சனி, 17 அக்டோபர், 2009

அருள்தரும் அறுபடை வீடுகள்


அருள்தரும் அறுபடை வீடுகள்

 தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமான் 
குன்றிருக்கும் இடமெல்லாம் வீற்றிருந்தாலும், 
அவரது படைவீடுகளாக
6 தலங்கள் சிறப்பித்து கூறப்படுகின்றன.

அந்த அறுபடை வீடுகளுக்கு நாம் ஒரு விசிட் அடிப்போமா...?




திருப்பரங்குன்றம் - முதல்படைவீடு


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது.

லிங்க வடிவில் இருக்கும் இக்கோவில் அமைந்துள்ள மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் முக்கியமானவர்களான சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.

இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என்று பல்வேறு பெயர்களில் திருப்பரங்குன்றம் அழைக்கப்படுகிறது.

அமைவிடம் :

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து தென்மேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. திரு + பரம் + குன்றம் என்பதே திருப்பரங்குன்றம் என்று வழங்கப்படுகிறது. இதில், பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமானையும், குன்றம் என்பது குன்றுவாகிய மலையையும், திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியையும் குறிக்கிறது.

இந்த குன்றானது சிவலிங்க வடிவில் காணப்படுவதால், அந்த சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. இந்த மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும்.

இந்த மலையை அனுதினமும் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார் திருஞான சம்பந்தர்.

அன்னையை நோக்கி தவம் :

கயிலாயத்தில் ஒருநாள், பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடி மீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அந்த உபதேசத்தை கேட்டார்.

புனிதமான மந்திரத்தின் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஆனால், முருகப்பெருமானே பிரணவ மந்திரத்தினை, அதன் உட்பொருளை பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரே என்றாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாஸ்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இந்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடும் பொருட்டு முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

அதன்தொடர்ச்சியாக, சிவபெருமானும், பார்வதிதேவியும் தோன்றி, முருகப் பெருமானுக்கு காட்சி தந்து அருளினார்கள். அவர்கள் இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி -சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகப்பெருமான் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் அன்று காட்சித் தந்தார். அதனால், தைப்பூசம் அன்று சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுகின்றவர்கள் வேண்டும் வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்த தைப்பூச விழா திருப்பரங்குன்றத்தில் 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.



தெய்வானையை திருமணம் செய்தது ஏன்? :

முருகப்பெருமான் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதுதான். அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.

சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் இனிதே நடந்தது.

திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த... சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க... பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க... இந்திரன் தெய்வயானையை தாரை வார்த்து கொடுக்க... முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறது திருப்பரங்குன்றத்துப் புராணம்.




பாவங்கள் போக்கும் சரவணப் பொய்கை :

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்கு பக்கம் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் முருகனின் கைவேலினால் உண்டானது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும், வேண்டுதல் சட்டென்று நிறைவேறும் என்றும் சொல்கிறார்கள்.

இக்கோவில் கருவறை மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத் திரு உருவங்களின் இருப்பிடமாக காணப்படுகிறது. மூலவரான முருகப்பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லாமல், பாறையில் இடது புறம் முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தர... அவர்களை அடுத்து, பக்கத்தில் பிற தெய்வ உருவங்கள் உள்ளன. அதாவது, முருகப் பெருமானின் திருமணக்கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுமாறு இங்குள்ள கருவறை அமைந்துள்ளது.

கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையைக் குடைந்து சத்திய கிரீசுவரர் என்னும் பெயர் கொண்டவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.

இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அதேநேரம், இந்த வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

கருவறையில் முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இது, இந்திரனுடைய ஐராவதம் என்றும், இந்திரனின் மகள் என்பதால் தெய்வயானையைப் பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டாற்ற அது வந்தது என்றும் கூறுகிறார்கள்.

கருவறையில் முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ்ப் பகுதியில் குகைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்துக் காக்கும் தெய்வமாக காட்சித் தருகிறாள்.




கோவில் சிறப்புகள் :

* முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது என்பதால், இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 * இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது.  மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாக மேலே... மேலே... என்று ஏறிக்கொண்டே போக வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் இங்கு முடியாது.
* இக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால் செல்வம் பெருகி வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை. அதனால், செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை நினைந்து வீட்டில் தயிர் சாதம் செய்து இங்கே கொண்டு வந்து ஏழை மக்களுக்கு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

விழாக்கள் விவரம் :

தைப்பூசம், கார்த்திகைத் திருநாள், தெய்வயானையை மணந்து கொண்ட பங்குனி உத்திர நாள் ஆகியவை சிறப்பான விழாக்களாக இங்க கொண்டாடப்படுகின்றன.
மேலும், இந்த குன்றத்து முருகப் பெருமான் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் அன்னை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண மதுரை சென்று திரும்புவதும் முக்கிய விழாவாகும்.
திருக்கார்த்திகை தீபம் அன்று இங்குள்ள குன்றின் உச்சியில் ஏற்றப்படும் பிரம்மாண்ட தீபத்தை சுற்று வட்டார மக்கள் கண்டு தரிசனம் செய்வது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். மதுரை மாநகர் மக்களும் இந்த கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்யலாம்.





*********************************************************************************




திருச்செந்தூர் - இரண்டாவதுபடை வீடு



முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். செந்தில் ஆண்டவர் திருநாமத்துடன் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், சூரபத்மனுடன் இங்குதான் போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்தார்.

திருச்செந்தூருக்கு செந்தி மாநகர், திருச்சீரலைவாய் என்ற பெயர்களும் உண்டு. இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால் அலைவாய் என்றும் அழைக்கப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.

தல வரலாறு :


தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட முருகப்பெருமான் வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், அவனுக்கு துணையாக நின்ற கிரவுஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்குகிறார். வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்புகிறார். ஆனால், அசரன் சூரபத்மனோ அதை நிராகரிக்கிறான். மேலும் சூரபத்மன் வீரவாகு தேவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பினான்.

இதையடுத்து, முருகப்பெருமான் அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். மரத்தின் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார். சேவலைக் கொடியாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.

முன்னதாக,மாமரமாக உரு மாறிகாட்சியளித்த சூரபத்மனை கொல்வதற்காக, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவியபோது அதன் கொடூரம் தாங்காமல் கடலும் பின் வாங்கியதாக அருணகிரிநாதர் தனது திருப்புகழில் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு சூரபத்மனுடன் போரிட்டு, வெற்றி வாகை சூடி, தேவர்களை சூரபத்மனிடம் இருந்து காப்பாற்றியதால், இன்றைய திருச்செந்தூரானது ஜெயந்திபுரம் என்று வடமொழியால் அழைக்கப்பட்டு வந்தது. பின்னாளில், அந்த பெயரே மருவி செந்தூர் என்றாகி, திருச்செந்தூர் என்று வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும் மிகுந்த வெற்றி நகரம் என்றும் ஒரு பொருள் உண்டு.

திருச்செந்தூர் புகழ்பாடும் பதிகங்களும், புராணங்களும், பிரபந்தங்களும் ஏராளம். "சிக்கலில் வேல்வாங்கிச் செந்தூரில் சூரசம்ஹாரம்" என்பது பழமொழி.

2 மூலவர் :


எல்லா கோவில்களிலும் ஒரே ஒரு மூலவர்தான் இருப்பார். ஆனால், திருச்செந்தூரில் மட்டும் இரு மூலவர்கள் உண்டு. முருகப்பெருமானே பாலசுப்பிரமணியசுவாமி என்றும், சண்முகர் என்று இரு மூலவர்களாக இங்கு அருள்பாலிக்கிறார்.

பாலசுப்பிரமணியசுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள் பாலிக்கின்றனர். பாலசுப்பிரமணியசுவாமி தனியாகவும், சண்முகர் வள்ளி-தெய்வானையுடனும் எழுந்தருளியுள்ளனர்.

சிறப்புமிக்க நாழிக் கிணறு :

சூரசம்ஹாரம் முடித்த பிறகு, முருகப் பெருமான் சிவபூஜை புரிந்த இடமும் திருச்செந்தூரேயாகும். சிவலிங்க அபிஷேகத்திற்காக தன்னுடைய கை வேலினால் முருகப் பெருமான் "ஸ்கந்த புஷ்கரிணி" தீர்த்தத்தை உண்டாக்கினார். இத்தீர்த்தம் இன்றளவும் திருச்செந்தூரில் காணப்படுகிறது. இதை நாழிக் கிணறு என்று அழைக்கிறார்கள்.

ஒரு சதுர அடி அளவே உள்ள இந்த கிணறு கடற்கரையில் அமைந்துள்ள போதிலும் இத்தீர்த்தம் உப்புச் சுவையின்றி தூய நீராகவும், நோய்களைத் தீர்க்கும் குணமுடையதாகவும் இருப்பது அதிசயமாகும்.

வீரவாகு தேவருக்கே முதல் மரியாதை :

திருச்செந்தூருக்கு வீரவாகு தேவர் காவல் தெய்வமாக இருப்பதால் இத்தலத்திற்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு. இங்கு வீரவாகு தேவருக்கு பூஜை நடந்த பிறகே மூலவருக்கு பூஜை நடக்கிறது. வீரவாகு தேவரின் வலது பக்கத்தில் கரிய மாணிக்கப் பிள்ளையாருக்கும், பார்வதி அம்மனுக்கும் சன்னதிகள் உள்ளன.

கர்ப்பக் கிரகத்தில் வீற்றிருக்கும் மூலவரான முருகப் பெருமான் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு வெள்ளை ஆடையே அணிவிக்கப்படுகிறது. செம்பட்டு அணிவிப்பதும் உண்டு. இவர் சிவபூஜை செய்யும் வகையில் இவருடைய நான்கு திருக்கரங்களுள் இரண்டு அபய வரத ஹஸ்தங்களையும், மற்றொன்று புஷ்பமேந்தி அர்ச்சனை செய்யும் கரமாகவும், இன்னொரு கரம் ருத்ராட்ச மாலையைத் தாங்கிக் கொண்டும் அமைந்துள்ளன. இவர் தவக்கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை இருவரும் அவருடன் இல்லை.

மூலவருக்குப் பின்னால் காணப்படும் அறை "பாம்பறை" என்று அழைக்கப்படுகிறது. இது சுரங்க அமைப்பினை உடைய அறையாகும். இந்த அறையின் மேற்கு பாகத்தில் முருகப்பெருமானால் பூஜிக்கப் பெற்ற பஞ்சலிங்கங்கள் இருக்கின்றன.

இதுதான் விபூதிப் பிரசாதம் : 


திருச்செந்தூர் என்றதுமே நினைவுக்கு வருவது விபூதி பிரசாதம்தான்.  பன்னீர் இலைகளில் விபூதியை வைத்து மடித்து கொடுப்பதே இலை விபூதியாகும். வேதங்களே இங்கு பன்னீர் மரங்களாக இருந்து முருகப்பெருமானை வழிபடுவதாகவும், விஸ்வாமித்திரர் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு, இலைப் பிரசாதத்தை சாப்பிட்டுத் தனக்கு ஏற்பட்ட குன்ம நோயைப் போக்கிக் கொண்டதாகவும் புராண வரலாறு தெரிவிக்கின்றது.

ஆதிசங்கரர், தனக்கு ஏற்பட்ட காசநோயை செந்தூர் முருகனை வழிபட்டு, இதே இலை விபூதியை உட்கொண்டுதான் போக்கிக்கொண்டார். அதன் நினைவாக, வடமொழியில் சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாமாலையை இயற்றினார்.

இதேபோல், 5 வயது வரை ஊமையாக இருந்து, செந்தில்வேலன் அருளால் பேசும் வல்லமையை பெற்று புகழ்பெற்றவர் குமரகுருபரர். அந்த முருகப்பெருமானே வேலினால் அவரது நாவில் எழுதி பேசவைத்தார். அதன்பின் குமரகுருபரர் இயற்றியதுதான் பிரசித்திப் பெற்ற கந்தர் கலிவெண்பா.

வள்ளிக்குகை :

திருச்செந்தூர் செல்பவர்கள் காணத் தவறாத இடம் அங்கு கடற்கரையில் அமைந்துள்ள வள்ளி குகை. முருகப்பெருமானிடம் வள்ளி கோபித்துக்கொண்டு வந்து தங்கிய இடம் இது என்கிறார்கள்.

இங்கு குகையை குடைந்து வள்ளிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதிக்கு ஒருவர் மட்டுமே சென்று திரும்ப முடியும்.
வள்ளி குகைக்கு முன்புள்ள சந்-தனமலையில் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் விரைவில் கிட்டும் என்கிறார்கள்.

நடுக்கடலில் நடந்த அதிசயம்! :

இந்தியாவை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்திய நேரம், இந்தியாவின் செல்வ வளங்களை முடிந்தவரை சுரண்டினர். சாமி சிலைகளையும் அவர்கள் விட்டு வைக்க-வில்லை.

திருச்செந்தூர் முருகன் சிலையையும், நடராஜர் சிலையையும் டச்சுக்காரர்கள் கடத்திக்கொண்டு கப்பலில் தங்கள் நாட்டுக்கு திரும்பியபோது, வழியில் கடும் புயல் வீசியது. பேய் மழை-யும் கொட்டித் தீர்த்தது.
இதைக்கண்டு பயந்துபோன அவர்கள், கடத்திக்கொண்டு சென்ற சாமி சிலைகளை கடலுக்குள் வீசிவிட்டனர்.

இதற்கிடையில், திருச்செந்தூர் முருகன் சிலை கடத்திச் செல்லப்பட்டதால், அதற்கு பதிலாக வேறு புதிய சிலை செய்யும் பணியை திருநெல்வேலியில் வசித்த வடமலையப்ப பிள்ளை என்பவர் துவங்கினார். அப்போது ஒருநாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், "திருச்செந்தூர் கடலில் குறிப்பிட்ட இடத்தில் எலுமிச்சை பழம் மிதக்கும். அங்கு மூழ்கித் தேடினால் கடத்தப்பட்ட சிலை கிடைக்கும்" என்று அடையாளம் காட்டினார்.

அதன்படி, வடமலையப்ப பிள்ளை உள்-ளிட்டவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தேடினர். ஓரிடத்தில் எலுமிச்சைபழம் மிதக்க, அங்கு மூழ்கித் தேடினர். அப்போது கடத்திச் செல்லப்பட்ட முருகனின் திருமேனி கிடைத்தது. அந்த சிலை மீண்டும் சன்னிதானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதேநேரம், புதிதாக வடிக்கப்பட்ட சிலை திருநெல்வேலி தாமிரபரணி ஆறு பாயும் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த இடம் தற்போது "குறுக்குத்துறை" என்று அழைக்கப்படுகிறது. குறுக்கு வழியில் முருகப்பெருமானின் அருள் கிடைக்க இங்கு சென்று வழிபடலாம் என்றும் சொல்கிறார்கள்.


தாமரையுடன் கந்தன் :


சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்ட பிறகு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார் முருகப்பெருமான். திருச்செந்தூரில் மூலஸ்தானத்தில் அழகாய் வீற்றிருக்கும் அந்த அழகன் முருகன் கையில் இன்றும் அந்த தாமரை மலரை நாம் பார்க்கலாம். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

தெரியுமா மாப்பிள்ளை சுவாமி? :


பொதுவாக கோவில்களில் சுவாமிக்கு ஒரு உற்சவர் (விழாக்காலங்களில் இவரை பவனியாக எடுத்து வருவார்கள்) சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலை-வாய் பெருமான் என நான்கு உற்சவ மூர்த்-தி-கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்-தனி சன்னதிகளும் உள்-ளன. இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கி-றார்கள்.

முதன் முதலானது முருகனுக்கே... :

திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், தங்கள் நிலத்-தில் விளைவிக்கும் நெல், தானியங்கள், காய்கறி ஆகியவற்றை அறு-வடை செய்யும்போது, முதலில் அறுவடை செய்ததை திருச்செந்தூர் கோவிலுக்கு கொண்டு வந்து, அங்குள்ள சண்முக விலாச மண்டபத்தில் வைத்து காணிக்கை செலுத்தி விடுகின்றனர்.

இப்படிச் செய்தால் மகசூல் அதிக அளவில் இருக்கும் என்றும், இயற்கையால் பயிர்களுக்கு இடையூறு ஏற்படாது என்றும் நம்புகிறார்கள்.
இதேபோல், ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகள், அவை முதன் முதலாக ஈன்றெடுக்கும் குட்டியை இந்த கோவிலுக்கு கொண்டு வந்து காணிக்கை செலுத்துவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

சுப்பிரமணிய காயத்ரி :

"ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா ஸேநாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்"

-  முருகப்பெருமானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி, அவரை வழிபட்டு வந்தால் அவரது அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம்.


திருவிழாக்கள் விவரம் : 

முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகம், சூரபத்மனை அழித்து ஆட்கொண்ட கந்த சஷ்டி விழா ஆகியவை இங்கு வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம் கடற்கரையோரம் நடைபெறும். அப்போது, அங்கு திரண்டிருக்கும் பக்தர்கள் வெள்ளத்தால் கடலே காணாமல்போன உணர்வு நமக்குள் ஏற்படுவது வியப்பு.

மற்றும், முருகனுக்கு உகந்த எல்லா நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

 சூரசம்ஹார காட்சிகள்....

 


*********************************************************************************




பழனி - மூன்றாவதுபடை வீடு




முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார்.  இவரை பழனியாண்டவர் என்றும் அழைக்கிறார்கள்.


மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி, அகத்தியரின் தலையாய சித்தரான போகரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.

பெயர் காரணம் :



பழனி என்பது இங்குள்ள மலையின் பெயராகும். இந்த பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி தலத்தையும் உள்ளடக்கிய நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது. இந்த தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப்பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.

இதேப்போன்று, இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, ஒரு ஞானப்பழத்துக்காக பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வந்த முருகப்பெருமான் பழனி மலையில்தான் தங்கினார். அங்கு, எந்த பற்றும் அற்ற ஆண்டிக் கோலத்தில் காணப்பட்டார்.

மகன் கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் வருந்திய சிவனும், பார்வதியும் இந்த பழனி மலைக்கு வந்தனர். முருகப்பெருமானை சமரசம் செய்தவர்கள், அவருக்கு "பழம் நீ" என்று சூட்டிய பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று இக்கோவில் தல புராணம் கூறுகிறது.

மலை உருவான கதை :



பொதிகை மலையில் வந்து தங்கிய அகத்திய முனிவர், தனது சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று, அங்கு முருகப்பெருமானுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களை தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார்.

சிறந்த பக்திமானான இடும்பாசுரன், அகத்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலை குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடி போன்று கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான்.

அப்போது முருகப்பெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். மலைகளை சுமந்து வந்த இடும்பாசுரன் ஓரிடத்தில் களைப்பு ஏற்பட்டதால் மலைகளை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்தான். ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் மலைகளை  தூக்க முயன்றான். ஆனால், முடியவில்லை.

இடும்பனுக்கு ஒன்றும் ஓடவில்லை. "இதுவரைக்கும் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது...?" என்று யோசித்தவன், யதார்த்தமாக மேலே பார்த்தான். மலைக்குன்றின் உச்சியில் ஓரிடத்தில் கோவணம் மட்டுமே அணிந்த ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்த சிறுவன் இருப்பதால்தான் மலையை தூக்க முடியவில்லையோ என்று யோசித்தவன், அந்த சிறுவனை கீழே இறங்குமாறு கூறினான்.

ஆனால் அந்த சிறுவனோ, இடும்பாசுரன் தூக்கி வரும் மலைக்குன்று தனக்கே உரியது என்று உரிமை கொண்டாட... கோபம் கொண்டான் இடும்பன். சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான்.

பின்னர், இடும்பன் மனைவியான இடும்பியும், அகத்திய முனிவரும் அங்கு விரைந்து வந்து வந்து வேண்டிக் கொள்ள, அவர்களுக்காக சிறுவனாக வந்த முருகபஙபெருமான் மனமிறங்கி வீழ்ந்த இடும்பனை உயிர்ப்பித்தார்.

இடும்பனது குரு பக்தியை மெச்சிய முருகப்பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு, இடும்பனைப் போன்று சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களை எல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோருக்கு அருள்பாலிப்பதாக அப்போது அருளினார்.

அன்றுமுதல் முருகன் கோவில்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. இடும்பாசுரன் கொண்டு வந்த மலை அங்கேயே நிரந்தரமாக வைக்கப்பட்டது. அந்த மலைதான் இன்றைய பழனி மலை என்கிறார்கள்.

இதனால்தான், பழனி மலைமீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்கிறார்கள்.

திருவாவினன்குடி சிறப்பு :


திருவாவினன்குடி கோவில் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. பழனி முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இந்த பொய்கையில் நீராடிச் செல்கிறார்கள்.

திருவாவினன்குடி கோவிலில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாக காட்சி தருகின்றார். இங்குள்ள முருகப்பெருமானை தரிசிக மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் போன்றோர் வந்ததாக கூறுகிறார் நக்கீரர்.

குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்ட பின்ன்தான் மலைக் கோவிலில் எழுந்தருளியுள்ள பழனியாண்டவரை தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள். இந்த திருவாவினன்குடி திருத்தலம் அமைந்துள்ள பகுதி முன்பு நெல்லி வனக் காடாக இருந்துள்ளது. இதற்கு ஆதரம் இந்த கோவிலின் தலவிருட்சம்தான். ஆம்... இங்குள்ள தலமரம் நெல்லி மரமே.

நலம் தரும் கிரிவலம் :

பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இந்த பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை கொண்ட மண்டபங்களும் காணப்படுகின்றன. அதனால், இந்த மலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.

மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில் மண்டபத்தில் இருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றன.

வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன. இப்போது பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் வசதியும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டிக்கோலம் உணர்த்தும் தத்துவம் :



இங்கு முருகப் பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோவில் கொண்டிருப்பதன் மூலம் ஒரு உண்மையைப் போதிக்கிறார். "ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை (ஆசையை) ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்" என்பதுதான் அந்த தத்துவம்.

எப்போதும் அபிஷேகம் :

முருகப்பெருமானின் இந்தபடை வீட்டில் அவர் அபிஷேகப் பிரியராக, சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போல் அல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட அந்த பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த சக்தி கொண்டவை என்று கருதப்படுகின்றன.

தண்டாயுதபாணி சுவாமியை மொட்டை ஆண்டிக் கோலத்தில் படங்களில் சித்தரித்திருந்தாலும், இவர் சடாமுடியுடன் விளங்குகிறார் என்பதை அபிஷேக காலத்தில் நன்கு அறியலாம்.

ஆதியில் போகர் சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிபடப்பட்டு வந்த இந்த கோவிலில், சேர மன்னர்கள் முதன் முதலில் திருப்பணிகள் செய்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.

சபரிமலை அய்யப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், குருவாயூர் குருவாயூரப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், பழனிக்குச் சென்று பழனி ஆண்டவரையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசித்திப்பெற்ற பஞ்சாமிர்தம் - பாதயாத்திரை :

பழனி என்று சொன்னதும், அந்த பழனியாண்டவருக்கு அடுத்தப்படியாக நம் நினைவுக்கு வருவது சுவை மிகுந்த பிரசாதமான பஞ்சாமிர்தமாகும். பழனிக்கு வருபவர்கள் அதை தவறாமல் வாங்கிச் செல்கிறார்கள்.

திருவிழாக்களைப் பொறுத்தவரையில் பழனியில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஆகிய விழாக்களும், மற்றும் முருகனுக்கு உரிய அனைத்து விசேஷ நாட்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.



தைப்பூசம் திருவிழாவின்போது பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி மற்றும் தீர்த்தக் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பம்சமாகும். இதற்காக பாத யாத்திரையாக 100க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவை கடந்து வரும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

சர்ச்சைக்குரிய விவாதம் :

பழனி மலை உச்சியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலையே நாம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது வீடாக கருதுகிறோம். ஆனால், பழனி மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலே முருகனின் மூன்றாவதுபடை வீடு என்று கூறுவோரும் உண்டு.


   கொடைக்கானல் மலையில் இருந்து 
     பழனி மலையின் தோற்றம்...

*********************************************************************************


சுவாமிமலை - நான்காவதுபடை வீடு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

தந்தைக்கே குருவான கதை :


படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மா, ஒருமுறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மாவிடம், படைப்புத் தொழில் செய்யும் உமக்கு -ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இந்த கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான்.

ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.

அதன்படி சிவபெருமான் இந்த சுவாமிமலை தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து, முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது.

முருகப்பெருமான் காட்சி :


இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் காட்சி கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது.

மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

தலவிருட்சம் நெல்லி :


நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.

அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாக சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது. அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

இயற்கையான மலை அல்ல :


சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழைந்தவுடன் வல்லப கணபதியை தரிசிக்க முடிகிறது.


மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த 60 படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண் கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கிறது என்பது பலர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை.

திருவிழாக்கள் விவரம் : 

இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. பிற விழாக்கள் : சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம், புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

**********************************************************************************


திருத்தணி(கை) - ஐந்தாவதுபடை வீடு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணி என்று அழைக்கப்படும் திருத்தணிகை. இங்கு முருகப்பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமியாக, தனது இச்சா சக்தியான வள்ளியுடன் அருள்பாலிக்கிறார்.

அமைவிடம் :


திருவள்ளூர் மாவட்டத்தில், அரக்கோணத்தில் இருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருத்தணி. "தொண்டை நாடு" என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.

தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சீபுரம் தெற்கிலும்; விரிஞ்சிபுரம், வள்ளிமலை, சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும்; திருவாலங்காடு கிழக்கிலும்; ஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதி ஆகியவை வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாக திருத்தணி அமைந்துள்ளது.

தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய நடந்த பெரும் போரும், வள்ளியை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் இது என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக  கூறுகிறார்கள்.

தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் என்பதும் ஒரு பொருள் என்பதால், "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை" என்று இத்தலத்திற்கு பொருள் கொள்வதும் சரியான ஒன்றாகவே கருதலாம்.

மலையின் சிறப்புகள் :


திருத்தணியில் முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி அருள் புரிகிறார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதால் "பச்சரிசி மலை" என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக காணப்படுவதால் "பிண்ணாக்கு மலை" என்றும் அழைக்கப்படுகின்றன.

மொத்தத்தில், இந்த திருத்தணி மலை அழகு பொங்கி வழியும் மலையாக காட்சித் தருகின்றது. அதனால்தான் என்னவோ, திருப்புகழ் தந்த அருணகிரிநாதர்  "அழகுத் திருத்தணிமலை"  என்று இந்த மலையை புகழ்கிறார்.

"குமார தீர்த்தம்" என்று அழைக்கப்படும் பெரிய குளம், மலையடிவாரத்தில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதி "மடம் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.

தலச்சிறப்புகள் :


இந்த தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றி பாடியுள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த கோவில் சிறப்புபெற்று விளங்கியது தெரிய வருகிறது.
இதுதவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சீபுரம் போலவும், மலைகளில் எல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று கூறுகிறார்.

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் "கல் மலிந்தோங்கும் கழுநீர்க் குன்றம்" என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர் கொண்டு பூஜித்தான் என்கிறது இக்கோவில் தலவரலாறு.

திருமுருகாற்றுப்படை தந்த-நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... என்று சிவபெருமானிடமே வாதிட்ட நக்கீரர், இந்த தலத்தை குன்றுதோறாடல் என்று குறிப்பிடுகிறார். குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்கும் என்றாலும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்பது அறிஞர்களின் கருத்து.

வள்ளலாரும், முருகப்பெருமானும் :


வடலூர் ராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அவரையே ஞான குருவாகக் கொண்டவர். தனது இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சியை கண்டு பரவசம் ஆகி இருக்கிறார். அதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

சூரசம்ஹாரம் நடக்காத திருத்தணி :

சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் (வதம்) செய்த இடம் திருச்செந்தூராகும். கந்தசஷ்டி அன்று அந்த நிகழ்ச்சி அனைத்து முருகன் கோவில்களிலுமே நடத்தப்படுகிறது. ஆனால், திருத்தணியில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. அங்கு, போருக்குப் பின் அமைதி நிலவுவதாக கருதப்படுவதால் சூரசம்ஹாரத்தை நடத்துவதில்லை.

திருவிழாக்கள் விவரம் : 


ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, மாசி கிருத்திகை ஆகிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், பூக்காவடி, பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வள்ளிமலை சுவாமிகள், இத்தலத்தில் திருப்புகழ் பாராயணம் செய்து கொண்டே மலையேறும் திருப்புகழ் திருப்படித் திருவிழாவை தொடங்கி வைத்தார். இப்போதும் ஆண்டுதோறும் அவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

*********************************************************************************



பழமுதிர்ச்சோலை - ஆறாவதுபடை வீடு


முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை " என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை " என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்த தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது-.

கோவில் அமைவிடம் :

மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

மலையின் அடிவாரத்தை சென்றடைந்ததும் அழகர்கோவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் கோவில் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. அழகர் கோவில் நுழைவுவாயில் முன்பு நாம் இறங்கியதும், வேறு யாரும் வரவேற்கிறார்களோ இல்லையோ, குரங்குகள் தவறாமல் கூட்டமாக வந்து வரவேற்கின்றன.

ஆம்... இங்கு குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. கொஞ்சம் அசந்தால் நம் கையில் உள்ள பொருட்களை அலேக்காக லபக்கிவிடுகின்றன இவை. அதனால், கொஞ்சம் உஷாராகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது.

அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம்.
சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

வரலாற்று ஆதாரங்கள் :


திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார்.

கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றையதினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

அவ்வையை சுட்ட பழம் :


அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்த தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாக சொல்கிறார்கள்.

தனது புலமையால் புகழின் உச்சிக்கு சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகப்பெருமான், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.

அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் அவருக்கு களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார்.

உடனே அந்த சிறுவனிடம், "குழந்தாய்... எனக்கு பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களை பறித்து தர முடியுமா? " என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

சிறுவனின் கேள்வி அவ்வைக்கு புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப்பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப்பழத்தையே கொடுப்பா... " என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப்பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்த பழங்களை பொறுக்கிய அவ்வை, அந்த பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா? " என்று கேட்டார்.

சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்துபோனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்த சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார்.

மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.


இந்த திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன்  கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

அதிசய நூபுர கங்கை :





பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்த தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்த தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது.

மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்த தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த தீர்த்த தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எப்பேற்பட்ட நோயும் பறந்தோடிவிடும் என்பதால், இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள்.

இந்த தீர்த்த தண்ணீரில்தான் புகழ்பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோவை தயார் செய்யப்படுகிறது.

மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் என்கிறார்கள்.

திருமண பரிகார தலம் :

முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும், இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம் முடிவாகி, வெற்றிக்கரமான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.

விழாக்கள் விவரம் :

கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
Share:

வெள்ளி, 16 அக்டோபர், 2009

தண்ணீரில் மிதக்கும் பாறைகள்


தண்ணீரில் மிதக்கும் பாறைகள்

என்னது... பாறை மிதக்குதா? அதுவும் தண்ணீரிலா? நம்பவே முடியலீயே... என்கிறீர்களா?

"ராமர் தானே கடலில் பாறைகளை மிதக்க விட்டு, அதன் மூலம் இலங்கைக்கு சீதையை மீட்கச் சென்றார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதுவா இது" என்று பலர் கேட்கலாம்? அதுக்கும், இதுக்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது என்கிறார்கள்.

அதற்குமுன், தண்ணீரில் மிதக்கும் பாறைகள் பற்றி பார்ப்போமே...

ராமேசுவரத்தில் உள்ள துளசி பாபா மடத்திற்கு சென்றபோது இந்த மிதக்கும் பாறைகளைப் பார்த்தேன். அங்கு, தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த பாறைகளை பார்க்க வந்த சிலருக்கு சந்தேகம் வர (எனக்கும் சந்தேகம் வந்தது), அங்குள்ளவர்கள் பாறை தூக்கி வேண்டுமானாலும் பாருங்கள் என்று கூறினார்கள். அதன்படி, பாறையை தூக்கிப்பார்த்தவர்கள், "அம்மாடியோவ்... என்ன அழகா பாறை தண்ணீரில் மிதக்கிறது" என்று முகபாவனையாலேயே வியப்பை தெரிவித்தனர். நானும் தூக்கிப்பார்த்து வியந்தேன்.

பாறையை கூர்ந்து கவனித்தபோது, உண்மையிலேயே இது பாறை தானா என்று சந்தேகம் வந்தது எனக்கு. அந்த மடத்தின் ஊழியர் ஒருவரிடம் அதுபற்றி கேட்டேன்.

"இதுவும் பாறை தான். ஆனால், வழக்கமான பாறை அல்ல. இதற்கு பெயர் பவளப்பாறை" என்றவர், அந்த பாறை இந்த மடத்திற்கு எப்படி வந்தது என்ற சம்பவத்தையும் என்னிடம் சொன்னார்.

"17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமபிரான் இலங்கைக்கு சீதையை மீட்க சென்றபோது குறுக்கிட்ட கடலை எப்படி கடப்பது என்று யோசித்தார். அப்போது பாறைகளை கடலுக்குள் தூக்கிப்போட்டார். அந்த பாறைகள் எல்லாம் கடலில் மூழ்காமல் மிதந்தன. மிதந்த பாறைகளின் வழியாக இலங்கை சென்று சீதையை மீட்டு வந்தார் ராமர்.

இந்த பாறைகள் தனுஷ்கோடிக்கும், இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளன. இதைத் தான் ராமர் பாலம் என்று அழைக்கிறோம்.

தற்போது, இந்த மடத்தில் உள்ள பாறைகள் தனுஷ்கோடியில் இருந்து எடுக்கப்பட்டவைதான். ராமர் இலங்கை செல்ல கடலுக்குள் தூக்கிப்போட்ட பாறைகள் தான் இவை. ராமர் தனுஷ்கோடி வழியாக இலங்கை சென்றதன் நினைவாக தனுஷ்கோடியில் ராமர் கோவில் ஒன்று இருந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியே சின்னாபின்னாமானபோது இந்த கோவிலும் சிதைந்து போனது.

அந்த புயலுக்கு பின்னர், அங்கிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகள் இங்கு கொண்டு வரப்பட்டன. அப்போது, வடநாட்டு சாதுக்கள் தனுஷ்கோடி கடல்கரையில் ஏராளமான பாறைகள் மிதந்து கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர். அந்த பாறைகளில் சுமார் 2 ஆயிரம் பாறைகளை அவர்கள் சேகரித்து எடுத்தனர். அவர்கள் எடுத்துச் சென்ற பாறைகளில் 60 பாறைகள் இந்த மடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள பாறைகளை வட நாட்டிற்கு கொண்டு சென்றனர். இன்று பூரி ஜெகநாதர் கோவில், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ், பத்திரிநாத், அலகாபாத், திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவையே! புதுச்சேரியில் உள்ள அனுமார் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளை காணலாம்...." என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் அந்த ஊழியர்.

இந்த துளசி பாபா மடத்தில் ராமர் பயன்படுத்தியதாக கூறப்படும் பாறைகள் தவிர, தனுஷ்கோடியில் இருந்த ராமர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள், யாத்திரீகர்கள் இங்கும் வந்துவிட்டு செல்கிறார்கள்.
Share:

ராமேசுவரம் தீர்த்தங்கள்


புண்ணியம் தரும்

 ராமேசுவரம் தீர்த்தங்கள்

ராமேசுவரத்தில் வழிபாடும், மஹோததியும் (வங்காள விரிகுடா கடல்), ரத்தினகரமும் (இந்திய பெருங்கடல்) கூடும் இடமான தனுஷ்கோடியில் (சேது) முழுக்கும் செய்தால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும் என்பார்கள். இதனால் தான் வடநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தினமும் ராமேசுவரத்திற்கு வந்து செல்கிறார்கள்.

அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடிச் செல்வதை பெரும் பாக்கியமாக கொண்டுள்ளனர். ராமேசுவரத்தில் மொத்தம் 53 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் 22 தீர்த்தங்கள் ராமநாதசுவாமி கோவிலுக்குள் அமைந்துள்ளன. மீதமுள்ள 31 தீர்த்தங்கள் ராமேசுவரத்தை சுற்றி அமைந்துள்ளன.

ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள தீர்த்தங்கள் பற்றி இங்கே பார்ப்போம்...

இந்த கோவிலில் உள்ள ஒவ்வொரு தீர்த்தமும் தனி மகிமை பெற்று காணப்படுகிறது. இங்குள்ள முதலாவது தீர்த்தம் மகாலெட்சுமி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இது இங்குள்ள அனுமார் கோவிலுக்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது தர்மராஜன் ஸ்நானம் செய்து ஐஸ்வர்யம் பெற்றதாக கருதப்படுகிறது.

இரண்டாவது தீர்த்தம் சாவித்திரி தீர்த்தம். மூன்றாவது தீர்த்தம் காயத்திரி தீர்த்தம். நான்காவது சரஸ்வதி தீர்த்தம். இந்த மூன்று தீர்த்தங்களும் இங்குள்ள அனுமார் கோவிலுக்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளன. காசிபர் மகாராஜா சாபம் நீங்கியது இந்த தீர்த்தங்களில்தான் என்பது ஐதீகம்.

ஐந்தாவது தீர்த்தம் சேதுமாதவ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தெப்பக்குளம்தான் இந்த தீர்த்தம். இதில் நீராடுவதால் மகாலட்சுமியின் அனுக்கிரகமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும் என்கிறார்கள்.



ஆறாவது தீர்த்தம் கந்தமாதன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சேது மாதவர் கோவில் பகுதியில் அமைந்துள்ள இதில் நீராடுவதால், தரித்திரம் நீங்கி சகல ஐஸ்வரியமும் கிடைக்கும், பிரம்மஹத்தியாதி பாவம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

ஏழாவது தீர்த்தம் சுவாட்ச தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இதுவும் சேது மாதவர் கோவில் பகுதியில் அமைந்துள்ளது. இதில் நீராடினால் நரகத்திற்கு யாரும் செல்ல மாட்டார்கள் என்பது ஐதீகம்.

எட்டாவது தீர்த்தம் கவாய தீர்த்தம். சேதுமாதவர் கோவில் பகுதியிலேயே அமைந்துள்ள இந்த தீர்த்தத்தில் நீராடினால் கற்பக விருச்சவாசம் கிடைக்கும் என்கிறார்கள்.

ஒன்பதாவது தீர்த்தம் நள தீர்த்தம். சேது மாதவர் கோவில் பகுதியில் உள்ள இதில் நீராடுபவர்கள் சூர்ய தேஜஸை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவார்கள் என்பது நம்பிக்கை.

பத்தாவது தீர்த்தமான நீள தீர்தத்தில் நீராடுவதால் சமஸ்தயாக பலனை அடைந்து அக்னியோக பதவி கிடைக்கும் என்கிறார்கள்.
11-வது தீர்த்தம் சங்கு தீர்த்தம். இதில், வத்ரிநாப முனிவர் செய்நன்றி மறந்த பாவம் நீங்கியது என்பது ஐதீகம்.

12-வது தீர்த்தமான சக்கர தீர்த்தம் சூரியன் பொன்கை பெற்றது என்றும், 13-வது தீர்த்தமான பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் பிரம்மஹத்தியாதி பாவம் தீர்ப்பதாகவும், 14-வது தீர்த்தமான சூரிய தீர்த்தம் திரிகால ஞானமும், அந்தந்த உலக பிராப்தியும் தருவதாகவும், 15-வது தீர்த்தமான சந்திர தீர்த்தத்தில் நீராடுவதால் திரிகாசி ஞானமும், அந்தநித உலக பிராப்தியும் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

16-வது தீர்த்தம் கங்கா தீர்த்தம். 17-வது தீர்த்தம் யமுனா தீர்த்தம். அதற்கு அடுத்தது கயா தீர்த்தம். இந்த 3 தீர்த்தங்களில் ஞான சுருதிராஜன் ஞானம் பெற்றதாக கூறுகிறார்கள்.

19-வது தீர்த்தம் சிவ தீர்த்தம். பைரவர் பிரம்மஹத்தி நிவர்த்தியானது இந்த தீர்த்தம் தான் என்கிறார்கள்.
20-வது தீர்த்தம் சாத்யமிர்த தீர்த்தம். அம்மன் சன்னதியில் உள்ள இந்த தீர்த்தத்தில் புகுரூனு சக்கரவர்த்தி சாபம் நீங்கப்பெற்றதாக ஐதீகம்.

21-வது தீர்த்தம் சர்வ தீர்த்தம். ராமநாதசுவாமி சன்னதி முன்புள்ள இந்த தீர்த்தத்தில் நீராடியதால் சுதரிசனர் பிறவிக்குருடு நோய் நீங்கியதாக கூறுகிறார்கள்.

22-வது தீர்த்தம் கோடி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ண பகவான் தனது மாமனாகிய கம்சனை கொன்ற பாவம் நீங்கியது இந்த தீர்த்தம் என்கிறார்கள். காசியில் உள்ள கங்கை நீருக்கு சமமானதாக இந்த தீர்த்தம் கருதப்படுகிறது.

- இந்த தீர்த்தங்களில் நீராட வருபவர்களுக்கு தண்ணீரை வாளிகளில் இரைத்து ஊற்ற கோவில் நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாத்திரை பணியாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த பணியில் சுமார் 450 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு நாள் முழுக்க வேலை இருக்காது. கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தங்களுக்கும் ஒரு முறை சென்று பக்தர்கள் மீது வாளிகளில் நீரை இரைத்து ஊற்ற வேண்டும். ஒரு மணி நேரத்திற்குள் இவர்கள் தங்கள் பணியை முடித்துக்கொள்ள வேண்டும். அடுத்த ஷிப்ட்க்கு மற்றொரு நபர் வந்து விடுவார். ஒரு முறை வந்த நபர் அடுத்த முறை வர 2 நாட்கள் ஆகிவிடும்.

இவ்வாறு ஒரு முறை மட்டும் சென்று பக்தர்கள் மீது தீர்த்த நீர் இரைத்து ஊற்ற இவர்களுக்கு சம்பளம் ரூ.10 தான். இருந்தாலும், தீர்த்தமாட வரும் பக்தர்கள் இவர்களுக்கு தனியாக பணத்தை அன்பளிப்பாக தந்து மகிழ்ச்சிப்படுத்துகின்றனர். இதனால் தான், கடினமான வேலை என்றாலும் இந்த பணியை செய்கிறார்கள் இந்த தொழிலாளர்கள்.

-  நீங்களும் ராமேசுவரம் சென்றால் இந்த தீர்த்தங்களில் தீர்த்தமாடிவிட்டு தான் வாருங்களேன்...
Share:

அய்யப்பன் வரலாறு


அய்யப்பன் வரலாறு

"நாட்டின் அரசனான எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால், ஒரு குழந்தை இல்லையே! கிருஷ்ணா... நீ எனக்கு கருணை காட்ட மாட்டாயா?"

- தீவிர கிருஷ்ண பக்தரான பந்தள நாட்டு அரசன் ராஜசேகர பாண்டியன் இப்படி வேண்டாத நாட்களே கிடையாது. எறும்பு ஊற, ஊற பாறையும் தேயும் என்பார்களே? அது, இந்த பந்தள மன்னன் விஷயத்திலும் உண்மையானது.

அது எப்படி என்பதற்கு முன்பு, அய்யப்பனின் அவதாரம் நிகழ்ந்த வரலாற்றை பார்ப்போமே...

"நான் யார் தலையில் கையை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட வேண்டும்" என்று சிவனிடம் வரம் பெற்ற பஸ்மாசுரனை, அழகிய பெண்ணான மோகினியாக அவதாரம் எடுத்து அழித்தார் கிருஷ்ணர். அந்த மோகினியின் அழகில் ‘கவரப்பட்ட‘ சிவபெருமான், அவளை இறுக கட்டித் தழுவ, மார்கழி மாதம் பஞ்சமி திதி சனிக்கிழமை அன்று உத்திரம் நட்சத்திரத்தில் அரி-ஹர புத்திரனாக அய்யப்பனின் அவதாரம் நிகழ்ந்தது.

இனி... பந்தள நாட்டு அரசனின் குழந்தை வேண்டுதல் எப்படி நிறைவேறியது என்பதை பார்ப்போம்...

ஒரு நாள் அரசன் ராஜசேகர பாண்டியன் வேட்டைக்கு சென்று கொண்டிருந்தான். திடீரென்று ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று பார்த்தான். அழகிய, தெய்வீக அம்சம் நிறைந்த ஒரு ஆண் குழந்தையை கண்டு, அதை அப்படியே வாரியெடுத்து அணைத்து முத்தமிட்டான்.

"கிருஷ்ணா...! உன்னை வணங்கியது வீண் போகவில்லை. குழந்தை இல்லையே என்று ஏங்கிய எனக்கு அழகான ஆண் குழந்தையை கொடுத்துவிட்டாயே!" என்று மகிழ்ந்தான். அவனது கண்ணில் அந்த குழந்தை அகப்பட வேண்டும் என்று தான் சிவனும், கிருஷ்ணரும் அங்கே விட்டுச் சென்றிருந்தனர்.



காட்டில் கண்டெடுத்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்து சென்றான் ராஜசேகர பாண்டியன். அவனது ராணியும் அந்த குழந்தையை கண்டு மகிழ்ந்தாள். ஒரு குழந்தையை பெற்றெடுத்த உணர்வை பெற்றாள். தான் பெற்ற குழந்தை போலவே வளர்த்தாள். ‘மணிகண்டன்‘ என்ற பெயருடன் அரண்மனையில் அந்த குழந்தை வளரத் தொடங்கியது.

இதற்கிடையில், மகாராணி கர்ப்பமானாள். பத்தாவது மாதத்தில் அவளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. தான் பெற்ற குழந்தையையும், மணிகண்டனையும் ஒரேமாதிரியாகவே வளர்த்தாள்.

சில வருடங்கள் உருண்டோடின. "மணிகண்டன் இருக்கும் வரை, தங்கள் மகனுக்கு அரசுரிமையில் முதலிடம் கிடைக்காது" என்று தூபம் போட்டு பிரச்சினையை ஆரம்பித்து வைத்தான், ஒரு அமைச்சன். மணிகண்டனை ஒழிக்க முடிவெடுத்தாள் மகாராணி.

ஒரு நாள் தலைவலி என்று படுத்துக் கொண்டாள். புலிப்பால் தான் அதற்கு மருந்து என்று அரண்மனை வைத்தியர் மூலம் மன்னனிடம் சொல்ல வைத்தாள். புலிப்பால் கொண்டுவர மணிகண்டன் காட்டுக்கு அனுப்பப்பட்டார்.
கணவன் சன்னியாசம் போக இடையூறாக இருந்ததால், அவனது சாபத்திற்கு ஆளாகிய ஒரு மனைவி மகிஷி என்ற எருமையாகி விடுகிறாள். "ஒரு பிரம்மச்சாரியால் நீ கொல்லப்பட்டு, சாபவிமோசனம் பெறுவாய்" என்று அவளுக்கு அவளது கணவன் சாபவிமோசனம் கொடுத்திருந்தான்.

அவள், புலிப்பால் தேடி காட்டுக்கு வந்த மணிகண்டனுடன் அழுதா நதிக்கரையில் போர் புரிந்தாள். மணிகண்டனால் கொல்லப்பட்ட பிறகு அவள் தனது சுய உருவத்தை அடைந்து, சாபவிமோசனம் பெற்றாள். மணிகண்டன் அழகில் மயங்கிய அவள், மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றாள். அதற்கு அவர், "நான் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன. அவற்றை எல்லாம் செய்து முடித்த பிறகு உன்னை மணக்கிறேன்" என்கிறார்.

தொடர்ந்து, புலிப்பால் பெற சென்ற அவருக்கு, தேவர்களே புலிகளாக மாறி காட்சி தந்தனர். அந்த புலிகளில் ஒன்றில் மணிகண்டன் ஏறி அமர்ந்து கொள்ள, மற்ற புலிகள் புடைசூழ அரண்மனைக்கு வந்தார். மணிகண்டனின் மகிமையை உணர்ந்த மகாராணியும், அமைச்சரும் திருந்தினர். புலிகளாக வந்த தேவர்கள் தங்கள் சுய உருவத்திற்கு மாறினர்.

தனது பிறப்பு உள்ளிட்ட அனைத்தையும் உணர்ந்த மணிகண்டன், தான் வந்த வேலை முடிந்து விட்டதாகவும், தான் போவதாகவும் கூறிவிட்டு செல்ல முயன்றார். அப்போது, பந்தள மகாராஜா ராஜசேகர பாண்டியன், "மீண்டும் உன்னை நான் எப்போது பார்க்க முடியும்?" என்று கேட்கிறார்.

அதற்கு மணிகண்டன், மகர சங்கராந்தி அன்று (தை 1-ம் தேதி) தான் ஜோதி வடிவில் எல்லோருக்கும் காட்சித் தருவதாகவும், தான் எய்தும் அம்பு எங்கே போய் நிற்கிறதோ, அங்கே தனக்கு ஒரு வாசஸ்தலம் கட்டித்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி அவர் எய்த அம்பு பம்பை நதிக்கரையில் நின்றது. அங்கு கோவில் எழுப்பப்பட்டது.


அதன்படி அமைந்தது தான் இன்றுள்ள சபரிமலை அய்யப்பன் கோவில். இங்குள்ள அய்யப்பன் விக்ரகத்தை பரசுராமர் பிரதிஷ்டை செய்தார். அன்று முதல் யோக சின் முத்திரை தாங்கிய கோலத்தில் அருள்பாலித்து வருகிறார் அய்யப்பன்.

அவரை மணந்துகொள்ள விரும்பிய மகிஷி, மாளிகைபுரத்து அம்மனாக, அவருக்கு இடது பக்கத்தில் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். இன்றுவரையிலும் அவள் அய்யப்பனுக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள்.
Share:

பட்டின் முதல் கதை


நாங்கெல்லாம் சுத்த சைவமாக்கும் என்று, நான் வெஜ்ஜை ஒரு வெட்டு வெட்டும் பார்ட்டிகளைப் பார்த்து முகம் சுழிக்கும் பெண்கள், ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சிகளின் உயிர்த் தியாகத்தில் உருவான பளபள பட்டுச் சேலைகளை மேனியில் இழுத்துப் போர்த்திக்கொண்டு வருவதை பார்க்கும்போது....

உங்களுக்கு என்னத் தோன்றும்?

பட்டு இழைகளாக மாறிய பட்டுப்பூச்சிகளுக்கு இரக்கப்படுவதா?
யாரோ செஞ்ச பாவத்துக்கு நாங்க என்ன செய்ய முடியும்? என்று கேட்காமல் கேட்கும் பெண்களுக்கு பாவ மன்னிப்பு வழங்குவதா?

சரி... இது நமக்கு வேண்டாம்.

இந்த பட்டு உருவானது எப்படி என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதை முதன் முதலாக கண்டறிந்த நிகழ்ச்சியே சுவராஸ்யமானது.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 2,600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்திற்கு நாம் இப்போது போவோமா...?

அந்த அழகான சீன நாட்டு அரசி அரண்மனை தோட்டத்தில் இருந்தபடி கிண்ணத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறாள். தோட்டத்தில் எங்குப் பார்த்தாலும் பச்சைப் பசேல். அந்த பச்சைக்கு மத்தியில், செல்லமாய் தட்டிவிட்ட தென்றல் காற்று மீது பொய் கோபம் கொண்டு ஆடி அசைகிறது ஒரு முசுக்கட்டை செடி.

இயற்கையின் அழகை ஏகத்துக்கும் பருகிய அரசியின் கண்கள் இந்த முசுக்கட்டை செடி மீது படர்ந்த அடுத்த கணம், ஏதோ அவளுக்குள் ஓர் உள்ளுணர்வு எழ... அந்த செடியையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள், ரசிக்கிறாள்.

அந்த செடியின் இலை மீது, பார்த்தாலே உவ்வே... என்ற ரியாக்ஷனை சட்டென்று ஏற்படுத்தும் புழு ஒன்று நெளிந்து கொண்டிருக்கிறது. அரசிக்கு, அந்த புழுவை பார்க்க ஒரு மாதிரியாக இருந்தாலும், அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை அறிய தனது பார்வையை கூர்மையாக்கிக் கொண்டாள்.

அப்போது, அவளது அழகான சிறிய உதட்டை அவ்வப்போது முத்தமிட்டு கீழ், மேலாக இறங்கிக் கொண்டிருந்த தேநீர் கப் இடம் மாறி இருந்தது. அரைகுறையாக தேநீர் பருகி முடித்தவளின் முகத்தின் திடீர் ஆச்சரிய ரேகைகள் ஓடத் தொடங்கின.

எப்படி இந்த புழுவால் இப்படியெல்லாம் முடிகிறது என்று யோசித்தாள். ஆம்... அந்த முசுக்கட்டை புழு அழகிய இழைகளால் ஒரு கூடு கட்டிக்கொண்டிருந்தது. அந்த சின்னஞ்சிறிய கூடு அரசிக்கு பிடித்துப் போய்விட, ஆர்வ மிகுதியில் அந்த புழுவை நெருங்கினாள்.

அது கஷ்டப்பட்டு கட்டி இருந்த கூட்டை, தனது அழகிய கரங்களால் அழகாகவே கிள்ளி எடுத்தாள். தனது முகத்திற்கு நேரே தூக்கிப் பார்த்தவளின் கண்களில், அந்த புழு பற்றிய ஆராய்ச்சி மட்டும் முடிந்ததாக தெரியவில்லை.

திடீரென்று என்ன நினைத்தாளோ, தான் மிச்சம் வைத்திருந்த, லேசாக ஆவி பறந்து கொண்டிருந்த தேநீர் கிண்ணத்திற்குள் அந்த புழு கட்டிய கூட்டை போட்டு விட்டாள். தேநீர் கிண்ணத்தில், தண்ணீரில் உயிருக்கு போராடுபவன் போல் மிதந்து மிதந்து மூழ்கிக் கொண்டிருந்த அந்த புழுவின் கூட்டை பார்க்க அரசியின் முகத்தின் மீண்டும் திடீர் மாற்றம்.

தேநீருக்குள் கிடந்த புழு கூட்டை வெளியே எடுத்துப்போட தயக்கம் காட்டிய அவளது கைகள், நீண்டு கொண்டிருந்த புழு கூட்டின் ஒரு பகுதியை மட்டும் பிடித்து இழுத்தன. என்ன ஆச்சரியம்... ஏதோ பளபளக்கும் நூல் வந்தது.

ஒரு புழுவின் கூட்டுக்குள் பளபளக்கும் இப்படி ஒரு பொருள் எப்படி வந்தது என்று தனது இளம் மூளையை கசக்கினாள் அரசி. தனது ஆடையில், இதே பளபளப்பு இருந்தால் எப்படி இருக்கும் என்ற பகல் கனவும் அப்போது அவளுக்குள் திடீரென்று உதயமாகி உசுப்பேற்றியது.

தனது ஆசை கணவனான அரசனிடம் தனது மேலான இந்த விருப்பத்தை சொன்னாள். அரசி சொன்னால் முடியாது என்று சொல்வானா அரசன்?
உடனேயே உத்தரவு பறந்தது. "புழு கூட்டில் இருந்து பளபள நூலை கொண்டு ஆடை நெய்ய வேண்டும். நாளையே அந்த ஆடை, என் ராணியின் மேனியை அலங்கரிக்க வேண்டும்" என்று கம்பீரத்தோடு சொன்னான் அவன்.

ஆடை நெய்பவன் அரசனிடம் பயந்து, பயந்து அந்த கேள்வியை கேட்டான். "மன்னா... இந்த ஒரு நூலை வைத்து தாங்கள் விரும்பும் அலங்கார ஆடையை நெய்ய முடியாது. இதுபோன்று பல நூல்கள் வேண்டும்" என்றான் அவன்.

அப்போது தான் அரசனுக்கும் உண்மை புரிந்தது. அரசி, முசுக்கட்டை செடியில் கண்டுபிடித்த புழு கூடுகளை எங்கிருந்தாலும் கொண்டு வாருங்கள் என்று தனது பணியாளர்களுக்கு அடுத்த கட்டளையை அவசரமாக பிறப்பித்தான். பணியாளர்கள் நாடு முழுவதும் முசுக்கட்டை செடிகளை தேடி ஓடினார்கள். அவற்றை எல்லாம் வெட்டியெடுத்து சேகரித்தார்கள்.

அந்த செடிகளில் கூடு கட்டியிருந்த புழுக்களின் கூடுகளை எல்லாம் ஒன்று சேர்த்து, அதில் இருந்த நூல்களை வெளியே எடுத்தனர். அவற்றைக் கொண்டு ஆடைகளை நெய்தனர். எதிர்பார்த்ததைவிட இன்னும் அதிகமாய் பளபளத்தது அந்த ஆடை.
அந்த பளபள ஆடையை, இந்த உலகில் முதன் முதலில் அணிந்து அழகு பார்த்த அந்த அரசியின் பெயர் சி-லிங்-ஷி. கி.மு.2600ல் சீனாவை ஆட்சி செய்த ஹவாங்-டி என்ற மன்னனின் மனைவி தான் அவள்.

அரசி முதன் முதலாக அணிந்து அழகு பார்த்த இந்த ஆடைக்கு என்ன பெயரிடலாம் என்று யோசித்த மன்னன் ஹவாங்-டி, அதற்கு ஷி என்று அரசியின் பெயரையே சூட்டினான். சீன மொழியில் ஷி என்றால் பட்டு என்று பொருள்.

 பட்டுவை முதன் முதலாக உலகிற்கு அறிமுகம் செய்த சீனர்கள், அந்த பார்முலாவை தங்களுக்குள் சிதம்பர ரகசியமாகவே வைத்திருந்தனர். வேறு யாருக்கும் தெரியவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தான், கொரியா வழியாக ஜப்பானை அடைந்தது அந்த தொழில் நுட்பம். ஜப்பானை இந்த தொழில் சென்றடைந்தது கி.பி. மூன்றாம் நூற்றாண்டில்

முதன் முதலில் பட்டு சீனாவில் தான் உருவானது என்று பண்டைய காலம் முதலே கூறப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், நம் இந்தியாவில் சீனாவுக்கு முன்பே பட்டு வந்து விட்டது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

சமஸ்கிருத இலக்கியத்தில் கி.மு.4 ஆயிரமாவது ஆண்டிலேயே இந்தியாவில் பட்டுத் தொழில் நடைபெற்றதாக கூறப்படுகிறது என்கிறார்கள் அவர்கள்.
என்ன தான் இருந்தாலும், பட்டின் கண்டுபிடிப்பு இந்த மனித சமுதாயத்துக்கு கிடைத்த பெரிய கிப்ட் தானே..?
Share:

கனவு


திக்... திக்... - சிறுகதை

சுற்றிலும் இருந்த கும் இருட்டுக்கு மத்தியில் ஒற்றை மின்விளக்கு ஒளியில் திகில் நாவலில் மூழ்கி இருந்தான் அருண். நாவலின் சஸ்பென்ஸ் உச்சத்தால் அக்கம், பக்கம் என்ன நடக்கிறது என்பதையே அவன் மறந்திருந்தான்.

திடீரென ஆப் ஆன கரண்ட் அருணை அப்போது திசை திருப்பியது. திறந்திருந்த ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது, கருப்பு வர்ணம் பூசியதுபோன்று காணப்பட்டது வீதியெங்கும்.


"என்னங்க... கரண்ட் போனதுனால பேன் ஆப் ஆயிடுச்சு. கொஞ்சம் ஜன்னலை திறந்து வையுங்களேன்" - தாய் மரகதம், கணவன் நடராஜனிடம் பேசியது வீட்டின் மெயின் ஹாலையும் ஊடுருவி வந்து அருணின் காதுகளை தொட்டது.
"அருண்... படிச்சது போதும்; முதல்ல படு" - அப்போது அம்மாவின் குரல் சற்று கனத்துடன் வந்து, அருணுக்கு உத்தரவிட்டு மறைந்து போனது.


"சரிம்மா.." என்று, அம்மாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தபடி தலைக்கு மேலே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தை பார்த்தான். சரியாக நள்ளிரவு 12 மணியை காட்டிக்கொண்டிருந்த கடிகாரம், அந்த நிசப்தத்திலும் தன்னால் முடிந்த ஓசையை பலமாக எழுப்பிக் கொண்டு அருணை மிரட்டியது.

அடுத்த ஒரு மணி நேரம் வேகமாய் கரைந்திருந்த நிலையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் அருண். ஆனால், அவனது ஆழ்மனதோ குரங்காய் மரம் விட்டு மரம் தாவிக்கொண்டிருந்தது.

அப்போது -
இரவின் நிசப்தம் மீது கோபம் கொண்டு, அதன் மீது மோதி வேகமாக வந்தது காற்று. காற்று வந்த வேகத்தில் அருண் பூட்டியிருந்த ஜன்னல் தானாக திறந்து டமார் என்ற சத்தத்துடன் அடித்துக்கொண்டு நின்றது.

சத்தம் கேட்டு திடுக்கென எழுந்தான் அருண். படுக்கும் முன் அமைதியாய் காணப்பட்ட இருள் சூழ்ந்த பகுதி, ஒருவித லேசான அலறலுடன் கொக்கரித்துக் கொண்டிருந்தது அப்போது.

திடீரென பின்புறத்தில் நனைந்திருந்த சட்டை அருண் நன்றாக வியர்த்திருந்ததை நினைவுப்படுத்தியது. அப்போது பொங்கி வந்த குளிருக்கு பயந்து சட்டையை கழற்றாமல், கையால் இருகப்பிடித்தபடி தானாக திறந்த ஜன்னலை நோக்கி சென்றான்.

ஜன்னலை மூட கை வைத்தபோது திடீரென ஒரு சத்தம், ஏதோ ஒரு பொருள் கீழே விழுந்து உடைந்ததை ஞாபகப்படுத்தியது. என்னதோ, ஏதோ என்று மனம் திடுக்கிட்டு போனதால் மெதுவாக திரும்பிப் பார்த்தான்.
மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பொம்மை கீழே விழுந்து உடைந்து நொறுங்கிக் கிடந்தது.

கல்லூரி டூருக்கு சென்ற இடத்தில் ஆசைப்பட்டு வாங்கிய அந்த பொம்மை திடீரென கீழே விழுந்து உடைந்ததற்கான காரணத்தை அவனால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. உடைந்து போன பொம்மையை கையில் எடுத்துப் பார்த்தான். மீண்டும் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என்பதை தனது தோற்றத்தால் உணர்த்தியது அந்த கண்ணாடி பொம்மை.

"டர்ர்ர்ர்...." - திடீரென வந்த சத்தம் கேட்டு பயந்து திரும்பப் போய், கையில் இருந்த கண்ணாடி பொம்மையின் உடைந்த ஒரு பகுதி கீழே விழுந்து அருணின் காலை பதம் பார்த்தது. அடிப்பட்ட பகுதியில் லேசாக எட்டிப் பார்த்த ரத்தம் அருணை இன்னும் அதிகமாக பயமுறுத்தியது.

இப்படி ஆயிடுச்சே என்று அவன் குனிந்தபோது, காற்றால் தானே திறந்துகொண்டு நின்ற ஜன்னல் கதவு மீண்டும் இயங்க ஆரம்பித்தது. டமார், டமார் என்று அது இடைவிடாது சிலமுறை அடித்து நின்றபோது நடுங்கியே விட்டான் அருண்.

ஜன்னலை திரும்பிப் பார்த்தபோது வெளியில் திடீரென இடி-மின்னலுடன் மழை கொட்ட ஆரம்பித்திருந்தது. ஜன்னல் அருகே செல்ல மெல்ல காலடி எடுத்து வைத்தான்.

ஜன்னல் வழியே வெளிப்பகுதியை கூர்ந்து நோக்கியபோது, ஒரு பெண் வீதியில் உதவி கேட்பதுபோல் போராடிக் கொண்டிருக்கும் காட்சி அவனது விழித்திரையில் லேசான அலசலோடு பதிவானது.


"யார் இவள்? இந்த நேரத்தில்... இங்கே எப்படி வந்தாள்?" - சில குழப்பங்களுக்கு விடை கொடுக்க கதவை திறந்து பார்க்க முற்பட்டான்.
கதவை திறக்க கை வைத்தபோது உதவி கேட்கும் சத்தம் கொஞ்சம் வேகமாகவே கேட்டது.

"யாராவது வந்து காப்பாத்துங்களேன்..." என்ற அந்த குரல் வெளியில் இருந்து வேகமாக வந்து அருணின் காதுகளை தொட்டது.

இந்த வேகத்தை போலவே தன்னை அறியாமல் கதவின் மீது வேகமாக கைகளால் பற்றினான் அருண். கதவு மீது கை வைத்த அடுத்த சில நொடிகளில், அருண் திறக்க முற்படாமலேயே கதவு தானாக திறக்க ஆரம்பித்தது.

அதிர்ச்சியில் உறைந்து போனான் அருண். வெளியில் வெள்ளை நிற ஆடையில் ஒரு அழகான பெண் வீதியில் கிடப்பதை வீட்டுக்குள் இருந்தபடியே கண்டான். வெளியில் சென்று உதவுவோமா, வேண்டாமா என்று திடீர் கணக்கு போட்ட அருண், அதற்கு விடையாக உதவலாம் என்று வர, மேற்கொண்டு வெளியில் செல்ல காலடி எடுத்து வைத்தான் மெதுவாக.

போர்ட்டிக்கோவை கடந்து வீட்டு முற்றத்தை அடைந்த போதிலும் அந்த பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை. குனிந்த நிலையில், சந்திரமுகி ஜோதிகா போல் கிடந்தாள்.

அந்த பெண்ணை சில அடி தூரத்தில் எட்டியபோது அவனை அறியாமல் கால்கள் ஆட ஆரம்பித்து இருந்தன. யார் அது என்று கேட்க வாயெடுத்தபோது பேச்சும் வராமல் சிக்கித் திணறியது.

உளறலோடு யார் அது என்று கேட்டுக்கொண்டே அந்த பெண்ணை நெருங்கினான் அருண். அப்போது தான் அந்த பெண் யார் என்பது அடையாளம் தெரிந்தது.

கல்லூரி மாணவியான பக்கத்து வீட்டு மாலதி என்பதை அவள் அருகில் சென்றபோது தான் அவனால் உறுதி செய்ய முடிந்தது.
தன்னால் நடக்க முடியவில்லை என்று மாலதி கூறவும், அவளுக்கு உதவுவதற்காக வேகமாக வீட்டுக்குள் புறப்பட்டு சென்றான் அருண்.
வேகமாக சென்றவன் திடீரென நின்றான். அவனது கண்களில் பேயை நேரில் கண்டது போன்ற மிரட்சி. இதயத்தின் லப்-டப் வேகமும் தாறுமாறாக எகிறி இருந்தது.

"பக்கத்து வீட்டு மாலதி விபத்தில் இறந்துபோய் ஒரு வாரம் கூட ஆகவில்லையே; வேறு எப்படி இங்கே வர முடியும்?"
மாலதி பலியான அந்த சம்பவம் அருணுக்குள் மின்னல் வெட்டாய் வந்து போனது.

சாலையில் அடிபட்டு கிடந்த மாலதியை தனது மடியில் கிடத்தி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தான் அவள் இறந்து போனாள்.

மாலதி மறைந்துபோன சம்பவம் அருண் நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை.

அப்படி இருக்கும்போது இங்கே எப்படி மாலதி... என்று யோசித்தவன், மெதுவாக திரும்பிப் பார்த்தான்.

மீண்டும் அவனுக்குள் அதிர்ச்சி. வீதியில் கிடந்த மாலதியையே காணவில்லை. ஒருவேளை பேயாக வந்து பயமுறுத்துகிறாளா என்று மனதிற்குள் வேகமாக ஓட விட்டவன், மாலதி பேயாகத் தான் வந்திருக்கிறாள் என்பதை உறுதி செய்து, வீட்டுக்குள் போக எத்தனித்தான்.

அப்போது -
மீண்டும் வீட்டு முன்கதவு அருகில் மாலதி.
"ஓ"வென அலறிய அருண் மயக்கமாகி கீழே விழுந்தான்.
"என்ன ஆச்சுன்னு தெரியலியே; அருண் பெட் ரூமில் இருந்து சத்தம் வருகிறதே" என்று அவனது தாய் மரகதமும், தந்தை நடராஜனும் அங்கு வேகமாக வந்து பார்த்தனர்.

படுத்திருந்த பெட்டில் இருந்து கீழே விழுந்து கிடந்தான் அருண்.
மரகதம் அருண் மீது கை வைத்தபோது கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டான்.
"என்னடா ஆச்சு; கத்திக்கிட்டே கீழே விழுந்துட்ட. கெட்ட கனவு எதுவும் கண்டியா" என்று மரகதம் கேட்டதற்கு, ஆமா என்று மட்டும் தலையை ஆட்டிய அருணால் மேற்கொண்டு பேச முடியவில்லை.

"ஒரு டம்ளர் தண்ணீரை குடிச்சிட்டு படுடா" என்று கூறிய மரகதத்திற்கு தலையை அசைத்தே பதில் சொன்னான்.

பெற்றோர் அறையைவிட்டு வெளியேறியபோது தனது காலை திடீரென எட்டிப்பார்த்தான். கண்ணாடி பொம்மை கீழே விழுந்து காயம் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஜன்னலும் மூடப்பட்டே இருந்தது. வெளியே மழையும் பெய்யவில்லை.

அப்போது தான் அருணுக்கு தெரிந்தது. மாலதி வந்த சம்பவம் வெறும் கனவு என்று!

ஆக்கம் : நெல்லை விவேகநந்தா.
Share:

செவ்வாய், 13 அக்டோபர், 2009

முத்த ஆராய்ச்சி சீக்ரெட்ஸ்

முத்தம் என்று சொல்லும்போதே நமது உடல் ஏதோ ஒருவித கிளுகிளுப்புக்குள் சிக்கி விடுகிறது. உண்மையில் அந்த முத்தத்தை பெற்றால் எப்படி இருக்கும்?

நினைக்கும்போதே, எங்கோ பறப்பதுபோல் இருக்கிறது என்கிறீர்களா?
அது ஒருபுறம் இருக்கட்டும்: இப்படியே முத்தம் கொடுப்பதால் என்ன பயன் என்று சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அப்போது, இறுக்கி அணைத்துக்கொண்டு முத்தம் கொடுக்கும் தம்பதியர் உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பு குறைவதை கண்டுபிடித்தார்கள்.

அதாவது, இறுக்கி அணைத்துக்கொண்டு முத்தம் கொடுப்பவர்கள் டென்ஷன் ஆக மாட்டார்கள் என்பது இவர்களது ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்தது.
மேலும், திருமணம் ஆனவர்களுக்கும், ஆகாதவர்களுக்கும் இடையே டென்ஷன் எந்த அளவில் ஏற்படுகிறது என்ற கோணத்திலும் ஆராய்ச்சியை இவர்கள் தொடர்ந்தார்கள். அப்போது, புதிதாக திருமணம் ஆனவர்கள் டென்ஷன் இல்லாமல் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பது தெரிய வந்தது.
திருமணம் ஆகி பிள்ளைகள் பிறந்த பிறகு, பெரும்பாலான கணவன்-மனைவியர் தங்களுக்குள் முத்தம் கொடுத்துக்கொள்வதையும், தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதையும் குறைத்து விடுவதாகவும், அதனால் அவர்கள் மீண்டும் மன அழுத்தத்தை சந்திப்பதாகவும் அவர்களது ஆய்வு முடிவு கூறுகிறது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களும் முத்தம் தொடர்பான ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அவர்களது ஆய்வில், முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பது கிடையாது என்பது தெரிய வந்தது.
சில கணவன்மார்கள் மனைவிக்கு முத்தமே கொடுக்காமல் தாம்பத்திய உறவை முடித்துக் கொள்வதும், ஆனால், அவர்களது மனைவியர் அந்த முத்தத்தை விரும்புவதும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
66 சதவீதம்பேர் முத்தமிடும்போது முகத்தை மூடிக்கொள்கிறார்களாம். மீதமுள்ளவர்கள்தான் கண்களை திறந்தபடி அல்லது தனது துணையை பார்த்தபடி முத்தமிடுகிறார்களாம்.

அமெரிக்க பெண்கள் முத்த விஷயத்தில் பயங்கர கில்லாடிகளாக இருக்கிறார்கள். அவர்கள், திருமணத்திற்கு முன்பு குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிட்டு விடுகிறார்களாம்.
இந்தியாவை பொறுத்தவரை காதல் திருமணம் செய்து கொண்டவர்களை காட்டிலும், பெற்றோரே பார்த்து முடித்ததில் இணைந்த ஜோடிகளே அதிகம் முத்தமிடுகிறார்களாம்.

வேலைக்கு செல்லும்போது மனைவியை முத்தமிட்டுவிட்டு செல்லும் கணவன்மார்கள், அவ்வாறு முத்தமிடாதவர்களைக் காட்டிலும் 5 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்கிறார்களாம்.
முத்த ஆராய்ச்சி இதோடு நின்றுவிடவில்லை. இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த முத்த ஆராய்ச்சியில் கிடைத்த மேலும் சில தகவல்கள் இங்கே உங்கள் பார்வைக்கு :
* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தில் உள்ள 29 தசைகள் இயங்குகிறன.
* எந்த அளவுக்கு அதிகமாக முத்தம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு முதுமையில் முகத்தில் சுருக்கம் வரும் நாட்கள் வெகுதூரத்திற்கு செல்கின்றன.
* முத்தமிட்டுக் கொள்ளும்போது உருவாகும் எச்சிலில் கொழுப்பு, புரதம் மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அவை, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.
* ஒரு முறை முத்தமிடுவதால் 2-3 கலோரி சக்தி நம் உடலில் எரிக்கப்படுகிறது. அதுவே, பிரெஞ்சு முத்தமாக இருந்தால், அதாவது உதட்டோடு உதடு வைத்து, நாவால் துலாவி இறுக முத்தமிட்டால் 5 கலோரி வரை சக்தி எரிக்கப்படுகிறதாம்.
* ஆர்ட்டிக் பனி பிரதேசங்களில் வசிக்கும் எக்ஸிமோக்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டுக் கொள்கிறார்களாம்.
* குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிட்டால், தனது உடலின் 26 கலோரி சக்தியை குறைக்க முடியுமாம். இதன்மூலம் அவர்களது அதிகப்படியான தொப்பை குறையுமாம்.
* முத்தமிடும்போது நாம் பெரும்பாலும் வலது புறமாகவே முத்தமிடுகிறோம். நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கம் கட்டுப்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும்.

இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளால் ஜூலை 6&ம் தேதியை தேசிய முத்த தினமாக கொண்டாடுகிறது இங்கிலாந்து. அந்த தினமே பிற்காலத்தில் உலக முத்த தினமாக மாறியது.
முத்தத்திற்கு என்று ஒரு பழமொழியும் உள்ளது. அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது என்பது தான் அந்த பழமொழி.
இன்னொரு விஷயம்... முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவாது. அதனால் எய்ட்ஸ் பயம் வேண்டாம்.

உலக சினிமாவில் முதல் முத்த காட்சி தி கிஸ் என்ற படத்தில் இடம்பெற்றது. இந்த சினிமா 1896ல் வெளியானது. ஜான் சி.ரைஸ் என்ற நடிகர் மே இர்வின் என்ற நடிகைக்கு முத்தம் கொடுத்து, முத்த புரட்சியை ஆரம்பித்து வைத்தார்.

Share:

திங்கள், 5 அக்டோபர், 2009

துறவியும், திருமணமும்...


ஒரு அரசன், தன் நாட்டுக்கு வரும் துறவிகளிடம் எல்லாம், உலகில் சிறந்தது துறவறமா? இல்லறமா? என்று கேட்பது வழக்கம். யாருடைய பதிலும் அவனுக்கு திருப்தி தரவில்லை.

ஒருநாள் அரசனைத் தேடி வயது முதிர்ந்த அனுபவத் துறவி ஒருவர் வந்தார். அவரிடமும் அரசன் தனது வழக்கமான கேள்வியைக் கேட்டான்.

அதற்கு அந்த துறவி, "அரசே! நீங்கள் என்னுடன் வந்து நான் வாழ்வதுபோல் சில நாட்கள் வாழ்ந்தால் அதற்கு சரியான பதில் கிடைக்கும்" என்றார். அரசனும் அதை ஏற்று, அந்த துறவியுடன் புறப்பட்டான். இருவரும் பல நாட்கள் நடந்து ஒரு பெரிய நாட்டை அடைந்தார்கள்.

அப்போது, அந்த நாட்டில் காணும் இடம் எங்கும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர் மக்கள். அந்த நாட்டின் இளவரசிக்கு சுயம்வரம் நிகழ்ந்து கொண்டிருந்ததுதான் அந்த உற்சாகத்திற்கு காரணம். சுயம்வர மண்டபத்திற்கு அரசனும், அந்த அனுபவத் துறவியும் சென்றனர்.

சுயம்வரத்திற்கு காத்திருந்த இளவரசி உலகப் பேரழகியாக இருந்தாள். அவளை மணந்து கொள்பவன், அவளது தந்தைக்குப் பின் அந்த நாட்டின் அரசனாவான் என்பதால், தங்களுக்கு அந்த பொன்னான வாய்ப்பு கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் பல நாட்டு இளவரசர்களும் அங்கே வந்திருந்தனர்.

தனக்கு ஏற்றத் துணையாக பேரழகன் ஒருவனை தேடினாள் இளவரசி. அங்கு வந்திருந்த யாரையுமே அவளுக்கு பிடிக்கவில்லை.

அப்போது, சுயம்வர மண்டபத்தினுள் இளம்துறவி ஒருவர் நுழைந்தார். கம்பீரமும், அழகும் நிறைந்த அவர் அங்கே வந்தது, சூரியனே வானத்தைவிட்டு பூமிக்கு இறங்கி வந்ததுபோல் இருந்தது. அவர் அருகே வந்த இளவரசி, கையில் வைத்திருந்த மாலையை அவரது கழுத்தில் போட்டுவிட்டாள். இதை சற்றும் எதிர்பார்க்காத இளம்துறவி அதிர்ச்சி அடைந்தார்.

"என்ன முட்டாள்தனம் இது? நான் ஒரு துறவி. எனக்கென்ன திருமணம்?" என்று கூறி, இளவரசி அணிவித்த மாலையை கழற்றி எறிந்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இதற்குள், அந்த இளவரசி அந்த இளம் துறவி மீது அளவற்ற காதல் கொண்டுவிட்டாள்.

"அவரையே மணப்பேன். இல்லையேல் உயிர்த் துறப்பேன்" என்று உறுதியாக கூறிவிட்டாள். அந்த இளம் துறவியை அழைத்துவர அவர் பின்னாலேயே சென்றாள். அனுபவத் துறவியும், அவருடன் வந்த அரசனும் இளவரசி தங்களை பார்த்துவிடாதபடி பின்தொடர்ந்தனர்.

இளவரசியை மணக்க விரும்பாத இளம்துறவி ஒரு காட்டுக்குள் புகுந்தார். இளவரசியும் அங்கே சென்றாள். அனுபவத் துறவியும், அரசனுடன் அங்கே சென்றனர்.

காட்டுக்குள் புகுந்த இளம்துறவிக்கு ஏதோ ஒரு வழியில் நுழைந்து மறைந்துவிட்டார். இளவரசியால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு மரத்தடியில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

அப்போது, அவளை பின்தொடர்ந்து சென்ற அனுபவத்துறவியும், அரசனும் அவள் அருகில் சென்றனர். "அழாதே ராஜகுமாரி! நீ வெளியே செல்ல நாங்கள் வழிகாட்டுகிறோம். இப்போது இருட்டிவிட்டதால் நாளை காலை வழிகாட்டுகிறோம்" என்று கூறி, அவள் அழுகையை நிறுத்தினர்.

ஒரு பெரிய மரத்தின் அடியில் மூன்று பேரும் தங்கினர். அந்த மரத்தில் ஒரு ஆண் குருவி, தன் இணையான பெண் குருவியுடனும், 3 குஞ்சுகளுடனும் வசித்து வந்தது.

மரத்துக்கு கீழே வந்து தங்கிய 3 பேரை பார்த்ததும், ஆண் குருவி பெண் குருவியிடம், "அன்பே... நம் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன செய்வது? இது குளிர்காலம் வேறு. நாம் நெருப்புக்கு என்ன செய்வது?" என்று கேட்டுவிட்டு எங்கேயோ பறந்து சென்றது.

சிறிதுநேரத்தில் ஒரு மரக்குச்சியை எடுத்து வந்து, மரத்தின் அடியில் இருந்த 3 பேருக்கும் முன்னால் போட்டு தீ வளர்த்தது.

"என் உடலை அவர்களைக்கு உணவாக தரப்போகிறேன்" என்று பெண் குறுவியிடம் கூறிவிட்டு, ஆண் குருவி அந்த தீக்குள் குதித்து உயிர்விட்டது.

¨வந்திருப்பது 3 பேர். அவர்களுக்கு எப்படி பசி அடங்கும்? யோசித்த பெண் குருவி, தானும் அதில் விழுந்து உயிர்விட்டது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த, 3 குஞ்சுகளும், "பெற்றோர் பணியை தொடர்வதுதான் நம் கடமை" என்று முடிவெடுத்து, அவையும் தீக்குள் குதித்து மாண்டு போயின.

நடந்ததை கண்டு திகைத்த அனுபவத் துறவி, அரசன், இளவரசி மூன்று பேருக்கும் தீக்குள் விழுந்து இறந்த குருவிகளின் உடலை தீண்டக்கூட மனம் வரவில்லை. பொழுது விடிந்ததும் அங்கிருந்து வெளியேறி நாட்டுக்குள் வந்தனர். இளவரசியை அவளது தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு, தங்கள் நாட்டுக்கு திரும்பினர் அனுபவத் துறவியும், அவருடன் வந்த அரசரும்.
பின்னர், அனுபவத் துறவி மன்னரிடம், "மன்னா! நீ சிறந்த இல்லற வாழ்க்கை வாழ விரும்பினால் இந்த பறவைகளைப்போல் எந்த நொடியும் பிறருக்காக உன்னை தியாகம் செய்ய தயாராக வாழ வேண்டும். நல்ல துறவற வாழ்க்கை வாழ விரும்பினால் மிக அழகான பெண்ணையும், பேரரசையும் துரும்பென உதறிச் சென்ற அந்த இளம் துறவியைப்போல் இருக்க வேண்டும். இல்லறமும் சரி, துறவறமும் சரி. அவற்றுக்கான தர்மத்தில் இருந்து நழுவாமல் இருந்தால், அவை இரண்டுமே உயர்ந்தவைதான்" என்றார், அனுபவத் துறவி.
உயர்ந்தது இல்லறமா? துறவறமா? என்பதை புரிந்து கொண்டான் அரசன்.

- சுவாமி விவேகானந்தர் சொன்ன கதை இது.
Share:

சிரிப்பு.. சிரிப்பு..

பாருங்க... சிரிங்க...

என்ஜாய் பண்ணுங்க...



கொஞ்சம் சூடு தேவைன்னு சொன்னாங்க. அதான்... இங்கே இப்படி ஷிப்ட் ஆயிட்டேன்.



குடிக்க கொஞ்சூண்டு பால் கேட்டா குடுக்க மாட்டேங்குறானவ. ஆனா அதட்டுறத மட்டும் கரெக்ட்டா செய்யிறாய்ங்க... என்னத்த சொல்ல... இப்போ இப்படி கையை துக்கலன்னா எச்சில் சோறு கூட போட மாட்டாய்ங்க...



தண்ணிக்குள்ள படுக்குறதுல என்ன சுகமா இருக்கு. அதுவும்... கால விரிச்சுக்கிட்டு, கூடவே தம்மையும் போட்டுக்குட்டு வானத்த அண்ணாந்து பாத்தா... எங்கேயோ பறக்குற மாதிரில்லா இருக்கு...



பழனி படிக்கட்டு மாதிரி கட்டிங்ஸ் இருந்தா தான் கட்டிக்குவேன்னு என்னோட லவ்வர் சொல்லிட்டா. அதான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்...




மழை பெய்யுதேன்னு ஒரு குடை கேட்டேன். படுபாவி பசங்க... இப்படி மாட்டி விட்டுட்டானுவ....

¨கடி¨த்தவர் : நெல்லை விவேகநந்தா
Share:

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

காதல் ஹைக்கூ...


பன்னீரின் மனமும் தோற்றது
ஜவ்வாதும் வெறுப்பேற்றியது
அருகில் என்னவள் இருந்ததால்...



ரோஜாவே
ரோஜாவை பறிக்கும்
அதிசயம் கண்டேன்;
ஆம்...
ரோஜாப்பூவை பறித்தாள்
என்னை கவர்ந்த அவள்!







அந்த ஈயை பார்த்துக்கூட
எனக்கு பொறாமை;
நீ காபி குடித்த டம்ளரை
அது எச்சில்படுத்தியபோது...







இறைவன் தோன்றினால்
ஒரு வரம் தான் கேட்பேன்;
உன் கொலுசாய் நான் மாற...
ஏன்...?
நீ கேட்கலாம்;
உன் இதயத்தை
நான் திருடியது தெரியாமல்
இன்னொருவனுக்கு நீ
மாலையிட்டு விட்டாயே...!







நேரமும் தெரியவில்லை;
காலமும் புரியவில்லை;
உன்னை கண்ட நாள் முதல்
இரவும் பகலாகிப் போனதால்...







நீ பூமி
நான் சந்திரன்
உன்னை
சுற்றி சுற்றியே வருகிறேன்;
சந்திக்க முடியாது
என்று தெரிந்தும்...



நம் கண்கள் மோதியபோது
ஒவ்வொரு நொடியும் இனித்தன;
அதே ஒவ்வொரு நொடியும்
இப்போது வலிக்கிறது;
நீ
இன்னொருவனுடன்
கை கோர்த்தபோது...!







புளுட்டோனியத்தைவிட
உன் பார்வைக்கு பவர் அதிகம்
ஒத்துக் கொள்கிறேன்;
உனது ஒரு பார்வையிலேயே
என் இதயம் நொறுங்கிவிட்டதே...







இரவும் சுடும்
இப்போது உணர்ந்தேன்;
உனது கோபத்தை
முதன்முதலாய் பார்த்தபோது...







திடீர் விபத்து
ஆனால்
இன்ப அதிர்ச்சி!
இங்கே மோதியது
நீயும், நானும் அல்லவா?







தேனைவிட இனியபொருள்
உண்டென்று உணர்ந்தேன்
உன் எச்சிலை
என் இதழ்
முதன் முதலாக ஈரப்படுத்தியபோது...

ஆக்கம் : கவிஞர் நெல்லை விவேகநந்தா
Share:

ஈழம்




இது கதை அல்ல...

ஒரு பாவப்பட்ட இனம் சந்திக்கும் அவலம்...

ஹிட்லர், முசோலினி வரிசையில் இடம்பிடித்த கொடுங்கோலன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சிங்கள இன வெறியால் ஈழத்தில் ஒட்டுமொத்த தமிழினமே அழிக்கப்பட்டு வரும் நிலையில்... அங்கிருந்து அகதியாகவாவது தப்பித்து உயிர்பிழைப்போம் என்று திணறிய தமிழர்கள் நடந்து முடிந்த நம் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்வரை இருந்தனர்.
இப்போது, திறந்தவெளி சிறைக்குள் ஒட்டுமொத்த ஈழத் தமிழினமே அழிக்கப்பட்டு வருகிறது.

வந்தாரை வாழ வைத்த பெருமை எங்கள் தமிழ் இனத்திற்கு உரியது என்று மார் தட்டிக்கொண்டு திரியும் தமிழர்களாகிய நாம், பக்கத்து தேசத்தில் உடன்பிறவா சகோதர-சகோதரிகள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படும் அவலத்தை கண்டு அய்யோ பாவம்... என்று மட்டும் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஈழத் தமிழர்கள் இன்றும் என்றும் பாவப்பட்டவர்களாக இருப்பதற்கு நான் இங்கே எழுதியுள்ள கதையை சிறந்த உதாரணம்.

இக்கதை வெறும் கற்பனையில் எழுந்தது அல்ல. நான், பாம்பன் அகதிகள் முகாமில் நேரில் கண்ட... சுதந்திர விடியலைத் தேடும் ஒரு பாவப்பட்ட இனம் சந்தித்த உண்மையான அவலம்...

இதோ... அந்த கதை...



ஈர விழிகள்

மஞ்சள் தேய்த்து குளித்து முடித்த களைப்பில் இரவின் மடியில் தலை சாய காத்துக்கொண்டிருப்பதை உணர்த்தியது மாலை நேர வானம்.

அடிக்கடி வெடிகுண்டுகள் முழக்கமிடும் இலங்கையின் வவுனியா பகுதி தான் அன்று இப்படி அழகாக மின்னிக் கொண்டிருந்தது.

"படகு ரெடியா இருக்கு; எல்லோரும் வந்துட்டீங்களா? " - பெட்டி, படுக்கைகளுடன் பதட்டம் முகத்தில் தெரிய காத்திருந்தவர்களிடம் கேட்டான் படகோட்டி தாமஸ்.

"என்னோட படிக்கிற மேரி வர்றேன்னு சொன்னா. ஆனா, அவ இன்னும் வரல. கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா?" - சுதந்திரக் காற்றை பிறந்தது முதல் சுவாசிக்காத 17 வயது சாந்தி இப்படி கேட்டாள்.

"சரி... வர்றவங்க வரட்டும். முதல்ல எல்லோரும் பத்து ஆயிரம் எடுத்துட்டு வந்துட்டீங்கல்ல. பணத்தை முழுசா தந்தா தான் இந்தியாவுக்கு கூட்டிட்டு போவோன். இல்லேன்னா இங்கே தான், ராணுவத்துக்காரங்க குண்டடிபட்டு சாகணும்?" - திடீர் திடீரென குண்டு மழை பொழியும் அந்த இடத்தில் மீண்டும் படபடத்தான் தாமஸ்.

"தாமசு பணத்தை எல்லாம் பார்க்காத; பணம் இன்னிக்கு வரும், நாளைக்கு போகும். எங்கிட்ட ஐந்தாயிரம் தாம்பா இருக்கு. எங்கிட்ட கூடுதலா பணம் கேட்டுடாதப்பா?" - என்று 55 வயது யசோதம்மா பேசியபோது குறுக்கிட்டான் தாமஸ்.

"என்ன பேசிட்டு இருக்க; இன்னிக்கா, நாளைக்கான்னு உசுறு ஊசலாடிட்டு இருக்குற உனக்கே, உசுரு மேல அவ்ளோ பயம் இருக்கு. நீயெல்லாம் ஏன் உசுரு தப்பிக்க போகணும். பொறந்த இடத்துலயே போய் சேர வேண்டியது தானே?"- படபடவென பேசிய தாமஸ், அங்கிருந்தவர்களுக்கு அப்போது மனிதனாகவே தெரியவில்லை.

"எங்கட்ட இருக்கிறதே இந்த ஐந்தாயிரம் ரூபாய் தாம்பா. நான் இருந்த வீட்ட வேணும்ன்னாலும் நீயே அனுபவிச்சிக்க. எங்கிட்ட வேறு எதுவுமே இல்ல" என்று கூறிவிட்டு குனிந்த யசோதம்மாவின் காதில் கிடந்த பாம்படம் தாமசின் கண்களை உறுத்தியது.

"என்ன கிழவி ஒன்னுமே இல்ல, இல்லன்னு புலம்பிட்டு இருக்க. ரெண்டு காதுலேயும் தான் தங்கம் தொங்குதுல்ல; அதுல ஒன்னு மட்டும் கழட்டிக் கொடு. பணம் எல்லாம் வேண்டாம்?" - இப்படி தாமஸ் பேச, யசோதம்மாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

"பிறந்தபோது இருந்த சுதந்திரம், இடையில் பறிக்கப்பட்டதற்கு நான் என்ன செய்ய முடியும். என்ன பாவம் செஞ்சேனோ. அந்த மவராசனால மீண்டும் சொதந்திரமா இருந்திடலாம்ன்னு ஏங்கி, ஏங்கி எனக்கு வயசு தான் கூடிட்டே போகுது. கடைசி காலத்திலாவது நிம்மதி தேடலாம்ன்னு வந்தா, நீ வேற இப்படி பேசுற..." என்ற யசோதம்மாவால் மேற்கொண்டு பேச முடியவில்லை. பொளபொளவென கொட்டிய கண்ணீர் தாமசின் கால்களில் விழுந்து, அவனது மனதில் படிந்திருந்த அழுக்கை ஈரப்படுத்திவிட்டு சென்றது.

"ஏய்... கிழவி புலம்புறத நிப்பாட்டு. நீ ஐந்தாயிரம் கொடுத்தாலே போதும். உன்னையும் கூட்டிட்டு போறேன்?" - ஒருவழியாக யசோதம்மாவை சமாளித்து நெளிந்தான் தாமஸ்.

இந்த காட்சியை நேரில் பார்த்துக் கொண்டிருந்தவர்களாலும் பேச முடியவில்லை. ஏதாவது பேசப்போய், படகில் அழைத்துக் கொண்டு போக முடியாது என்று கூறிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவர்களை வாயிருந்தும் பேச முடியாத ஊமைகளாய் கட்டிப் போட்டிருந்தது.
அந்தநேரத்தில், மேரி, வேகமாக அங்கு வந்து சேர்ந்தபோது மணி எட்டை தாண்டி இருந்தது.

"சரி... எல்லோரும் படகுல ஏறிக்கோங்க. இப்போ கிளம்பினா தான் நள்ளிரவு 2 மணிக்காவது ராமேசுவரம் அல்லது தனுஷ்கோடி பக்கம் போக முடியும். விடிஞ்சா ரோந்து வர்றவங்க பிடிச்சிடுவாங்க" என்று தாமஸ் அவசரப்படுத்தியது தான், உயிர் தப்பிக்க ஓடுவதுபோல் வேகமாக படகை நோக்கி ஓடினர் அங்கிருந்த எல்லோரும்!

இரவின் நிசப்தத்தில் கரையை தொட்டு தாலாட்டிக்கொண்டிருந்த கடல் அலைகள், இவர்களின் கால்களை தழுவியபோது, அவர்களுக்கு இதுபற்றி யோசிக்க அப்போது முடியவில்லை என்றாலும், இதே இடத்தில் இவர்களது பாதங்களை நான் மீண்டும் முத்தமிட வாய்ப்பு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற தவிப்பில் அவை சிந்திய கண்ணீர், பாறையில் மோதி வெளிப்படும் தூறல்களாக வெளிப்பட்டது, கருமேகம் மறைக்க முயன்ற வண்ண நிலவுக்கு தெரிந்து கொண்டு தான் இருந்தது.

எல்லோரும் வேகமாக ஏறி அமர்ந்ததில் வலி தாங்காமல் அலறி ஆடியது படகு. 8 பேர் செல்ல வேண்டிய படகில் 19 பேர் ஏறி இருந்தார்கள்.
வயதான யசோதம்மாவால் வேகமாக ஓடிவர முடியாததால் அவரால் கடைசியாகவே படகை தொட முடிந்தது. அதற்குள் படகு நிரம்பி விட்டது. கால் வைக்கக்கூட சரியான இடம் இல்லை.

படகின் மீது கைவைத்து சுற்றும், முற்றும் பார்த்த யசோதம்மா, என்ன நினைத்தோரோ திடீரென வந்த வழியே திரும்பினார். படகில் இருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

"பாட்டி நில்லுங்க..." என்ற இளமையான குரல் தன் நோக்கி ஓடிவர மெதுவாக நின்று திரும்பினார் யசோதம்மா.
மேரி தான் வந்து கொண்டிருந்தாள்.

யசோதம்மாவின் கரத்தை வேகமாக வந்து பற்றிய மேரி, "பாட்டி, நான் வேண்டுமானால் இறங்கிக்கறேன். நீங்க இந்தியா போங்க. நான் அடுத்த முறை வர்றேன்" என்றபோது, அதுவரை வாடிப்போய் இருந்த யசோதம்மாவின் வறிய முகத்தில் மகிழ்ச்சியானது பவுர்ணமியின் பிரகாசமாய் தைரியத்தோடு வெளிப்பட்டது.

"இந்த ஒரு வார்த்தை போதும்மா. என் உசுறு, ராணுவத்தோடு குண்டு பட்டு இப்போ போனாக் கூட கவலைப்பட மாட்டேன்" என்ற யசோதம்மாவின் குரலில் அப்போது நம்பிக்கை அதிகமாகவே பளிச்சிட்டது.

"இப்படி உங்கள, நீங்களே சமாதானம் செஞ்சுக்க வேணாம் பாட்டி. நீங்க முதல்ல போங்க; நான் நாளைக்கு கூட அடுத்த படகுல வர்றேன்?" - மேரி இப்படி சொல்லவும் படகில் கிளம்ப தயாராக இருந்த தாமசும் கீழே இறங்கி அங்கு வந்தான்.

"பாட்டி, படகுல ஏறு. நான் சமாளிச்சி, பத்திரமா இந்தியாவுக்கு கூட்டிட்டு போறேன்" என்ற தாமசின் சமாதானத்தையும் அப்போது யசோதம்மா ஏற்கவில்லை.

"நீங்க எல்லோரும் இன்னிக்கு கிளம்புங்க. நான் ஏன் நாளைக்கு வரக்கூடாது" என்ற அவர், மற்றவர்களை வழியனுப்பி வைத்தார்.

எதையோ மறந்து விட்டுவிட்டு செல்வதுபோல் மேரியும் படகில் ஏற, அடுத்த நிமிடத்தில் புகையை கக்கிக்கொண்டு சுதந்திர பயணத்தை தொடங்கியது தாமசின் படகு.

படகில் இருந்த எல்லோரும் கையசைத்து, யசோதம்மாவிடம் இருந்து விடைபெற்றனர்.

"வாழ வேண்டிய எத்தனையோ பேர் சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும்போது, நான் ஏன் உயிர் தப்பிக்க ஓட வேண்டும். இது தான் ஒரு வீர தமிழச்சிக்கு அழகா" என்று மனதுக்குள் நினைத்தபடி நடக்கத் தொடங்கினார் யசோதம்மா.

இன்னிக்கோ, நாளைக்கோ அல்லது என்றாவது ஒரு நாளோ குண்டடிப்பட்டு சாகத் தயாராக வந்த யசோதம்மாவை நினைத்து வருத்தப்படுவதா, தாய் மண்ணில் கொலை செய்யப்பட இருந்த 19 பேர் சுதந்திரக்காற்றை சுவாசிக்க பறந்து போனதை நினைத்து சந்தோஷப்படுவதா என்ற குழப்பத்தில் கடல் அலைகள் அப்போது இருந்ததை, அவை கரைகளில் வந்து மோதி திரிந்தது உணர்த்துவதாக இருந்தது.


எழுதியவர்: நெல்லை விவேகநந்தா.
Share: