன்னும் வரக் காணோமென்று
கதறியழுதாள் அம்மை சிவனே அய்யா...
கடலும் முழுங்கிட துறவர் வணங்கியெனைக்
கூட்டியங்கே போனாரே சிவனே அய்யா...
பாற்கடலில் எங்கள் அய்யா நாராயணம்
பள்ளிகொள்ளும் இடம் சென்றேன் சிவனே அய்யா...
மெய்யை நிலை நிறுத்தி பொய்யை அடியழிக்க
விடை தந்து அனுப்பினாயே சிவனே அய்யா...
பேயன் போவதை அன்னா பாருங்கோவென்று சிலர்
பிதற்றியும் வைக்கின்றாரே சிவனே அய்யா...
அடுத்தாரைக் காப்பதற்காய் பூவண்டன் தோப்பதிலே
அமர்ந்து இருந்தனையோ சிவனே அய்யா...” 

- என்று, திருச்செந்தூர் கடலில் தான் அடித்துச் செல்லப்பட்டு, வைகுண்டம் சென்று திருமாலை சந்தித்து உபதேசம் பெற்று, வைகுண்டராகத் திரும்பி சாமித்தோப்பு வந்து தவம் மேற்கொண்டது வரை குறிப்பிட்ட வைகுண்டர், மேலும் சொல்லத் தொடங்கினார். அவரது சீடரும் எழுதிக் கொண்டே போனார்.

இந்தப் பாடல் வரிகள் அய்யா வழி அருள் நூலில் இடம் பெற்றுள்ளது. இதைச் “சாட்டு நீட்டோலை” என்று அய்யா வழி பக்தர்கள் அழைக்கிறார்கள். இந்தச் சாட்டு நீட்டோலை உபதேசத்திற்கு பிறகுதான், உருவ வழிபாட்டுக்கு எதிராகவும், முதலாளித்துவத்துக்கு எதிராகவும் சிலிர்த்தெழுந்தார் வைகுண்டர். 

(தொடரும்...)
Share:

சனி, 15 ஜனவரி, 2011

ஆனந்த வாழ்வு அருளும் குட்டம் ஆனந்தவல்லி அம்மன்

 
குட்டம் ஆனந்தவல்லி அம்மன் கோவில்
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம் அது -

கம்பீரமாக காணப்பட்ட ஒரு குதிரையில் வேகமாக வந்தான் ஆங்கிலேய அதிகாரி ஒருவன். ஒரு கிராமத்தில் கோவில் முன்பு திரண்டிருந்த மக்கள் அருகே வந்து நின்றான். “ஏன் இங்கே இந்த கூட்டம்?” என்று விசாரித்தான்.
அந்த கிராம மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்ததாக தெரிவித்தனர். 

“ஏன் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறீர்கள்? நீங்கள் எதுவும் கேட்டால், அந்த சாமி நேரில் அதை கொண்டு வந்து தரப்போகிறதா?” என்று கேலியாக கேட்டு சிரித்தான்.

அவனது பேச்சுக்கு மறுபேச்சு பேசிய அந்த கிராமமக்கள், தங்கள் ஊர் தெய்வத்தின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறினர். தங்கள் தெய்வம் தங்களுடன் பேசும் என்றும் தெரிவித்தனர். அதையெல்லாம் கேட்ட அந்த அதிகாரி வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டான்.

ஆனாலும், இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்குமா? என்று சந்தேகம். உடனே, “உங்கள் ஊர் அம்மனுக்கு பேசும் சக்தி உண்டு என்றால் என்னிடம் பேசச் சொல்லுங்கள்” என்றான்.

கிராமமக்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. கண்கண்ட தெய்வத்தையே சோதிக்கிறானே... இவனுக்கு என்ன ஆகப்போகிறதோ... என்று மனதிற்குள் நினைத்தவர்கள், “நீங்களே அந்த சாமியிடம் கேளுங்கள்” என்றனர்.

சற்று கோபமான அந்த ஆங்கிலேயன், குதிரையில் இருந்தபடியே, “ஏய் அம்மனே... இவர்கள் கூறுவதுபோல் நீ சக்தியுள்ள தெய்வம் என்றால், இப்போது என்னிடம் பேசு” என்று கிண்டலாக கத்தி சிரித்தான்.

அவனது ஏளனப் பேச்சுக்கு அந்த கணமே தண்டனை கிடைத்தது. கோவில் சன்னதிக்குள் இருந்து வேகமாக புறப்பட்டு வந்த ஒரு பேரொளி அவனது கண்களை குருடாக்கியது. குதிரையில் இருந்து கீழே விழுந்தான். குதிரையும் தனியாக வேகமெடுத்து ஓடியது.

அதிர்ந்து போனான் அந்த அதிகாரி. செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி, அந்த அம்மனிடமே முறையிட்டான். மனம் திருந்திய அவனுக்கு அந்த அன்னையும் மன்னிப்பு வழங்கினாள். அவனது பறிபோன கண் பார்வை திரும்பக் கிடைத்தது.

மகிழ்ச்சியில் உள்ளம் பூரித்துப் போனான் அந்த ஆங்கிலேய அதிகாரி.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த கிராமம் வழியாகச் செல்லும் ஆங்கிலேயர்கள், தவறாமல் கண் பார்வையை மீட்டுக் கொடுத்த அந்த அன்னையையும் வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர், திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர் - கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள குட்டம் கிராமம். இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்தான் மனம் திருந்திய ஆங்கிலேய அதிகாரிக்கு பார்வை கொடுத்த அன்னை.

அன்று மட்டுமல்ல, இந்த அன்னையின் சக்தி இன்றும் பிரபலம்.

நோய் தீர்க்கும் சஞ்சீவி மரம்


இக்கோவிலுக்கு முன்பு மிகவும் பழமை வாய்ந்த, பிரம்மாண்டமான புளியமரம் ஒன்று உள்ளது. இதை இந்த ஊர் மக்கள் சஞ்சீவி மரம் என்றே அழைக்கிறார்கள். வழக்கமாக புளியமரங்களின் இலைகள் இரவு நேரத்தில் மடிந்துபோய் காணப்படும். ஆனால், இந்த புளிய மரத்தின் இலை காலையில் உள்ளது போலவே விரிந்திருக்கும். அதனால், இதற்கு உறங்காப்புளி என்றும் பெயர் உண்டு.

தீராத எந்தவொரு நோயையும் போக்கும் வல்லமை இந்த சஞ்சீவி மர இலைக்கு உண்டு. இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த இலைகளை தவறாமல் சேகரித்து எடுத்துச் செல்கிறார்கள்.

இதேபோல், இந்த ஊரில் பிறந்து வெளியூர்களில் வசிப்பவர்களும், இந்த சஞ்சீவி மர இலைகளை சேகரித்து கொண்டு செல்கிறார்கள்.
எந்தவொரு நோய் வந்தாலும், முதலில் இந்த சஞ்சீவி இலையை அரைத்து குடித்து விடுகிறார்கள். இந்த இலைக்கு சக்தி உண்டு என்பதால், அவர்களது நோயும் சட்டென்று பறந்துபோய் விடுகிறது.

ஒருமுறை இந்த புளிய மரத்தில் பழுக்கும் பழங்களை சேகரிக்க ஒருவருக்கு ஏலம் கொடுத்தனர். ஆனால், அந்த ஆண்டு இந்த மரத்தில் துளிர்த்த புளியங்காய்கள் அத்தனையும் சரியாக பழுக்காமல் பயனற்று போய்விட்டன. தெய்வீக சக்தி கொண்ட இந்த மரத்தில் பழுக்கும் பழங்களை மக்களே பயன்படுத்த வேண்டும் என்பதே இங்குள்ள இறைவியின் திருவுள்ளம் என்பதை அறிந்த அந்த ஊர் மக்கள் அன்று முதல் இந்த புளியமரத்தின் பழங்களை ஏலம் விடுவதில்லை.

ஆடித் திருவிழா

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை நடைபெறும் திருவிழா பிரசித்திபெற்றது. இக்கோவிலுக்கும், அருகே உள்ள முத்து மாரியம்மன் சமேத சிவனணைந்த பெருமாள் கோவிலுக்கும் இணைத்து, பெருவிழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்

சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்குச் செல்ல, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது. திருச்செந்தூரில் இருந்து கடற்கரை மார்க்கமாக (மணப்பாடு, உவரி வழி) கன்னியாகுமரி, நாகர்கோவில் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இந்த ஊரின் வழியாகவே செல்லும். திருச்செந்தூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் குட்டம் அமைந்துள்ளது.

கோவில் பூஜை நேரம் (தினமும்) : காலை 6 மணி, மதியம் 12 மணி, இரவு 8.

- நெல்லை விவேகநந்தா

Share: