கோவில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கெட்டிமேளம் கொட்ட வைக்கும் நித்ய கல்யாண பெருமாள்





அந்த கோவிலுக்குள் நுழைந்தபோது, இன்று முகூர்த்த நாளா என்று சந்தேகம் வந்துவிட்டது. காரணம், மாலையும், கழுத்துமாக ஏராளமான புதுமண ஜோடியினர் கோவிலை வலம் வந்து கொண்டிருந்தது தான். ஆனால், அன்று முகூர்த்த நாள் இல்லை.


வேறு ஏன் இவர்கள் இப்படி வலம் வருகிறார்கள்? என்று யோசித்தபடியே பார்வை இன்னொரு பக்கம் திருப்பியபோது, அங்கே தனியாக ஆண்களும், பெண்களும் கழுத்தில் மாலையுடன் பயபக்தியாக கூப்பிய கரங்களுடன் வலம் வந்து கொண்டிருந்தனர்.


ஏன் இப்படி மாலையும், கழுத்துமாக கோவிலை வலம் வருகிறார்கள் என்று அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் கேட்டோம்.


"இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் சட்டென்று திருமணம் முடிந்து விடும். அவ்வாறு திருமணம் முடிந்த தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்திக் கொள்வார்கள். அவர்கள் தான் இங்கே ஜோடிகளாக வலம் வருவது. தனியாக வருபவர்கள், திருமணம் உடனே நடைபெற வேண்டி பிரார்த்தனை செய்பவர்கள்" என்று விளக்கம் கொடுத்தார் அவர்.


இத்தகைய சிறப்புமிக்க கோவில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் திருவிடந்தை என்ற இடத்தில் அமைந்துள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலாகும்.



வேண்டுதல் : திருமணம் ஆகாத ஆண், பெண்கள் இந்த கோவிலுக்கு தங்களது பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் வர வேண்டும். ஒரு பூ மாலையை வாங்கிக்கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுக்க வேண்டும். சுவாமிக்கு அர்ச்சனை செய்து முடித்ததும் அந்த மாலையை கொடுப்பார்கள். அதை கழுத்தில் போட்டுக்கொண்டு, கோவிலை 9 முறை வலம் வர வேண்டும். வலம் வந்து முடித்ததும், கோவில் கொடிக்கம்பம் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.


பிறகு, அந்த மாலையுடன் நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும். வீட்டு பூஜை அறையில் அந்த மாலையை வைத்துவிட வேண்டும். திருமணம் முடிந்ததும், தம்பதியராக வந்து அந்த மாலையை கோவிலில் சேர்த்துவிட வேண்டும் (இதற்கென்று கோவில் பின்புறம் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தில் மாலையை கட்டி வைத்து விடுகிறார்கள்).


இந்த எளிய பரிகாரத்தை செய்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பவர்கள் ஏராளம்.


தல வரலாறு : முன்னொரு காலத்தில், 360 மகள்களுடன் வாழ்ந்து வந்த காலவ ரிஷியின் வேண்டுதலை ஏற்று, பிரம்மச்சாரியாக வந்து, தினமும் ஒரு பெண்ணாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு, கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடப்பாகத்தில் வைத்துக் கொண்டு காட்சி தந்தார் பெருமாள். அதனாலேயே இங்குள்ள பெருமாள் 'நித்ய கல்யாண பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார் என்கிறது இக்கோவில் தலபுராணம்.


அதனாலேயே திருமணத்தடை போக்கும் தலமாக இந்த கோவில் திகழ்கிறது. தினமும் மாலையும், கழுத்துமாக தம்பதியர் வலம் வருவதையும் காண முடிகிறது.


இங்குள்ள வராக தீர்த்தத்தில் மாசி மாதம் நீராடி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்றும், கல்யாண தீர்த்தத்தில் சித்திரை மாதம் நீராடி பெருமாளை வணங்கினால் பாவங்கள் அகலும் என்றும் கூறுகிறார்கள். தம்பதி சமேதராக ஆதிசேஷன், பெருமாளின் திருவடியை தாங்கும் திருக்கோலத்தில் இங்கு காட்சித் தருவதால் இத்தலத்தில் வழிபடுவோருக்கு ராகு, கேது தோஷங்களும் நீங்குகின்றன.


உற்சவர் நித்ய கல்யாண பெருமாளுக்கும், கோமளவல்லி தாயாருக்கும் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்துள்ளதால், இவர்களை மனம் உருகி வேண்டும்போது திருஷ்டிகளும் நீங்குகின்றன.


நடை திறப்பு :  காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.


திருவிழா :  ஆனி கருட சேவை, ஆடிப்பூரம், கஜேந்திரமோட்ச கருடசேவை, நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை தீபம், தனுர் மாத பூஜை, மாசி மகம், சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி வசந்த உற்சவம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.


அமைவிடம் : சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில் கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல சென்னை, மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

உங்கள் இல்லத்திலும் கெட்டிமேளம் கொட்ட வேண்டுமா? வாழ்க்கையில் வசந்தக்காற்று வீச வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் தரிசிக்க வேண்டியது, நித்தமும் கல்யாணம் புரிந்த இந்த நித்ய கல்யாண பெருமாளைத் தான்!

Share:

சனி, 15 ஜனவரி, 2011

ஆனந்த வாழ்வு அருளும் குட்டம் ஆனந்தவல்லி அம்மன்

 
குட்டம் ஆனந்தவல்லி அம்மன் கோவில்
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம் அது -

கம்பீரமாக காணப்பட்ட ஒரு குதிரையில் வேகமாக வந்தான் ஆங்கிலேய அதிகாரி ஒருவன். ஒரு கிராமத்தில் கோவில் முன்பு திரண்டிருந்த மக்கள் அருகே வந்து நின்றான். “ஏன் இங்கே இந்த கூட்டம்?” என்று விசாரித்தான்.
அந்த கிராம மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்ததாக தெரிவித்தனர். 

“ஏன் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறீர்கள்? நீங்கள் எதுவும் கேட்டால், அந்த சாமி நேரில் அதை கொண்டு வந்து தரப்போகிறதா?” என்று கேலியாக கேட்டு சிரித்தான்.

அவனது பேச்சுக்கு மறுபேச்சு பேசிய அந்த கிராமமக்கள், தங்கள் ஊர் தெய்வத்தின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறினர். தங்கள் தெய்வம் தங்களுடன் பேசும் என்றும் தெரிவித்தனர். அதையெல்லாம் கேட்ட அந்த அதிகாரி வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டான்.

ஆனாலும், இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்குமா? என்று சந்தேகம். உடனே, “உங்கள் ஊர் அம்மனுக்கு பேசும் சக்தி உண்டு என்றால் என்னிடம் பேசச் சொல்லுங்கள்” என்றான்.

கிராமமக்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. கண்கண்ட தெய்வத்தையே சோதிக்கிறானே... இவனுக்கு என்ன ஆகப்போகிறதோ... என்று மனதிற்குள் நினைத்தவர்கள், “நீங்களே அந்த சாமியிடம் கேளுங்கள்” என்றனர்.

சற்று கோபமான அந்த ஆங்கிலேயன், குதிரையில் இருந்தபடியே, “ஏய் அம்மனே... இவர்கள் கூறுவதுபோல் நீ சக்தியுள்ள தெய்வம் என்றால், இப்போது என்னிடம் பேசு” என்று கிண்டலாக கத்தி சிரித்தான்.

அவனது ஏளனப் பேச்சுக்கு அந்த கணமே தண்டனை கிடைத்தது. கோவில் சன்னதிக்குள் இருந்து வேகமாக புறப்பட்டு வந்த ஒரு பேரொளி அவனது கண்களை குருடாக்கியது. குதிரையில் இருந்து கீழே விழுந்தான். குதிரையும் தனியாக வேகமெடுத்து ஓடியது.

அதிர்ந்து போனான் அந்த அதிகாரி. செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி, அந்த அம்மனிடமே முறையிட்டான். மனம் திருந்திய அவனுக்கு அந்த அன்னையும் மன்னிப்பு வழங்கினாள். அவனது பறிபோன கண் பார்வை திரும்பக் கிடைத்தது.

மகிழ்ச்சியில் உள்ளம் பூரித்துப் போனான் அந்த ஆங்கிலேய அதிகாரி.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த கிராமம் வழியாகச் செல்லும் ஆங்கிலேயர்கள், தவறாமல் கண் பார்வையை மீட்டுக் கொடுத்த அந்த அன்னையையும் வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர், திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர் - கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள குட்டம் கிராமம். இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்தான் மனம் திருந்திய ஆங்கிலேய அதிகாரிக்கு பார்வை கொடுத்த அன்னை.

அன்று மட்டுமல்ல, இந்த அன்னையின் சக்தி இன்றும் பிரபலம்.

நோய் தீர்க்கும் சஞ்சீவி மரம்


இக்கோவிலுக்கு முன்பு மிகவும் பழமை வாய்ந்த, பிரம்மாண்டமான புளியமரம் ஒன்று உள்ளது. இதை இந்த ஊர் மக்கள் சஞ்சீவி மரம் என்றே அழைக்கிறார்கள். வழக்கமாக புளியமரங்களின் இலைகள் இரவு நேரத்தில் மடிந்துபோய் காணப்படும். ஆனால், இந்த புளிய மரத்தின் இலை காலையில் உள்ளது போலவே விரிந்திருக்கும். அதனால், இதற்கு உறங்காப்புளி என்றும் பெயர் உண்டு.

தீராத எந்தவொரு நோயையும் போக்கும் வல்லமை இந்த சஞ்சீவி மர இலைக்கு உண்டு. இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த இலைகளை தவறாமல் சேகரித்து எடுத்துச் செல்கிறார்கள்.

இதேபோல், இந்த ஊரில் பிறந்து வெளியூர்களில் வசிப்பவர்களும், இந்த சஞ்சீவி மர இலைகளை சேகரித்து கொண்டு செல்கிறார்கள்.
எந்தவொரு நோய் வந்தாலும், முதலில் இந்த சஞ்சீவி இலையை அரைத்து குடித்து விடுகிறார்கள். இந்த இலைக்கு சக்தி உண்டு என்பதால், அவர்களது நோயும் சட்டென்று பறந்துபோய் விடுகிறது.

ஒருமுறை இந்த புளிய மரத்தில் பழுக்கும் பழங்களை சேகரிக்க ஒருவருக்கு ஏலம் கொடுத்தனர். ஆனால், அந்த ஆண்டு இந்த மரத்தில் துளிர்த்த புளியங்காய்கள் அத்தனையும் சரியாக பழுக்காமல் பயனற்று போய்விட்டன. தெய்வீக சக்தி கொண்ட இந்த மரத்தில் பழுக்கும் பழங்களை மக்களே பயன்படுத்த வேண்டும் என்பதே இங்குள்ள இறைவியின் திருவுள்ளம் என்பதை அறிந்த அந்த ஊர் மக்கள் அன்று முதல் இந்த புளியமரத்தின் பழங்களை ஏலம் விடுவதில்லை.

ஆடித் திருவிழா

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை நடைபெறும் திருவிழா பிரசித்திபெற்றது. இக்கோவிலுக்கும், அருகே உள்ள முத்து மாரியம்மன் சமேத சிவனணைந்த பெருமாள் கோவிலுக்கும் இணைத்து, பெருவிழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்

சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்குச் செல்ல, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது. திருச்செந்தூரில் இருந்து கடற்கரை மார்க்கமாக (மணப்பாடு, உவரி வழி) கன்னியாகுமரி, நாகர்கோவில் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இந்த ஊரின் வழியாகவே செல்லும். திருச்செந்தூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் குட்டம் அமைந்துள்ளது.

கோவில் பூஜை நேரம் (தினமும்) : காலை 6 மணி, மதியம் 12 மணி, இரவு 8.

- நெல்லை விவேகநந்தா

Share:

வியாழன், 18 பிப்ரவரி, 2010

இவர்தான் "மச்சக்காரன்"

மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன்

* எனக்கு பல இடங்களிலும் மாப்பிள்ளை பார்த்தார்கள். எந்த வரனும் சரியாக அமையவில்லை. அப்போதுதான், இந்த கோவில் பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தோம். என்ன ஆச்சரியம்... அடுத்த மாதமே திருமணம் நிச்சயமாகிவிட்டது. அந்த நல்ல செய்தியை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்பதற்காக இங்கே எழுதுகிறேன்.
- அமலா, லால்குடி.

* எங்கள் வீட்டில் ‘போர்வெல்‘ அமைக்க முடிவு செய்தோம். 350 அடி வரை போர் போட்டால்தான் எங்கள் பகுதியில் தண்ணீர் கிடைக்கும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனாலும், குறைந்த அடியில் தண்ணீர் கிடைக்க வேண்டி, இந்த கோவிலில் ஆசீர்வதித்து தரப்பட்ட திருநீற்றை தண்ணீரில் கரைத்து ஓரிடத்தில் ஊற்றிவிட்டு, அந்த இடத்தில் போர் போட ஆரம்பித்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே ஆச்சரியம் காத்திருந்தது. 350 அடியில் கிடைக்க வேண்டிய தண்ணீர் மிகக்குறைந்த அடியிலேயே கிடைத்தது. எங்களுக்கு அருள் வழங்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லவே இதை எழுதுகிறேன்.
- விஜயா, மேடவாக்கம், சென்னை.

* எங்களுக்கு திருமணமாகி 3 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அப்போதுதான், இந்த கோவில் பற்றி உறவினர் ஒருவர் மூலமாக கேள்விப்பட்டோம். உடனே, இங்கு வந்து வழிபட்டு பரிகாரத்தையும் செய்து முடித்தோம். அதன் பலனாக நான் குழந்தை பாக்கியம் பெற்றேன். இப்போது நல்லபடியாக குழந்தையையும் பெற்றெடுத்துவிட்டேன். அதற்காக, இந்த மச்சக்கார முருகனுக்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
- சசிரேகா, கோவை.


- சென்னையின் புறநகர் பகுதியான போரூரை அடுத்த வானகரம் - மேட்டுக்குப்பத்தில் உள்ள மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் கோவிலில் உள்ள பக்தர்களுக்கான பதிவேட்டை புரட்டினால், இப்படி எழுதியிருப்போரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதை காணலாம்.

இதனால்தான் என்னவோ, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோவிலைத் தேடி வருகிறார்கள்.

2003-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகப்பெருமான் சிலையில் திடீரென்று ஒரு மச்சம் தோன்றியது. அவரது வலது கன்னத்தில் மேல்புறம் சிவப்பு நிறத்தில் அது காணப்பட்டது. இதைக்கண்ட பக்தர்கள் பரவசம் ஆனார்கள். இங்குள்ள முருகப்பெருமானும் ‘மச்சக்காரன்‘ ஆனார்.

இந்த தகவல் முருகப்பெருமான் - வள்ளி வரலாற்றிலும் உள்ளது.


முருகப்பெருமானை திருமணம் செய்து கொள்வதற்காக வேடர்குல தலைவன் நம்பிராஜனின் மகளாக அவதரித்தாள் வள்ளி. முதன் முதலில் அவளை காண வந்த முருகப்பெருமான், வேடன் உருவத்தில் அங்கே வந்தார். வள்ளியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறினார். ஆனால், வள்ளியோ கோபம் கொண்டு சீறினாள்.

மறுநாள் மறுபடியும் வந்தார் முருகப்பெருமான். இப்போது அவர் வந்தது ஒரு வயோதிகர் வேடத்தில். ஆனாலும், அவரை அடையாளம் கண்டுகொண்டு விட்டாள் வள்ளி. அவரை அடையாளம் காண வைத்தது, அவரது முகத்தில் இருந்த மச்சம்தான். ‘வேடம் போடும்போது மச்சத்தையும் மறைக்க வேண்டும் என்பது தெரியாதா?‘ என்று கேட்ட வள்ளியை, தனது அண்ணன் விநாயகரின் துணையுடன் மணந்து கொண்டார் முருகப்பெருமான்.

அதனால், மேட்டுக்குப்பம் மச்சக்கார முருகப்பெருமான் கோவிலுக்கு வந்து 2 நெய் தீபம் ஏற்றி, 9 எலுமிச்சம் பழங்களை பெற்று வழிபட்டால் 3 மாதத்திற்குள் நல்ல முறையில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள். ஆயில்யம், மூலம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், செவ்வாய் மற்றும் ராகு -கேது தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்களும் இங்கு வந்து வழிபடுவதன் மூலம் உடனடியாக திருமண வாய்ப்பை பெற்று மகிழ்கிறார்கள்.

மேலும், இந்த கோவில் குருஜி, சரியாக பேச்சு வராத குழந்தைகளின் நாவில் ‘ஓம்‘ என்ற மந்திரத்தை வேலால் எழுதி, விபூதி கொண்டு நாவில் தடவி, எலுமிச்சம்பழத்தை மந்திரித்துக் கொடுக்கிறார். அதன்பின்னர், அந்த குழந்தைகள் படிப்படியாக நன்றாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.
கழுத்து சரியாக நிற்காமலும், கால் சரிவர நடக்க முடியாமலும் அவதிப்படும் குழந்தைகளுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.
மற்றும், வேலைவாய்ப்பு, குடும்ப நம்மதி உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு வேண்டுதல்களும் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதன் மூலம் நிறைவேறுகின்றன.

திருமணம் தடைபடுபவர்களுக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் மாலை வேளையில் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. பேச்சு வராத, சரிவர நடக்க முடியாத குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் அபிஷேகத்திற்கு பிறகு பரிகாரம் செய்யப்படுகிறது.

சொர்ண ஆகர்ஷண பைரவர்

பைரவர் வழிபாட்டில் சிறந்ததாக கருதப்படுவது ‘சொர்ண ஆகர்ஷண பைரவர்‘ வழிபாடு. இந்த பைரவர் இந்த கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு மாதமும் வரும் அஷ்டமி திதியில் இந்த சன்னதியில் பைரவர் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரத்யங்கிராதேவி ஹோமம் ஆகியவை நடத்தப்படுகிறது.

அன்றைய தினம் சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், அஷ்ட லட்சுமிகளின் அருளும் கிடைக்கும் என்கிறார்கள். மேலும், கடன் தொல்லைகள் நீங்குதல், வியாபார அபிவிருத்தி, வீடு&மனை வாங்கும் யோகம் போன்றவை ஏற்படும் என்றும் சொல்கிறார்கள்.

மேலும், இந்த கோவிலில் கிழக்கு பார்த்த சக்கர விநாயகர், வானத்தீஸ்வரர், தெற்கு பார்த்த கோபால கிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, கிழக்கு பார்த்த ஷீரடி சாய்பாபா, மேற்கு பார்த்த சனிபகவான், யோக ஆஞ்சநேயர், லட்சுமணர், சீதை சமேத ஸ்ரீராமர், விஷ்ணு துர்காதேவி ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

தற்போது, இக்கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பக்தர்களும் தங்கள் பங்களிப்பை இதில் செலுத்தி வருகிறார்கள்.
நீங்களும் மச்சக்கார முருகப்பெருமானை தரிசிப்பதோடு, அவருக்கான திருப்பணியிலும் கலந்துகொள்ளலாமே..!

மேலும் விபரங்களுக்கு...

Share: