சனி, 6 மார்ச், 2010

சிட்டுக்குருவி பார்த்து இருக்கிறீர்களா?


சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே

ஹோய் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே...

ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஹா…ஹா…
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே 

ஹோய் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே...

ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஆ…ஹாஹா
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…

ஹோய் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே...

- புதிய பறவை என்ற சினிமா படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல் இது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜாதேவி பாடி நடித்திருந்தனர்.

இந்த பாடலில் இடம்பெற்ற சிட்டுக்குருவி இன்று நம்மைவிட்டு எங்கோ விலகிச் சென்றுவிட்டது. இதற்கு எல்லாம் காரணம் நாம்தான்.

வயல் காடுகள் எல்லாம் வீடுகளாக மாறியது... செல்போன் மற்றும் செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் மின்னணு கதிர்வீச்சுகள்... - இவை, நம்மோடு நெருங்கிப் பழகிய சிட்டுக்குருவிகளுக்கு நம்மிடம் இருந்து விடைகொடுத்து அனுப்பி வருகின்றன.

இப்போது மிகவும் பழமையான கிராமங்களில் மட்டும் ஆங்காங்கே காணப்படும் சிட்டுக்குருவிகள், இன்னும் சில ஆண்டுகளில் மியூசியத்தில் மட்டும் இடம்பெறும் அளவுக்கு காணாமல் போய்விடும்.

அடுத்த தலைமுறையினரிடம், "முன்பு இப்படி ஒரு பறவை இருந்தது. ரொம்பவும் சின்னதா.. க்யூட்டா.. பார்க்க அழகா இருக்கும்.." என்று அவர்களிடம் படம் காண்பித்து விளக்கம் மட்டுமே கொடுக்க முடியும்.

ஏன்... நீங்களே கூட இந்த பறவையை பார்த்து இருக்கிறீர்களா? என்பதும் சந்தேகம்தானே!

சரி... நீங்களும் இந்த சிட்டுக்குருவியை பார்த்ததே இல்லை என்றால், கீழே படத்திலாவது பார்த்து திருப்திப்பட்டுக் கொள்ளுங்கள்...

 

Share:

சிட்டுக்குருவி


குளிர் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணம் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர் காலத்தின் இறுதிக்கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென் திசை நோக்கி பறக்க தயாராகின. ஆனால், இந்த சிட்டுக்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டது.

குளிர்காலம் வந்தது. குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கிவிட்டது. கடைசியில் அது தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்தபோது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து, இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது.

அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்க விடாமல் செய்தது. அடுத்த நொடியே அது மரத்திலிருந்து கீழே விழுந்தது. அந்த குருவி விழுந்த இடம் ஒரு விவசாயின் வீட்டு முற்றம்.

அந்த வழியாக வந்த ஒரு பசுமாடு, கீழே கிடந்த அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டு சென்றது. சிட்டுக்குருவிக்கு மூச்சு திணறினாலும், சாணத்தின் வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. உடனே அந்த குருவி மகிழ்ச்சியில் பாட ஆரம்பித்துவிட்டது.


இதைக்கேட்ட அந்த வழியாக சென்ற ஒரு பூனை அங்கு வந்தது. சிட்டுக்குருவியை பார்த்ததும், அதை லபக்கென்று பிடித்து விழுங்கிவிட்டது.
இந்த கதையில் 3 கருத்துகள் உள்ளன. அவை :

1. உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2. உன்னை சாணத்தில் இருந்து அகற்றுபவன் உன் நண்பனாக இருக்க வேண்டும் என்பதில்லை.

3. நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்றால் அதை அமைதியாய் அனுபவி.

- இந்த கதையை சொன்னவர் ஓஷோ.
Share:

காமத்தால் களங்கப்பட்ட சரித்திரம்!


ண்களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் கால் வைத்துவிட்ட இன்றைய பெண்கள், ஒரு காலத்தில் குழந்தை பெறும் இயந்திரமாகவே பயன்படுத்தப்பட்டனர். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளையே அன்றைய சமுதாயம் ஆவலோடு எதிர்பார்த்தது.

அந்த ஆண் குழந்தைகளே வளர்ந்ததும் கல்வி, கலைகளை கற்றனர். காவியங்கள் படைத்தனர். பெண்களை ஒட்டுமொத்தமாகவே ஒதுக்கிவிட்டனர்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பெண்கள் எப்படி இருந்தார்கள்? 

பெண்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் கொடுக்காததால் அவர்கள் எல்லாம் கிணற்று தவளைப் போலவே எதுவும் தெரியாமல் இருந்தனர். அறிவான விஷயங்களை ஆண்கள் மாத்திரமே பேசினார்கள்.

ஒருக்கட்டத்தில், அந்த ஆண்களுக்கு, அவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்களும் "போர்" அடித்துவிட்டார்கள். அறிவுப்பூர்வமான விஷயங்கள் அந்த பெண்கள் தங்களுடன் பகிர்ந்து கொள்ளாததால் அவர்கள் மேல் வெறுப்புற்றனர்.

"இப்படி அறிவே இல்லாத பெண்ணிடமா செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்?" என்றுகூட சிந்தித்தனர். அதற்கான மாற்றுத் தேடலையும் துவங்கினர்.

ஒரு மனித ஆண் மனித பெண்ணிடம்தானே உறவு வைத்துக்கொள்ள வேண்டும்? அதுதானே இயற்கையின் நியதியும்!

ஆனால், கி.மு.க்கு முந்தைய ஆணோ அந்த இயற்கையின் நியதியை தவிடுபொடியாக்க முயற்சித்தான். அதற்கான செயலிலும் இறங்கிவிட்டான். சில ஆண்கள் ஆண்களுடனேயே உடலால் இணைந்தனர். சில மாவீரர்களும், தத்துவ ஞானிகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.
கிரேக்க காவியங்களை அலசிப் பார்த்தால் இதற்கான ஆதாரங்கள் நிறையவே கொட்டிக்கிடக்கின்றன.

ஆணும், ஆணும் நேசித்த அந்த காமம் - காதலுக்கு "கிரேக்க காதல்" என்றே பெயரும் சூட்டிவிட்டார்கள்.

ஆண்களுக்குள் ஏற்பட்ட இந்த வினோத ஆசையால், ஆண்களின் அழகும், கவர்ச்சியும் பொங்கி வழியும் சிற்பங்கள் ஏராளமாக செதுக்கப்பட்டன. ஓவியங்களும் தீட்டப்பட்டன. ஏன்... இதை மையமாக வைத்து நாடகங்களும் எழுந்தன. ஆண் கடவுள்கள் மனித ஆண்களை காதலிக்கும் கதைகளும் கூட பரப்பப்பட்டன.

இப்படி ஆண்களை ஆண்கள் காதலித்த அதேநேரத்தில், குழந்தை பெற்றுக்கொள்ள பெண்களை தவறாமல் பயன்படுத்திக் கொண்டனர். தங்களால் கர்ப்பமுற்று ஒரு பெண் பெற்றெடுக்கும் குழந்தை ஆணாகவே இருக்க வேண்டும் என்றும் தங்கள் தெய்வத்தை வேண்டிக்கொண்டனர், அந்த கிரேக்க ஆண்கள்.

பண்டைய கிரேக்கத்தில் ஆண்கள் இப்படி இருக்க, இந்தியா, சீனா, எகிப்து போன்ற நாடுகளில் சில பெண்கள் உஷாராகவே இருந்தனர். தங்களுக்கு வந்த தடைகளையும் மீறி ஆண்களுக்கான கலைகளை கற்றுக்கொண்டனர்.

அவர்களை திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆண்கள், அவர்களுடன் கொஞ்சிப்பேசி மகிழ்வதில் மட்டும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தனர். அவர்களை ஆசை நாயகியாக வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள். சில ஆண்கள், வீட்டில் தனக்காக காத்திருக்கும் மனைவியை மறந்து பரத்தை என்று அழைக்கப்பட்ட இந்த ஆசைநாயகியுடன் பொழுதை போக்கினார்கள்.
இன்னும் சிலர் ஆசைநாயகி வீடே கதியென்று மூழ்கிப்போய் கிடந்தனர்.

இந்த ஆண்கள் ஆசைநாயகிகள் வலையில் வீழ்ந்துவிடக் காரணம், அந்த பெண்களின் தனித்திறமைகள்தான். அதேநேரம், அந்த ஆண்களின் மனைவியரோ கிணற்றுத் தவளையாகவே அறிவற்றவர்களாக இருந்தனர்.

இதற்கிடையில், ஆண் குழந்தைக்கு ஆசைப்படுவதில் உலகம் முழுவதும் உள்ள எல்லோரது விருப்பமும் ஒரேமாதிரியாக இருந்தது. ஆண் வாரிசு பிறக்கவில்லை என்றால், அந்த குடும்பங்களின் சொத்தை அரசே எடுத்துக்கொள்ளும் சட்டமும் ஆங்காங்கே நடைமுறையில் இருந்தது. அதனால், ஆண் குழந்தைக்காக பெண்கள் தவம் கிடந்தனர்.

அதையும் மீறி பெண் குழந்தை பிறந்தால் மனதை கல்லாக்கிக்கொண்டு அதை கொன்றனர். அரேபிய பாலைவன பகுதியில் வசித்த பெண்கள் தங்களது பெண் குழந்தையை பாலைவன மணலுக்கு அடியில் புதைத்துக் கொன்ற அதேநேரத்தில், இந்திய அம்மாக்களோ நெல் மணிகள், கள்ளிப்பால், அரளி விதை போன்றவற்றை கொடுத்து அந்த குழந்தைகளுக்கு முக்தி அளித்தனர்.

இதை ஒரு குற்றமாகவோ, பாவச் செயலாகவோ யாருமே கருதவில்லை. பெண்ணாக பிறந்தது, தங்களைப்போல் கஷ்டப்படாமல், அது காலாகாலத்தில் போய் சேர்ந்துவிடட்டுமே என்றுகூட எண்ணினார்கள்.

இப்படியே பெண் குழந்தைகளை கொன்று குவித்துக்கொண்டே போனால், அடுத்த சமுதாயம் எப்படி மலரும்? அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுமே! - அவர்களும் சில நேரங்களில் இதை யோசித்தார்கள்.

அதனால், சில பெண் குழந்தைகள் அந்த பாதக கொலையில் இருந்து தப்பினர். ஆனாலும், சமுதாயத்தில் அவர்களுக்கு எந்தவித மதிப்பு-ம் கொடுக்கப்படவில்லை.

இப்படி பெண்கள் சமுதாயம் அடியோடு புறக்கணிக்கப்பட, காலப்போக்கில் அவர்கள் வேறு ஆயுதத்தை தூக்கினார்கள். அவர்களது உடல்தான் அந்த ஆயுதம்!

வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண்களில் சிலர் அப்போது தங்களது உடல் அழகின் மகிமையை உணர ஆரம்பித்தனர். தேவதாசி ஆனார்கள்.

சாதாரண பெண்கள் எந்த கலையும் கற்றுக்கொள்ளக்கூடாது என்ற தடை இருந்த அதேநேரத்தில், இந்த தேவதாசிப் பெண்கள் ஆண்களைப்போல் பல்வேறு கலைகளையும் கற்றனர். ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும் கற்றார்கள் என்றே சொல்லலாம்.

இதற்கான ஆதாரத்தை இந்திய காமசூத்ராவில்கூட காண முடிகிறது. "ஆயக் கலைகள் அறுபத்து நான்கும் தெரிந்திருந்தால்தான் ஒரு பெண் தேவதாசி என்ற அந்தஸ்தை பெற முடியும்" என்கிறது காமசூத்ரா.

இவ்வாறு தேவதாசி ஆன பெண்கள் அந்தந்த ஊரின் ஆண் தெய்வங்களை மணந்து கொண்டார்கள். அதனால், அவர்களது அந்தஸ்து உயர்ந்தது. தெய்வத்தின் மனைவி ஆனார்கள். ஒருக்கட்டத்தில் இவர்களை ஆண்கள் வியப்புடன் பார்த்தார்கள்.

இந்த தெய்வத்தின் மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று தவியாய் தவித்தார்கள். அதற்காக எதையும் இழக்க அவர்கள் தயாரானார்கள். அந்த தேவதாசிகளுக்காக பணத்தை நீரென வாரியிறைத்தார்கள்.

நாளடைவில் அந்த தேவதாசிப் பெண்கள் தங்களுடன் இணைந்த ஆண்களை தங்களது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அவர்களை ஆட்டிப்படைக்கவும் ஆரம்பித்தனர். இந்த தேவதாசிகளிடம் பணக்காரன், பாமரன் மட்டுமின்றி அரசனே அடிமைப்பட்டு கிடந்தான்.
இதை பார்த்து வியந்த மற்ற பெண்கள் தங்கள் பாதையை மாற்றினர்.

தேவதாசிகளிடம் அழகும், அறிவும் கொட்டிக்கிடப்பதாக நினைப்பதால்தானே ஆண்கள் அவர்களைத் தேடி போகிறார்கள்? என்று எண்ணிய அவர்கள், தங்களது உடல் அழகை படிப்படியாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். ஆண்களிடம் கொஞ்சி கொஞ்சிப் பேசினார்கள். மார்பக அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். நடந்து செல்வதில்கூட மாற்றங்களை செய்தார்கள்.

இதற்கு உதாரணமாக ரஷ்யப் பெண்களையும், சீனப் பெண்களையும் கூறலாம். ரஷ்யப் பெண்கள் கால் விரல்களாலேயே நடக்க பழகினார்கள். சீனப் பெண்கள் பாதங்களை சிறு வயதில் இருந்தே இறுக கட்டி வைத்து, அதை சிறிய பாதமாகவே வைத்துக்கொண்டனர். அந்த சின்ன பாதத்தை சீன ஆண்கள் விரும்பி ரசித்தனர்.

- இப்படி படாத பாடுபட்டுதான் முன்னேறி இருக்கிறார்கள் பெண்கள்.


Share:

கண்ணதாசனை திகைக்க வைத்த பேச்சாளர்


ப்போதும் மங்கலகரமாக பேச வேண்டும் என்று சொல்வார்கள். கவியரசு கண்ணதாசனும் அதை பின்பற்றினார்.

ஆனால், அவர் கலந்துகொண்ட ஒரு விழாவில் பேசிய ஒருவர் அமங்கலமாக பேச, அப்போது ஏற்பட்ட தனது அனுபவம் பற்றி கண்ணதாசன் கூறியிருப்பதாவது :

 சில சீர்திருத்த திருமணங்களுக்கு நான் தலைமை தாங்கி இருக்கிறேன். அப்படி நடந்த ஒரு திருமணத்தில் நான் கலந்து கொண்டேன். அங்கே பேசிய ஒருவர், மணமக்கள் மீது மஞ்சள் அரிசியும், பூக்களும் தூவப்பட்டது பற்றி குறிப்பிட்டார்.

"இங்கே மஞ்சள் அரிசி தூவினார்கள். இந்த முட்டாள்தனம் எதற்காக? பிணத்துக்கும் தான் மஞ்சள் அரிசி தூவுகிறார்கள். இவர்கள் மணமக்களா? இல்லை... பிணங்களா?" என்று அவர் பேசினார்.

அவரது இந்த பேச்சு எனக்கு நெஞ்சில் அடிப்பது போல் இருந்தது. திருமண வீட்டில் அமங்கலமாக பேசுகிறாரே... என்று வருந்தினேன்.
இதேபோல், இன்னொரு சீர்திருத்த திருமணத்திலும் நான் கலந்து கொண்டேன். அப்போதும் ஒருவர் இதேபோல் பேசினார்.

"இங்கே நடப்பது சீர்திருத்த திருமணம். 2 நிமிடத்தில் செலவில்லாமல் முடிந்துவிட்டது. அய்யர் வரவில்லை. ஓமம் வளர்க்கவில்லை. அம்மி மிதிக்கவில்லை. அருந்ததியும் பார்க்கவில்லை. இங்கே அய்யர் வராததால் இந்த பெண் வாழ மாட்டாளா? இவளுக்கு குழந்தை பிறக்காதா? அய்யர் வந்து நடத்தாததால் இவள் விதவையாகிவிடப் போகிறாளா? அப்படியே விதவையாகிறாள் என்றே வைத்துக் கொள்வோம். அய்யர் நடத்தும் திருமணங்களில் பெண்கள் விதவையாவதில்லையா? அந்த அய்யர் வீட்டிலேயே விதவைகள் இருப்பார்களே, அவர் வந்து கட்டக் கொடுத்தால் தான் தாலி நிலைக்குமா? நாங்கள் கட்டக் கொடுத்தால் அறுந்து விடுமா?" - அவர் பேசி முடிக்கவில்லை; நான் அவர் கையை பிடித்து இழுத்து அமர வைத்தேன்.

"நடப்பது திருமணம். நீ பேசுவது விதவையாவது எப்படி என்பதை பற்றி. பேசாமல் உட்கார்" என்றேன். பின்னர், நான் பேசும்போது நமது மங்கல மரபுகள் பற்றி குறிப்பிட்டேன்.

மங்கலம்-அமங்கலம் என்று இந்துக்கள் பிரித்தது மூடநம்பிக்கையல்ல; அது மனோதத்துவ மருத்துவம்.


நல்ல செய்திகள், வாழ்த்துகள் ஒரு மனிதனின் காதில் விழுந்து கொண்டே இருந்தால், அவனது ஆயுளும் அதிகரிக்கிறது; ஆனந்தமும் பொங்குகிறது. மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை.

நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரீக சம்பிரதாயத்தையே உருவாக்கி உள்ளன. அவற்றுள் பல அறிவியல் ரீதியானவை.

மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வரச் சொல்கிறார்கள்? மணவறையை சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்? ஊர்வலம் வர வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள்?

இப்படி எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன?


காரணம், பூமியே வலப்புறமாக சுழல்கிறது என்பது தான்.
மனிதனின் 2 கால்களில், 2 கைகளில், இடது கை&கால்களை விட, வலது கை-கால்கள் பலம் வாய்ந்தவை. இதனால் தான், சக்தியோடு வாழ நிரந்தரமாக எதிலும் வலப்புறமாக வருவது நல்லது என்று இந்துக்கள் நம்பினார்கள், நம்புகிறார்கள். வலம் என்பது நாம் வலிமை அடைவோம் என்றும் பொருள் தருகிறது.

சாதாரணமாக, நண்பர்கள் வீட்டுக்கோ, திருமணங்களுக்கோ செல்கிறவர்கள், திரும்பிச் செல்லும்போது, போய் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு போவார்கள். அதன் பொருள், இன்னும் பல திருமணங்கள், விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும்; நாங்கள் மீண்டும் வருகிறோம் என்பதே!

அமங்கல வீடுகளுக்கு செல்கிறவர்கள் திரும்பும்போது, போகிறேன் என்று சொல்லிக் கொண்டு போவார்கள். அதன் பொருள், இனி உன் வீட்டில் அமங்கலம் நேராது. நாங்கள் வரவேண்டி இருக்காது என்று நம்பிக்கை ஊட்டுவதாகும்.

பெண் ருதுவாவதை பூப்படைந்தாள், புஷ்பவதியானாள் என்பார்கள். அதாவது, பெண் மொட்டாக இருந்து புஷ்பம் போல் மலர்ந்திருக்கிறாள் என்பது இதன் பொருள்.

மணமக்களின் முதலிரவை சாந்திமுகூர்த்தம் என்பார்கள். காதலில் துடித்துக் கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்கு சாந்தியடைகிறது என்பதே அதன் பொருள்.
இதேபோல், இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்கலமே நிறைந்திருக்கும். நான் சொல்வது சராசரி இந்துக்களை - என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
Share:

வெள்ளி, 5 மார்ச், 2010

ஆண்மையை பாதுகாக்கும் செவ்வாழை


ல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.

மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

வயது ஆக ஆக எல்லோருக்கும் கண் பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்-த-கைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.

குறைவான உயிரணுக்கள் எண்ணிக்கை கொண்ட ஆண்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால், எளிதில் குழந்தை பாக்கியமும் கிட்டும்.

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரஸ்தாளி வாழைப்பழத்தை தண்ணீர் விட்டு கரைத்து மூன்றுவேளை உட்கொள்ள கொடுத்தால் போதும். அந்த பாதிப்பு உடனே நின்றுவிடும்.
Share:

குழந்தை கிளிக் ஆகும் நேரம்


ணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும்போது கரு உருவாகி, அது தாயின் வயிற்றில் குழந்தையாக வளர்ந்து, பத்தாவது மாதத்தில் குழந்தையாக வெளிப்படுகிறது.

பெண்ணின் கருப்பை வாயுக்குள் செலுத்தப்பட்ட விந்-தணு 48 முதல் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். அதேநேரம், பெண்ணின் கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டை 24 மணி நேரம்தான் உயிருடன் இருக்கும்.

கருமுட்டை வெளியான 24 மணி நேரத்திற்குள், அதை ஆணின் உயிரணு சந்தித்து இணைந்து கொண்டால்தான் ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியும்.
இதனால், கரு முட்டை எப்போது வெளியாகிறது என்ற ஆர்வமான கேள்வி எழுகிறது. மாதவிலக்கு நின்ற 10 முதல் 20 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் கருமுட்டை வெளிவரலாம்.

இந்த காலக்கணக்கு, மாதவிலக்கு சுழற்சி சரியாக உள்ள பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
Share:

மஞ்சள் தினமும் பூசலாமா?

ங்கலகரமான பொருளாக கருதப்படும் மஞ்சள் பெண்களுக்கான அழகு - வசீகரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மஞ்சளை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இதற்கு காரணம், அது மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதுதான். அதே மஞ்சளை தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் வயது கூடுதலாக தெரியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

மஞ்சளில் கஸ்தூரி வகை மஞ்சள் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இதன் பயனை முழுமையாக பெற சுத்தமான கஸ்தூரி மஞ்சளை கடலை மாவு அல்லது பாசிப்பயறு மாவில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். குளிப்பதற்கு முன்னதாக, உடலில் தேங்-காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தேய்த்து, அதன்பின் இந்த கஸ்தூரி மஞ்சள் கலவையை பூசி குளிக்க வேண்டும்.

வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் மின்னத் தொடங்கிவிடும். இளமை அழகும் ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.
Share:

வியாழன், 4 மார்ச், 2010

தாய் என்றொரு தெய்வம்...


ந்த தாய்க்கு அவன் ஒரே மகன். அவன் ஒரு தாசியிடம் மனதை பறிகொடுத்துவிட்டான். அவளை தேடிச் சென்று, தேடிச்சென்று கையில் இருந்த பணத்தை எல்லாம் இழந்தான்.

அவனிடம் இனி பணம் எதுவும் இல்லை என்கிற நிலை வந்தபோது, அந்த தாசி அவனை எட்டிப்பார்க்கவே மறுத்துவிட்டாள்.

ஒருநாள், "உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை" என்று அவள் காலிலேயே விழுந்துவிட்டான். "உனக்கு என்ன வேண்டுமோ கேள், தருகிறேன்! ஆனால், என்னை வரவேண்டாம் என்று மட்டும் சொல்லிவிடாதே" என்றும் கெஞ்சினான்.

அந்த தாசிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவள் கேலியாக சிரித்துக் கொண்டே, "உன் தாயின் இதயம் எனக்கு வேண்டும். தருவாயா?" என்று கேட்டாள்.

காமத்தின் மயக்கத்தில் சிக்கியிருந்த அவன், "இதோ கொண்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு வீட்டுக்கு சென்றான்.

"அம்மா! அவள் என்றால் எனக்கு உயிர் என்று உனக்கு நன்றாகவே தெரியும். அவளுக்கு கொடுக்க இப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை. உன் இதயம் வேண்டும் என்று கேட்கிறாள். நீ அதை எனக்கு கொடுப்பாயா? அவளை பார்க்காமல் என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது" என்று கூறி அழுதான்.

எந்த தாய்தான் மகன் கேட்டால், இல்லை என்று சொல்வாள்? உடனே அவள், "மகனே! என் இதயத்தை கொடுத்தால் அவள் உன்னுடனேயே இருப்பாளா?" என்று கேட்டாள். அதற்கு அவன் "இருப்பாள்" என்றான்.

அந்த தாயும், தன்னை கொன்று இதயத்தை வெட்டி எடுத்துக்கொள்ளும்படி கூறினாள். அதன்படி, அந்த அன்பான தாயை கொன்ற அவன், தாசி கேட்டவாறு இதயத்தையும் தனியாக வெட்டியெடுத்தான்.

வலது கையில் அதை ஏந்தியபடி, தனது அன்புக்குரிய தாசி வீட்டை நோக்கி வேகமாக நடந்தான். செல்லும் வழியில் கல் தடுக்கி கீழே விழுந்தான். கையில் இருந்த தாயின் இதயமும் கீழே விழுந்தது.

அந்த இதயம், கீழே விழுந்த அவனைப் பார்த்து, "மகனே வலிக்கிறதா? நான் உயிரோடு இருந்தால் உன் காயத்திற்கு மருத்துவம் பார்த்து இருப்பேனே?" என்றது.

"இப்படிப்பட்ட தாயையா எவளோ ஒருத்திக்காக வெட்டிக்கொன்றேன்?" என்று அப்போது அலறிய அவன், அங்கேயே உயிர்விட்டான்.

- தாயின் அன்பு எப்படிப்பட்டது என்பதற்காக சொல்லப்பட்ட கதை இது.


அன்புக்கு உதாரணம்தான் தாய். ஒரு குழந்தையை பெற்றெடுக்கும்முன் எவ்வளவு போராட்டங்களையோ ஒரு பெண் சந்திக்கிறாள். ஒருவேளை அந்த குழந்தையை பெற்றெடுக்க காலதாமதம் ஆகிவிட்டாள் மலடி என்றெல்லாம்கூட பட்டப்பெயர் வாங்கிக்கொள்கிறாள்.

அந்த குழந்தை பிறந்து, அவள் தாயானதும் அக்குழந்தையை வளர்க்க எவ்வளவோ கஷ்டப்படுகிறாள்.

தூக்கத்தை துறக்கிறாள். உணவை மறக்கிறாள். பெற்ற குழந்தையே எல்லாம் என்று வாழ்கிறாள். அந்த குழந்தை ஒரு நோய் என்றால் பதறிப்போகிறாள். தன் உயிரைக் கொடுத்தாவது குழந்தையை காப்பாற்றிவிட முயற்சிக்கிறாள்.

அதே குழந்தை வளர்ந்து ஆளானதும், அந்த குழந்தையின் கல்விக்காக ஒரு பெரிய போராட்டமே நடத்துகிறாள். அணிந்திருக்கும் ஒன்றிரண்டு நகைகளை விற்றுகூட குழந்தையை படிக்க வைக்கிறாள்.

குழந்தை படித்து முடித்து நல்ல நிலைக்கு வந்ததும் திருமணமும் செய்து வைக்கிறாள். திருமணத்திற்கு பிறகு அவளுக்கு பெற்ற குழந்தையின் ஆதரவு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

இப்படி வாழ்க்கையை அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்பவள் ஒரு பெண்தான். அவள்தான் தாயாக பரிணமிக்கிறாள்.

ஒரு குழந்தை நல்ல குழந்தையா? தீய வழியில் செல்லும் குழந்தையா? என்பது அதன் அன்னையாகிய தாய் வளர்ப்பதில்தான் இருக்கிறது.

இன்று நீங்கள் இந்த சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் தாயை மனதார வாழ்த்துங்கள். உங்களை இந்த அளவுக்கு ஆளாக்கிய அந்த தாய்க்கு நன்றி செலுத்துங்கள்.

அந்த உன்னத தாய் இன்று உயிரோடு இருந்தால், ஒரு தெய்வத்திற்கு இணையாக போற்றுங்கள். நடமாடும் தெய்வம் அவள் ஒருத்திதான்.
எந்த தாயும் தனது குழந்தை நல்ல வழியில் செல்ல வேண்டும், பிறர் போற்றும்படியாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவாள். இதற்கு விதிவிலக்கான தாயும் இருக்கலாம். இதுபற்றி விரிவாக அலச தேவையில்லை.

தனது பிள்ளைக்கு நல்லது நடக்கும் என்றால், அதற்காக தனது உயிரையே கொடுக்க துணிபவள்தான் உண்மையானத் தாய்.

நீங்கள் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்லும்போது Ôபாக்கெட் மணிÕக்கு பணம் இல்லையென்றால், அதற்காக அங்கு இங்கு என்று அலைந்து, அதை வாங்கிக்கொண்டு வந்து மகிழ்ச்சியோடு உங்களிடம் கொடுத்தவள் யார்? உங்கள் தாய்தானே?

நோயால் பாதிக்கப்பட்டு நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் உங்கள் காலடியிலேயே, உங்களுக்காக கிடந்து வேண்டுபவளும் அந்த தாய்தானே?

திருவிழாவில் பெற்ற பிள்ளை மற்றவர்களுக்கு இணையாக புத்தாடை அணிய வேண்டும் என்பதற்காக, பழைய ஆடையை அணிபவளும் அதே தாய்தானே?
இப்படிப்பட்ட தாயை நாம் எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும்? அதை நாம் செய்து கொண்டிருக்கிறோமா?

பெரும்பாலும் இல்லைதானே?

எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பெற்ற பிள்ளைக்காக வாழ்பவள்தான் தாய். அதனால்தான், இந்த பூமியைக்கூட பூமாதேவி என்கிறோம். நதிகளுக்குக் கூட பெண்ணின் பெயரை வைத்துதான் போற்றுகிறோம்.

பூமிக்கு, நதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பங்கையாவது பெற்ற தாய்க்கு கொடுப்போமே! அவளை நாம் போற்றாவிட்டால் வேறு யார்தான் போற்றுவார்கள்?
Share:

புதன், 3 மார்ச், 2010

சாமியார்கள் லீலைக்கு யார் காரணம்?



காம வலையில் பெண்களை வீழ்த்தும் போலிச் சாமியார்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க வேண்டும் என்றால் பக்தர்கள் மத்தியில்தான், குறிப்பாக பக்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

ஆசிரமத்தை தேடிச் சென்றால், அங்குள்ள அமைதியான சூழ்நிலையில் நிச்சயம் மக்களுக்கு மனசாந்தி கிடைக்கும். ஆனால், அங்குள்ள போலிச் சாமியார்கள் பற்றி உங்களுக்கு தெரியாதே?

இனியாவது, போலிச் சாமியாராக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த சாமியாராக இருந்தாலும் சரி, அவர்களைத் தேடிச் செல்வதை விட்டு விடுங்கள். வேண்டும் என்றால் கோவிலுக்குச் செல்லுங்கள்.

அங்கே சாமியிடம் மட்டும் முறையிடுங்கள். மனப்பாரம் குறையும். மாறாக, அர்ச்சகரிடம் சொன்னால்... போலி அர்ச்சகர்  எண்ணிக்கையும் அதிகமாகிவிடும்.

பொதுவாக, சாதாரண போலிச் சாமியார்கள் , போலி அர்ச்சகர்கள் பெண்களிடம் தங்களது வேலையை உடனடியாக காட்டிவிட மாட்டார்கள். படிப்படியாகத் தான் காயை நகர்த்துவார்கள்.

இவர்களது ஒரே குறி, இல்லற வாழ்க்கையில் தோற்றுப்போன, தோல்வி முகத்தில் உள்ள நடுத்தர வயது பெண்கள்தான்.

ஒரு பெண் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறாளா? இல்லையா? என்பதை அவளது முகத்தை பார்த்தே கண்டுபிடித்துவிடலாம். இந்த சபலங்கள் இந்த விஷயத்தில் அனுபவ ரீதியாக இன்னும் தேர்ச்சிப்பெற்று காணப்படுவார்கள்.

இப்படி, குடும்ப வாழ்க்கையில் திருப்தியற்ற நிலையில் வாழும் பெண்களிடம் இந்த சபலங்கள் தாங்களாகவே முன்வந்து பேச ஆரம்பிப்பார்கள். சம்பந்தப்பட்ட பெண் முன்பின் அறிமுகம் இல்லாதவளாக இருந்தாலும்கூட, இவர்களே அவர்களிடம் ஆஜராகி, ‘இப்படி செய்தால் பிரச்சினை சரியாகிவிடும்; நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே...’ என்று ஆறுதல் கூறி, ஒரு ஈர்ப்பை தேடிக்கொள்வார்கள்.

மனதில் பிரச்சினைகளை சுமந்து காணப்படுபவர்களிடம் யாரேனும் ஆறுதல் கூறினால், அந்த மனச்சுமை சற்று குறைவதுபோல் தோன்றும். இது இயற்கை.

இதேப்போன்று சபலங்கள் விரிக்கும் ஆறுதல் வலையில் முதல்கட்டமாக பிரச்சினைகளை சுமக்கும் பெண்கள் விழுந்து விடுகிறார்கள். வேறு நபர்களிடம் தனக்கான ஆறுதல் கிடைக்காதபட்சத்தில் இந்த பெண்களே, சம்பந்தமே இல்லாமல் ஆறுதல் சொன்ன சபலங்களைத் தேடி வருகிறார்கள்.
இப்படி ஒரு பெண் தங்களை தேடி வர ஆரம்பித்துவிட்டால், இந்த சபலங்கள் அடுத்தகட்ட முயற்சியில் இறங்குகிறார்கள்.

‘விளை நிலத்தில் களைச்செடிகள் இல்லாமல் இருந்தால்தான் பயிர்களில் நல்ல மகசூல் பெற முடியும்;  அதேப்போன்று, குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சினைகள் - பிரச்சினைக்குரியவர்கள் இல்லாமல் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும்...’ என்று ஆறுதல் சொல்வதுபோல் ஆசை வார்த்தைகள்கூறி, தங்கள் பக்கம் சாய்த்து விடுகிறார்கள்.

இப்படி, சபலங்கள் பக்கம் தன்னை அறியாமலேயே சாய்ந்துவிடும் பெண்கள், ஒருவித ஈர்ப்பில் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் ஆமாம் போட ஆரம்பித்து விடுகிறார்கள். ஒருக்கட்டத்தில் தங்களையே அவர்களிடம் ஒப்படைக்க தயாராகிவிடுகிறார்கள்.

ஒருமுறை இந்த ‘தவறு’ நடந்து, பின் அதை தவறு என்று உணர்ந்து சம்பந்தப்பட்ட பெண்கள் திருந்தினாலும்கூட, இந்த சபலங்கள் முன்பு நடந்த ‘தவறை’ ஆயுதமாக கையில் எடுத்து, முழுவதுமாக இந்த பெண்களை தங்கள் பிடியில் சிக்க வைத்து விடுகிறார்கள்.

இதுபோன்ற சபலங்களிடம் இருந்து குடும்பப் பெண்கள் தப்பிக்க என்ன செய்யலாம்?

* ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்றால் அங்கே கணவன்-மனைவி உறவு சுமூகமாக இல்லை என்றுதான் அர்த்தம். தங்களுக்குள் செக்ஸ் விஷயம் முதல் செல்லாத விஷயம் வரை எந்த பிரச்சினை இருந்தாலும், கணவன்&மனைவி இருவரும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையில் இன்னொருவர் மூக்கை நுழைத்தால், தம்பதியருக்குள் ஈகோ ஏற்பட்டு, பிரச்சினை இன்னும் பெரியதாகிவிடும். அதனால், முடிந்தவரை பிரச்சினையை உங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லாத சூழ்நிலையில், மனோதத்துவ ஆலோசனையை நாடலாம்.

* அந்தரங்க விஷயங்களை உங்கள் கணவனிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவர்கள் காதுகளுக்கு இந்த விஷயம் போனால் உங்களை சபலங்கள் பின்தொடரலாம்.

* முன்பின் தெரியாத ஆண்களிடம் உங்கள் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

*சமீபத்தில் அறிமுகமான ஒரு ஆண், உங்கள் விஷயத்தில் மெனக்கெட்டு அக்கறை எடுத்துக்கொண்டால் அப்போதே உஷாராகிவிடுங்கள்.

* சபலங்கள், ஒரு பெண்ணை தங்கள் வலையில் வீழ்த்த கடைசி கட்டமாக கையில் எடுப்பது செக்ஸ் விஷயங்களைத்தான். அந்த விஷயங்களைப் பற்றி மறைமுகமாக உங்களிடம் கோடிட்டு காட்டி பேச ஆரம்பித்துவிட்டால், அதோடு அவர் உடனான இணைப்பை துண்டித்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி அவர் உங்களை தொந்தரவு செய்தால் போலீசில் புகார் செய்துவிடுங்கள்.

* இப்போதெல்லாம் சிறுவர்கள்கூட கேமரா உள்ள செல்போனைத்தான் பயன்படுத்துகிறார்கள். இப்போதைய நவீன செல்போன் கேமராக்கள் மூலம் துல்லியமாக வீடியோ பதிவு செய்ய முடிகிறது. அதனால், உங்களது உடை அலங்காரம் எந்த சூழ்நிலையிலும் ஆபாசமாக இருக்க வேண்டாம்.

* முக்கியமாக, உங்களுக்குள் எந்த சூழ்நிலையிலும் சபலம் எட்டிப் பார்க்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்களே சபலத்தை நினைத்துவிட்டால், சபலங்கள் எய்த அம்பு உங்களை குறி தவறாமல் அவர்கள் வலையில் வீழ்த்திவிடும்.

இன்னொரு விஷயம்... பிரச்சினை இல்லாத குடும்பமே கிடையாது. எல்லா கணவன்-மனைவிக்குள்ளும் பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. அந்த பிரச்சினை அவர்களோடு தீர்க்கப்பட்டால் வாழ்க்கையில் எந்த தொல்லையும் இல்லை. பிரச்சினைகளை வீதிக்கு கொண்டு வந்துவிட்டால், அதனால் ஏற்படும் அவமானத்தையும், பின்விளைவுகளையும் சந்தித்துதான் ஆக வேண்டும்!

அதனால் உஷார்... உஷார்....
Share:

வியாழன், 25 பிப்ரவரி, 2010

வயதுக்கு வந்த பெண்களுக்கு...


அந்த காலத்தில் பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிட்டால், அவர்களது கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உளுந்தங்களி கொடுக்கும் வழக்கம் இருந்தது. இந்த களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து ஆகியவை நிறையவே காணப்படுகிறது. இவை கர்ப்பப் பையை பலப்படுத்துகின்றன.

இந்த உளுந்தங்களியை செய்வது எப்படி தெரியுமா?

அரை கப் உளுந்தை வாணலியில் வறுத்து, அதோடு 1/2 கப் அரிசி சேர்த்து மாவாக்கி சலித்துக்கொள்ளவும்.

2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கி, வெல்லம் கரைந்ததும் அரை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.

வடிகட்டி எடுத்த வெல்லக்கரைசலுடன் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அது நன்கு கொதிக்கும்போது மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி, குறைந்த தணலில் சுமார் 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.

பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி, 2 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு கலந்து சாப்பிடலாம்.
Share:

அவல் பாயசம்


தேவையானவை :

பால்                                             - 1 லிட்டர்
வெள்ளை கெட்டி அவல்     - 1 கரண்டி
சர்க்கரை                                   - 200 கிராம்
ஏலக்காய்                                  - 4
பச்சை கற்பூரம்                      - ஒரு சிட்டிகை
முந்திரி, திராட்சை                - தேவையான அளவு

செய்முறை :

1. வாணலியில் சிறிது நெய்விட்டு அவல் பொரியும் வரை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஏலக்காயை சேர்த்து மிக்ஸியில் பவுடர் போன்று நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

2. பாலை நன்கு காய்ச்சி அதனுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

3. அந்த பாலில் அரைத்த அவலை சிறிது சிறி-தாக கொட்டிக்கொண்டே கிளறி விடுங்கள்.

4. கலவை நன்கு கொதித்தவுடன் பச்சை கற்பூரம் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கிவிடுங்கள்.

5. தேவை என்றால் குங்குமப்பூவும் சிறிது சேர்க்கலாம். கமகமக்கும் அவல் பாயசம் ரெடி!

விளக்கு பூஜையின்போதோ, அஷ்டலட்சுமி வழிபாட்டின்போதோ இதை நிவேதனம் செய்தால் செல்வம் கொட்டும் என்கிறார்கள்.
Share:

கேழ்வரகு இனிப்பு அடை


தேவையானவை :

கேழ்வரகு (ராகி) மாவு   - ஒரு கப்
வெல்லம்                            -  1/2 கப்
துருவிய தேங்காய்         - 1/4 கப்
ஏலக்காய்ப் பொடி,
நல்லெண்ணெய்              - தேவையான அளவு

செய்முறை :


1. வெல்லத்தை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு கரண்டி அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும். வெல்லம் முழுவதுமாக கரைந்ததும் அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

2. வடிகட்டிய வெல்லக் கரைசலோடு துருவிய தேங்காய், ஏலக்காய்ப் பொடி, கேழ்வரகு மாவு ஆகியவற்றை போட்டு கட்டிப்படாமல் கிளறிவிடவும்.

3. மாவு உதிரியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல் பிசையவும்.

4. சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக மாவை உருட்டுங்கள். வாழையிலையில் எண்ணெய் தடவி, அதில் உருண்டைகளை மெல்லிய வடைகள் போன்று தட்டி, சூடான தோசைக் கல்லில் நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

கேழ்வரகு இனிப்பு அடை தயார்.

பின் குறிப்பு : இந்த வகை அடை செய்யும்போது, கேழ்வரகு மாவு நன்கு வேக வேண்டும். அதனால், சிறு தீயில் அதை நன்றாக வேகவிடுங்கள்.

காரடையான்நோன்பு மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்கள், அடை செய்து நைவேத்தியம் செய்வார்கள்.
Share:

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

அரிசி - பயத்தம் பருப்பு பாயசம்


தேவையானவை
:

அரிசி                          - 100 கிராம்
பயத்தம் பருப்பு     - 50 கிராம்
சர்க்கரை                  - 200 கிராம்
பால்                           - 250 கிராம்
நெய்                          - 15 கிராம்
முந்திரி                    - 50 கிராம்

செய்முறை :

1. அரிசி மற்றும் பயத்தம் பருப்பை தனித்தனியாக தண்ணீரில் கழுவி உலர்த்தி தனித்தனியாகவே பொன்னிறமாக வறுக்கவும்.
2. வறுத்த அரிசி மற்றும் பயத்தம் பருப்பை மிக்சியில் போட்டு அரைக்கவும். அரைக்கும்போது பவுடராக அரைத்துவிடக் கூடாது. ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.
3. ஒரு பாத்திரத்தில் இரண்டு மாவையும் போட்டு தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க விடுங்கள். அரைத்த அரிசி, பருப்பு மாவு நன்றாக வேக வேண்டும். அவை வெந்து கூழானதும் பால் மற்றும் சர்க்கரையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி விடுங்கள்.
4. பாத்திரத்தை இறக்கும்போது, நெய்யில் பொன்னிறமாக வறுத்தெடுத்த முந்திரிப் பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். விரும்பினால் ஏலக்காயும் சேர்க்கலாம்.

சுவையான, வித்தியாசமான அரிசி-பயத்தம் பருப்பு பாயசம் ரெடி!
Share:

திங்கள், 22 பிப்ரவரி, 2010

ஹோலி கலாட்டாக்கள்

ஹோலிப் பண்டிகை என்றாலே வட மாநிலங்கள் களைக் கட்டிவிடும். இளசுகள் முதல் பெருசுகள்வரை எல்லோரும் வண்ணப் பொடிகள் ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்தும், வர்ணம் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்தும் மகிழ்வார்கள்.

இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் எல்லாம் வேறுபடுவதுபோல், இந்த பண்டிகை கொண்டாட்டமும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

ஹோலி ராஜா

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில், கிருஷ்ணர் வெண்ணெய் திருடியதையும், கோபியர் அதை தடுக்க முயன்றதையும் நினைவுகூறும் வகையில் ஹோலியை கொண்டாடுகிறார்கள்.

தெருவில் வெண்ணெய் நிரம்பிய பானையை தொங்க விடுகிறார்கள். இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி அந்த வெண்ணெய் பானையை உடைக்க முயற்சிப்பதும், இளம்பெண்கள் அவர்கள் மீது வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றி தடுக்க முயற்சிப்பதும் சுவாராசியமாக இருக்கும்.
போட்டியின் இறுதியில் வெண்ணெய் பானையை உடைப்பவர் அந்த ஆண்டின் ஹோலி ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அடி வாங்கும் ஆண்கள்


உத்தரப்பிரதேசத்தில் உள்ள பார்சானா என்ற இடத்தில் ஹோலிப் பண்டிகை கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது.

அங்குள்ள ராதா ராணி கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுகிறார்கள். அவர்கள் முன்னிலையில் ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்களை துண்டும் விதத்தில் ஒருவித பாடல் பாடுகிறார்கள். அவர்கள் மீது உரிமையோடு பொய்க் கோபம் கொள்ளும் பெண்கள், அவர்களை நீண்ட தடியால் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள் (நம் இடைக்கால சினிமாக்களில் காட்டப்படும் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் காட்சியை கற்பனை செய்து கொள்ளுங்கள்). அடி என்றால் பலமான அடியெல்லாம் கிடையாது. இது செல்ல அடி!

சிலநேரங்களில், தப்பித்தவறி சிலருக்கு பலத்த அடி விழுந்து விடுவது உண்டு. அதில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஆண்கள் கவச உடையை அணிந்து கொள்கிறார்கள்.விநோதமான ஹோலிப் பண்டிகையாக அமைகிறது இந்த விழா.

சேலை அடி

குஜராத்தில் கூட்டுக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொண்டாடும் ஹோலிப் பண்டிகை சற்று வித்தியாசமாக அமைகிறது.

திருமணம் ஆன அல்லது ஆகாத குஜராத்திய பெண்கள், தங்கள் சகோதரியின் கணவன் மீது கேலியான கோபம் கொண்டு, தங்கள் சேலையில் கயிற்றைச் சுற்றி அதைக்கொண்டு அவர்களை செல்லமாக அடிப்பது ஹோலி கொண்டாட்டத்தின் இன்னொரு பகுதியாக அமைகிறது.

தங்களை செல்லமாக அடிக்கும், மச்சினிச்சிகளுக்கு அந்த மச்சான்கள் அடிக்கு பதிலாக இனிப்பு பண்டங்களை வாங்கிக்கொடுத்து அசத்துகிறார்கள்.

கிருஷ்ண லீலை

வங்காளத்தில் நடைபெறும் ஹோலி விழாவின்போது, கிருஷ்ணர், ராதாவின் சிலைகள் அழகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. அப்போது, இளம்பெண்கள் பாடிக்கொண்டும், நடனமாடியபடியும் ஊர்வலத்தில் வருகிறார்கள்.

அவர்களை வேடிக்கைப் பார்க்க வரும் ஆண்கள், அவர்கள் மீது வண்ணப்பொடிகளை வீசுவதோடு, வண்ணம் கலந்த நீரைப் பீய்ச்சியடித்தும் மகிழ்கிறார்கள். கிருஷ்ண லீலைகளை விளக்குவதாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.


‘குஜால்‘ படுத்தும் ‘குலால்‘!

மணிப்பூரில் ஹோலி அன்று ‘குலால்‘ என்கிற ஒரு வகை விளையாட்டை ஆண்களும், பெண்களும் கலந்து விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டில் ஒரு பெண் கலந்துகொள்ள வேண்டும் என்றால், அவளுக்கு ஆண்கள் பணம் கொடுக்க வேண்டும்.

பவுர்ணமி நிலவொளியில் இவர்கள் ஆடும் ‘குலால்‘ ஆட்டம், அதை காண்போரை ‘குஜால்‘ படுத்திவிடுவது இந்த ஆட்டத்தின் தனிச்சிறப்பு.
Share:

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

அய்யா வைகுண்டர் நிகழ்த்திய அற்புதம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு என்ற இடத்தில் அவதரித்த அய்யா வைகுண்டர் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அதில் ஒன்று...

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது -

இயற்கையின் செல்வச் செழிப்புக்கு பெயர்போன கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அந்த ஊரின் பெயர் சாரையோடு. இந்த ஊரைச் சேர்ந்தவள் பிச்சையம்மாள் என்ற இளம்பெண். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவள் சின்ன வயதிலேயே தாய்-தந்தையை இழந்துவிட்டாள். அதனால், சித்தாப்பாவின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தாள்.

பிச்சையம்மாளுக்கு 18 வயது ஆனபோது அவளது சித்தப்பாவும் இறந்துவிட்டார். அதனால், தனது குல தொழிலான துணி வெளுக்கும் வேலையை செய்து வாழ்க்கை நடத்தி வந்தாள்.

பெயருக்கு ஏற்றதுபோல் வறுமை அவளது குடும்பத்தில் காணப்பட்டாலும் அழகில் பணக்காரியாகவே இருந்தாள் இந்த பிச்சையம்மாள். அவளது பருவ வயது அவளை இன்னும் அழகாக மெருகூட்டி இருந்தது.

அவளது அழகில் சொக்கிப்போனவர்கள், அவளை அடையவும் ஆசைப்பட்டார்கள். அவளிடம் தங்களது ஆசையை தீர்த்துக்கொள்ள ஆசைப்பட்டவர்கள், அவளை வாழ்க்கைத்துணைவியாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.

காலம் வேகமாக சுழன்றது.

பிச்சையம்மாளின் வயது 26ஐ தொட்டுவிட்டது. தோள் கொடுத்து உதவ உற்றார்-உறவினர்கள் இல்லாததால் அவளது வாழ்க்கை பாலைவனமாய் வெறுமனே கிடந்தது.

"எனது வாழ்க்கை கடைசி வரைக்கும் இப்படியே போய்விடுமா?" என்று அவள் தனக்குள் புலம்பி அழுத நாட்கள் ஏராளம்! ஏராளம்!

ஒருநாள் சாமிதோப்புக்கு சென்ற பிச்சையம்மாள் அய்யா வைகுண்டரின் பாதத்தில் விழுந்து வணங்கினாள்.

அவளை "பிச்சையம்மா!" என்று அழைத்தார் அய்யா.

அப்போது பிச்சையம்மாளுக்கு ஒன்றும் ஓடவில்லை. நமது பெயர் எப்படி அய்யாவுக்குத் தெரியும்? என்று மனதுக்குள் பேராந்த பரவசத்திற்கு ஆனாள்.
அய்யாவிடம் தனது மனக்குறைகளை கொட்டி, அதற்கான தீர்வை வேண்டினாள். 26 வயது ஆகியும் இதுவரை திருமணம் ஆகவில்லை என்பதையும் சொன்னாள்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட அய்யா, "இன்று முதல் உன் துயரம் எல்லாம் நீங்கும். இன்னும் சில நாட்களில் நீ துணையோடு வருவாய்!" என்று வாழ்த்தினார்.

அய்யாவின் வாழ்த்தில் உள்ளம் பூரித்துப் போனாள் பிச்சையம்மாள். அய்யாவிடம் விடைபெற்று தனது ஊருக்கு திரும்பினாள்.

ஒருநாள் இரவு பிச்சையம்மாளின் கனவில் அய்யாவே தோன்றினார்.
"மகளே! உன் வீட்டுக்கு நாளை காலை எனது சீடர்கள் சிலர் வரவார்கள். அவர்களுக்கு உன் வீட்டிலேயே உண்ண உணவு கொடு" என்றார்.

ஏற்கனவே அய்யாவை நேரில் கண்டு பரவசம் ஆன பிச்சையம்மாள், தற்போது மீண்டும் அய்யாவே கனவில் தோன்றி அருளியதால் இன்னும் அதிகமான பரவசத்திற்கு ஆளானாள்.

மறுநாள் காலை அய்யாவின் சீடர்களை எதிர்பார்த்து வீட்டு வாசலில் வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு பரிமாற அறுசுவை உணவும் தயாரித்து வைத்திருந்தாள்.

சிறிதுநேரத்தில் அய்யாவின் சீடர்களான தர்ம சீசர், வீம சீசர், அர்ச்சுன சீசர், நகுல சீசர், சகாதேவ சீசர் ஆகிய 5 பேர் வந்தனர்.

தன் பெயரை தெரிவித்து, அவர்களை உள்ளம் மகிழ வரவேற்ற பிச்சையம்மாள், தனது குடிசை வீட்டிற்குள் அவர்களை அழைத்துச் சென்றாள். அய்யா கனவில் வந்து சொன்னது அப்படி நடந்துவிட்டதால் அப்போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.

அய்யாவின் வேண்டுகோளின்பேரில் தயாரித்து வைத்திருந்த உணவை அவர்களுக்கு பரிமாற தயாரானாள்.

ஆனால், அந்த சீடர்கள் என்ன நினைத்தார்களோ, உணவு உட்கொள்ளாமல், திருநாமத்தை மட்டும் அவளுக்கு பூசிவிட்டு திரும்பிவிட்டார்கள்.
பிச்சையம்மாளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தயார் செய்த உணவு வகைகளை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள்.
சிறிதுநேர யோசனைக்கு பிறகு அந்த முடிவை எடுத்தாள்.

தயார் செய்த அன்னம், சாம்பார் மற்றும் பதார்த்தங்களை, வீட்டின் பின்புறம் உள்ள காலியிடத்தில் ஆழமாக குழி தோண்டி, அதற்குள் பானையோடு புதைத்துவிட்டாள்.

அய்யா வைகுண்டர்

ஆசை ஆசையாய் தயார் செய்த உணவு வீணாகிவிட்டதே என்று வெகுநேரம் அழுதாள். பிறகு, தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.
இதற்கிடையில், பிச்சையம்மாள் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய அய்யாவின் சீடர்கள் 5 பேரும் மறுநாள் சாமிதோப்பை அடைந்தார்கள்.

அய்யாவை வணங்கி, கடந்த 7 நாட்களாக நாட்டு மக்களின் நிலையை அறிய சென்றபோது தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை சொல்ல முயன்றனர்.
அப்போது அய்யா வைகுண்டரே குறுக்கிட்டு பேசினார்.

"பிச்சையம்மாள் உங்களுக்கு உண்ண உணவு கொடுத்தாளா?" என்று கேட்டார்.
சீடர்கள் அப்படியே திகைத்துப் போய்விட்டார்கள்.

"எதற்காக வெளியே சென்று வந்தோம் என்பது பற்றி கேட்காமல், பிச்சையம்மாள் என்ற பெண்ணைப் பற்றி கேட்கிறாரே..." என்று எண்ணி அமைதியாக இருந்தனர்.

மீண்டும் அதுபற்றி அய்யாவே கேட்க, அங்கு சாப்பிடவில்லை என்ற உண்மையை பயந்தபடியே ஒத்துக்கொண்டனர் அவர்கள்.
அப்போது அய்யாவே பேசினார்.

"சீடர்களே! பாவிகளால் வகுக்கப்பட்ட சாதி என்ற பேதத்தை உங்கள் மனதைவிட்டு அகற்றிவிடுங்கள். எல்லோரும் என் மக்களே! அந்த பிச்சையம்மாள் என் மகள். அவள் உங்களுக்காக தயார் செய்த சாப்பாட்டை நீங்களே சாப்பிட்டாக வேண்டும். எங்கு யார் சாப்பாடு கொடுத்தாலும், அங்கே வேண்டாம் என்று நீங்கள் சொல்லக்கூடாது. இப்போது, உடனே பிச்சையம்மாள் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்று சாப்பிட்டு வாருங்கள்" என்று உத்தரவிட்டார் அய்யா.

அடுத்த நிமிடமே அந்த 5 சீடர்களும் பிச்சையம்மாளின் ஊரான சாரையோடுக்கு புறப்பட்டனர். மறுநாள், அவளது வீட்டை அடைந்தனர்.

அங்கே பிச்சையம்மாள் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அவளது வாடிய முகமும், தேகமும், அவள் சாப்பிட்டு சில நாட்கள் ஆகிவிட்டது என்பதை தெளிவுப்படுத்தின.

சீடர்கள் அவளை இந்த கோலத்தில் பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த விவரங்களை தெளிவாகக்கூறி அவளுக்கு ஆறுதல் கூறினர். அய்யாவே சாப்பிட்டு வருமாறு பணித்ததையும் தெரிவித்தனர்.
இதை கேட்ட மாத்திரத்தில் சோகத்தில் இருந்து மீண்டு மகிழ்ச்சி அடைந்தாள் பிச்சையம்மாள். உணவு படைக்க தயார் ஆனாள்.

அப்போதுதான் அவளுக்கு சமைக்கவே இல்லையே என்பது நினைவுக்கு வந்தது.

இருந்தாலும், சோர்ந்து போய்விடவில்லை அவள்.
4 நாட்களுக்கு முன்பு பூமிக்கு அடியில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த சாப்பாட்டை எடுக்க தோண்டினாள்.

அய்யாவே சீடர்களை சாப்பிட்டு வருமாறு தனது சீடர்களை அனுப்பி இருப்பதால், ஏற்கனவே புதைத்து வைத்து சாப்பாடு கெட்டுப்போய் இருக்காது என்ற நம்பிக்கையுடன் தோண்டினாள்.

புதைத்து வைத்திருந்த உணவு பானையை வெளியே எடுத்தாள்.
மூடியை திறந்தாள்.

அவள் எதிர்பார்த்ததுபோலவே உணவு கெட்டுப்போகாமல், அன்று சமைத்த உணவுபோல் அப்படியே இருந்தது.

அவளது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது.
அய்யாவின் சீடர்களும் அதைப் பார்த்து பரவசம் ஆனார்கள்.
சிறிதுநேரத்தில் விருந்து நடைபெற்றது. சீடர்கள் 5 பேரும் பிச்சையம்மாள் பரிமாறிய சாப்பாட்டை மனமார ஏற்று சாப்பிட்டனர்.

விருந்து முடிந்ததும் அவளை ஆசீர்வதித்துவிட்டு சாமிதோப்புக்கு திரும்பினர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் பிச்சையம்மாளுக்கு ஏற்ற வரன் அவளைத் தேடி வந்தது. அவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை தொடங்கினாள் அவள்.

Share:

சனி, 20 பிப்ரவரி, 2010

கலர்புல் கொண்டாட்டம்!



ந்துக்கள் கொண்டாடும் கலர்புல் திருவிழா ஹோலி. இந்தியாவின் வட மாநிலத்தை சேர்ந்தவர்களே இந்த திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். பனி காலத்திற்கு விடையளித்து, வசந்த காலத்திற்கு வழிவிடும் விதத்தில் இந்த விழா அமைகிறது.

கிருஷ்ண பகவான், தனது இளம் வயதில் கோபியர்களுடன் ஆடிய விளையாட்டை நினைவுபடுத்தும் வகையிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

தீராத விளையாட்டு பிள்ளையான கிருஷ்ணர், தனது அன்னை யசோதாவிடம், "ராதை அழகாக இருக்கிறாள். நான் மட்டும் ஏன் கருமையாக இருக்கிறேன்?" என்று கேட்டார். அதற்கு யசோதா, "ராதையின் நிறம் மீது உனக்கு பொறாமை இருந்தால் அவள் மீது வர்ணங்களைப் பூசு. அவ்வாறு பூசினால் அவளும் உன்னைப் போன்ற கருமையான நிறத்தில் காட்சியளிப்பாள்" என்று பதிலளித்தார். அதன்படி, கிருஷ்ணரும் ராதை மீது வர்ணங்களை அள்ளிப்பூசினார்.

இப்போதைய ஹோலிப்பண்டிகை கொண்டாட்டத்தின்போதும், வண்ணப் பொடிகளை இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசியும், பூசியும், வண்ண நீரை பீய்ச்சியடித்தும் மகிழ்கிறார்கள்.

இந்த பண்டிகை கொண்டாட்டத்துக்கு காரணமாக இரணியன் கதையையும் சொல்கிறார்கள்.

இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுளாக வணங்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால், அவனது மகனான பிரகலாதனோ, மகாவிஷ்ணுவே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். கோபம் கொண்ட இரணியன், மகன் என்றும் பார்க்காமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.

இதற்கு தீர்வு காண நினைத்த இரணியன், தனது சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். ஹோலிகா, நெருப்பினால் எரியாத சக்தி கொண்டவள். அவளிடம் தனது மகனை அழிக்கும் பணியை ஒப்படைத்தான்.

அதன்படி, பிரகலாதனை தூக்கிக்கொண்டு நெருப்புக்குள் புகுந்தாள் ஹோலிகா. அந்த நெருப்பில் தனது மகன் இறந்து விடுவான் என்று கணக்கு போட்டான் இரணியன். ஆனால் நடந்ததோ வேறு.


மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் இருந்த பிரகலாதனை நெருப்பு ஒன்றும் செய்யவில்லை. ஆனால், தீய எண்ணத்துடன் தீக்குள் நுழைந்த ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.

இதை நினைவுபடுத்தும் வகையில் ஹோலி பண்டிகை அன்று திறந்தவெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வதும் உண்டு. இவ்வாறு ஹோலிகா அழிந்த தினமே ஹோலி பண்டிகையாக மாறிவிட்டது என்கிறது அந்த புராணக்கதை.

காமன் விழா :
மன்மதன்

தமிழ்நாட்டில் காமதேவனது உன்னதத் தியாகத்தை வியந்து போற்றும் வழிபாட்டு நிகழ்வாக ஹோலிப் பண்டிகை கருதப்படுகிறது.

ஒருசமயம் பார்வதி தேவி தட்சனுக்கு மகளாகப் பிறந்து தாட்சாயிணி எனப் பெயர் பெற்றாள். பின்னர் தவம் செய்து ஈசனை அடைந்தாள்.

இந்நிலையில், தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். அதற்கு தேவர்கள் அனைவரையும் அழைத்தான். ஆனால் தன் மாப்பிள்ளையான சிவபெருமானை அழைக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட  தாட்சாயிணி, தன் தந்தை யாகம் நடத்தும் இடத்திற்குச் சென்று நியாயம் கேட்டாள். தட்சன் சிவபெருமானை அவமரியாதையாகப் பேசியதால், அந்த யாகத் தீயில் விழுந்து உயிர்விட்டாள்.

அதற்குப்பின் பல நிகழ்வுகள் நடந்தன. சிவபெருமானின் அருளால் மலை அரசனான பர்வதராஜனின் மகளாகப் பார்வதி என்ற  பெயரில் மீண்டும் பிறந்து, ஐந்தாவது வயதில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்தாள் பார்வதி.

காலம் கடந்தது. தன் மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் சிவபெருமான் தியானத்தில் அமர்ந்திருந்தார்.  அதனால் உலகில் உயிர்களின் பிறப்பு இல்லாமல் போனது. இதனால் தேவர்கள்  பிரம்மாவின் தலைமையில் திருமாலிடம் சென்று, உலகின் உயிர்களின் நிலை பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்ட திருமால், சிவபெருமானின் தியானத்தை கலைக்கத் தகுந்தவன் காமன் எனப்படும் மன்மதனே என்று உணர்ந்து,  அவனை அழைத்தார். சிவபெருமானின் தியானத்தைக் கலைக்கும்படி கூறினார்.

திருமாலின் கட்டளைப்படி மன்மதன் தன் மனைவி ரதியுடன் சிவபெருமான் தியானம்  செய்யும் இடம் நோக்கிச் சென்றான். காதல் நினைவாக இருத்தல், அதனை எண்ணிப்  புலம்பல், சோகம், மோகம், மரணம் ஆகியவற்றைக் குறிக்கும் முறையே தாமரை, அசோகு, முல்லை,  மா, நீலம் எனும் ஐந்து மலர்களையும் அம்பாகக் கொண்டு, கரும்பை வில்லாக வளைத்து  சிவபெருமான்மீது தொடுத்தான் மன்மதன்.

மலர் அம்பால் தாக்கப்பட்ட சிவபெருமானின் தியானம் கலைந்தது. தன் தியானத்தைக் கலைத்தது யார்? என்று கோபத்துடன் சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறக்க... அடுத்த நிமிடமே மன்மதன் எரிந்து சாம்பலானான்.

அருகில் இருந்த  ரதி, அதனைக் கண்டு துடிதுடித்தாள். சிவபெருமானிடம் சென்று தன் கணவனை மீண்டும் உயிர் பெறச் செய்மாறு மன்றாடினாள். ரதியின் நிலை அறிந்து, மனமிரங்கிய சிவபெருமான், "நான் பார்வதியைத் திருமணம் செய்து கொண்டபின் உன் கணவன் உயிர்பெற்று எழுவான். ஆனால், உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்; மற்றவர்களுக்குத் தெரிய மாட்டான்' என்று வரம் அருளினார்.

இந்த சம்பவத்தின்படி சிவபெருமான், காமனை எரித்த இடம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருக்குறுங்கை ஆகும். இங்கு காமதகன விழா ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் நடைபெறுகிறது. இங்குள்ள குளத்தின் அடிப்பகுதியில் சாம்பல் மயமாக இருப்பதை இன்றும் நாம் பார்க்கலாம்.

திருக்குறுங்கை கிராமத்தைச் சுற்றி சில கிராமங்கள் இந்த வரலாற்றின் அடிப்படையில்  பெயர்களைக் கொண்டுள்ளன. சிவபெருமான் மீது மலர் அம்பினை ஏவ மன்மதன் கங்கணம்  செய்துகொண்ட இடம் "கங்கணநல்லூர்" என்றும், அவர் தன் கால்களை வளைத்து குறி பார்த்த இடம் "கால்விளை" என்றும், வில் ஏந்திய இடம் "வில்லியநல்லூர்" என்றும் அழைக்கப்படுகின்றன.

ஹோலி கொண்டாட்டம் ...

Share:

கரு வளையம் உங்களை உறுத்துதா?



உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். இதனால் தான் மீன் போன்ற கண்கள் கொண்ட பெண்களை ‘மீன் விழியாள்‘ என்றும், கூரான அம்பு போன்ற கண்களை கொண்டவர்களை ‘வேல் விழியாள்‘ என்றும் சொல்வார்கள்.

சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிடுவது உண்டு. கண் குறைபாட்டை நாம் இங்கே சொல்லவரவில்லை. அழகான கண்ணை சுற்றிலும் திடீரென்று தோன்று கருவளையத்தை தான் சொல்ல வருகிறோம்.


கண்களுக்கு கீழ் நோக்கினால் இந்த கருவளையத்தை கண்டுபிடித்து விடலாம். அந்த இடத்தில், சுமார் அரை அங்குலம் அகலத்திற்கு லேசான கருப்பு நிறத்தில் வில் போன்ற வளைவாக சருமம் காணப்படும். இது ஒரு பெண்ணின் அழகையே கெடுத்துவிடும்.

இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.

போஷாக்கு இல்லாத உணவு வகைகளை உண்பதுகூட இதற்கு காரணமாக அமையலாம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச்சத்தும் உள்ள உணவு பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இந்த கருவளையம் நாளடைவில் மறைந்துவிடும்.

கண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம். அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம். நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்கு காரணமாக அமையலாம்.


சில பெண்கள் என்ன வேலையாக இருந்தாலும் இழுத்துப்போட்டுக்கொண்டு தாங்களே செய்வார்கள். வேலையை கொஞ்சமாவது பகிர்ந்து கொள்வோம் என்று எண்ண மாட்டார்கள். இப்படி எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு பார்த்தாலும்கூட கருவளையம் வந்துவிடும். அதாவது, அதிகப்படியான வேலையை தொடர்ந்து செய்யும்போது அதிகப்படியான சோர்வு ஏற்பட்டு, ஏற்பட்டு இக்குறைபாடு வந்துவிடும்.

ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும்கூட கண்ணில் கருவளையம் வரலாம்.
சரி... வந்த கருவளையத்தை எப்படி போக்கலாம் என்று கேட்கிறீர்களா? இதற்காக ரொம்பவும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். அன்றாட சமையலில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும்.

கண்ணில் உள்ள கருவளையத்தை நீக்க இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பொன்னாங்கன்னி கீரை கூட இதற்கு நல்லது தான்.

இந்த காய்கறிகளை சமையலில் அதிகம் பயன்படுத்தினாலே நாளடைவில் கருவளையத்தின் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம். அழகான கண்களுக்கு சொந்தக்காரி ஆகிவிடலாம்.

கருவளையம் உள்ளவர்கள், இதுபோக இன்னொரு முறையையும் பின்பற்றலாம்.

வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை 1/2 கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் 1/2 மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.

பிரித்தெடுத்த தண்ணீரின் அளவுக்கு எலுமிச்சைச்சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை1/2 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்துவிடும். அதன்பின்னர் கருவளையமே வரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், உணவு முறையில் தான் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதாவது, இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இனி... கரெக்ட்டா பாளோ பண்ணுவீங்க தானே...?
Share:

இனி நீங்களும் அழகி தான்...!


ழகாக இருக்க வேண்டும் என்று எல்லா பெண்களுக்குமே ஆசை இருக்கும். இயற்கை தந்துள்ள அழகை இன்னும் மெருகூட்டுவது ஆடைகள் தான். அந்த ஆடையை அணிந்து கொள்ளும் விதமே அழகை நிர்ணயிக்கிறது.
தங்கள் உடல் அளவுக்கு ஏற்ப, வயதுக்கு ஏற்ப ஆடையை அணிந்து கொண்டால் எந்த பெண்ணும் அழகியாக ஜொலிக்கலாம்.

ஒல்லியாகவும், உயரமாகவும் கலராக உள்ள பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட ஆடைகள் பக்கம் போய்விட வேண்டாம். முடியை கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக்கூடாது. சிறிய பார்டர் சேலை அல்லது நீள வாக்கில், அதாவது மார்பில் இருந்து நுனி வரை பூ வேலை செய்த சுடிதார் அணியவும் கூடாது.

கொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட பளிச்சென்று மின்னும் சேலைகள் அல்லது சுடிதாரும், பாட்டமும் பூ போட்ட சுடிதார்கள் அணிந்தால் நீங்கள் அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள். நீளமான, அகலமான பிளெயின் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கருப்பு நிறங்களில் அணிந்து நீங்கள் நடந்து வந்தால் உங்களை ‘ஜொள்’ளுபவர்களின் எண்ணிக்கையை தவிர்க்க முடியாததாகிவிடும். அந்த அளவுக்கு நீங்கள் எடுப்பாக தெரிவீர்கள்.

ஒல்லியாகவும், உயரமாகவும் உள்ள கருப்பு அல்லது மாநிறமாக உள்ள பெண்கள் மிகவும் டார்க்கான கலர் ஆடைகளை தேர்வு செய்யக்கூடாது. அப்படியே தேர்ந்தெடுத்தாலும், டார்க் மற்றும் லைட் கலர்கள் மாறி, மாறி வருவதுபோல் ஆடையை தேர்வு செய்யலாம்.

இப்படி ஆடையை தேர்வு செய்யும்போது, அந்த ஆடையில் உள்ள ஏதாவது ஒரு கலரில், முடிந்தால் ஆடையில் உள்ள லைட் கலரில் ப்ளவுஸோ, துப்பட்டாவோ அணியலாம்.

குட்டையாகவும், சிகப்பு கலருமாக இருக்கும் பெண்கள் ப்ளெயின் கலரில் ஆடை அணியக்கூடாது. அதையும் மீறி அணியும்போது, அணிந்திருக்கும் ஆடை புடவையாக இருந்தால் ப்ளவுஸ் காண்ட்ராஸ்டாகவோ அல்லது வேலைபாடுகள் கொண்டதாகவோ இருக்கலாம்.

கருப்பாகவும், குள்ளமாகவும் இருப்பவர்கள் மெல்லிய சரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய பார்டருடனோ புடவை அணியலாம். முடிந்தவரை பார்டரும், தலைப்பும் உள்ள புடவைகளை தவிர்ப்பது நல்லது.
மிகவும் டார்க் நிற ஆடைகளை கருப்பு நிறம் கொண்டவர்கள் அணியக்கூடாது.

அப்படியே அணிந்தாலும், அதில் சிறிய வெளிர் நிறப்பூக்களோ அல்லது புள்ளிகளோ இருக்கும்படியான ஆடைகளை தேர்வு செய்து அணியலாம். இவர்கள், ஒற்றை ஒற்றையாக தனித்தனி டிசைன்களும், அந்த டிசைன்களுக்கு நடுவே நிறைய இடைவெளியும் இல்லாமல் இருப்பதுபோன்ற புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் அம்சமாக இருக்கும்.

குண்டாக இருப்பவர்கள், உடலுடன் ஒட்டியவாறு எந்தவொரு ஆடையையும் அணியக்கூடாது. அப்படி அணிந்தால் பப்ளிமாஸ் என்று தான் கிண்டல் செய்வார்கள்.

ஒல்லியாக இருப்பவர்கள் ஸ்டார்ச் செய்த காட்டன் ஆடைகளை அணியலாம். டாப்பும், பாட்டமும் வெவ்வேறு கலரில் இருப்பதுபோல் சுடிதார் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து, அதில் அடி நுனி வரை பூ வேலைபாடுகள் அல்லது மணி சம்கி அமைந்திருந்தால் தோற்றத்தை சற்று உயர்த்திக்காட்டும். ஆடையும் அழகாக இருக்கும்.

ஒல்லியாக இருப்பவர்கள் பிரில் வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாக தூக்கிக் காட்டும். இவர்கள் இறுக்கமான ஆடைகளை தவிர்த்துவிட வேண்டும்.
பேன்ட், டீ ஷர்ட் அணியும் பெண்கள் டீ சர்ட்டை இன் செய்யாமல் அணியலாம். பேன்ட், ஷர்ட் அணிபவர்கள், ஷர்ட்டில் ஒரு எம்பிராய்டரியோ, மோடிபோ, பேன்ஸி பட்டனோ இருக்கும்படி அணியலாம்.

மொத்தத்தில், என்ன விலை கொண்ட ஆடை அணிகிறோம் என்பது முக்கியமல்ல, மேட்சிக்கான ஆடையை தேர்வு செய்கிறோமா என்பது தான் முக்கியம். உங்கள் செலக்ஷன் சரியாக இருந்தால், இனி நீங்களும் அழகி தான்...!
Share:

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

கிளியோபாட்ராவை கவர்ந்த குங்குமப்பூ



குங்குமப்பூ என்று சொன்னதும் அழகான குழந்தைதான் நம் நினைவுக்கு வரும். இதனால்தான், கருவுற்ற பெண்கள் தங்களது குழந்தை தமன்னா கலரில் பிறக்க வேண்டும் என்று தவம் இருக்காத குறையாக இந்த குங்குமப்பூவை வாங்கி பாலில் கலந்து குடிக்கிறார்கள்.

 இந்த உண்மைதான் என்று இன்றைய மருத்துவம் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம், குங்குமப்பூ சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று சர்டிபிகேட் கொடுக்கிறார்கள் டாக்டர்கள்.

குங்குமப்பூவின் விலை எக்கச்சக்கம் என்பதால் எல்லோரும் அதை பார்த்ததில்லை. இந்தியாவை பொறுத்தவரை காஷ்மீர் குங்குமப்பூ புகழ்பெற்றது.

சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதை பயிரிட்டு பயன்படுத்தி உள்ளனர். கி.மு.7ம் நூற்றாண்டிலும்கூட இதை மக்கள் பயன்படுத்தியதற்கான சரித்திர குறிப்புகள் கிடைத்துள்ளன. அக்கால உலக மக்களில் எகிப்தியர்களே இந்த குங்குமப்பூவை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள். பேரழகி கிளியோபாட்ரா கூட இதை பயன்படுத்தினாளாம்.

மாவீரன் அலெக்சாண்டர் தனது ஆசிய படையெடுப்பின்போது குங்குமப்பூக்களை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளார். அவரது போர் வீரர்கள், போரின்போது ஏற்பட்ட காயம் ஆற இந்த பூவை அரைத்து பூசியுள்ளனர். இதுதவிர, உணவிலும் சேர்த்துள்ளனர்.

இப்படி உலக அளவில் பிரபலமான குங்குமப்பூ, கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்னர்தான் காஷ்மீருக்கு வந்துள்ளது.

குங்குமப்பூ தாவரத்தை பார்க்கவே அழகாக இருக்கும். அதன் பூக்கள் இன்னும் அழகாக ஜொலிக்கும். இந்த பூவின் மகரந்த சேகரத்தை தான் நாம் குங்குமப்பூ என்று பயன்படுத்துகிறோம்.

குங்குமப்பூவை ஸ்பெயின் தான் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் கிரீசும், நான்காவது இடத்தில் நம் இந்தியாவும் உள்ளன.

சிகப்பழகை பெற விரும்பும் பெண்களுக்கு இந்த குங்குமப்பூ ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

குங்குமப்பூவை நன்கு பொடியாக்கி, அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து, அதில் சிறிது பால் விட்டு குழைத்து, அந்த கலவை முகத்தில் பூசி வந்தால் முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் காணாமல் போய்விடும்.

குங்குமப்பூவை உரசி, அதை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சேர்த்து சிறிது நேரம் ஊறவிட்டால், குங்குமப்பூவின் நிறம் முழுவதும் தண்ணீரில் ஊறிவிடும். அதில் சிறிது வெண்ணெயை கலந்து நன்றாக குழைத்து, உதடுகளில் பூசி வந்தால் செக்கச்செவேல் என்று உதடுகள் அழகாகும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் செவ்வாழைப்பழத்தின் தோல் போல் கவர்ச்சியாக மாறும்.
முகத்திலும் இந்த கலவையை அப்ளை செய்யலாம். அப்படி செய்தால், உங்கள் முகமும் செவ்வாழைப் பழ உதடு போல் ஜொலி ஜொலிக்கும்.

புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு குங்குமப்பூ, பாதாம் பருப்பு கலந்த பாலை உட்கொள்ள கொடுத்து வந்தால் சரியாக 10வது மாதத்தில் வீட்டில் குவா... குவா... சத்தம் கேட்கும் என்று சர்டிபிகேட் கொடுக்கலாம். அந்த அளவுக்கு அது தாம்பத்திய ஆசையை தூண்டும்.

ஒரு பொருளுக்கு மார்க்கெட்டில் மவுசு இருக்கிறது என்றால் அதில் போலியும் வந்துவிடும் தானே? இந்த குங்குமப்பூ விஷயத்திலும் அப்படித்தான் உள்ளது.

ஒரிஜினல் குங்குமப்பூ என்று கூறி, அதற்கு சம்பந்தமே இல்லாத பொருளை சிவப்பு சாயத்தில் கலந்து கொண்டு விற்று காசு பார்க்கும் கூட்டமும் உள்ளது.

நாம்தான் எது ஒரிஜினல்? எது டூப்ளிகேட்? என்று தெரியாமல் ஏமாந்து போகிறோம்.

ஒரிஜினல் குங்குமப்பூவை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறம் கொண்டதாக அந்த தண்ணீர் மாறும். நல்ல மணமும் வீசும். டூப்ளிகேட் குங்குமப்பூ உடனேயே தண்ணீரில் கரைந்து, அந்த தண்ணீரை சிவப்பு நிறமாக்கிவிடும். மணமும் இருக்காது.

பின்குறிப்பு : கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. இது அளவுக்கு மீறினால் கரு கலைந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. காரணம் குங்குமப்பூ அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதுதான்.
Share: