புத்தக விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 மே, 2012

பேரழகி கிளியோபாட்ரா - புத்தக மதிப்புரை



நெல்லை விவேகநந்தா எழுதி வெளியான பேரழகி கிளியோபாட்ரா - வரலாற்று நாவலின் புத்தக விமர்சனம்  தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது. அந்த விமர்சனக் கட்டுரை உங்கள் பார்வைக்கு...

பேரழகி கிளியோபாட்ரா வரலாற்று நாயகி. அறிவும், கூர்த்த மதியும் பெற்ற அவரை அதிநுட்பமாக ஆய்வு செய்து  இந்த நூலை படைத்திருக்கிறார் ஆசிரியர். எகிப்தின் அரியணையில் பேரரசியாக அவர் தொடர அவர் மேற்கொண்ட  உத்திகளையும் படைத்திருக்கிறார்.

கிறிஸ்துவுக்கு முன்பும், அதற்குப் பின்பும் எத்தனையோ பேர் கிளியோபாட்ரா என்ற பெயரில் இருந்தபோதும், இவரு க்கு மட்டும் ஏன் இன்னமும் இத்தனை பெயர், அப்படி என்ன ஈர்ப்பு என்பதை படைத்த ஆசிரியர் செயல் பார £ட்டிற்குரியது.

அத்திப் பழக்கூடையில் மறைத்து வைத்த நச்சுப்பாம்பை கடிக்க விட்டு பரிதாப முடிவைச் சந்தித்த கிளியோபாட்ரா  கனவுகளை, காதல் காவியமாக இதில் வாசகர்கள் காணலாம்.

நன்றி: தினமலர் 6.5.2012
 
நூல் கிடைக்கும் இடம் : 

கங்கை வெளியீடு (வானதி பதிப்பகம்)
23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை -17.
போன் : 044 2432810
நூலின் மொத்த பக்கங்கள் : 328.
Share:

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் பாராட்டு!




நெல்லை விவேகநந்தா எழுதியுள்ள, இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ள இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர் - விறுவிறுப்பான நடையில் வீரத் துறவியின் விரிவான வரலாறு என்கிற நூலுக்கு ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆன்மிக - பண்பாட்டு மாத இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர் வழங்கியுள்ள அணிந்துரை இங்கே உங்கள் பார்வைக்கு...


சுவாமி விவேகானந்தரின் வரலாற்றை மற்றும் சொற்பொழிவைப் படிக்கும்போது அவருடன் வாழ்கின்ற அனுபவமே கிடைக்கும்.


சுவாமிஜி ஓர் அறிவுக்கடல்; அருட்புனல்; சிறந்த சிந்தனைவாதி; செயல்திறன் மிக்கவர்; சிறந்த ஆசிரியர்; மிகச்சிறந்த யோகி.


பாரத நாட்டின் மீதும், அதன் பாமர மக்கள் மீதும் பேரன்பு கொண்டவர். என்று பிறந்தது என்று கூற இயலாத இந்து மதத்தினை உலகெங்கும் எடுத்துச் சென்றவர்.


இந்திய நாட்டுப் பெண்களின் முன்னேற்றம், பாமரனுக்கும் கல்வியறிவு என்ற குறிக்கோள்களை உருவாக்கி, செயல் படுத்திக் காட்டியவர். அவரது பன்முகத் திறன்களைப் பற்றித் தனித்தனியாகப் புத்தகங்கள் எழுதிக் கொண்டே போகலாம். எழுதப்பட்டும் வருகின்றன.


இந்நூலாசிரியர் நெல்லை விவேகநந்தா அவர்கள், சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தொகுத்து, 'இந்து மதத்தின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்' என்ற தலைப்பில் விறுவிறுப்பான ஒரு தொடர் நாவலைப் போல சுவாமிஜியின் வாழ்க்கையை எழுதி இருக்கிறார்.


சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் உலக மெங்கும் கொண்டாடப்பெறும் இவ்வருடம் இந்நூலை வெளியிடுவது தனிச்சிறப்பு பெறுகிறது.


சுவாமிஜியின் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்களை 240 பக்கங்களுக்குள் சுருக்கமாக அந்தந்த தலைப்புகளில் அடக்கியிருப்பது பாராட்டுக்குரியது.


வரலாற்றுப் புகழ்பெற்ற சுவாமிஜியின் சிகாகோ சொற்பொழிவு, 'அமெரிக்க சகோதரிகளே... சகோதரர்களே...' என்று தொடங்கப்பட்டபோது, 'அடுத்த நொடியே பலர் எழுந்து நின்று கைதட்டினர். அந்தப் பலத்த ஓசையில் அந்த அரங்கமே அதிர்ந்தது' (பக்கம் 129) என்று ஆசிரியர் நெகிழ்ந்து குறிப்பிடுகிறார்.


இதைப் பற்றி சகோதரி நிவேதிதை எழுதும்போது, 'சுவாமிஜி இந்துக்களின் மதக் கோட்பாடுகளைப் பற்றி பேச ஆரம்பித்தார். அவர் முடித்தபோது இந்து மதம் உருவாக்கப் பட்டிருந்தது' என்று குறிப்பிடுவதை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.


இந்த நூலின் 12-வது அத்தியாயத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் கட்டளைப்படி தட்சிணேஸ்வரம் காளி தேவியிடம் தனது குடும்ப வறுமைக்காக சுவாமி விவேகானந்தர் பிரார்த்தனை செய்ய போனதும், தேவியைப் பார்த்தும் எதுவும் கேட்கத் தோன்றாமல், மூன்று முறை திரும்பி வந்ததும் இந்நூலில் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.


சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் இது ஓர் உணர்ச்சிகரமான கட்டம். சுவாமிஜி, முதன் முதலாக தன் கண்ணெதிரே காளிதேவியே எழுந்தருளிப் புன்னகை புரிந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவரது கொள்கை அடியோடு மாறியது. பின்னாளில், உலகம் முழுவதும் அத்வைதக் கொள்கையை சுவாமி போதித்து வந்தாலும், உருவக் கடவுளின் தேவைப் பற்றியும் உறுதிபட அவர் எடுத்துரைத்தார்.


அதேபோல, 'சென்னையில் சுவாமிஜி' என்ற தலைப்பில் (அத்:20) சுவாமிஜியின் முதல் சென்னை விஜயம் (1893) பற்றிய செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.


சுவாமிஜியை சிகாகோ சர்வ சமய மாநாட்டில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவிற்கு அனுப்ப சென்னை இளைஞர்கள் பட்ட பாடும், போய் வந்த பின்பு சுவாமிஜியின் வெற்றிச் செய்தியையும், செயல் திட்டங்களையும் மக்களிடையே எடுத்துச் சென்றதில் சென்னை இளைஞர்கள் ஆற்றிய பங்கும் அளவிற்கரியது.


இதுபோன்ற எண்ணற்ற சுவையான நிகழ்ச்சி களையும், சுவாமிஜியுடன் தொடர்புடைய மனிதர்களையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை இந்நூல் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.


இந்த நூலை வாசிக்கும் அனைவருக்கும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருள் பெருகட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.



இறைவன் தொண்டில்
(சுவாமி விமூர்த்தானந்தர்)

ஆசிரியர்

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

ஆன்மிக - பண்பாட்டு மாத இதழ்

ஸ்ரீராமகிருஷ்ண மடம்,


மயிலாப்பூர், சென்னை -- 600 004
Share:

செவ்வாய், 22 நவம்பர், 2011

நெல்லை விவேகநந்தா நூலுக்கு நடிகர்-நடிகையர் பாராட்டு!


நெல்லை விவேகநந்தா எழுதியுள்ள 'பேரழகி கிளியோபாட்ரா - உலகம் போற்றும் காதல் காவியம்' வரலாற்று நாவல் இன்னும் ஒருசில தினங்களில் வெளியிடப்பட உள்ளது. பாரம்பரியம் கொண்ட - கவிஞர் கண்ணதாசனுக்கு புகழ் பல பெற்றுத் தந்த வானதி பதிப்பகமே இந்நூலை வழக்கம்போல் அழகுற வெளியிடுகிறது.


இந்த நூலுக்கு நடிகர் கம் டைரக்டர் ரா.பார்த்திபன் வழங்கியுள்ள பாராட்டுரை...


அகப்படாததெல்லாம் அற்புதங்களே! அப்படியே அகப்பட்டா லும் அதை அதுவாய் பார்ப்பதில்லை நாம்! அதில் கொஞ்சம் மசாலா தூவி, உப்பிட்டு வேறொன்றுடன் ஒப்பிட்டே மகிழ்கிறோம்.


பெண்ணை பெண்ணாக மதிப்பதில் ஏதோ உள்குத்து நம் அனைவரிடமும் உள்ளது. ‘கிளி மாதிரி இருக்கா... கிளியோபாட்ரா மாதிரி இருக்கா’ன்னு உவமை/உதாரணம் சொல்வோம்.


எந்தக் கிளியையாவது ஒரு பொண்ணு மாதிரி அழகாயிருக்கு அதுன்னு ‘சைட்’ அடிச்சிருக்கோமா? அலகால இல்லாம, தன் அழகால நம்மை கொத்திகிட்டு போறப் பொண்ணை கிளின்னு விளிக்கலாம். சரி, அது யாரு கிளியோபாட்ரா?


கருப்பா? சிவப்பா? தொடும்வரை அழகா? உயிர் விடும்வரை அழகா? விட்டுப் பிரிந்து இத்துனை 365-களுக்குப் பிறகும் அழகுக்கு கிளியோபாட்ரா மட்டும் ஏன் உதாரணப் புருஷியாக விளங்குகிறாள்? என்ற என்னுடைய ஈர்ப்புடைய சந்தேகம் அனைத்திற்கும் ஏற்புடைய விளக்கமாகவும், விரும்பும்படியாகவும், எளிமையாகவும் இருக்கிறது நண்பர் நெல்லை விவேகநந்தா செதுக்கியுள்ள ‘கிளியோபாட்ரா’.


கல்லை செதுக்குபவரை சிற்பி என்போம்.    நெல்லை விவேகநந்தா ஒரு சிலையையே இன்னும் நேர்/சீர்/கூர் படுத்தி கலைநயத்தோடு செதுக்கியிருக்கிறார்.

வாழ்த்துக்கள்

+ ப்ரியமுடன்

ரா.பார்த்திபன்

இதேபோல், இதே நூலுக்கு நடிகை பூர்ணா தந்துள்ள வாழ்த்துரை...


வணக்கம். கிளியோபாட்ராவின் வரலாறு கூறும் இந்த நூலைப் பற்றி அறிவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.


உலகின் நிரந்தர அழகியான கிளியோபாட்ராவைப் பற்றிய இந்தப் புத்தகம் பல்வேறு விவரங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இன்றுவரை கிளியோபாட்ராதான் பேரழகி என்று வர்ணிக்கப்படுகிறாள். அவள் எவ்வளவு திறமையானவளாக, அறிவு நிறைந்தவளாக இருந்தாள் என்பது இந்தப் புத்தகத்தில் இருந்து தெரிய வருகிறது.


அழகு மட்டுமல்ல, அவளது மற்ற திறமைகளும் சேர்ந்துதான் உலகம் அவளைப் போற்ற காரணமாக இருந்தது என்று தெரிகிறது. மேலும், பண்டைய ரோமானிய, எகிப்திய அரசுகள் பற்றியும், ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி ஆகியோர் பற்றியும் மிகவும் விவரமாக தெரிந்து கொள்ள முடிகிறது.


புத்தகத்தின் ஆசிரியர் திரு.நெல்லை விவேகநந்தா அவர்கள், இதற்காக பெரும் முயற்சி எடுத்து, ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிறது. அவருக்கு என் பாராட்டுக்கள்!


தமிழின் சிறந்த நூல்களுள் ஒன்றாக சாதனை படைக்க எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்!


நடிகை பூர்ணா
Share:

ஞாயிறு, 13 நவம்பர், 2011

புத்தக வடிவில் கிளியோபாட்ரா வரலாற்று நாவல்!



பேரழகி கிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அவளைப் பற்றிக் கேட்டால், அவள் மிகவும் பேரழகி, கழுதைப்பாலில் குளித்து, தனது அழகை தக்க வைத்து வந்தாள் என்று சொல்வார்கள். இன்னும் கொஞ்சம் தெரிந்தவர்கள், அவள் எகிப்தை ஆண்ட பேரரசி. ரோமானிய மாவீரர்களான ஜூலியஸ் சீஸர், ஆண்டனி ஆகியோர் அவள் மடியில் மயங்கிக் கிடந்தார்கள் என்பார்கள்.


கிளியோபாட்ராவின் வரலாறு பெருங்கடல் என்றால், அதில் இந்த தகவல்கள் மிக மிக சொற்பமே. அவள் யாருக்கு பிறந்தாள், எப்படி ஆட்சிக்கு வந்தாள், ஏன் தம்பிகளை திருமணம் செய்து கொண்டாள், சீஸர் உடனான அவளது காதல் எப்படி போனது, சீஸருக்குப் பிறகு ஏன் ஆண்டனியை காதலித்தாள், ஆண்டனியை காதலிக்கப் போய் ரோமானிய சரித்திரம் எப்படி மாறியது, தற்கொலை முடிவை தேர்வு செய்யும் அளவுக்கு அவளுக்கு என்ன நேர்ந்தது... இப்படி யாரும் அறியாத வரலாற்றுப் பக்கங்களைக் கொண்டது கிளியோபாட்ரா வாழ்க்கை வரலாறு.


அவளது அந்த வரலாறு ஏ டூ இசட் வரையில் இப்போது புத்தக வடிவில் வந்து விட்டது. நெல்லை விவேகநந்தா எழுதிய "பேரழகி கிளியோபாட்ரா - உலகம் போற்றும் காதல் காவியம்" என்ற வரலாற்று நாவலில் நீங்கள் கிளியோபாட்ரா பற்றி தெரியாத ஏராளமான தகவல்கள் உள்ளன. நாவல் வடிவில், மிக மிக எளிய நடையில் உலகத் தரத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நாவலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிகர்-டைரக்டர் ரா.பார்த்திபன், சின்ன அசின் என்று சினிமா உலகில் அழைக்கப்படும் நடிகை பூர்ணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி இருக்கிறார்கள்.


இன்னும் சில தினங்களில் புத்தகம் வெளியாக இருக்கிறது. புத்தகத்தை, வழக்கம்போல் பதிப்புலகில் புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள்.


324 பக்கங்களில் வெளியாகும் இந்த நூலுக்கு உங்களது ஆதரவு வழக்கம் போல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


இந்த புத்தகம் எங்கெல்லாம் கிடைக்கும், என்ன விலை என்பன போன்ற விவரங்களுடன் விரைவில் சந்திக்கிறேன். நாளை... எனது நூலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிகர் - டைரக்டர் ரா.பார்த்திபன், நடிகை பூர்ணா எழுதிய வாழ்த்துரைகளை பார்க்கலாம்.


புத்தகம் பற்றிய ஆர்டர் மற்றும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க...

வானதி பதிப்பகம்

23, தீனதயாளு தெரு,

தி.நகர், சென்னை-17

போன் : 044 - 24342810, 24310769





நட்புடன்

நெல்லை விவேகநந்தா
Share:

வியாழன், 8 செப்டம்பர், 2011

நெல்லை விவேகநந்தா நூலுக்கு தினமலர் பாராட்டு!



நெல்லை விவேகநந்தா எழுதிய 'அய்யா வைகுண்டர் -வரலாறும் அற்புதங்களும்' (வெளியீடு : வானதி பதிப்பகம், சென்னை) நூலுக்கு தினமலர் நாளிதழ் வழங்கிய மேலான மதிப்புரை இங்கே உங்கள் பார்வைக்கும்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு திருமாலின் அருள்பெற்று, வைகுண்டர் என்ற பெயருடன் 42 ஆண்டுகள் வாழ்ந்த இறைமகனாரின் மகிமைகளை மிகவும் இனிமையாக இந்த நூல் விவரிக்கிறது.

ஆன்மிகத்தின் முடிந்த நிலையாக எதிர்கால முக்தியை வேண்டுவோர் பலர். ஆனால், நிகழ்கால கொடுமையாக நம்பூதிரி, நாயர், தம்புரான், ஐயர், பிள்ளைமார் ஆகிய ஆதிக்க உயர் ஜாதியினரின் அடிமையாக வாழ்ந்த பரவர், மூக்குவர், புலையர் உள்ளிட்ட 18 ஜாதியினரையும் மீட்டு, அவர்கள் வாழ்வில் புது ஒளி பாய்ச்சியவர் அய்யா வைகுண்டர். தன் தெய்வ சக்தியால் பற்பல அதிசயங்கள் செய்தவர்.

தென்னை, பலா, வாழை, ரப்பர் மரங்களால் அழகுபெற்ற இன்றைய கேரளாதான் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானம். இதன் ஒரு பகுதியாக விளங்கியது நாஞ்சில் நாடு. இன்றைய நாகர்கோவில் அருகில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிக்க ஜாதிகளில் அடிமைகளாக இருந்த 18 ஜாதியினர் உரிமை இழந்து வாடினர். பெண்களுக்கு கல்வி கூடாது, மார்பில் துணி கூடாது, குடங்களை இடுப்பில் தூக்கக்கூடாது என்று நிபந்தனைகள் விதித்து அவமானப்படுத்தினர்.

இந்த கொடுமைகள் தாங்காத சிலரை கிறிஸ்தவர்கள் மதம் மாற்றிக்கொண்டனர்.

சாமித்தோப்பில், 1809-ல் முத்துக்குட்டி என்ற பெயரில் தோன்றி, 20 வயதில் நோய்வாய்ப்பட்டு, பிறகு திருச்செந்தூர் கடலில் மறைந்து, மூன்றாம் நாள் வைகுண்டராக அவதாரம் எடுத்து வந்து, தனது அதி அற்புதங்களால் உருவம் அற்ற வழிபாட்டு முறையை உருவாக்கி, ஜாதிகளை கடந்த தெய்வ நிலையை மக்களுக்கு காட்டியதை இந்நூல் அற்புதமாக பேசுகிறது.

- முனைவர் மா.கி.ரமணன்.

நன்றி : தினமலர் 28.8.2011

Share:

சனி, 3 செப்டம்பர், 2011

அய்யா வைகுண்டர் நூலுக்கு தமிழக அரசின் இதழ் பாராட்டு!

நெல்லை விவேகநந்தா எழுதிய 'அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்' என்ற நூலுக்கு, தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் திருக்கோவில் மாத ஆன்மீக இதழ் பாராட்டு தெரிவித்து, சிறப்பு நூல் மதிப்புரை வழங்கியுள்ளது. டாக்டர் என்.ஸ்ரீதரன் நூலை ஆராய்ந்து மதிப்பீடு செய்துள்ளார். 

அவர், தமிழக அரசின் திருக்கோவில் மாத இதழில் கூறியிருப்பதாவது:

'அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்', நெல்லை விவேகநந்தா, வானதி பதிப்பகம், தீன தயாளு தெரு, சென்னை-600 017, பக்கங்கள் : 232, விலை : ரூ.100.

'அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்' நூலின் ஆசிரியர் நெல்லை விவேகநந்தா எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளருமாவார்.


சுவாமி விவேகானந்தரைப் போலவே நாஞ்சில் நாட்டில் அய்யா வைகுண்டர் ஆன்மிகத்தையும், சமூக நீதியையும் இணைத்துப் பெரியதோர் இயக்கத்தை நிலை நாட்டியமை நூலாசிரியரைக் கவர்ந்த, அவரை இந்நூல் எழுதத் தூண்டியிருக்கிறது. எனவே, இந்நூலை சமூக வரலாற்றுப் பெட்டகம் என ஐயமின்றி கூறலாம்.


அய்யா வைகுண்டர் நாஞ்சில் நாட்டில் 1809-ல் உதித்த ஞான சூரியன். சம காலச் சமூக அவலங்களை பொசுக்க வந்த சீர்திருத்தப் பகலோன். தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து, முதலில் முத்துக்குட்டி என்று பெயர் வைக்கப்பெற்று, பிறகு அய்யா வைகுண்டர் என்னும் திருப்பெயர் பெற்ற ஓர் இளைஞர், தலைமுறைகளாக வேரூன்றிவிட்ட சமூகக் கெடுமைகளை வேரறுத்த விதத்தையும், வலுவான ஓர் ஆன்மிக வழிமுறையை நிலை நாட்டியதையும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இந்நூல் வர்ணிக்கிறது.


தமது அவதார நோக்கம் பூர்த்தியானதும் 2.6.1851 அன்று அவர் வைகுண்டம் ஏகினார். தம்முடைய வரலாற்றையும், கொள்கைகளையும் கனவின் மூலம் தமது சீடரான அரிகோபாலனுக்கு தெரிவித்தார். அவற்றின் தொகுப்பே அகிலத்திரட்டு என்னும் நூல். இதுவே அய்யா வழியைப் பின்பற்றுபவர்களின் வேத நூல்.


அய்யா வைகுண்டர் இந்நூலாசிரியரின் முதல் படைப்பு எனினம் தெளிவாகத் திட்டமிட்டுக் கட்டுக் கோப்பான முறையில் எழுதியுள்ளார். அய்யா வைகுண்டர் காலச் சமூகப் பின்னணி, அவரது வரலாறு, அவர் நடத்திய போராட்டங்கள், சாதனைகள், அவரது இயக்கத்தின் வளர்ச்சி, கோட்பாடுகள், வழிபாட்டு முறைகள், மறைவிற்குப் பின் நிகழ்த்திய அதிசயங்கள் என்று ஓர் ஓழுங்குமுறையை அமைத்துக் கொண்டு எழுதியுள்ள நூலாசிரியர் பாராட்டிற்குரியவர்.

ஏராளமான பொருத்தமான படங்களை சேர்த்துக் கலை உணர்வுடன் அச்சிடப்பட்டுள்ள இந்நூல் வானதி பதிப்பகத்திற்குப் புகழ் தேடி தரும் நூல் மட்டுமன்று, அய்யா வைகுண்டரின் ஆசிகளையும் பெற்றுத்தரும் நூலாகும்.


நன்றி : திருக்கோவில், ஆகஸ்ட் 2011

Share: