அய்யா வைகுண்டர் வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அய்யா வைகுண்டர் வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

விக்கிபீடியாவில் நெல்லை விவேகநந்தாவின் நூல்

அய்யா வைகுண்டர்
வரலாறும் அற்புதங்களும் (நூல்)
Ayya vaikundar book cover.jpg
நூல் பெயர் அய்யா வைகுண்டர்
வரலாறும் அற்புதங்களும்
நூல் ஆசிரியர் நெல்லை விவேகநந்தா
வகை வரலாறு
பொருள் ஆன்மிக வரலாறு
இடம் வானதி பதிப்பகம்,
23, தீன தயாளு தெரு,
தி. நகர்,
சென்னை
- 600 017.
மொழி தமிழ்
பதிப்பகம் வானதி பதிப்பகம்
பதிப்பு டிசம்பர், 2010
பக்கங்கள் 232
ஆக்க அனுமதி ஆசிரியருக்கு
அய்யா வைகுண்டர் வரலாறும் அற்புதங்களும் அய்யா வைகுண்டர் பற்றி நெல்லை விவேகநந்தா எழுதிய 232 பக்க வரலாற்று நூல். இது சென்னை, வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்

மாவட்டத்திலுள்ள குட்டம் என்கிற கடற்கரையோர கிராமத்தில் பிறந்த ஜெயமுருகானந்தன் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டமும், இதழியல் சென்னையில் 
விவேகானந்தர் மேல் கொண்ட பற்றுதலால் நெல்லை விவேகநந்தா என்கிற புனைப் பெயரில் கட்டுரைகள், தொடர்கள் போன்றவற்றை தமிழில் வெளியாகும் அச்சிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் எழுதி வருகிறார். மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப்பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். நாளிதழ் ஒன்றில் துணை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் சுவாமி

வாழ்த்துரை

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பின்ராக இருக்கும் எஸ். ஆர். ஜெயதுரை இந்நூலிற்கு வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.

அணிந்துரை

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியின் தர்மகர்த்தா மற்றும் அய்யா வைகுண்டர் நற்பணி சங்கத்தின் தலைவராகவும் உள்ள எஸ்.பால்பையன் இந்நூலிற்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

பாராட்டுரை

சென்னை, மணலிபுதுநகர் அய்யா வைகுண்டர் தருமபதியின் துணைத் தலைவர் எஸ். தேவதாஸ் பாராட்டுரை வழங்கியிருக்கிறார்.

விமர்சனப் பார்வை

முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி. எம். சுப்பிரமணி இந்நூல் குறித்த விமர்சனப் பார்வையை அளித்திருக்கிறார்.

மதிப்புரை

சென்னையைச் சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் “தமிழ்மாமணி” பனையபுரம் அதியமான் மதிப்புரை தந்திருக்கிறார்.


இந்த நூல் வரலாறு, அய்யா நிகழ்த்திய அற்புதங்கள், வழிபாட்டுப் பாடல்கள் எனும் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு

 

  1. நாஞ்சில் நாடு, திருவாங்கூர் சமஸ்தானம் - ஒரு பார்வை
  2. விதியை மாற்ற அவதரித்த பகலவன்
  3. கொடுமைகள் - ஈன துரோகங்கள்
  4. சிந்தனையைத் தூண்டிய இளமைப் பருவம்
  5. ஒட்டிக் கொண்ட தீரா நோய்
  6. கடலில் நடந்து வந்தார்.
  7. சம்பூர்ணதேவன் கதை
  8. கடலுக்குள் நடந்தது என்ன?
  9. தவமும், சாட்டி நீட்டோலை உதயமும்
  10. ஆதிக்க வெறிக்கு எதிராகக் கிளர்ந்து எழல்
  11. அய்யாவைத் தேடி வந்த சூழ்ச்சி
  12. அய்யாவிடம் அமிர்தமான விஷம்
  13. கைது செய்ய உத்தரவு
  14. அய்யா கைது, பக்தர்கள் கதறலும்
  15. தெய்வத்திற்கே சோதனை
  16. மீண்டும் தவம்
  17. அய்யாவும், அகிலத்திரட்டு அம்மானையும்
  18. அய்யாவும் ஆன்மிகமும்
  19. தோள்சீலை போராட்டம் - ஒரு பார்வை
  20. தோள்சீலை போராட்டமும் சான்றோரும்
என்கிற 20 உள் தலைப்புகளில் அய்யா வைகுண்டர் வரலாறு முழுமையாகத் தரப்பட்டுள்ளன.
  
அய்யா நிகழ்த்திய அற்புதங்கள்
  1. நிறைவேறிய ஒரு கன்னிப்பெண் ஆசை
  2. பாம்பாக மாறிய பாம்படம்
  3. உயிர் காத்த சாமித்தோப்பு திருமண்
  4. ஊமை பேசிய அதிசயம்
  5. 46 வயதில் குழந்தை பாக்கியம்
  6. அய்யாவை இகழ்ந்ததால் வந்த சோதனை
  7. ஐயம் நீங்கிய ஐவர்
  8. பக்தி விலக்கிய சேறு
  9. பேய் உண்டா? இல்லையா?
  10. ஜாதியை வென்ற அய்யா வாக்கு
  11. மெய்சிலிர்த்த கிறித்தவர்!
  12. நகை கொண்டு வந்த பருந்து
  13. ஆணவத்தால் வந்த சோதனை
  14. அய்யா கொடுத்த புதையல்
  15. வறுமை - நோய் தீர்த்த தீர்த்தம்
எனும் தலைப்புகளில் அய்யாவின் அற்புதங்கள் சில தரப்பட்டுள்ளன.
 

வழிபாட்டுப் பாடல்கள்

 

 

  1. போதிப்பு
  2. உச்சிப்படிப்பு
  3. உகப்படிப்பு
  4. வாழப்படிப்பு
  5. கல்யாண வாழ்த்து
  6. அய்யா வைகுண்டரின் பொன்மொழிகள்
எனும் தலைப்புகளில் அய்யா வழியைப் பின்பற்றுபவர்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்த வேண்டிய பாடல்களுடன் அய்யாவின் பொன்மொழிகள் சிலவும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

Share:

ஞாயிறு, 13 மார்ச், 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 12


12. அய்யாவிற்கு கொடுக்கப்பட்ட விசம்

இலங்கையில் ஸ்ரீராமரின் படைகளுக்கும், ராவணனின் படைகளுக்கும் இடையே கடும்போர். போர்க்களத்தில் ஸ்ரீராமர், அவரது இணை பிரியா தம்பி லட்சுமணர் மற்றும் வானரப் படையினர் ராவணன் படைகள் மீது எதிர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, ராவணனின் மகன் இந்திரஜித் எய்த நாகபாணம் ஒன்று லட்சுமணர் மீது தைக்க... அடுத்த நொடியே வில், அம்புகளோடு சரிந்தார் அவர். இதைக் கண்ட ஸ்ரீராமருக்கு ஒன்றும் ஓடவில்லை. தம்பியின் நிலையைப் பார்த்து தவித்தார்.

ஸ்ரீராமரின் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்ட விபீஷணன், சஞ்சீவி மலையில் உள்ள ஒரு மூலிகையை கொண்டு வந்தால் மட்டுமே லட்சுமணரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றார்.

உடனே, அந்த மூலிகையைத் தான் கொண்டு வருவதாகக் கூறிப் பறந்தார் ஆஞ்சநேயர்.

சஞ்சீவிமலையை அடைந்த ஆஞ்சநேயர் கண்களில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் தென்பட்டன. அவற்றில் எந்த மூலிகையை எடுத்துவர வேண்டும் என்பது தெரியாமல் தவித்த அவர், அந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்துக்கொண்டு வந்தார்.

அவர், வான் வழியே சஞ்சீவி மலையை கொண்டு சென்றபோது, அதன் ஒரு சிறு பகுதி ஓரிடத்தில் கீழே விழுந்தது. அந்த மலைதான், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்துவாழ்மலை.

பல்வேறு அற்புத குணங்கள் கொண்ட அழுகண்ணி ஜோதிப்புல், நீலத்தும்பை அருவதா, நீலக்கொடிவேலி வில்வம், குமரி மிளகரனை, நீர்க்கிராம்பு, மாவிலங்கம், சர்க்கரை வேம்பு, தழுதாழை அசோகு, வெண்கொடி வேலி சீதா, சர்ப்பகந்தி சீனித்துளசி, ராமசீதா வெட்பாலை, நாராயணப் பச்சிலை, செங்கீழாநெல்லி, புல்லாமணக்கு, தைவேளை, கானாம் வாழை உள்ளிட்ட மூலிகைகள் அங்கு இன்றும் விளைகின்றன. சித்தர்கள் வாசம் செய்வதாகவும் நம்பப்படுகிறது. ஆன்மிகம் கலந்த மருத்துவச் செழிப்பு கொண்ட இந்த மலையைச் சுற்றி பல்வேறு வர்ம வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன.

அந்த மலையில்தான் இப்போது நம் அய்யா வைகுண்டருக்கு விருந்து. அந்த மலையின் அடிவாரப் பகுதியில் தற்காலிகப் பந்தல் அமைத்து விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள், ஆதிக்க ஜாதியினர்.

பூமியை முத்தமிடும் வேஷ்டியும், தலையில் தலைப்பாகையுமாக மிகவும் எளியத் தோற்றத்தில் தனியொரு ஆளாக அங்கே சென்றார் வைகுண்டர். விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த பந்தலுக்குள் நுழைவதற்கு முன்னதாக அந்த மலையை ஒருமுறை மேல்நோக்கிப் பார்த்தார்.

மலை முழுக்க இயற்கைப் பச்சை வண்ண ஆடை அணிந்திருந்தது. அங்கு விளையும் குளிர்ந்த மூலிகைகளின் வியர்வைத் துளிகளை சுமந்து வந்த தென்றல் காற்று அய்யாவின் மேனியில் அந்த மூலிகைகளின் சக்தியை ஒற்றி வைத்துவிட்டு பறந்து காணாமல் போனது. சில மைல் தூரம் கடந்து வந்த களைப்பு, அந்த இயற்கைக் காற்று கொடுத்த ஒற்றடத்தில் மாயமானது.

தனி ஆளாக வைகுண்டர் வருவார் என்பதை எதிர்பார்க்காத ஆதிக்க ஜாதியினருக்கு இன்ப அதிர்ச்சி. அவர்களது முகத்திலேயே அது அப்பட்டமாக தெரிந்தது.

விருந்துண்ண வந்த வைகுண்டரை பலமாக உபசரித்து வரவேற்றனர். அவர்கள் கொடுத்த விருந்தில் பங்கு கொண்டு சாப்பிட்டார் அய்யா. சிறிதுநேரம் அவர்களிடம் பேசிவிட்டு அங்கிருந்து விடை பெற்றுப் புறப்பட்டார்.

அய்யா அங்கிருந்து அகன்ற அடுத்த நொடியே ஆதிக்க ஜாதியினர் அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. “இன்றோடு நம் எதிரி காலி” என்று ஆனந்தக் கூத்தாடினர். காரணம், அய்யா சாப்பிட்ட உணவில் அவர்கள் விசத்தைக் கலந்து கொடுத்திருந்தனர்.

அலைகடலால் இழுத்துச் செல்லப்பட்டு, அந்த மாபெரும் மகா சமுத்திரத்திற்குள்ளேயே 3 நாட்களாக இருந்தவரை இந்த விசம் என்ன செய்யும்?

அய்யா வைகுண்டருக்கு, ஆதிக்க ஜாதியினர் கொடுத்த விசம் அமிர்தமாகவே மாறிவிட்டது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அவரிடம் வழக்கத்தைவிடக் கூடுதல் உற்சாகம் பிறந்தது.

இதையறிந்த ஆதிக்க ஜாதியினர் ஆடிப்போய் விட்டனர். ‘என்னது... விசம் வேலை செய்யவில்லையா?’ என்று பெருமூச்சு விட மட்டுமே அவர்களால் முடிந்தது. வெட்கமும் வேதனையும் அடைந்த அவர்கள், அடுத்ததாக சமஸ்தான மன்னரிடமே முறையிட முடிவு செய்தனர்.

அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக இருந்தவர் சுவாதி திருநாள். முந்தைய சமஸ்தான மன்னர்களைவிட இவரது ஆட்சியில்தான் ஜாதியக் கொடுமைகள் தலைவிரித்து ஆட்டம் போட்டன. மனிதர்கள் என்றாலே, அது மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது இவரது தாரக மந்திரம். அதனால், தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருந்த 18 ஜாதியினர் பல்வேறு வழிகளில் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

நாடார் சமூகத்தைச் சேர்ந்த அய்யா வைகுண்டர் பற்றி மேட்டுக்குடியினர் சொன்ன போது கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான் அந்த மன்னன்.
“நமது நாட்டில் நாம் வைப்பது சட்டமாக இல்லாமல், அடுத்தவன் வைப்பது சட்டமா? எந்த தைரியத்தில் அவன் தனிக்கூட்டம் நடத்துகிறான்?” என்று கொக்கரித்தான் அவன்.

மன்னனின் ஆவேசத்தைக் கண்ட ஆதிக்க ஜாதியினர், மேலும் சில குறைகளையும், கடலில் நங்கூரம் பாய்ச்சுவது போல் அவனது காதில் பலமாகப் போட்டனர்.

“அதுமட்டும் இல்லை மன்னா... தங்களுக்கு எதிராக ஒரு புரட்சிப் படையையும் அந்த வைகுண்டன் உருவாக்கிக் கொண்டிருக்கிறான். நாம் வரி கேட்கச் சென்றால், அதைக் கொடுக்க மறுப்பதோடு, நமக்கு மரியாதையே கொடுக்க மறுக்கிறார்கள். நம் முன்னால் கை கட்டி, வாய் பொத்தி நின்றவர்கள், சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள். பூமியை உரசும்படி வேஷ்டி கட்டுகிறார்கள். தலையில் தலைப்பாகை கட்டுகிறார்கள். தங்களுக்கு என்று தனியாக ஒரு கோவிலையும் உருவாக்கிக் கொண்டு வழிபாடு நடத்துகிறார்கள். அங்கே, அவர்களது ஒற்றுமையை வளர்க்கிறார்களாம்...

மேலும்... நம்மைக் கண்டால் மார்பை திறந்து காட்டி மரியாதை கொடுத்து வந்த அந்த 18 ஜாதிப் பெண்கள், இன்று மார்பை மறைத்துக் கொண்டு ஆனந்தமாக உலா வருகிறார்கள். போதாக்குறைக்கு அந்த வைகுண்டனை தங்கள் கடவுள் என்றே அவர்கள் மார் தட்டுகிறார்கள். அவன் விஷ்ணுவின் அவதாரமாம். போகிற போக்கைப் பார்த்தால், நம்மையே நாஞ்சில் நாட்டில் இருந்து விரட்டி விட்டு விடுவார்கள் போலும்...” என்று மூச்சு விடாமல், இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி முடித்தார்கள்.

ஏற்கனவே மன்னன் சுவாதி திருநாளுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் ஆகாது. அப்படி இருக்கும் போது, அவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்று தெரிந்தால் கேட்கவும் வேண்டுமா என்ன? அந்த நிமிடமே அந்த உத்தரவை பிறப்பித்தான்.

“ஒருவேளை பகவான் விஷ்ணு மானிட அவதாரம் எடுத்தால், நம் உயர் குலத்தில் அல்லவா எடுப்பார்? அதனால், நாஞ்சில் நாட்டுக்கு உடனடியாக சென்று அங்கே என்ன நடக்கிறது என்பதை எனக்கு உடனடியாக தெரிவியுங்கள்...” என்று தனது தலைமை அமைச்சரிடம் கர்ஜித்தவன், தான் நாஞ்சில் நாடு செல்லத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கட்டளையிட்டான். 

(தொடரும்...)
Share:

வெள்ளி, 4 மார்ச், 2011

அய்யா வைகுண்டர் வரலாறு இப்போது புத்தகமாக...

 உங்கள் நெல்லை விவேகநந்தா எழுதிய அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு இப்போது நூலாக வெளி வந்துவிட்டது.

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றுடன், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் மற்றும் அய்யா வழி மார்க்கத்தில் பயன்பாட்டில் உள்ள உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, கல்யாண வாழ்த்து, வாழப்படிப்பு போன்ற பக்திப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

வானதி பதிப்பகம் இந்த நூலை வெளியி
ட்டுள்ளது. நூலின் விலை ரூ.100. மொத்த பக்கங்கள் 233.

உங்களுக்கும் அய்யா வைகுண்டர் வரலாற்று நூல் வேண்டுமா?

கீழ்கண்ட
வானதி பதிப்பக முகவரி அல்லது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு வாங்கி படித்து, அய்யாவின் அருளைப் பெறுங்கள்.







முகவரி : 23, தீனதயாளு தெரு


தியாகராஜா நகர்


சென்னை - 600017


இந்தியா





தொலைபேசி இலக்கம் :  044 - 24342810





உரிமையாளர் : திருநாவுக்கரசு




இணையதளம் : www.vanathi.in





மின்-அஞ்சல் : vanathipathippagam@vsnl.net




*****

எனது, "அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்" என்ற இந்த நூலுக்கு தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு.எஸ்.ஆர்.ஜெயதுரை அவர்கள் வழங்கிய வாழ்த்துரை இங்கே...

வாழ்த்துரை

அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும் என்ற இந்த நூலை வெளியிடும் தம்பி நெல்லை விவேகநந்தா, அய்யா வைகுண்டரின் அவதார நோக்கம் மற்றும் அவர் நிகழ்த்திய - நிகழ்த்திக் கொண்டிருக்கும் அற்புதங்கள் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார்.

அய்யா வைகுண்டர் மனித உருவில் வாழ்ந்தபோதும் சரி, இப்போதும் சரி, அவரது அற்புதங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. திருமணம் ஆகாதவர்கள் அய்யாவின் அருளால் திருமணமாகியுள்ளனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், அந்த பாக்கியம் பெற்றுள்ளனர். 
இதுமட்டுமின்றி, எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் தீராத நோய்களால் தவிப்போர், அந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்த சம்பவங்களை ஆதாரத்தோடு, அய்யா நிகழ்த்திய அற்புதங்களாக எழுதியுள்ளார் தம்பி நெல்லை விவேகநந்தா.

மேலும், 

தாழ்த்தப்பட்ட மக்களில் பெண்கள்... தோள் சீலை அணியக்கூடாது, பொதுக்கிணற்றில் குடிநீர் எடுக்கக்கூடாது, ஆண்கள்... மாடி வீடு கட்டக்கூடாது, துண்டை இடுப்பில்தான் கட்ட வேண்டும், மேல் ஜாதியினரிடம் பேசும்போது 36 அடி, 60 அடி என ஜாதியைப் பொறுத்து தூரமாக நின்று, தலை குனிந்து, வாய் பொத்தி பேச வேண்டும் - இப்படி அடிமைத்தனத்தோடு வாழ்ந்த மக்களுக்காக போராடி, அவர்களை அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீட்டவர் அய்யா வைகுண்டர். 

இன்றைக்கு அந்தப் பணியை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் செம்மையாக செய்து கொண்டிருக்கிறார்.

இன்றைய சில இந்து மத வழிபாட்டு முறைகளில் உயிரினங்களை பலியிடுதல் வழக்கத்தில் உள்ளது. ஆனால், அய்யா வழியில் இவற்றுக்கு இடம் கிடையாது. தேங்காய் உடைப்பதும், எலுமிச்சம்பழத்தை வெட்டுவதும் கூட அங்கே பலியிடுவதற்கு சமம் என்று கருதப்படுவதால், தேங்காயை உடைப்பதில்லை; எலுமிச்சம்பழத்தை வெட்டுவதில்லை. இந்த வழிபாட்டு முறைகளை வேறு எந்த மார்க்கத்திலும் காண முடியாது என்பதை அழகாக விவரிக்கிறது இந்த நூல்.

அய்யா வழி மக்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்கு அய்யாவிடம் மன்னிப்பு வேண்டுவதும், தங்களது வியாபாரம் செழிக்க, நோய்&நொடிகள் இன்றி நல்வாழ்வு வாழ இறைஞ்சுவதும் வழக்கத்தில் உள்ளது. இதுபற்றியும் தெளிவாக விளக்குகிறது இந்த நூல்.

இளம் வயதில் அய்யா வைகுண்டரின் வரலாற்றை வெளியிடும் தம்பி நெல்லை விவேகநந்தா, மேலும் பல நூல்கள் எழுத வேண்டும், அய்யாவின் புகழ் பரப்ப வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

மனிதன் எவ்வாறு சிறப்பாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த நூலை படித்து, அதை பின்பற்றுவோரும் சிறப்பான வாழ்வு பெறுவார்கள் என்று மனதார நம்புகிறேன்.

டாக்டர் எஸ்.ஆர்.ஜெயதுரை
பாராளுமன்ற உறுப்பினர்,
தூத்துக்குடி தொகுதி

Share:

சனி, 19 பிப்ரவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 11



11. ஆதிக்க சாதியினரின் அழைப்பு
 - நெல்லை விவேகநந்தா -
அய்யா வைகுண்டரின் போதைனைகள், வழிகாட்டல்கள்... தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியினருக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. அவர்கள் அய்யாவின் பின்னால் அணி திரண்டனர்.

மேலும், சித்த மருத்துவத்திலும் கைதேர்ந்தவராக இருந்த வைகுண்டர், தீராத நோயால் அவதியுற்றோரை குணமாக்கினார். புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளிகளை தொட்டு தூக்கி, அவர்களது நோய் நீங்கச் செய்தார். அற்புதங்கள் பலவும் அவர் வழியாக நிகழ்ந்தன.

எந்தவித ஊடக வசதியும் இல்லாவிட்டாலும் காட்டுத்தீ போல் பரவியது இந்தத் தகவல். அய்யாவை தேடி வருவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு சாதாரண கிராமமாக இருந்த சாமித்தோப்பு பரபரப்புமிக்க ஊரானது.

அய்யாவின் ஆதரவால் தாழ்த்தப்பட்டவர்களாக ஒதுக்கப்பட்டவர்கள் தலை நிமிர்ந்து நடப்பது மேட்டுக்குடியினரின் கண்களை உறுத்தியது. தங்களைப் பார்த்த மாத்திரத்தில் தலை குனிந்து, துண்டை கை இடுக்குகளில் சொருகிக்கொண்டு ஒதுங்கி நின்றவர்கள், அதே துண்டை தலைப்பாகையாக கட்டிக் கொண்டு பூமியை முத்தமிடும் அளவுக்கு வேட்டி அணிந்து கொண்டு கம்பீரமாக நடந்து சென்றவர்களைப் பார்த்து பொறாமை கொண்டனர்.

இதை இப்படியே விட்டால் தங்களுக்கு நல்லதல்ல என்று முடிவு செய்தவர்கள், ஒரு கூட்டம் போட்டு, தாழ்த்தப்பட்டவர்களை என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.

‘அந்த வைகுண்டன் எங்கிருந்து வந்தானோ, அவன் வந்த பிறகு அவர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக மாறிப் போய் விட்டார்கள். அந்த வைகுண்டனை நமது தெய்வமான திருமாலின் அவதாரம் என்கிறார்கள். அந்தத் தைரியத்தில் அவர்கள் நம்மை இப்போது மதிக்க மறுக்கிறார்கள். கூலி வேலை செய்ய யாரும் வர மறுக்கிறார்கள். நிலத்தில் விளையும் பயிரையும், பதனீரையும் இலவசமாக கொடுத்து வந்தவர்கள் இப்போது தரத் தயாராக இல்லை. இதை இப்படியே விட்டுவிட்டால், நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். அதனால், இந்த பிரச்சினைக்கு இப்போதே ஒரு முடிவெடுக்க வேண்டும். உடனே நம் சமஸ்தான மன்னரின் தகவலுக்கு இதைக் கொண்டு செல்வதைவிட நாமே ஏதாவது செய்ய வேண்டும்...’ என்று ஒருமனதாக கூட்டத்தில் முடிவெடுத்த மேட்டுக்குடியினர், வைகுண்டரை சூழ்ச்சி செய்து கொல்லத் துணிந்தனர்.

ஒருநாள் வைகுண்டர் தங்கியிருந்த பூவண்டர் தோப்புக்கு ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த சிலர் வந்தனர். அவர்களைப் பார்த்த, அய்யா குடிலுக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம். “இவர்கள் எப்படி இங்கே?” என்று மனதிற்குள் யோசித்தனர்.

நேராக குடிலுக்குள் புகுந்த ஆதிக்க ஜாதியினர், அய்யாவின் முன்பு அமர்ந்தனர். அவர்களது முகத்தைக் கூர்ந்து பார்த்தார் அய்யா.

வழக்கமாக, 18 ஜாதியினரைப் பார்த்தால் பொங்கியெழும் இவர்கள் சாந்த சொரூபமாக அமர்ந்திருந்தனர். நாங்கள் கோபப்பட்டதே இல்லை என்பது போல் தங்களது முகத்தை குழந்தைத்தனமாக வைத்திருந்தனர்.
அப்போது, அய்யாவே அவர்களிடம் பேசினார்.

“எல்லோரும் வாருங்கள்... திடீரென்ற உங்களது வருகை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் நோக்கம் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

“தங்களை எல்லோரும் தெய்வமாக கருதுவதாக அறிந்தோம். நீங்கள் சொல்வதையும் அப்படியே கேட்கிறார்கள். அதனால்தான், நாங்களும் உங்களை ஒருமுறை பார்த்து பாராட்டிவிட்டுச் செல்வோம் என்று வந்தோம்...” என்றனர், அந்த மேட்டுக்குடியினர். 

அவர்களது பேச்சில் விஷம் தடவப்பட்டு இருக்கிறது என்பதை சட்டென்று கணித்துவிட்டார் அய்யா. ஆனாலும், அதை அவர் வெளிக்காட்டக் கொள்ளவில்லை.

“சரி... இப்போது என்னால் உங்களுக்கு காரியம் ஏதேனும் ஆக வேண்டுமா?” என அய்யாவே கேட்டார்.

“காரியம் எல்லாம் ஒன்றுமில்லை. எங்களைப் பகைவர்களாகப் பார்க்காமல், உங்களது சீடர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதோடு, எங்களது விருப்பம் ஒன்றையும் தாங்கள் நிறைவேற்றித் தர வேண்டும்...”

“என்ன விருப்பம்?”

“நாங்கள் வைக்கும் விருந்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் எல்லோரது விருப்பம்”.

“நிச்சயமாக உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன். விருந்து எங்கே என்பதை மட்டும் சொல்லுங்கள். நான் தவறாமல் வந்துவிடுகிறேன். ஆமாம்... விருந்து எங்கே?”

“நம்ம மருந்துவாழ் மலையில்தான். நாங்கள் உங்களை ஆவலோடு எதிர்பார்ப்போம்...” என்று கூறிய ஆதிக்க ஜாதியினர், விருந்துக்கான தேதியையும், நேரத்தையும் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றனர்.
புலி பாயத்தான் பதுங்குகிறது என்று கணித்துவிட்டார் அய்யா.

விருந்து நடைபெறும் நாள் வந்தது. மருந்துவாழ்மலைக்குச் செல்லத் தயாரானார். ஆனால், தனி ஆளாக புறப்பட்டார்.

அவரது சீடர்கள், ‘சதி நடக்கிறது... திட்டமிட்டுத்தான் தங்களை வரச் சொல்லி இருக்கிறார்கள்... அதனால், நாங்களும் உங்களுடன் பாதுகாப்புக்கு வருகிறோம்...’ என்று எவ்வளவோ சொல்லியும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனி ஆளாக அங்கே சென்றார் அய்யா வைகுண்டர். 

(தொடரும்...)
Share:

சனி, 5 பிப்ரவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 10


10. உயர்வு தாழ்வு எதுவுமில்லை
 -நெல்லை விவேகநந்தா-

இறைவனை ஒருவன் காண  வேண்டும் அல்லது அடைய வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு அழகாகப் பதில் சொன்னார் அய்யா வைகுண்டர்.

“யார் அவன்? யார் அவன்? என்று நீ பிறந்தது முதல் தேடும் அந்த இறைவனை நீ அறிய வேண்டும் என்றால், முதலில் நீ யார் என்பதை அறிய வேண்டும். உன்னுடைய ஆரம்பத்தையும், முடிவையும் தெரிந்து கொண்டு, உனக்குள் இருக்கும் சக்தியையும் அறிந்தால் மட்டுமே இறைவனை உணர முடியும்” என்றார் வைகுண்டர்.
அதோடு, அன்றைய வழிபாட்டு முறைகளையும் உரிமையோடு கண்டித்தார்.

“உண்டு பண்ணி வைத்த உட்பொருளை தேடாமல்
கண்டதெல்லாம் தெய்வமென கையெடுப்பார் சண்டாளர்...” 

- என்று, மூட நம்பிக்கைகள் நிறைந்த அன்றைய வழிபாட்டு முறைகளை கண்டித்தவர், பணத்தை தண்ணீராக செலவு செய்து பூஜை மற்றும் புணஸ்காரம் செய்ய வேண்டாம்... உருவ வழிபாடு வேண்டாம்... உயிர்ப்பலி கொடுக்க வேண்டாம்... மூடநம்பிக்கைகளில் மூழ்க வேண்டாம்... என்று மக்களை வலியுறுத்தினார்.

ஆன்மிகத்தில் மூட நம்பிக்கைகளை எதிர்த்த வைகுண்டர், எப்படிப்பட்ட ஆன்மிகம் தேவை என்பதையும் வரையறுத்தார்.

“சக மனிதர்களிடம் மட்டுமின்றி, எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். அவ்வாறு அன்பு செலுத்தப் பழகிக் கொண்டால் இறைவனை உணர்ந்து, அவனை அடைவதற்கான வழியும் கிடைத்து விடும். இறைவனை அடைய வேண்டும் என்பதற்காக இல்லறத்தை துறப்பது தவறான செயல். இல்லறம் போன்ற மிகப்பெரிய தவம் வேறொன்றும் இல்லை... அதோடு, முடிந்தவரை பிறருக்குத் தருமம் செய். யாரும் தேடி வந்து உதவி கேட்பதற்கு முன்பு, நீயே அவர்களை தேடிச் சென்று உதவு. அவர்களை மனம் குளிரச் செய். அவர்களது மகிழ்ச்சியில் நீயும் ஆனந்தப்படு. அதுதான் உண்மையான தருமம். அவ்வாறு, பிறருக்கு தருமம் செய்தாலே போதும்; அதுதான், நீ இறைவனுக்குச் செய்யும் உண்மையான வழிபாடு...” என்கிறார் வைகுண்டர்.

ஆன்மிக நெறிகளோடு தகுந்த ஆன்ம நெறிகளையும் அய்யா வலியுறுத்தினார். “தேவையற்ற வாய் வார்த்தைகள் ஒருவனது வாழ்நாளைக் குறைத்து விடும். அதேபோல், அடக்கம் இல்லாத ஆர்ப்பாட்டமான வாழ்க்கை அமைதியைச் சிதைத்துவிடும்” என்றார்.

இவ்வாறு ஆன்மிகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறிய வைகுண்டர், அன்றைய அடக்குமுறையான வாழ்க்கைக்கு எதிராகவும் மக்களை உசுப்பிவிட்டார்.
  • கை கட்டி, வாய் பொத்தி அடுத்தவனிடம் அடங்கி கிடக்கும் அடிமை வாழ்வு ஒழிய வேண்டும்.

  • ஆதிக்க ஜாதியினர் செய்யும் சூழ்ச்சியில் சிக்கி தனிமைப்பட்டு கிடக்காதீர்கள். எல்லோரும் ஒற்றுமையாக வாழுங்கள். 

  • எவருக்கும் எதற்கும் வரி என்ற பெயரில் பணத்தை கொடுக்காதீர்கள். 

  • இந்த பூமியில் வாழப் பிறந்தவர்கள்தான் நீங்கள்; அந்த வாழ்க்கையை அடுத்தவனிடம் கேட்டுப் பெறவேண்டிய அவசியம் உங்களுக்கு வேண்டாம்.

  • எவனையும் போற்றி வணங்க வேண்டாம். அதேபோல், எவனுக்கும் அஞ்ச வேண்டாம். உங்களுக்கு நீங்கள் அடங்கி நடந்தாலே போதும்.
- இப்படி, புரட்சிக்கரமான கருத்துக்களையும் கூறி, அன்றைய அடக்கு முறைகளுக்கு ஆளான இளைஞர்களிடம் சுதந்திர வேட்கையை உண்டாக்கினார் வைகுண்டர்.

மேலும், “வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உடனே கூலி கொடு. உரிய கூலி கொடுக்காமல் ஏமாற்றினால் இறைவன் உன்னை மன்னிக்க மாட்டான்...” என்று அன்றைய முதலாளித்துவ ஆதிக்கத்தையும் சாடினார்.

“இனி நீ அடிமை கிடையாது. ஆதிக்க ஜாதியினருக்கு பயந்து கால் முட்டிக்கு மேலே வேஷ்டி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. பூமியை முத்தமிடும் அளவுக்கு நீ வேஷ்டி கட்டலாம். கை இடுக்கில் துண்டைச் சொருகி வைத்து குனிந்து நின்ற நீ இனி முதல் நெஞ்சம் நிமிரலாம். அந்தத் துண்டை உன் தலையில் தலைப்பாகையாகக் கட்டு... ஆதிக்க ஜாதியினர் வணங்கும் கோவில்களில்தான் இறைவன் இருக்கிறான் என்று தப்பு கணக்கு போடாதே. உனக்குள்ளேயே உள்ள இறைவனை நான் சுட்டிக்காட்டும் கோவிலில் வழிபடு. அந்தக் கோவிலில் உங்கள் சக்தியை நீங்களே தரிசியுங்கள் (திருநாமமும், அதன் பின்னணியில் கண்ணாடியும் கொண்ட இந்த வழிபாட்டு முறைதான் இன்றும் அய்யா வழி தர்மபதிகளில் பின்பற்றப்படுகிறது).

இன்றுமுதல் நீங்கள் புதிய மனிதராகிவிட்டீர்கள். உங்களுக்குள் ஜாதி, மத வேறுபாடுகள் எல்லாம் வேண்டாம். முத்திரிக் கிணற்றில் எல்லோரும் ஒன்றாக நீரெடுத்து அருந்துங்கள்... ஆதிக்க ஜாதியினருக்கு பயந்து செருப்பு அணிவதையே மறந்து போன நீங்கள், இனி யாருக்கும் அஞ்சாமல் செருப்பு அணியுங்கள். குடையும் எல்லோருக்கும் உரியதுதான். வெயிலில் செல்லும் போதும் அதை பிடித்துச் செல்லுங்கள். எல்லா ஊர்களும் நமது ஊரே. நீங்கள் எங்கே சென்றாலும் தைரியமாக சுதந்திர உணர்வுடன் செல்லுங்கள்.

ஆண்களைப் போல் பெண்களும் இன்று முதல் சுதந்திரம் பெற்றுவிட்டார்கள். என்னைப் பார்க்க வரும் பெண்கள் கண்டிப்பாக தோளுக்குச் சீலை அணிந்து மார்பை மறைத்தே வரவேண்டும். எல்லா சுதந்திரமும் பெண்களுக்கு உண்டு.

மனிதப் படைப்பில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் கிடையாது. எல்லோரும் இறைவனின் படைப்புகளே! இவர்களிடம் வேறுபாட்டை ஏற்படுத்துபவர்களை துரத்தியடிக்க வேண்டும்...”

- இப்படி, பல்வேறு சுதந்திரக் கொள்கைகளை அடக்கி ஆளப்பட்டவர்களுக்காக வகுத்துக் கொடுத்தார் அய்யா வைகுண்டர். அவரது இந்த உபதேசங்கள் 18 ஜாதியினரின் சிந்தையை தூண்டிவிட்டது. ஆதிக்க ஜாதியினரைப் பார்த்துக் குனிந்து குனிந்து பழக்கப்பட்டு, கூன் விழுந்த முதுகு ஆகிவிட்ட இளைஞர்கள் முதன் முறையாக நெஞ்சம் நிமிர்ந்தார்கள். 

 “கடைசி வரையிலும் நம் வாழ்க்கை இப்படித்தானா? நமது மகளும் இதே வேதனைகளை அனுபவிக்க வேண்டுமா?” என்று துடித்த பெண்கள் மனதில் தைரியம் பிறந்தது.

"குகையாளப் பிறந்தவனே...
எழுந்திரடா என் குழந்தாய்
அதிகமுள்ள நீசனும் தான்
மற்பிடித்து அடிக்கிறானே...
படையெடுக்க வா மகனே...
பாருலகம் சுட்டழிக்க
வரிசை பெற்ற நீ மகனே
மான மறுக்கம் பொறுக்கலையோ..." 

- என்று, வைகுண்டர் ஊட்டிய புரட்சிப்பால் பற்றி குறிப்பிடுகிறது, அகிலத்திரட்டு. 

(தொடரும்...)
Share:

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 9


9. வைகுண்டரின் தவமும் போதனையும்
- நெல்லை விவேகநந்தா -

சாமித்தோப்புக்குத் திரும்பிய வழியில் அய்யா வைகுண்டருக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைப் பெரும் மக்கள் கூட்டம் பின் தொடர்ந்தது. அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டு தானாகத் திரண்ட கூட்டம் அது.

நாடார் சமூகத்தில் அவதரித்த வைகுண்டர் பின்னால் ஒரு கூட்டமே திரண்டதை கண்ட ஆதிக்க ஜாதியினர் பொறாமையால் துடிதுடித்தனர். ‘ஒரு பைத்தியத்தின் பின்னால் பைத்தியக் கூட்டமே திரண்டு போகிறது...’ என்று ஏளனம் செய்தார்கள். இன்று மெக்காவில் சாத்தான் மீது கல் எறியும் இஸ்லாமியர், அன்று வைகுண்டர்மீது கல்லை எறிந்து அவமானப்படுத்தியதாகவும் தகவல் உண்டு.  

இப்படி, தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவோடும், ஆதிக்க ஜாதியினரின் அவமானங்களை எதிர் கொண்டும் சாமித்தோப்பு வந்து சேர்ந்தார் வைகுண்டர். அங்கே அவரை வரவேற்க முதல் ஆளாக வந்திருந்தார் பூவண்டர் என்ற யாதவர் (பசு மாடுகளைப் புனிதமாக கருதிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தினர், அவைகளை பராமரிப்பதற்கு என்று யாதவர் சமூகத்தினரை நியமித்து இருந்தனர். அந்தவகையில், சமஸ்தானத்தினர் அவர்கள் மீது மரியாதை வைத்திருந்தனர். பூவண்டர் போன்ற சிலர், சமஸ்தானத்தின் நிர்வாகப் பணிகளில் இருந்தனர்).

முத்துக்குட்டியாகச் சென்று, அய்யா வைகுண்டராக வந்தவரை பணிவோடு வரவேற்று, அவர் தங்குவதற்கு என்று தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பு ஒன்றையும் கொடுத்தார், பூவண்டர். அதை மகிழ்வோடு ஏற்ற வைகுண்டர், அந்தத் தென்னந்தோப்பில் ஒரு குடில் அமைத்து, சொந்த பந்தங்களை துறந்து தங்கினார். குறிப்பிட்ட நாளில் தவம் இருக்கவும் ஆரம்பித்தார். தவம் என்றால் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அல்ல. தொடர்ந்து 6 ஆண்டுகள்!

‘ஏன் இந்த திடீர் தவம்?’ என்று அவரிடமே கேட்டபோது, ‘இது எனது இறைத்தந்தை எனக்கு இட்டளை’ என்று கூறி, கேட்டவர்கள் வாயை அடைத்து விட்டார். மாமரத்தின் அடியில் தவத்தைத் துவங்கிய வைகுண்டர், முதலில் 3 அடி அகலமும், 6 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி, அதனுள் நின்று கொண்டு முதல் இரண்டு ஆண்டுகள் தவம் செய்தார். கலியுகத்தை அழித்து தர்மயுகத்தை தோற்றுவிப்பதற்கான ஆரம்பக்கட்ட முயற்சியாக அது அமைந்தது.

அடுத்த இரண்டு ஆண்டுகள் வீராசனம் இட்டு, தரையில் அமர்ந்து தவம் செய்தார். ஜாதி, மத வேறுபாடுகளைக் களையும் நோக்கில் இந்த இரண்டாம் வகை தவம் அமைந்தது.

தவம் மேற்கொண்ட இந்த காலக்கட்டத்தில், வைகுண்டரைத் தேடி பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வரத் தொடங்கினார்கள். அவர்களிடம் எதுவும் பேசாமல், செய்கைகள் மூலம் ஆசி வழங்கியவர், பசியைப் போக்கிக் கொள்ள வெறும் பால் மட்டுமே அருந்தி வந்தார்.

மூன்றாவது இரண்டு ஆண்டுகால தவத்தை, ஒரு கட்டிலில் கால் விரித்து அமர்ந்தபடி தொடங்கினார். ஒருவழியாக மூன்றாவது தவக்காலமும் நிறைவுற்று, வைகுண்டர் கூறியபடி 6 ஆண்டுகள் நிறைவடைந்தன.

தாழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் மகான் தோன்றியுள்ளார்; ஏன்... இறைமகனாக வந்துள்ளார்... என்பதை அறிந்த, 18 ஜாதியினரும் திரளாக சாமித்தோப்புக்கு வந்தனர். தன்னைத் தேடி வந்தவர்களை எல்லாம் ஒருசேர அமர வைத்து விருந்தளித்து மகிழ்ந்தார் வைகுண்டர். அவரிடம் சீடர்களாகவும் சிலர் சேர்ந்து, தாழ்த்தப்பட்ட சமுதாய முன்னேற்றத் தொண்டில் இறங்கினர்.

திருவிதாங்கூர் சமஸ்தானம் தாழ்த்தப்பட்டதாக அறிவித்த 18 ஜாதிகளிலும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. அதனால் அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதா? வேண்டாமா? என்று வெளியில் சொல்ல முடியாமல் தவித்தனர். அதனை உணர்ந்த வைகுண்டர், முதலில் 18 ஜாதியினர் இடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று கருதினார். ஒன்றாக அமர்ந்து விருந்து உண்ண மறுத்தவர்களை ஒருவழியாக சமாளித்து விருந்துண்ணச் செய்தார்.

18 ஜாதியினரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை கண்ட வைகுண்டருக்குள், நிச்சயம் அவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

அந்தக் காலத்தில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்ற விதிமுறை இருந்தது. அதனால், பராமரிப்பு இல்லாத ஏரியிலோ, குட்டையிலோ நீரெடுத்து குடித்தனர் அவர்கள். இதை போக்குவதற்காக பொதுக்கிணறு ஒன்றை ஏற்படுத்தினார் வைகுண்டர். ‘முத்திரி கிணறு’ என்று அதற்கு பெயரும் சூட்டினார் (அய்யா வழி தர்மபதிகளுக்கு - கோவில்களுக்குச் சென்றால் இந்த புனிதக் கிணற்றை நீங்களும் பார்க்கலாம். முத்திரி என்றால் உத்தரவாதம் தருதல் அல்லது நியமித்தல் என்று பொருள்). அந்தப் பொதுக்கிணற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒன்றாக தண்ணீர் எடுத்து மகிழ்ந்தனர்.

ஒருநாள் மாமரத்தின் அடியில் தியானத்தில் மூழ்கியிருந்த வைகுண்டர், தனது சீடர்களில் ஒருவரை அழைத்து, “நான் சொல்வதை அப்படியே எழுது” என்றார். அந்தச் சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும், எழுத்தாணியையும், எழுதப்படாத பனை ஓலைச்சுவடிகளையும் வேகவேகமாக எடுத்து வந்தார். வைகுண்டர் சொல்லச் சொல்ல ஒன்றுவிடாமல் எழுதினார்.

தனது மானிட பிறப்பு, தனக்கு திடீரென்று ஏற்பட்ட நோய், மகாவிஷ்ணுவை தரிசித்த அனுபவம், அவர் தனக்கு கூறிய உபதேச மொழிகள்... இவற்றோடு உலக நடப்புகளையும், எதிர்கால நிகழ்வுகளையும் கணித்துக் கூறினார். ஒருவித பாடல் வடிவில் அவரது உபதேசங்கள் அமைந்திருந்தன.

“திருச்சம்பதியில் புக்கித் தீர்த்தக் கரையில் செல்ல
திரைவந்து இழுத்ததையோ சிவனே அய்யா...
அலைவாய் கரையில் இருந்து தலைமேலே கையை வைத்து
அம்மை அழுததை என்ன சொல்வேன் சிவனே அய்யா...
கடலிலே போன மகன் இன்னும் வரக் காணோமென்று
கதறியழுதாள் அம்மை சிவனே அய்யா...
கடலும் முழுங்கிட துறவர் வணங்கியெனைக்
கூட்டியங்கே போனாரே சிவனே அய்யா...
பாற்கடலில் எங்கள் அய்யா நாராயணம்
பள்ளிகொள்ளும் இடம் சென்றேன் சிவனே அய்யா...
மெய்யை நிலை நிறுத்தி பொய்யை அடியழிக்க
விடை தந்து அனுப்பினாயே சிவனே அய்யா...
பேயன் போவதை அன்னா பாருங்கோவென்று சிலர்
பிதற்றியும் வைக்கின்றாரே சிவனே அய்யா...
அடுத்தாரைக் காப்பதற்காய் பூவண்டன் தோப்பதிலே
அமர்ந்து இருந்தனையோ சிவனே அய்யா...” 

- என்று, திருச்செந்தூர் கடலில் தான் அடித்துச் செல்லப்பட்டு, வைகுண்டம் சென்று திருமாலை சந்தித்து உபதேசம் பெற்று, வைகுண்டராகத் திரும்பி சாமித்தோப்பு வந்து தவம் மேற்கொண்டது வரை குறிப்பிட்ட வைகுண்டர், மேலும் சொல்லத் தொடங்கினார். அவரது சீடரும் எழுதிக் கொண்டே போனார்.

இந்தப் பாடல் வரிகள் அய்யா வழி அருள் நூலில் இடம் பெற்றுள்ளது. இதைச் “சாட்டு நீட்டோலை” என்று அய்யா வழி பக்தர்கள் அழைக்கிறார்கள். இந்தச் சாட்டு நீட்டோலை உபதேசத்திற்கு பிறகுதான், உருவ வழிபாட்டுக்கு எதிராகவும், முதலாளித்துவத்துக்கு எதிராகவும் சிலிர்த்தெழுந்தார் வைகுண்டர். 

(தொடரும்...)
Share:

சனி, 8 ஜனவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 8


8. முத்துக்குட்டி வைகுண்டரான கதை
 - நெல்லை விவேகநந்தா -

தேவேந்திரன் மணிமுடி மீது ஆசைப்பட்டு தான் பேசிய பேச்சை சிவபெருமானும், திருமாலும், ஏன்... அந்த தேவேந்திரனும் கேட்டு விட்டான் என்பதை அறிந்த சம்பூர்ணதேவன் அதிர்ந்தே போய் விட்டான். பரதேவதையும் அதே நிலைக்குத்தான் ஆளானாள். இருவரும் குற்றத்தை உணர்ந்து தலைகுனிந்து நின்றனர்.

அப்போது திருமாலே திருவாய் மலர்ந்தார்.

“சம்பூர்ணதேவா! கடுமையாகத் தவம் இருந்தும் கடைசியில் இப்படி பேராசைப்பட்டு விட்டாயே... இந்தப் பேராசையினால் உங்கள் இருவரது தவமும் வீண் போய்விட்டது. ஆனாலும், நீங்கள் இருவரும் பூலோகத்தில் பிறக்கப் போகிறீர்கள். அதே நேரம் சில நிபந்தனைகள் உங்களுக்கு இருக்கும்...” என்றவர், அடுத்ததாக பரதேவதை பக்கம் தனது பார்வையை திருப்பினார்.

“பரதேவதை... சம்பூர்ணதேவனுடன் நீ இணைந்ததன் மூலம், உன் எமலோக கணவனுக்கும், அவன் மூலம் பிறந்த இரு குழந்தைகளுக்கும் துரோகம் செய்து விட்டாய். அதற்கான தண்டனை உனக்கு நிச்சயம் உண்டு. நீ பூலோகத்தில் பிறக்கும் போது உனக்காகவே உன் எமலோக கணவன் காத்திருப்பான். அவனை மணம் புரிந்து, அவனுக்கு எல்லா பணிவிடைகளையும் செய்வாய். அப்படி இருந்தும், அவன் உன்னை கொடுமைப்படுத்துவான். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை தொலைக்கும் நீ, ஒருகட்டத்தில் கணவனையே இழந்து விடுவாய். குழந்தைகளுடன் தனிமரமாக நிற்பாய்... அப்போது பூலோகத்தில் கலியின் கோரத் தாண்டவம் அதிகமாக இருக்கும். மக்கள் தவியாய் தவிப்பார்கள். அந்த கலியில் இருந்து மக்களைக் காப்பதற்காகவே சம்பூர்ணதேவன் அங்கே பிறப்பான். இருவரும் சந்தித்துக் கொள்வீர்கள். நீ பெற்ற குழந்தைகளை விடுத்து சம்பூர்ணதேவனோடு இணைவாய். ஊரே உன்னை தூற்றும். ஆனாலும், கடைசியில் நீ தெய்வத்தாய் என்று போற்றப்படுவாய்...” என்று திருமால் சொல்லி முடித்த போது, சம்பூர்ணதேவன் சோகத்தில் இருந்து மீளாமலேயே இருந்தான். தொடர்ந்து, அவன் பக்கம் திரும்பினார் திருமால்.

“நீ இந்திரன் மணிமுடி மீது பேராசை கொண்டது மிகப்பெரிய பாவச் செயல். அதற்காக நீ மானிடப் பிறவி எடுத்துத்தான் ஆகவேண்டும். 22 வயது வரை சாதாரண மனிதனாக பூலோகத்தில் வாழும் நீ, இன்னொருவனின் மனைவியாக இருக்கும் இதே பரதேவதையை மோகிப்பாய்... மணப்பாய். அதன்பிறகு, தீராத நோய் பாதிப்புக்கு ஆளாகி மரணத்திற்காக போராடுவாய். அப்போது நான் உனக்குள் இறங்கி, உன்னை மீட்டு தர்மத்தை நிலைநாட்டுவேன். உன்னை மனிதர்கள், கடவுள் நிலைக்கு போற்றும் அளவுக்கான தகுதியையும் கொடுப்பேன்...” என்று, திருமால் சொன்ன பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டான் சம்பூர்ணதேவன்.

அதன்படி, சாமித்தோப்பில் பொன்னுமாடன் நாடார் மற்றும் வெயிலாள் அம்மையாருக்கு மகனாக, முத்துக்குட்டியாக பிறந்தார் சம்பூர்ணதேவன். பரதேவதையும் அதே பகுதியில் பிறப்பெடுத்தாள்.

இந்த முன்ஜென்ம உண்மைக் கதையை, வைகுண்டராக மாறிய முத்துக்குட்டி செந்தூர் கடற்கரையில் தனது பெற்றோரிடமும், உறவினர்களிடமும் சொன்ன போது, அதை அவர்களால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு 3 நாட்களாக காணாமல் போனவன், மீண்டும் உயிரோடு... கடல் நடுவே நடந்து வெளியே வந்தால்... நிச்சயம் அந்த முன்ஜென்மக் கதை உண்மைதான் என்று நம்பினர். அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டனர்.

அப்போதுதான் அவரது உறவினர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
“கடல் அலை இழுத்துச் சென்றது ஏன்? அதன்பிறகு என்ன நடந்தது?” என்று கேட்டார் அவர்.

அதற்கும் வைகுண்டரிடம் இருந்து சட்டென்று பதில் வந்தது.

“மகா விஷ்ணுவாகிய திருமாலின் ஆணைப்படி இரு அரூப (உருவமற்ற) முனிவர்கள் என்னைத் தங்களது தோள்களில் தாங்கிச் சுமந்து சென்றனர். அந்த காட்சி, நான் கடலில் தீர்த்தமாட எழுந்து செல்வதாக உங்களுக்கு தெரிந்தது. திடீரென்று காணாமல் போன போது கடல் அலைதான் இழுத்துச் சென்று விட்டது என்று கருதிவிட்டீர்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. நான் சென்றது, மகாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்திற்கு...  அங்கே எனது சரீரத்தை மகர அரங்கில் இருந்த ஒரு பெட்டகத்திற்குள் வைத்து குழந்தையாக்கினர். பின்னர், மும்மூர்த்திகளும் அதனுள் உறைந்து, ஒரே மூர்த்தியாக, ஓர் இளைஞனாக மாற்றினர். அந்த இளைஞனான என்னிடம், கலியுகம் பற்றிக் கூறி, அதை அழிப்பதற்கான வழியையும் தெரிவித்து, பரபிரம்மம் பற்றிய ஞானத்தையும் அருளினார் திருமால்.

மேலும், என்னைத் தனது மகன் என்று கூறிய திருமால், என்னை எப்போதும் பின் தொடர்வதாகவும் கூறினார். “வைகுண்டம் வந்த நீ, இனி வைகுண்டன் என்றே அழைக்கப்படுவாய். அய்யா என்றும் உன்னை இந்த உலகமே வழிபடும். பூலோகம் சென்று, கலியை வென்று வா...” என்று வழியனுப்பி வைத்தார். இப்போது, நான் உங்கள் மகன் மட்டுமின்றி, இந்த உலகில் உள்ள ஒவ்வொரு தாய்க்குமே மகன்தான்...” என்று, தனது பெற்றோரிடம் வைகுண்டர் சொல்லச் சொல்ல... அவர்கள் நடப்பது கனவா? அல்லது நனவா? என்று திகைத்துப் போயினர்.

எப்போது தர்மத்திற்கு சோதனை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்தப் பூமியில் அவதரிப்பேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. அந்தக் கிருஷ்ண பரமாத்மா, திருமால், மகாவிஷ்ணுதான் இப்போது அய்யா வைகுண்டராக அவதரித்து இருக்கிறார் என்பதை அறிந்த பொதுமக்கள் உற்சாகம் ஆனார்கள். அய்யா வைகுண்டரின் போதனைகளுக்காக ஏங்கினர். அவர்களிடம், கரைபுரண்டு ஓடும் புது வெள்ளம் போல்,  சுதந்திர விடியலுக்காகப் போராடும் போராளி போல் பேசத் தொடங்கினார். குறிப்பாக, ஆன்மிக வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசினார். அவர் கூறிய அனைத்தும் புதுமையாக இருந்தன.
  • கடவுள் என்ற பெயரில் பணத்தை அள்ளிக் கொடுக்காதீர்கள். அதுபோல், வாங்கவும் செய்யாதீர்கள்.

  • பூஜை என்கிற பெயரில் பணத்தை தண்ணீராகச் செலவு செய்யாதீர்கள். 

  • பூஜை என்று சொல்லி உயிர்ப்பலி கொடுக்க வேண்டாம்.

  • அன்பின் வடிவானவரே கடவுள். அவள், உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.

  • எல்லோரும் நியாயம் தவறாமல் நேர்மையாக வாழுங்கள். யாருக்கும் அஞ்சாதீர்கள்.
- இப்படி, புதுமையாக மக்கள் மத்தியில் முழங்கினார், அய்யா வைகுண்டர். அவரது உரை அடங்கிக் கிடந்த மக்களுக்கு புதுத்தெம்பைத் தந்தது. அவர்களுக்குள் புதிய எண்ணம் ஓடியது. தங்களின் அடிமை வாழ்வு மறைந்து மனிதனாக வாழப் போகிறோம் என்கிற புதிய நம்பிக்கை பிறந்தது. தொடர்ந்து, அவர் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நடக்கத் தொடங்கினார். சாமித்தோப்பு நோக்கிச் சென்ற அவரைக் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கை கூப்பி வணங்கியபடி நின்றிருந்தனர் அங்கிருந்த மக்கள்.

(தொடரும்...)
Share:

சனி, 25 டிசம்பர், 2010

அய்யா வைகுண்டர் வரலாறு - 7


7. சம்பூர்ணதேவன் கதை
 - நெல்லை விவேகநந்தா -
‘நான் வைகுண்டன்; கலி என்னும் நீசனை வெல்லவே வந்திருக்கிறேன்...’ என்று கூறிய முத்துக்குட்டி, தான் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட பிறகு நடந்தது என்ன? என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொன்னார். அப்போது, தனது முற்பிறவி பற்றியும் அவர் சொல்லத் தவறவில்லை. முத்துக்குட்டி, வைகுண்டர் ஆகிவிட்டதால், இனி நாம் அவரை அய்யா வைகுண்டர் என்றே அழைப்போம்.

அய்யா வைகுண்டரின் முற்பிறவி எப்படி அமைந்தது? அதன் தொடர்ச்சியாக, அய்யா வைகுண்டராக அவர் அவதாரம் எடுக்க என்ன காரணம்?

இதோ... சற்று விரிவாக...

உலகம் படைக்கப்பட்ட போது, தங்களை விட உயர்ந்தவர்கள் வேறு யாருமே கிடையாது என்ற ஆணவத்தில் மிதந்தனர் தேவர்கள். அவர்களது எண்ணத்தை மாற்ற விரும்பிய ஈசனான சிவபெருமான், குரோணி என்னும் அசுரனை உடனே படைத்தார் (உலகம் முழுவதும் எல்லோரும் நல்லவர்களாக இருந்துவிட்டால் வெற்றித் தோல்வி இருக்காது... சுவாரஸ்யம் இருக்காது... பூமியும் மந்தகதியில் ஸ்தம்பித்துப் போய்விடும்... நல்லவர்கள், திறமைசாலிகளின் பெருமைகளும் முடங்கிப் போய்விடும், அதாவது... கெட்டவர்களை அழித்தால்தானே நல்லவர்கள் பற்றியும் தெரியும் என்பதால்... இப்படி அசுரர்களை படைக்கிறார் இறைவன் என்பது புராண தகவல்).

ஈசனால் படைக்கப்பட்ட குரோணி, திருமால் உள்ளிட்ட தேவர் குலத்தையே அழித்து மூன்று உலகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றான். இதனால் கோபம் கொண்ட திருமால், குரோணியைக் கொன்று அவனை 6 துண்டுகளாக வெட்டினார். ஒவ்வொரு யுகத்திலும் தர்மத்தின் சிறப்பை எடுத்துரைக்க, குரோணியின் ஒவ்வொரு உடம்புத் துண்டைக் கொண்டு மிகக்கொடியவனை உருவாக்கினார்.

அதன்படி, சதிர்யுகம், நெடுயுகம், கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம்... ஆகிய 5 யுகங்களிலும் கொடிய அரக்கர்கள் பிறக்க வைக்கப்பட்டனர். ஆறாவது உடல் பாகத்தை தர்ம யுகத்திற்கு முந்தைய யுகமான கலியுகத்தில் கலியனாக - உடலற்று பிறக்கச் செய்தார் (இப்போது நடப்பது கலியுகம்தான்). அந்த கலியன் என்னென்ன கொடூர செயல்களில் ஈடுபடுகிறான் என்பதை கண்காணிக்க தேவர் உலகத்தில் வாழ்ந்த சம்பூர்ணதேவன் என்பவரை பூலோகம் செல்ல உத்தரவிட்டார் திருமால்.
இந்த சம்பூர்ணதேவன் பூலோகம் சென்றாரா? இல்லையா? என்பதைப் பார்க்கும் முன், கலியன் பற்றி சிறிது பார்த்து விடுவோம்.

உடலற்றுப் பிறந்த கலியன்தான் மாயை. இவன், கலியுகத்தில் பிறந்த மனிதர்களது மனங்களில் புகுந்து எல்லோரையும் கலியர்களாக்கி விட்டான். இதன் காரணமாக, மனிதனின் பேராசை வளர்ந்து கொண்டே போனது. இரக்கம், மனிதாபிமானம், அன்பு... போன்ற பெருந்தன்மைகளுக்கு எல்லாம் அவனிடம் இடம் இல்லாமல் போனது. அடுத்தவன் சொத்தை அபகரிக்க ஆசைப்பட்டவன், அவனது மனைவியையும் அனுபவிக்க ஆசைப்பட்டான். தான் மட்டும் நன்றாக வாழ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டான். ஆசை ஆசையாய் வளர்த்த மகள், தனக்கு பிடித்த ஒருவனுடன் காதல் வயப்பட்டால் அவளைக் கவுரவத்திற்காக கொலை செய்யவும் ஆரம்பித்தான். 

இப்படி, மாயை ஆகிய கலியனின் அட்டகாசங்கள் தொடர்ந்தன. மனிதன் ஒட்டு மொத்தமாக மாறிப் போய்விட்டான்.

சரி... இனி, சம்பூர்ணதேவன் கதைக்கு வருவோம்...

கலியனின் நடவடிக்கைகளை கண்காணிக்க சம்பூர்ணதேவனை பூலோகம் செல்லத் திருமால் ஆணையிட்டார் இல்லையா? அவனுக்கும், எமலோகத்தில் வாழ்ந்த பரதேவதை ஒருத்திக்கும் காதல் இருந்து வந்தது. ஏற்கனவே அந்தப் பரதேவதை, அதே எமலோக வீரன் ஒருவனை மணந்து இரு குழந்தைக்குத் தாயும் ஆனவள். அப்படிப்பட்டவள், வீரமும், அழகும் கொண்ட சம்பூர்ணதேவன் மீது காதல் கொண்டாள். அவள் மீது சம்பூர்ணதேவனும் மோகம் கொண்டான். சம்பூர்ணதேவனின் இந்த செய்கை தேவர் குலத்தினருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவளுடன் இணைந்தான்.

இப்படி, எமலோகப் பெண் ஒருத்தியுடன் உறவு கொண்டிருந்த சம்பூர்ணதேவனை பூலோகம் செல்லுமாறு திருமால் ஆணையிட்டதால் அவன் சற்று யோசித்தான்.

“என்ன யோசிக்கிறாய் சம்பூர்ணதேவா? உனக்குப் பூலோகம் செல்வதில் விருப்பம் இல்லையா?” என்று திருமால் கேட்டார்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை தேவா. நான் ஆசைப்பட்ட பெண்ணும் என்னுடன் பூலோகம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்...”

“யார் அந்த பெண்?”

“அவள் எமலோகத்தைச் சேர்ந்த பரதேவதை. அவளைத்தான் நான் விரும்புகிறேன். அவளும் என்னை நேசிக்கிறாள்...”

“ஏன் இப்படியெல்லாம் உன் மனம் அலைபாய்கிறது? தேவர்குலத்தில் சர்வலட்சணங்களோடு பிறந்த நீ எங்கே? எமலோகத்தில் பிறந்த அந்த பரதேவதை எங்கே? உங்களுக்கு அப்படியென்ன பொருத்தம் இருக்கிறது?”
“தேவா! நீங்கள் சொல்வதன் நியாயம் எனக்கு நன்றாகப் புரிகிறது. ஆனாலும், நான் எந்த ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் அவள்பால் இணைந்து விட்டேன். அவளைப் பிரிந்திருக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால்தான், அவளும் என்னுடன் வரவேண்டும் என்று கேட்கிறேன். அவளை பூலோகத்தில் என் மனைவியாகவே பிறக்க தாங்கள் அருள் புரிய வேண்டும். எந்தவிதத்திலும் எங்களை சபித்து விடாதீர்கள்...” என்று சொன்ன சம்பூர்ணதேவன், சட்டென்று திருமாலின் காலில் விழுந்து விட்டான்.

திருமாலுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சம்பூர்ணதேவன் பரதேவதைக்காக கண்ணீரும் விட்டுவிட்டதால் மனம் உருகினார்.

“சரி... உன் விருப்பப்படியே செய்கிறேன். ஆனால் ஒன்று... நீயும், அவளும் கடும் தவம் செய்ய வேண்டும். உங்கள் தவம் முடியும் போது நான் அங்கே தோன்றுவேன். உங்கள் தகுதிக்கு ஏற்ப வரங்களை அருளுவேன். இப்போதைக்கு அதை மட்டும்தான் நான் சொல்ல முடியும்...” என்று அருளிவிட்டு மறைந்தார் திருமால்.

மனம் தெளிந்த சம்பூர்ணதேவன், பரதேவதையுடன் கடும் தவம் புரிந்தான். அவர்களது தவக்காலம் முடியும்போது அங்கே சிவபெருமானும், திருமாலும் வந்தனர். அவர்களை வரவேற்பதற்காக, ஏற்கனவே அங்கே வந்திருந்தார் தேவேந்திரன்.

இதையறிந்த சம்பூர்ணதேவனின் மனம் மாறியது. பரதேவதை தன்னுடன் பூலோகத்தில் பிறக்க வேண்டும்... அவளுடன் வாழ வேண்டும்... என்று வரம் கேட்பதற்காக தவம் இருக்க ஆரம்பித்தவன், தேவேந்திரனின் பதவி மீது ஆசை கொண்டான். 

‘இந்திரனின் மணிமுடி தரித்து தேவலோகத்தை ஆட்சி செய்தால் எப்படி இருக்கும்...?’ என்ற கற்பனையிலும் மிதக்க ஆரம்பித்தான். தன்னுடன் தவம் இருந்த பரதேவதையிடம் அதுபற்றி கூறி, அதையே திருமாலிடம் வரமாக கேட்க உள்ளதாகக் கூறினான்.

அதைக்கேட்ட பரதேவதை அதிர்ந்தாள். அத்துடன், அவர்கள் இருவரும் பேசிய பேச்சு, அங்கே வந்த சிவபெருமான் மற்றும் திருமால் காதிலும் விழுந்து விட்டது. அதை சம்பூர்ணதேவனும், பரதேவதையும் கவனித்து விட்டனர்.

(தொடரும்...)
Share: