கொண்டாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொண்டாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஏப்ரல், 2010

சுற்றுலா பிறந்த கதை


சுற்றுலா செல்லும் ஆசை எல்லோருக்குமே இருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்புதான் பலருக்கு கிடைக்காது.

ஆனால், சுற்றுலா சென்றுவிட்டு திரும்பினால் மனம் அப்படியே ப்ரெஸ் ஆகிவிடும். புதிதாய் பிறந்த உணர்வுகூட சிலருக்கு ஏற்படும். அதனால் இந்த சம்மரிலாவது அருகே உள்ள கூலான இடங்களுக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வாருங்கள்.

ஆமாம்... சுற்றுலா எப்படி பிறந்தது என்று உங்களுக்கு தெரியுமா?

இப்போது நினைத்த மாத்திரத்தில் விமானத்தில் உலகத்தை சுற்றி வரலாம். ஆனால், அந்த காலத்தில் இதெல்லாம் வெறும் கனவாகத்தான் இருந்தது.

உலக வரலாற்றில் முதன் முதலில் சுற்றுலாவை ஆரம்பித்து வைத்தவர்கள் ஐரோப்பியர்தான். கி.பி.15-ம் நூற்றாண்டில் புதிய நாடுகளை கண்டுபிடிக்கும் பணியில் முதன் முதலாக ஈடுபட்ட அவர்களே, தாங்கள் சார்ந்த மதத்தை பரப்பும் பொருட்டும், வாணிபத்திற்காகவும் கப்பல்களில் பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். அதுவே சுற்றுலா வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக அமைந்தது.


இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக வழியை முதன் முதலில் கண்டறிந்தவர் போர்ச்சுக்கீசிய நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமா. இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவைச் சுற்றி வந்த இவர், 1498-ல் இந்தியாவில் கேரளாவில் உள்ள கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.

வாஸ்கோடகோமாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவுக்கு வேறு திசையில் வழி காணப்போகிறேன் என்று புறப்பட்டார், உலகம் உருண்டையானதுதான் என்று நம்பிக்கை கொண்ட கொலம்பஸ். ஆனால், அவர் கண்டுபிடித்ததாக அறிவித்தது இந்தியா அல்ல. பின்னாளில், இத்தாலியைச் சேர்ந்த அமெரிக்கோ வெஸ்புகியால் மீண்டும் அந்த பகுதி கண்டறியப்பட்டு, அவரது பெயராலேயே அமெரிக்கா என்று அழைக்கப்பட்டது.

இப்படி பலரும் ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து உலக நாடுகளை கண்டுபிடிக்க புறப்பட்டாலும், போர்ச்சுக்கீசிய மாலுமியான மெகல்லன் என்பவரே உலகை முதன் முதலில் சுற்றி வந்த பயணி என்ற பெயரைப் பெறுகிறார்.

அட்லாண்டிக் கடல் வழியாக அமெரிக்காவை அடைந்து, தென் அமெரிக்காவை சுற்றிக்கொண்டு பசிபிக் கடல் வழியாக சென்ற அவர் ஒரு தீவைக் கண்டதும் இறங்கினார். அந்த தீவுக் கூட்டத்திற்கு ‘பிலிப்பைன்ஸ்’ என்று பெயரிட்டார். ஆனால், அந்த தீவில் வாழ்ந்த மக்களுடன் ஏற்பட்ட சண்டையில் அவர் கொல்லப்பட்டார்.

அவரது கப்பல்களில் ஒன்றான விக்டோரியா மட்டும் இந்தியப் பெருங்கடலை அடைந்து, ஆப்பிரிக்காவை சுற்றிக்கொண்டு மீண்டும் போர்ச்சுக்கலை அடைந்தது. உலகம் உருண்டையானதுதான் என்பதை மெகல்லனின் இந்த கண்டுபிடிப்பு உணர்த்தியது. உலகத்தை சுற்றிவரும் வழியிலேயே மெகல்லன் கொல்லப்பட்டாலும், அவர் தலைமையில் சென்ற கப்பல் சுற்றி வந்த காரணத்தால், உலகை முதன் முதலில் சுற்றி வந்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார் இவர்.

இதன்பிறகு உலக நாடுகள் இடையே வாணிபத் தொடர்பு அதிகரித்தது. புதிய நாடுகளை காணும் ஆவலில் ஒவ்வொரு நாட்டினரும் சுற்றுலா செல்ல ஆரம்பித்தனர். சுற்றுலாத் தொழிலும் பிரபலமாக ஆரம்பித்தது.


இருந்தாலும், உலகில் முதலாவது சுற்றுலா பயண முகவர் என்கிற பெயரை பெறுகிறவர் இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் குக். இவரே உலக சுற்றுலாவின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவர்தான், முதலின் முதலில் பொதுமக்களை திரட்டி இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார்.

கி.பி.1841ல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற உலக பொருட்காட்சியைக் காண ஒன்றரை லட்சம் மக்களை அழைத்துச் சென்று அசத்தினார் இவர். இதன்மூலம் அவருக்கு கணிசமான லாபமும் கிடைத்தது. அதன்பிறகு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வதையே ஒரு தொழிலாக செய்தார்.

சுற்றுலாவின் மூலம் தாமஸ் குக் பிரபலமானதை அடுத்து ஐரோப்பாவின் பிற நாடுகளிலும், அமெரிக்காவிலும் பலர் தாமஸ் குக்கின் சுற்றுலாத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தனர். சுற்றுலாவின் வளர்ச்சியும் வேகமெடுத்தது.

மேலும், 18-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி தொழில்துறையில் மட்டுமின்றி மக்களின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. முதன் முதலில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி பின்னர் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும், அதைத்தொடர்ந்து அமெரிக்காவிற்கும் பரவியது.

தொழிற்புரட்சியின் விளைவால் அளவுக்கு மீறி உழைத்து வந்த தொழிலாளர்கள் ஓய்வை விரும்பினர். மனஅழுத்தத்தை குறைத்துக்கொள்ள இயற்கை எழில் சூழ்ந்த வெளியூர்களுக்கு சுற்றுலா சென்றுவர ஆசைப்பட்டனர்.

தொழிற்புரட்சியின் குறிப்பிடத்தக்க விளைவுகளுள் ஒன்றான தொழிற்சங்கங்களின் தோற்றத்தால் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றார்கள். கோரிக்கைக்காக போராடினார்கள். இதன்காரணமாக, அவர்களை கசக்கி பிழிந்து வாங்கப்பட்ட வேலையின் நேரம் குறைந்தது. ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைத்தது. இந்த சலுகையை அனுபவிக்க அவர்கள் குடும்பத்தோடு சுற்றுலா செல்ல ஆரம்பித்தனர்.

உல்லாச சுற்றுலாவுக்கு மட்டுமின்றி உலக மதங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் சிலர் நாடு நாடாக சுற்றுலா செல்ல தொடங்கினார்கள். இன்னும் சிலர் பிற நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள சுற்றுலா புறப்பட்டனர்.

நாளடைவில் நவீன கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து வசதிகள் பெருகிவிட... சுற்றுலா வளர்ச்சியானது ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது. இன்று நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லும் நிலைக்கு வந்துவிட்டோம்.

மேலும், சுற்றுலா பற்றிய சில குறிப்புகள்...

* உலகில் முதன் முதலாக கி.பி.1830ல் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலுக்கும் மான்செஸ்டருக்கும் இடையேதான் ரெயில்பாதை ஆரம்பிக்கப்பட்டது. இது, சுற்றுலா வளர்ச்சி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
* தூங்கும் வசதியுடன் கூடிய ரெயில் வண்டியை அறிமுகம் செய்தவர்கள் அமெரிக்கர்கள். ரெயிலில் தூங்கிக்கொண்டே பயணம் செய்வதற்கு ஒரு நாள் ஒரு இரவுக்கு அவர்கள் வசூலித்தது 2 டாலர்.

* விளம்பரப்படுத்தப்பட்ட உலகின் முதல் சுற்றுலாவைத் தொடங்கியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டெர்வியசர். மத போதகரான இவர், லீசெஸ்டா என்னும் ஊரில் நடந்த சமயக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 570 பயணிகளை ரெயிலில் அழைத்துச் சென்றார்.

* ஒருவர் தான் வாழ்ந்து வரும் அல்லது பணிபுரிந்து வரும் இடத்தில் இருந்து வெளியிடத்திற்குச் சென்று குறுகிய காலம் தங்கி, அங்கு பல இடங்களுக்கு இன்பப் பயணம் சென்று பார்த்து வருவதுதான் சுற்றுலா என்று, சுற்றுலாவுக்கு விளக்கம் தருகிறது இங்கிலாந்து சுற்றுலாக்கழகம்.
Share:

சனி, 27 மார்ச், 2010

சம்மரை கூலாக்கும் கேரளா!

இப்போது ஆங்கில மருத்துவ முறையையே பெரும்பாலானவர்கள் பின்பற்றினாலும், பின்விளைவு இல்லாத நிரந்தர ஆரோக்கியத்தை என்றும் தரக்கூடியது ஆயுர்வேதம் மட்டுமே!

இதன் வரலாறு தெரியுமா?

‘வாழ்க்கையின் விஞ்ஞானம்’ என்பதுதான் ஆயுர்வேதம். கிறிஸ்து பிறப்பதற்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஆயுர்வேத முறை பயன்பாட்டில் இருந்துள்ளது. மிக நீண்ட வரலாறு கொண்ட ஆயுர்வேதம் பல்வேறு நிலைகளில் மாற்றங்களை கண்டு வந்துள்ளது.

வேத காலத்தில் இந்தியாவில் சிறந்து விளங்கிய ஆயுர்வேதம் இந்தோனேஷியா, கிரேக்கம் போன்ற நாடுகளுக்கும் பரவியது. பிற நாடுகளில் இந்திய ஆயுர்வேதத்தை ஏற்றுக்கொண்டவர்கள், அதை தங்களுக்கு தகுந்தவாறு மாற்றிக்கொண்டனர்.

இன்றைய உயரிய வசதிகள் இல்லாத அந்த காலக்கட்டத்தில் ஓலைச்சுவடிகளில் பெரும்பாலும் எழுதி வைக்கப்பட்ட இந்திய ஆயுர்வேத ரகசியங்கள் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

நோய் வரும் முன் காப்பதையும், நோய் வந்தபின் என்னென்ன சிகிச்சை முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பழங்கால ஆயுர்வேத நூல்கள் அழகாக தெரிவிக்கின்றன.

நோய்கள் தோன்றி மனிதகுலம் அவதிக்குள்ளாவதைக் கண்ட ரிஷிகளும், முனிவர்களும் தீவிரமாக யோசித்ததன் விளைவுதான் ஆயுர்வேதம் பிறப்பு. பரத்வாஜர் என்ற ரிஷி தேவேந்திரனிடம் ஆயுர்வேத முறையைக் கற்று, அதை மற்ற ரிஷிகளுக்கு கற்பித்தார். அவர்கள் தங்களது சீடர்களுக்கு அதை எடுத்துரைத்தனர். ஆயுர்வேதம் பற்றிய நூல்களும் எழுந்தன.

புனர்வசு ஆத்திரேயர் என்ற ரிஷியின் சீடரான அக்னி வேசர் எழுதிய அக்னிவேச சம்ஹிதையே ஆயுர்வேதத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது. இந்த அக்னிவேச சம்ஹிதையே ‘சரக சம்ஹிதை’ என்று அழைக்கப்படுகிறது.

ஆயுர்வேத நூல்களில் மற்றொரு மிகச்சிறந்த நூலாக திகழ்கிறது, சுஷ்ருதரால் இயற்றப்பட்ட ‘சஷ்ருத சம்ஹிதை’. புத்தர் வாழ்ந்த காலத்துக்கும் முற்பட்டவர் இந்த சுஷ்ருதர்.

- இப்படித்தான் ஆயுர்வேதம் தோன்றி வளர்ந்துள்ளது.

இதே ஆயுர்வேத முறையை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் நம் நாட்டவரை மட்டுமின்றி, வெளிநாட்டவரையும் வெகுவாக ஈர்த்துள்ளன. இதனால்தான், இந்தியாவுக்கு விசிட் அடிக்கும் வெளிநாட்டவர்கள் கேரளாவுக்கு மறக்காமல் வந்து விட்டு செல்கின்றனர். கூடவே, கேரள ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்து புதுப்பொலிவோடு திரும்புகின்றனர். இதனால், ஹெல்த் டூரிசத்தில் எக்ஸ்பெட் ஆக திகழ்கிறது கேரளா.

அப்படி என்னதான் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கிறார்கள்?

அப்யங்க ஸ்வேதனா :


மிக எளிமையான சிகிச்சை முறைதான் இது. குறிப்பிட்டகால ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மூலிகை மருந்து கலந்த எண்ணெய் மற்றும் நீராவி குளியலுடன் மசாஜ் சிகிச்சை அளிப்பார்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உடலை வலுப்படுத்தும், உடல் திசுக்களை உறுதிப்படுத்தும், நல்ல - ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.

பிழிச்சில் :


ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம்வரை உடலில் இளஞ்சூட்டில் எண்ணெய் விட்டு சிகிச்சை அளிக்கும் முறை இது. எலும்பு முறிவுகள், மூட்டு பிசகு, கை-கால் வலி மற்றும் விரைப்புத்தன்மை, பக்கவாதம், ருமாடிக் காய்ச்சல், ருமாய்ட்டோடு ஆர்த்தரைட்டிஸ் போன்ற பிரச்சினைகள் இந்த சிகிச்சையால் விலகும்.

தாரா :


ஒரு குறிப்பிட்ட மூலிகை எண்ணெய், மருந்து கலந்த பாலை தினமும் 45 நிமிடங்கள் முன் நெற்றியில் விசேஷமான முறையில் ஊற்றி சிகிச்சை அளிக்கும் முறையே இது. உடல், மனம் சமநிலை பெறுவதில் இந்த சிகிச்சை மிகவும் உதவுகிறது. உடல் பலமும், நினைவு திறனும் அதிகரிக்கிறது. அத்துடன் குரல் வளம் தெளிவாகிறது. கண் நோய்கள் தீருதல், தலைவலியில் இருந்து விடுதலை, ஆரோக்கியமான நல்ல தூக்கம், மென்மையான அழகான சருமம் பெறுதல்... போன்ற பல்வேறு நன்மைகளும் இந்த சிகிச்சையால் நமக்கு கிடைக்கின்றன.

நவரக்கிழி :


பல்வேறு மருந்து கலவை கொண்ட துணிப்பை மூலம் உடலில் ஒற்றடம் கொடுத்து சிகிச்சை அளிக்கும் முறையே இது. இதன்மூலம் முழு உடலும் அல்லது உடலின் குறிப்பிட்ட பகுதிகள் வியர்க்க வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக உடலின் இறக்கம் குறைந்து மூட்டுகளின் விறைப்புத்தன்மை நீங்குகிறது. ரத்த ஓட்டமும் மேம்படுகிறது. தேகம் பொலிவு பெறுகிறது. அதிக தூக்கத்தால் உண்டாகும் அசதியும் விலகுவதோடு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகின்றன.

நஸ்யம் :


இது ஒரு வித்தியாசமான சிகிச்சை முறை. மூலிகைச்சாறையும், மருந்துகள் கலந்த எண்ணெயையும் மூக்கின் வழியே விடுகிறார்கள். இதனால் ரத்த ஓட்டம் மேம்பட்டு உடல் உறுப்புகளுக்கு புது தெம்பு கிடைக்கிறது. அத்துடன், பல்வேறு நரம்புகளின் நுனிகள் தூண்டப்பட்டு மைய நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது.

உத்வர்த்தனம் :


இது மசாஜ் முறையிலான சிகிச்சை. மருந்து கலந்த பவுடரை உடலில் தூவி மசாஜ் செய்வார்கள். இதனால் தோற்றம் பொலிவு பெறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்படுகிறது. அதன்மூலம் உடல் எடை குறைகிறது. மேலும், நல்ல தூக்கம் கிடைத்து உடலும் புத்துணர்வு பெறுகிறது.

வருடம் முழுவதும் உழைத்து உழைத்து மனதாலும், உடலாலும் தேய்ந்து போனவர்கள், கேரள ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. இது கொஞ்சம் காஸ்ட்லியான சிகிச்சைதான் என்றாலும், பல நன்மைகளைத் தரக்கூடியது என்பதால் தாராளமாக எடுத்துக்கொள்ள முன்வரலாம்.

அதற்காக போலி ஆயுர்வேத சிகிச்சை மையங்களை நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

இப்போதெல்லாம் கேரள ஸ்டைல் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் அளிக்கப்படுகின்றன. ஆனால், கேரளாவுக்குச் சென்று இந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டால், அங்குள்ள இயற்கையோடு ஒன்றி லயிக்கலாம். கூடுதல் பலனும் கிடைக்கும்.

ஸோ... இந்த சம்மருக்கு கேரளாவுக்கு ஒரு விசிட் அடியுங்களேன்...

Share:

திங்கள், 22 பிப்ரவரி, 2010

ஹோலி கலாட்டாக்கள்

ஹோலிப் பண்டிகை என்றாலே வட மாநிலங்கள் களைக் கட்டிவிடும். இளசுகள் முதல் பெருசுகள்வரை எல்லோரும் வண்ணப் பொடிகள் ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்தும், வர்ணம் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்தும் மகிழ்வார்கள்.

இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் எல்லாம் வேறுபடுவதுபோல், இந்த பண்டிகை கொண்டாட்டமும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

ஹோலி ராஜா

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில், கிருஷ்ணர் வெண்ணெய் திருடியதையும், கோபியர் அதை தடுக்க முயன்றதையும் நினைவுகூறும் வகையில் ஹோலியை கொண்டாடுகிறார்கள்.

தெருவில் வெண்ணெய் நிரம்பிய பானையை தொங்க விடுகிறார்கள். இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி அந்த வெண்ணெய் பானையை உடைக்க முயற்சிப்பதும், இளம்பெண்கள் அவர்கள் மீது வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றி தடுக்க முயற்சிப்பதும் சுவாராசியமாக இருக்கும்.
போட்டியின் இறுதியில் வெண்ணெய் பானையை உடைப்பவர் அந்த ஆண்டின் ஹோலி ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அடி வாங்கும் ஆண்கள்


உத்தரப்பிரதேசத்தில் உள்ள பார்சானா என்ற இடத்தில் ஹோலிப் பண்டிகை கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது.

அங்குள்ள ராதா ராணி கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுகிறார்கள். அவர்கள் முன்னிலையில் ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்களை துண்டும் விதத்தில் ஒருவித பாடல் பாடுகிறார்கள். அவர்கள் மீது உரிமையோடு பொய்க் கோபம் கொள்ளும் பெண்கள், அவர்களை நீண்ட தடியால் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள் (நம் இடைக்கால சினிமாக்களில் காட்டப்படும் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் காட்சியை கற்பனை செய்து கொள்ளுங்கள்). அடி என்றால் பலமான அடியெல்லாம் கிடையாது. இது செல்ல அடி!

சிலநேரங்களில், தப்பித்தவறி சிலருக்கு பலத்த அடி விழுந்து விடுவது உண்டு. அதில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஆண்கள் கவச உடையை அணிந்து கொள்கிறார்கள்.விநோதமான ஹோலிப் பண்டிகையாக அமைகிறது இந்த விழா.

சேலை அடி

குஜராத்தில் கூட்டுக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொண்டாடும் ஹோலிப் பண்டிகை சற்று வித்தியாசமாக அமைகிறது.

திருமணம் ஆன அல்லது ஆகாத குஜராத்திய பெண்கள், தங்கள் சகோதரியின் கணவன் மீது கேலியான கோபம் கொண்டு, தங்கள் சேலையில் கயிற்றைச் சுற்றி அதைக்கொண்டு அவர்களை செல்லமாக அடிப்பது ஹோலி கொண்டாட்டத்தின் இன்னொரு பகுதியாக அமைகிறது.

தங்களை செல்லமாக அடிக்கும், மச்சினிச்சிகளுக்கு அந்த மச்சான்கள் அடிக்கு பதிலாக இனிப்பு பண்டங்களை வாங்கிக்கொடுத்து அசத்துகிறார்கள்.

கிருஷ்ண லீலை

வங்காளத்தில் நடைபெறும் ஹோலி விழாவின்போது, கிருஷ்ணர், ராதாவின் சிலைகள் அழகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. அப்போது, இளம்பெண்கள் பாடிக்கொண்டும், நடனமாடியபடியும் ஊர்வலத்தில் வருகிறார்கள்.

அவர்களை வேடிக்கைப் பார்க்க வரும் ஆண்கள், அவர்கள் மீது வண்ணப்பொடிகளை வீசுவதோடு, வண்ணம் கலந்த நீரைப் பீய்ச்சியடித்தும் மகிழ்கிறார்கள். கிருஷ்ண லீலைகளை விளக்குவதாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.


‘குஜால்‘ படுத்தும் ‘குலால்‘!

மணிப்பூரில் ஹோலி அன்று ‘குலால்‘ என்கிற ஒரு வகை விளையாட்டை ஆண்களும், பெண்களும் கலந்து விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டில் ஒரு பெண் கலந்துகொள்ள வேண்டும் என்றால், அவளுக்கு ஆண்கள் பணம் கொடுக்க வேண்டும்.

பவுர்ணமி நிலவொளியில் இவர்கள் ஆடும் ‘குலால்‘ ஆட்டம், அதை காண்போரை ‘குஜால்‘ படுத்திவிடுவது இந்த ஆட்டத்தின் தனிச்சிறப்பு.
Share:

சனி, 20 பிப்ரவரி, 2010

கலர்புல் கொண்டாட்டம்!



இந்துக்கள் கொண்டாடும் கலர்புல் திருவிழா ஹோலி. இந்தியாவின் வட மாநிலத்தை சேர்ந்தவர்களே இந்த திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். பனி காலத்திற்கு விடையளித்து, வசந்த காலத்திற்கு வழிவிடும் விதத்தில் இந்த விழா அமைகிறது.

கிருஷ்ண பகவான், தனது இளம் வயதில் கோபியர்களுடன் ஆடிய விளையாட்டை நினைவுபடுத்தும் வகையிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

தீராத விளையாட்டு பிள்ளையான கிருஷ்ணர், தனது அன்னை யசோதாவிடம், "ராதை அழகாக இருக்கிறாள். நான் மட்டும் ஏன் கருமையாக இருக்கிறேன்?" என்று கேட்டார். அதற்கு யசோதா, "ராதையின் நிறம் மீது உனக்கு பொறாமை இருந்தால் அவள் மீது வர்ணங்களைப் பூசு. அவ்வாறு பூசினால் அவளும் உன்னைப் போன்ற கருமையான நிறத்தில் காட்சியளிப்பாள்" என்று பதிலளித்தார். அதன்படி, கிருஷ்ணரும் ராதை மீது வர்ணங்களை அள்ளிப்பூசினார்.

இப்போதைய ஹோலிப்பண்டிகை கொண்டாட்டத்தின்போதும், வண்ணப் பொடிகளை இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசியும், பூசியும், வண்ண நீரை பீய்ச்சியடித்தும் மகிழ்கிறார்கள்.

இந்த பண்டிகை கொண்டாட்டத்துக்கு காரணமாக இரணியன் கதையையும் சொல்கிறார்கள்.

இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுளாக வணங்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால், அவனது மகனான பிரகலாதனோ, மகாவிஷ்ணுவே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். கோபம் கொண்ட இரணியன், மகன் என்றும் பார்க்காமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.

இதற்கு தீர்வு காண நினைத்த இரணியன், தனது சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். ஹோலிகா, நெருப்பினால் எரியாத சக்தி கொண்டவள். அவளிடம் தனது மகனை அழிக்கும் பணியை ஒப்படைத்தான்.

அதன்படி, பிரகலாதனை தூக்கிக்கொண்டு நெருப்புக்குள் புகுந்தாள் ஹோலிகா. அந்த நெருப்பில் தனது மகன் இறந்து விடுவான் என்று கணக்கு போட்டான் இரணியன். ஆனால் நடந்ததோ வேறு.


மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் இருந்த பிரகலாதனை நெருப்பு ஒன்றும் செய்யவில்லை. ஆனால், தீய எண்ணத்துடன் தீக்குள் நுழைந்த ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.

இதை நினைவுபடுத்தும் வகையில் ஹோலி பண்டிகை அன்று திறந்தவெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வதும் உண்டு. இவ்வாறு ஹோலிகா அழிந்த தினமே ஹோலி பண்டிகையாக மாறிவிட்டது என்கிறது அந்த புராணக்கதை.

காமன் விழா :
மன்மதன்

தமிழ்நாட்டில் காமதேவனது உன்னதத் தியாகத்தை வியந்து போற்றும் வழிபாட்டு நிகழ்வாக ஹோலிப் பண்டிகை கருதப்படுகிறது.

ஒருசமயம் பார்வதி தேவி தட்சனுக்கு மகளாகப் பிறந்து தாட்சாயிணி எனப் பெயர் பெற்றாள். பின்னர் தவம் செய்து ஈசனை அடைந்தாள்.

இந்நிலையில், தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். அதற்கு தேவர்கள் அனைவரையும் அழைத்தான். ஆனால் தன் மாப்பிள்ளையான சிவபெருமானை அழைக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட  தாட்சாயிணி, தன் தந்தை யாகம் நடத்தும் இடத்திற்குச் சென்று நியாயம் கேட்டாள். தட்சன் சிவபெருமானை அவமரியாதையாகப் பேசியதால், அந்த யாகத் தீயில் விழுந்து உயிர்விட்டாள்.

அதற்குப்பின் பல நிகழ்வுகள் நடந்தன. சிவபெருமானின் அருளால் மலை அரசனான பர்வதராஜனின் மகளாகப் பார்வதி என்ற  பெயரில் மீண்டும் பிறந்து, ஐந்தாவது வயதில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்தாள் பார்வதி.

காலம் கடந்தது. தன் மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் சிவபெருமான் தியானத்தில் அமர்ந்திருந்தார்.  அதனால் உலகில் உயிர்களின் பிறப்பு இல்லாமல் போனது. இதனால் தேவர்கள்  பிரம்மாவின் தலைமையில் திருமாலிடம் சென்று, உலகின் உயிர்களின் நிலை பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்ட திருமால், சிவபெருமானின் தியானத்தை கலைக்கத் தகுந்தவன் காமன் எனப்படும் மன்மதனே என்று உணர்ந்து,  அவனை அழைத்தார். சிவபெருமானின் தியானத்தைக் கலைக்கும்படி கூறினார்.

திருமாலின் கட்டளைப்படி மன்மதன் தன் மனைவி ரதியுடன் சிவபெருமான் தியானம்  செய்யும் இடம் நோக்கிச் சென்றான். காதல் நினைவாக இருத்தல், அதனை எண்ணிப்  புலம்பல், சோகம், மோகம், மரணம் ஆகியவற்றைக் குறிக்கும் முறையே தாமரை, அசோகு, முல்லை,  மா, நீலம் எனும் ஐந்து மலர்களையும் அம்பாகக் கொண்டு, கரும்பை வில்லாக வளைத்து  சிவபெருமான்மீது தொடுத்தான் மன்மதன்.

மலர் அம்பால் தாக்கப்பட்ட சிவபெருமானின் தியானம் கலைந்தது. தன் தியானத்தைக் கலைத்தது யார்? என்று கோபத்துடன் சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறக்க... அடுத்த நிமிடமே மன்மதன் எரிந்து சாம்பலானான்.

அருகில் இருந்த  ரதி, அதனைக் கண்டு துடிதுடித்தாள். சிவபெருமானிடம் சென்று தன் கணவனை மீண்டும் உயிர் பெறச் செய்மாறு மன்றாடினாள். ரதியின் நிலை அறிந்து, மனமிரங்கிய சிவபெருமான், "நான் பார்வதியைத் திருமணம் செய்து கொண்டபின் உன் கணவன் உயிர்பெற்று எழுவான். ஆனால், உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்; மற்றவர்களுக்குத் தெரிய மாட்டான்' என்று வரம் அருளினார்.

இந்த சம்பவத்தின்படி சிவபெருமான், காமனை எரித்த இடம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருக்குறுங்கை ஆகும். இங்கு காமதகன விழா ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் நடைபெறுகிறது. இங்குள்ள குளத்தின் அடிப்பகுதியில் சாம்பல் மயமாக இருப்பதை இன்றும் நாம் பார்க்கலாம்.

திருக்குறுங்கை கிராமத்தைச் சுற்றி சில கிராமங்கள் இந்த வரலாற்றின் அடிப்படையில்  பெயர்களைக் கொண்டுள்ளன. சிவபெருமான் மீது மலர் அம்பினை ஏவ மன்மதன் கங்கணம்  செய்துகொண்ட இடம் "கங்கணநல்லூர்" என்றும், அவர் தன் கால்களை வளைத்து குறி பார்த்த இடம் "கால்விளை" என்றும், வில் ஏந்திய இடம் "வில்லியநல்லூர்" என்றும் அழைக்கப்படுகின்றன.

ஹோலி கொண்டாட்டம் ...

Share: